ஒரு முற்று புள்ளியைச் சுற்றி வருகிறது
நிலைகொள்ளா மனது
வட்ட வட்டமாய் தொலையும் காலத்தை
மீட்கவியலா வியர்த்தம்
ஒருபுறமெனினும்
ஒன்றையொன்று கடக்கும் விழைவுடன்
வாகனங்கள் குறிக்கின்றன
விலகிச் செல்ல ஒருவரும் இல்லாதிருக்கும்
தெருவின் குறையொளியில்
ஒலிக்கும் இருசக்கர வாகனங்கள்
கடக்க நினையாத தருணங்களென
பேசா சகஉறைதல்கள்
அதோ அதோவென்று உருகித் தவிக்கும்
பேரேக்கத்தின் நுனியில்
நாம்தான் எனும் அழைப்பு
இருள்நிறை திருப்பத்தில்
தேங்கியுள்ள மழைநீரீனில் பதிந்து கடக்கும்
பாத ஈரத்தில் தோய்ந்தன நிழல்கள்
முற்றுப்புள்ளியின் மீது மினுங்கியது
தாராகை.
