
எனக்கு நனைவது பிடிக்கும்
எனவே குடை எடுத்துச்
செல்வதில்லை
மழை இயற்கையின் அற்புதம்
அதற்கா கறுப்புக் கொடி காட்டுவது
பூமி மீது வானம் கொள்ளும்
கருணையே மழை
நான்கு சுவர்களுக்குள்
அடைபட்டுக் கிடந்தாலும்
வானத்துக்குக் கீழே தான்
நாம் வாழ்கிறோம்
மழைக்காலத்தில் மட்டுமே
வரும் குடைகளின் திருவிழா
மற்ற நேரங்களில்
கேட்பாரற்று தூசி படிந்து
ஓர் மூலையில் உறங்கும்
குடைக்கம்பியில் சிலந்தி
வலை பின்னும்
கறுத்த மேகமும்
ஈரக் காற்றும்
மறக்கப்பட்ட குடையை
தேட வைக்கும்
கருந்தோகை விரித்து
வீதியில் ஊர்வலம்
செல்லும் குடைகளுக்கு
இளமை ஊஞ்சலாடும்
மழைக்காலம் முடியும்
வரை!
விருட்சம் இன்றைய(19.7.24) கவிதை வாசிப்பு நிகழ்வில் நான் வாசித்த எனது இரு கவிதைகள்
