அன்புச்செல்வி சுப்புராஜூ/என்ன செய்யப் போறீங்க

உலகின் மூலை முடுங்கெங்கும் ஒலிக்கும் உன்னதக் கேள்வி
என்ன செய்யப் போறீங்க…

உதாரணத்திற்கு ஒன்று…
கள்ளக்குறிச்சியில் கள்ளச்சாராய சாவு …
எண்ணிக்கை அதிகரிக்க அதிகரிக்க …
ஆவேசமாக, அழுகையாக, ஆதங்கமாக
ஆயிரம் குரல்கள் ஒலிக்கின்றன…
என்ன செய்யப் போறீங்க….
அடுத்தொரு பிரச்சினை வரும் வரை ஒலிக்கும்….
பிறகும் ஒலிக்கும்… அடுத்தப் பிரச்சினைக்காக …

இப்படித்தான்
மண் தொட்டு வான் வரை மாசுக்கள் பெருக்கம்
கொலை, கொள்ளை, கற்பழிப்பு
ஏமாற்று, பொய், புரட்டு
குடும்பத்திலும், அரசியலிலும் பின்னிடும் சூழ்ச்சி வலைகள் என
அநியாயங்களைக் கண்டதும் குருதி பொங்கிட,
நரம்புகள் புடைக்க ஒலித்திடும்
குரல்வளைகளின் ஒலிகள்…
நியாயம் கிடைக்கும் முன்பே மெல்ல மெல்ல
அடங்கிப் போகின்றன / அல்லது மறக்கடிக்கப் படுகின்றன
என்ன செய்யப் போறீங்க …

கேள்வி கேட்பது எளிதுங்க
அதனால் தானோ என்னவோ எதற்கெடுத்தாலும்
கேள்விகளை மட்டுமே கேட்டுக் கொண்டே இருக்கிறோம்
பதில் வருகிறதோ இல்லையோ
விடை தெரிகிறதோ இல்லையோ
கேள்விகள் கேட்பதே நம் உரிமையென….
கேட்டுக் கொண்டே இருக்கிறோம்

சுட்டு விரலை நீட்டாதீர்கள்
மூன்று விரல்கள் உங்களை நோக்கி…
தேர்தலுக்கு முன் பட்டியலிட்டு விட்டு
பின் வாகாய் மறந்து விடும்
அரசியல்வாதிகளின் வெற்றுப் பேச்சாக இல்லாமல்
என்ன செய்யப் போகிறோம் என்றே சிந்தியுங்கள்
இணைந்த கரங்களுக்கே வலு அதிகம்
நிச்சயமாக வெல்வோம்

கொசுறாய் ஒன்று
அப்பாடா… இதோ
என்ன செய்யப் போறீங்க
சுட்டு விரலை நீட்டி விட்டேன்
இனி அவர்கள் பாடு
கடமை முடிந்தது…
என்னை நோக்கும் மூன்று விரலை பார்த்தும்
பார்க்காமல் அமர்கிறேன்
இதுவே மனிதனின் முகமூடியற்ற மனநிலை