
- விதி அவ்வளவுதான்
கிராமங்களில் ஏழைகளுடைய வீடு காற்றோட்டமில்லா மலும் வெளிச்சமின்றியுந்தான் இருக்கும்; சுகாதார வசதிகளே கிடையா. கிராமத்தில் யாராவது ஒருவருக்குக் காலரா, வைசூரி முதலிய நோய் கண்டால், தொத்து நோய் எல்லா வீடுகளுக்கும் பரவி, மனிதர்களைச் சூறையாடிவிட்டு, அதற்கே சலித்துப்போய் நின்றால்தான் நின்றது! அதைத் தடுப்பதற்குச் சுகாதார அதிகாரிகளோ, கிராமத்தவர்களோ முயற்சியெடுக்க மாட்டார்கள். சுமார் இருபது பேராகிலும் இறந்த பிறகு அவ்வூர் மாரியம்மனுக்குக் ‘கொடை’ நடத்துவார்கள். அவ்வளவுதான். சமீபத்தில் ஆஸ்பத்திரியும் கிடையாது. அருகிலுள்ள நகரங்களுக்குச் சென்று வைத்திய உதவி பெறுவதற்கு அநேகரிடம் பணம் இராது. தங்களுக்குத் தெரியாது; தெரிந்தவர்கள் சொன்னாலும் கேட்கமாட்டார்கள்.
கடையத்தில் 1918-ம் வருஷம் கார்த்திகை பிறந்ததும் அடை மழை நிற்கவில்லை. அமாவாசைக்கு முந்தின தினம் இரவு பன்னிரண்டு மணியிருக்கும். ஒரு வீட்டில் 25 வயதுடைய வாலிபன் மூன்று நாளாக வாந்தி பேதியினால் அவஸ்தைப்பட்டு, எழுந்திருக்கச் சக்தியற்று, இப்பொழுதோ இன்னும் சிறிது நேரத்திலோ உயிர் பிரியும் நிலையில் படுக்கையின்றி ஒரு கிழிந்த வேஷ்டியை விரித்து ஒரு மணக் கட்டையைத் தலைக்கு வைத்துப் புரண்டு கொண்டிருக்கின்றான். அவனது இளம் மனைவி கவலையோடு புருஷனுக்கு
வேண்டிய சுச்ரூஷைகளைச் செய்துவருகிறாள். பத்து மாதக் குழந்தையொன்று தொட்டிலில் கிடக்கின்றது. மூலையில் குத்து விளக்கு முணுக்முணுக்கென்று எரிகின்றது. அவ்வாலிபன் அடிக்கொரு வாந்தியெடுப்பதும், மனைவியையும் குழந்தையையும் அன்போடு பார்ப்பதுமாக இருந்தான். வீட்டில் பெரியவர்கள் கவலையோடு ஒரு மூலையில் உட்கார்ந்து ரகஸ்யமாகப் பேசிக் கொண்டும் இருந்தனர். ஸ்ரீ பாரதியாருக்கு அந்த சமாசாரம் அப்பொழுது தான் எட்டிற்று. அவர் தெருக்கோடியில் ஒரு வீட்டில் வசித்து வந்தார். உடனே வந்து பார்த்தார். நோயாளியின் நிலைமை பரிதவிக்கத்தக்க வண்ணம் இருந்தபடியால் அவருக்கு வருத்தமும் சினமும் கரைமீறி எழுந்தன.
“என்ன மருந்து கொடுத்தீர்கள்?” என்று வீட்டாரிடம் கேட்டார்.
‘கஷாயம் போட்டுக் கொடுத்தோம், வைத்தியன் சொன்னபடி” என்றார்கள்.
“மேற்படி என்ன செய்யப் போகிறீர்கள்?” என்றார்.
“செய்வதென்ன? அவன் விதி அவ்வளவுதான்!”
இந்த பதிலைக் கேட்டதும், பாரதியாருக்குக் கோபம் மிஞ்சிவிட்டன. வாசலில் வந்து நின்று, “கிராமத்தார்களே! வாருங்கள்” என்று சத்தம் போட்டுக் கூப்பிட்டார். தெருத் திண்ணையில் உறங்கிக் கொண்டிருந்த சிலர் வந்தனர். யார் வந்து என்ன பயன்? அவன் விதி அவ்வளவுதான்!
செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

அந்த மேலான எண்ணம் கொண்டவரையே இந்த நாடு போற்ற வில்லை. பிறகு!