
- ராஜாத் தோட்டம்
எட்டயபுரத்தில் அவ்வூர் மகாராஜா ஒரு மாந்தோட்டம் வைத்திருக்கின்றார். அங்கு உயர்ந்த ஜாதி ஒட்டு மாமரங்களும், உயர்ந்த பழ விருக்ஷங்களும் எல்லாத் தேசங்களிலிருந்தும் வரவழைத்துப் பயிரிட்டு வருகின்றார்கள். புஷ்பச் செடிகளும் ஏராளமாக உண்டு.
பாரதியார் புதுவையிலிருந்து திரும்பி பிரிட்டிஷ் இந்தியாவுக்கு வந்ததும் சீக்கிரத்திலேயே தாம் பிறந்த ஊராகிய எட்டயபுரம் சென்றார். பந்துக்களுடனும் ஊராருடனும் பாலிய நண்பர்களுடனும் அளவளாவி மகிழ அவர் அளவற்ற ஆசை கொண்டிருந்தார். பத்து வருஷங்களாக அடக்கி வைத்துக் கொண்டிருந்த ஆவல் ஊரையும் நண்பரையும் கண்டதும் கட்டு மீறியது. தமக்குச் சம வயதுடையவரைக் கண்டால் பாரதியார் தழுவி உச்சி முகந்து இன்புறுவார். இது ஊராருக்கு அதிசயமாக தோன்றியது.
மேலும், பாரதி எட்டயபுரம் விட்டுச் சென்ற காலத்தில் நவநாகரிக வாலிபனாய், சுந்தர புருஷனாய் இருந்தவர். இப்போது எலும்பும் தோலுமாக மாறி, தாடியும் மீசையும் நெற்றியில் நாமமுமாகக் காட்சியளித்து அவர்களுக்கு அவ்வளவாகப் பிடிக்கவில்லை.
நமது ஜனங்களுக்குக் காதல், வேதாந்தம் எல்லாம் புஸ்தகத்தில் படிப்பதோடு சரி. காளிதாசன் சாகுந்தலத்தை அனுபவிப்பார்கள்; புத்தபிரானது அன்பு உபதேசத்தையும் ரஸிப்பார்கள்; அர்ச்சுனனது வீரத்தையும், கர்ணன் கொடையையும், தருமரின் சத்தியத்தையும் புராணத்தில் வாசித்துப் புகழ்வதோடு சரி. யாரேனுமொரு மனிதன் தற்சமயம் அதே தருமத்தை நடத்திக் காண்பித்தால், அவனைப் பைத்தியமென்றுதான் மதிப்பார்கள்.
ராஜாத் தோட்டத்தில் உலாவுவதற்குப் பாரதியார் என்னையும் அழைத்தார். ஊராரின் கேலிக்குப் பயந்து நான், ‘ஊருக்குத் தகுந்த படியல்லவா இருக்க வேண்டும்? நமது ஊராருக்கு, ஸ்திரீகள் வம்பளப்பதற்கு வெளியில் செல்லலாமே தவிர, கொண்ட கணவனுடன் வெளியில் சாயங்காலம் உலாவச் செல்லக்கூடாதே?’ என்றேன்.
“நம்முடைய மனிதர் தூஷிப்பதும், நமக்கு ஆனந்த மல்லவா? புறப்படு!” என்றார் பாரதியார்.
பாரதியார் எந்தக் காரியத்தைச் செய்யச் சொல்லி ஆக்ஞையிடுவாரோ அதன்படி தவறாது செய்ய வேண்டு மென்பது எனது நோக்கம் உறுதி. எங்கள் உறவினரான ஸ்திரீகள் கூட, “செல்லம்மா! உன்னால்தான் உன் புருஷன் கெட்டுப் போகிறான். அவன் ‘எள்’ என்பதற்குமுன், நீ ‘எண்ணெய்’ என்கிறாயே! பெண்டாட்டி மருந்திட்டு புருஷனை வசியப்படுத்துவதாக எல்லோரும் சொல்வது வழக்கம். உன் விஷயம் நேர்மாறாயிருக்கின்றதே! இப்படி ஒரு புருஷனோடு வாழ்வதைக் காட்டிலும், நாங்களாயிருந்தால் ஒரு செம்பைத் தேய்த்துக் கொண்டு, நாலு வீடு சென்று பிச்சையெடுத்து வயிறு வளர்ப்போம். அவன் ஆட்டின கூத்துக்கெல்லாம் நீ ஆளாகின்றாயே!” என்று பழித்துக் கூறுவது வழக்கம்.
அவர் பேச்சுக்கு மறு பேச்சின்றி நானும் அவருடன் தோட்டம் பார்க்கப் புறப்பட்டேன். வழக்கம் போல் இருவரும் கைகோர்த்துக் கொண்டு தெருக்களின் வழியே நடந்தோம்.
சிலர் “ஓகோ! பைத்தியங்கள் எங்கேயோ உலாவப் போறதுகள், டோய்!” என்று கைதட்டிச் சிரிப்பார்கள். பாரதியாரோ சிறிதும் அஞ்சாமல்,
“ஆணும் பெண்ணும் நிகரெனக் கொள்வதால்
அறிவி லோங்கியிவ் வையந் தழைக்குமாம்
பூணும் நல்லறத் தோடிங்கு பெண்ணுருப்
போந்து நிற்பது தாய் சிவ சக்தியாம்
நாணு மச்சமும் நாய்கட்டு வேண்டுமாம்
ஞான நல்லறம் வீர சுதந்திரம்
பேணு நற்குடிப் பெண்டிர் ஒழுக்கமாம்”
என்றும்,
“நிமிர்ந்த நன்னடை நேர்கொண்ட பார்வையும்
நிலத்தில் யார்க்கு மஞ்சாத நெறிகளும்
திமிர்ந்த ஞானச் செருக்கு மிருப்பதால்
செம்மை மாதர் திறம்புவ தில்லையாம்
அமிழ்ந்து பேரிரு ளா மறி யாமையில்
அவல மெய்திக் கலையின்றி வாழ்வதை
உமிழ்ந்து தள்ளுதல் பெண்ணற மாகுமாம்”
என்றும் பாடிக் கொண்டே மேலே நடந்தார்.
செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “செல்லம்மா பாரதி/பாரதியார் சரித்திரம்”
Comments are closed.