செல்லம்மா பாரதி/ பாரதியார் சரித்திரம்

புது நண்பர்கள்

ஒரு சமயம் செட்டிமார் நாட்டுக்குப் பாரதியார் சென்றிருந்தார். அவரது அன்பர்களான செட்டிமார் நண்பர்கள் அவரை நன்று போற்றித் தேவையான பொருளுதவி செய்து, அவருடைய பொன் மொழிகளை எழுத ஒரு மாணிக்க கல்லிழைத்த பௌண்டன் பேனாவும், ஒரு அழகான வேலைப் பாடமைந்த மரக்கைப் பெட்டியும் காணிக்கை கொடுத்து அனுப்பினார்கள்.
கடையத்தில் அவரது நண்பரான ஸ்ரீ நாராயண பிள்ளைக்கு மேற்படி நாராயணப் பிள்ளையும் ‘கற்பூரப் பூங்காவனம்’ என்று சொல்லும் வண்ணம் இருந்த தமது தோட்டத்திலிருந்து பாரதியாருக்குத் தினமும் ஒட்டு மாம்பழமும், மாதுளைப் பழமும், ரோஜாப் புஷ்பமும், ராஜமல்லிகைப் புஷ்பமும், எலுமிச்சம் பழமும் கொணர்ந்து கொடுத்து அளவளாவுவார். ரோஜா மலரைத் தாமே பாரதியாருக்குச் சூட்டி மகிழ்வார். பின்னும் அனேகம் பிராம்மணரல்லாத நண்பர்களும் கடையத்திலுண்டு. பாரதியார் அந்த நண்பர்களோடு ‘சூக்ஷ்மமுடையவர்’ கோவிலில் சமபந்தி போஜனம் செய்வார். கேட்பானேன், அக்ரஹாரத்தில் ஸ்ரீ பாரதியாருக்கு வசைமொழிதான். அருகிலுள்ள சிற்றூரான பொட்லபுதூர் என்ற ஊரிலிருந்து கூட்டங் கூட்டமாக முஸ்லீம் நண்பர்கள் வந்து பாரதியாரின் ‘குர் ஆன்’ உபதேச மொழிகளைக் கேட்டு ஆனந்தமடைந்து போவது வழக்கம்.
நாங்கள் குடியிருந்த வீட்டுக்கு ‘பட்டர் அகம்’ என்று பெயர். வீட்டு வாசலில் நின்று பாரதியார் ‘அமிர்த சாஸ்திரம்’ என்னும் சாகாதிருக்கும் வழியைப் பற்றிப் பிரசங்கம் புரிவார். எதிரிலுள்ள ஸ்ரீராம ஸ்வாமி கோவிலில் வீற்றிருக்கும் ஸ்ரீ ராமரும் ஸீதையும் மகிழ்வார்களென்றே கூறுவது மிகையாகாது.
‘சாணார்’ என்று அழைக்கப்படும் நாடார் வகுப்பினர் எங்கள் ஊரில் நிலங்கள் பயிரிட்டுச் சாகுபடி செய்பவர்களில் முதல் ஸ்தானம் பெற்றவர்கள். என் வீட்டைச் சேர்ந்தவர்கள் நான்கு பேர் சகோதரர்களாவர். அதில் ஒருவன் ‘நாராயணன்’ என்பவன் பாரதியாருக்கு ஆயிருர் நண்பன் – ராமபிரானுக்குக் குகனைப் போல.
ஒரு சமயம் பணமில்லாததற்காகத் தம்மை பந்துக்கள் கேவலமாக மதிக்கின்றார்கள் என்று அவர் மனதில் ஓர் எண்ணம் உதித்தது. ‘என்னடா உலகம்! என்ன பைத்தியம்!’ என்று கோபங் கொண்டார். ஜேபியில் 100 ரூபாய் வைத்திருந்த சமயமாக இருந்தது. கையில் ஜேபியில் போட்டு ரூபாய்களைத் தெருவில் வீசினார். பார்த்தவர் பரிகசிப்பதற்குக் கேட்பானேன்? குழந்தைகளோ அவைகளைப் பொறுக்கிச் சேகரித்துக் கொண்டனர்.
கடையத்தில் ஸ்ரீ ராமநவமி உற்சவம் மிகச்சிறப்பாக நடைபெற்றது. அச்சமயம் பிரபல சங்கீத வித்வான்கள் விஜயம் செய்து கச்சேரிகளும் கதாகாலக்ஷேபங்களும் நடத்தினார்கள். காயக சிகாமணி ஸ்ரீ முத்தையா பாகவதர், கல்லிடைக்குறிச்சி வேதாந்த பாகவதர், சிவகங்கை தசரதராம பாகவதர் முதலியோரும் கூடியிருந்தனர்.
பாரதியார் அச்சமயம் கடையத்தில் வசித்து வந்தபடியால் அந்த வித்வான்களைச் சந்தித்து அவர்களோடு வார்த்தையாடிக் கொண்டிருந்தார். பாரதியாரைச் சற்றேறக் குறைய பைத்தியம் என்றே மதித்திருந்த அக்ரஹாரத்தினர் அவரைப் பார்க்குபோதுகூட, ஏளனமாகவே பார்ப்பார்கள். காயக சிகாமணி முதலியோருக்கு மாத்திரம் இவரது கல்வித் திறமை நன்கு தெரியும். பாரதியார் பாடிக் காட்டின ‘ஜயபேரிகை கொட்டடா! என்ற பாட்டை மிகவும் ரஸித்தனர்.
ஒரு பிரபல வித்வான் மிருதங்கம் வாசித்தார். கேட்பதற்கு ரஸிகர்கள் இருந்தபடியால் பாரதியின் உற்சாகம் அதிகரித்து, சாரீரமும் மேல் ஸ்தாயில் அபூர்வமாக சஞ்சாரம் செய்தது. அவரை எப்போதும் பரிகசிக்கும் பாமரரும் கூடத் தலையை ஆட்டி, “அடே, பாடும் விதமாகப் பாடினால், பாரதி பாட்டு எல்லாப் பாட்டுக்களையும்விட நன்றாகயிருக்கிறதடா!” என்று மெச்சத் தொடங்கினார்கள்.
இரவில் தேவகோட்டை வித்வான் ஒருவர் “வள்ளித் திருமணம்” காலட்சேபம் செய்தார். அதில் வேடுவர்கள் பயிர் களை மிருகங்கள் அழித்துப் பாழ் செய்வதைத் தடுக்கும்படி, அவர்கள் சாமிக்குப் பூசை போட்டனர். அவர்களில் ஒருவனுக்குச் சாமி ஆவேசம் வந்து பாடும் பாட்டாகிய, “பாக்கும் வைச்சான், பழமும் வைச்சான், வெத்திலை வைச்சான், போயிலை வைச்சான் ஒண்ணுவைக்க மறந்திட்டான்; சுண்ணாம்பில்லே, சுண்ணாம்பில்லே” என்று பாடினான். பாரதி ‘கொல்’லென்று சிரித்தார்.
அருகிலிருந்தவர்கள், “ஏன் சிரிக்கிறீர்?” என்றார்கள். “இந்தப் பாட்டு நமது நாட்டு மக்களுக்கும் ஒருவாறு பொருந்தும்?” என்றார் பாரதி. “எப்படி?” என்று அவர்கள் திருப்பிக் கேட்டனர். “தமிழ் மக்களுக்குக் கடவுள் நிலமும் வைச்சான், பலமும் வைச்சான், நிகரில்லாத செல்வம் வைச்சான், ஒண்ணு வைக்க மறந்திட்டான்; புத்தியில்லே, புத்தியில்லே” என்றார். நண்பர்கள் விழுந்து விழுந்து சிரித்தார்கள்.
உற்சவ காலங்களில் தினம் காலையில் ஒரு பாகதவரின் தலைமையில் பஜனைக் கோஷ்டி, ‘உஞ்சவிருத்தி’ செய்வது வழக்கம். வழக்கமாகப் பாடும் பஜனைப் பாடல்கள் அநேக மாகத் தெலுங்கும், ஸம்ஸ்கிருதமும்தான். பாரதியாரும் அவர்களுடன் சுற்றுவதுண்டு. தினமும் பாட்டுச் சொல்லிக் கொடுக்கும் பாடகருக்கு, ஒரு மாதமாகப் பாடித் தொண்டையும் கட்டிவிட்டது. பாடிய பாட்டுக்களையே தினந்தோறும் பாடும் விரஸம் ஏற்பட்டுவிட்டது.
உடனே பாரதி, “நான் சொல்லிக் கொடுக்கிறேன், யதுவீரா! புதுப்பாட்டு” என்று “கோவிந்த கிருஷ்ண பாஹி ராஜ கோபால கிருஷ்ண பாஹியது வீரா” என்ற பஜனைப் பாட்டு மெட்டில்,

“பார்க்கும் மரங்களெல்லாம் நந்தலாலா நின்றன்
பச்சை நிறம் தோன்றுதையே நந்தலாலா
கேட்கு மொலியிலெல்லாம் நந்தலாலா நின்றன்
கீதம் இசைக்குதடா நந்தலாலா
தீக்குள் விரலையிட்டால் நந்தலாலா உன்னைத்
தீண்டு மின்பந் தோன்றுதையே நந்தலாலா
காக்கைச் சிறகினிலே நந்தலாலா நின்றன்
கரிய நிறந் தோன்றுதையே நந்தலாலா.”

என்ற பாட்டை அப்படியே ஆசு கவியாகச் சொல்லவும், கோஷ்டியினர் சந்தோஷத்தோடு, (தமிழ்ப் பாட்டாகையால்) அர்த்தந் தெரிந்து உரக்கப் பாடலாயினர். அவர்கள் இரண்டு பர்லாங் தூரத்தில் வரும் போதே பாட்டின் கோஷம் கேட்க வாரம்பித்தது. “இதன்ன, இன்று புது தினுசாயிருக்கிறதே, பஜனை!” என்று பார்த்ததும், பின்புதான் காரணம் தெரிய வந்தது. மந்திர சக்தி கொண்ட பாரதி வாக்குக்கு, மனிதர்கள் மனதில் ஊடுருவிப் பாயும் சக்தியும் இருப்பதை அன்று அனைவரும் கண்டனர்.
பாரதியின் நடை உடை பாவனைகள் சில சமயம் மற்றவர்களுக்குப் பிடிக்காமலிருப்பதுண்டு. அதைப் பாரதியார் கொஞ்சமும் பொருட்படுத்தாமல் தம் போக்கிலேயேதான் போவார். ஒருநாள் தெருவில் நடக்கும் பொழுது பாரதியார் கைவிரல்களை மடக்கிக் கொண்டு நெஞ்சை நிமிர்த்தி விரைவாக நடந்தாராம். அதைக்கண்டு அவரது தோழர் ஒருவர், “என்னடா! கையை இப்படி வைத்திருக்கின்றாய்” என்றாராம். ஒரு சின்ன விஷயத்துக்குக்கூடக் கட்டுப்பாடும் அடக்குமுறையுமா என்று பாரதியார் கோபங்கொண்டார். ஆனால் அன்று பதில் ஒன்றும் சொல்லாமல் இருந்துவிட்டார்.
மறுநாள் அதே நண்பரின் எதிரில் கை விரலை விரைப்பாக நீட்டிக்கொண்டு நடந்தார். அவர், “என்னடா, கையை நீட்டிக்கொண்டு நடக்கின்றாய்?” என்று கேட்டதுதான் தாமதம். உடனே பாரதியார், “தம்பி! உன் ஆசீர்வாதத்தினால் எனக்கு எவ்வித வியாதியும், ரோகமும் கிடையாது. ஒரு மனிதன் தன் கையை நீட்டவோ, மடக்கவோ கூடச் சுதந்திர மில்லையென்று நினைக்கும் உன்னைப் போன்ற மடையருடன் குடியிருப்பதைக் காட்டிலும் மனிதனுக்கு வேறு நரகம் வேண்டாம்” என்று சுடச்சுடப் பதில் உரைத்தாராம். நண்பருக்கு வெட்கித் தலைகுனிவதைவிட வேறு என்ன வழி இருந்திருக்கும்?

செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)