
- கல்யாணமும் காட்சியும்
ஒரு சமயம் திருவனந்தபுரம் சென்றோம். அங்கு எங்களுக்கு நெருங்கிய நண்பரும், ஒருவகையில் பந்துவுமான ஒருவர் வீட்டில் கல்யாணம். சம்பந்தி வீட்டார் பெரிய ஸர்க்கார் உத்தியோகத்திலிருப்பவர்கள். “பாரதி வந்திருக்கிறார்” என்றதைக் கேட்டது, ஒரு பக்கா சுதேசியை இந்தக் கல்யாணம் சமயத்தில் வரவிடக்கூடாது என்று தீர்மானித்து பாரதியை நேரில் கண்டும் கூட “விவாஹத்துக்கு வாருங்கள்” என்று அழைக்கவில்லை.
ஆயினும் அவ்வீட்டு அம்மாளுக்கு மாத்திரம் பாரதியாரிடம் உள்ளன்பு விசேஷமாக உண்டு. நாங்கள் அவ்வீட்டுக்குச் செல்லக் கூடாதென்று பலமுறை வேண்டிக்கொண்டும் கேளாமல் அழையா வீட்டிற்குள் பாரதியார் நுழைந்தார். வீட்டு எஜமான் அவரை வாவென்று அழைக்கவில்லை. பாரதியார் கொஞ்சங்கூட முகவாட்டமும், சங்கோசமும் இன்றி, மடமடவென்று உள்ளே சென்றார். வீட்டு அம்மாளிடம் சென்று, “அம்மா! குழந்தைக்கு விவாஹம் ஆயிற்றா?” என்று பரிவோடு கேட்டார். அந்த அம்மணியின் கண்களில் நீர் துளித்தது. மனம் உருகிற்று. பாரதியாரின் சுபாவத்தைக் கண்டு, அந்த அம்மையார் தம் கணவரது நடத்தையை உள்ளூர வெறுத்தார்.
உடனே அவர், “பாரதி! என்னை மன்னிக்க வேண்டும். நீர் மாசு மறுவற்றவர். நாங்கள் உத்யோக ஆசையினாலும், பணத் திமிரினாலும் சில சமயங்களில் மெய்மறந்து தங்களைப் போன்ற உத்தமர்களின் சகவாசத்தைக் கைவிடுகின்றோம். நேற்று தங்களை நேரில் கண்டும் அழையாதிருந்தோம். அதிலிருந்து என் மனது ‘தவறு செய்கின்றாய்? என்று வாள் கொண்டறுக்கின்றது. எத்தனையோ பெரிய பெரிய மனிதர்கள் வந்து கல்யாணம் விசாரித்துச் சென்றார்கள். ஆயினும் இப்போது நீங்கள் விசாரிக்கும்போது எனக்கு ஏற்பட்ட சந்தோஷமும் ஆறுதலும் இதற்குமுன் ஏற்படவில்லை” என்று பரிவுடன் கூறினார்.
“அம்மா! மனதுக்கு மனதே சாக்ஷி! நான் வராவிட்டால் உன் மனம் துயரடையும் என்று தெரிந்தே வீட்டில் அனைவரும் தடுத்தும் நான் இங்கு வந்தேன்” என்று கூறினார் பாரதியார். திருமணத் தம்பதிகளை வரவழைத்து அவர்களைத் தழுவி ஆசீர்வதித்தார்; அந்த அம்மாள் அன்புடன் தந்த சிற்றுண்டியைக் களிப்புடன் புசித்தார். பிறகு விடை பெற்று வீடு வந்து சேர்ந்தார்.
சாயங்காலம் மூன்று மணிக்கு வந்திருந்த விருந்தினரும் கல்யாண வீட்டாரும் காட்சிச் சாலைக்குச் சென்றனர். அதாவது, மிருகக்காட்சிச் சாலைக்கு. பாரதியாரும் புறப்பட்டார். நாங்களும் சென்றோம். விடுதியிலிருந்து ‘காட்சி பங்களா’ இரண்டு மைலுக்கு மேலிருக்கும். மேற்படி கல்யாண வீட்டார், “வண்டியிலேறிக் கொள்ளுங்கள்” என்று மரியாதைக்குக்கூட ஒரு வார்த்தை சொல்லவில்லை. நாங்கள் அவமானத்தினாலும் துயரத்தினாலும் ஒன்றும் பேசாமல் நடந்து போனோம்.
அங்கே சென்றதும் மிருகங்களைப் பார்ப்பதில் சற்று நேரம் கழிந்தது. மறுபடியும் எங்களுக்குக் கஷ்டம் ஆரம்பித்தது. ஏனெனில் பாரதியார் எல்லா மிருகங்களையும் கையினால் தொட்டுப் பார்க்க ஆரம்பித்தார். குரங்குகள், கரடிகள், எல்லாவற்றையும் தொட்டுப் பார்த்துக் கடலை, பழம் கையிலே கொடுத்தார். அந்த மிருகங்கள் நகங்களினால் கிழித்துப் பிராண்டி விடாதிருக்க வேண்டுமே என்று நாங்கள் கவலைப் பட்டோம். அந்த இடத்தில் மிருகங்களுக்குத் தீனி போடும் வேலைக்காரக் கிழவனொருவன் மிருகங்களைக் கத்தச் சொல்லியும் ஆடச்சொல்லியும் எங்களுக்கு வேடிக்கை காண்பித்து வந்தான். அவன் இவரது போக்கைத் தெரிந்துகொண்டு, “சாமி! புலியையும் சிங்கத்தையும் மட்டும் தொட வேண்டாம். ஏனெனில் அவைகளுக்கு ஒரு சமயம் இருக்கும் புத்தி மற்றொரு சமயம் இருக்காது. அவை கையினால் லேசாக ஒரு தட்டுத் தட்டினால் கூட உங்களால் தாங்க முடியாது” என்று எச்சரிக்கை செய்தான்.
அதற்கு, “தம்பீ! நீ பயப்படாதே! என்னை ஒன்றும் செய்யாது. அவற்றைச் சமீபத்தில் கூப்பிடு! நான் தழுவிக் கொண்டால் அது ஒரு தீங்கும் செய்யாது” எனவும்,
எங்களுக்குப் பயத்தினால் உடம்பு கிடுகிடென்று நடுங்க ஆரம்பித்தது. நான், “சிங்கத்திற்கு நல்ல புத்தி கொடு! பகவானே” என்று மனதிற்குள் சுவாமி வேங்கடசலபதியைப் பிரார்த்தினேன். மெதுவாக அரைமனதோடு கிழவன் சிங்கத்தை அருகில் வரவழைத்தான். உள்ளூற அவனுக்குப் பயம் இருந்தபடியால், அதன் வாலை மட்டும் பிடித்துக் கொண்டு, “தொடுங்கள், சாமி” என்றான்.
“மிருகராஜா! கவிராஜ் பாரதி வந்திருக்கிறேன். உனது லாவக சக்தியையும் வீரத்தையும் எனக்குக் கொடுக்க மாட்டாயா? இவர்கள் எல்லோரும் நீ பொல்லாதவனென்று பயப்படுகின்றார்கள். உங்கள் இனந்தான் மனிதரைப் போல் உள்ளொன்று வைத்துப் புறமொன்று செய்யும் சுபாவம் இல்லாதது என்பதையும், அன்பு கொண்டோரை வருந்த மாட்டீர்களென்பதையும் இங்கிருப்போர் தெரிந்து கொள்ளும் படி, உன் கர்ஜனையின் மூலம் தெரியப்படுத்து, ராஜா!” என்றார் பாரதி.
என்ன ஆச்சரியம்! உடனே சிங்கம் கம்பீரமாகப் பத்து நிமிஷம் கர்ஜித்தது. அவருக்குத் திருப்தியாகும்வரை அரை மணிநேரம் மிருகேந்திரனைப் பிடரி, காது எல்லாம் தடவிவிட்டு, எங்களது தொந்தரவினால் வாயில் மட்டும் கைவிடாமல், அதனிடம் விடைபெற்றுக் கொண்டார்..
நாங்கள் வாசலில் வந்து ஏதேனுமொரு வண்டி அமர்த்திக்கொண்டு வீடு போக வேண்டுமென்று நினைத் திருக்கையில், அவ்வூர்ப் பிரமுகரும் பிரபல வக்கீலுமான ஸ்ரீமான் கே.ஜீ.சேஷய்யர் தமது இரட்டைக் குதிரை சாரட்டோடு அங்கு வந்து, “பாரதி! நல்ல காரியம் செய்தீர், நடந்து வந்தீராமே! என்னிடம் ஒரு வார்த்தை சொல்லக் கூடாதா? அப்பொழுதே வண்டியனுப்பியிருப்பேனே? இனிமேல் இவ்வூரில் உள்ளவரை எனது வண்டியையே உபயோகித்துக் கொள்ளுங்கள்” என்று உபசரித்துச் சென்றார். அப்போது எங்களுடன் இருந்த கல்யாண வீட்டார் முகத்தைப் பார்க்க வேண்டுமே!
வீடு சென்று சாப்பாடு முடிந்தது. ஊர்வலம் அந்தத் தெரு வழியே சென்றது. அக்காலத்தில் பிரபல நாதஸ்வர வித்வான் ஸ்ரீ சித்திரை, பிரம்மாந்தமாக பைரவி ராக ஆலாபனை செய்தார். பாரதியாரும் சென்று ஊர்வலத்தில் கலந்துகொண்டார். நல்ல ரஸிகர் இருந்தால்தான் பாடகருக்கு உற்சாகம் ஏற்படுமல்லவா? மேலும், மேலும் நாயனத்தில் ஆச்சரியமான வேலைகள் நடந்தன. பாரதி தாளம் போட்டார். மேளக்காரனைச் சுற்றிக் கூட்டம் ரொம்ப அதிகரித்துவிட்டது. எள் போட்டால் கீழே விழாது. கூட்டத்திலிருந்து ஒருவர் ஓடி வந்து, ஸ்ரீ சித்திரை கழுத்திலும் பாரதியார் கழுத்திலும் மாலைகள் போட்டார். அவர் யார் என்று நினைக்கின்றீர்கள்? மேற்படி கல்யாணத்தின், சம்பந்தி ஐயர்வாள்தான்! ‘வரவேண்டும்! வரவேண்டும்” என்று பாரதியாரை
அழைத்துச் சென்று வேண்டிய மட்டும் உபசரித்தார். வீட்டு எஜமானன் இப்படி நடக்குமென்று எதிர்பார்க்கவில்லை யாகையால் தமது செய்கைக்கு நாணித் தலைகுனிந்தார். பாரதியார் அதைக் கண்டு அன்போடு, “பாண்டியா! கண்ணப்பா! உனக்கு நல்ல சம்பந்தம் கிடைத்திருக்கின்றது. க்ஷேமமாக வாழ வேண்டும்” என்று ஆசீர்வதித்துவிட்டு வீடு வந்து சேர்ந்தார்.
செல்லம்மா பாரதி /பாரதியார் சரித்திரம் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
