
அலெக்ஸ் இந்ரஜால் காமிக்ஸ் படிக்க
கொடுப்பான்
கந்தசாமி
கால்பந்து கபடி
வீரன்
சிராஜுதீன் பிரியாணி
சாப்ட்ரியா மாப்ள
என்று அன்புடன்
கேட்பான்
பரமசிவம்
அவன் கடை
பொட்டுக்கடலை
ஒரு கைப்பிடி
கூட கொடுப்பான்
பாஸ்கர் எனக்கு
சைக்கிள் ஓட்ட கற்றுக் கொடுத்தான்
கண்ணன்
டேபிளில் தாளம்
போட்டுக் கொண்டு
மங்கியதோர் நிலவினிலே
அற்புதமாகப் பாடுவான்
சுப்புராஜ் தான்
அந்த மாதிரி
கதைகள் அதிகம்
சொல்வான்
கல்லா மாங்கா
அடிக்க தனி கும்பல்
நவராத்திரி சுண்டலுக்கு
ஒரு தனி செட்டு
குளத்தை எல்லோரும்
துவம்சம் செய்ய
நான் படிகளில்
சட்டை ட்ராயருக்கு
காவல்
சைட் அடிக்க
நானே கற்றுக் கொண்டேன்
அது அப்படித்தான்
போல
ஊரை விட்டு
வந்தவன்
அவர்களையும்
விட்டு
வந்து விட்டேன்
பதினைந்து வயதில்
தொலைத்தவர்களை
எழுபது வயதில்
தேடிக்கொண்டிருக்கிறேன்
வெற்று வெளியை
துழாவும்
ஊசி மரங்களைப்
போல
மனம்
அலை பாய்கிறது
யாரையும்
கண்டு பிடிக்க
நான் எந்த
முயற்சியும்
எடுக்கவும் இல்லை
இருந்தாலும்
நான்
அன்பானவன்தான்
இவர்களில் யாராவது
சிலராவது என்னை
மனதில் வைத்து
இவன்
எங்கே போனான்
என்று நிச்சயம் தேடிக்கொண்டிருப்பார்கள்
என்னைப் போல் சோபாவில்
சாய்ந்து கொண்டோ
படுக்கையில்
படுத்துக் கொண்டோ விட்டத்தைப்
பார்த்துக் கொண்டோ
நீண்ட
பெருமூச்சுகளுடன்.

அற்புதம்
அற்புதம்…என்னை எனக்கே அறிமுகபடுத்தியகவிதை
கவிதை அற்புதம்