மினி கதை 2/அழகியசிங்கர்

அவசரம்..

காலையில் அவசர அவசரமாகக் காரை எடுத்துக்கொண்டு சியாமளா கிளம்பினாள்.
அவள் அம்மாவிற்கு எதிர்பாராத விதமாக உடல்நிலை சரியில்லை என்ற தகவல் வந்தவுடன். சியாமளா காரை எடுத்துக்கொண்டு கிளம்பினாள். தன் கணவனிடம் பையனைப் பார்த்து கொள்ளும்படி கூறிவிட்டு கிளம்பினாள்.

அவள் அம்மா இருக்குமிடம் 30 கிலோமீட்டர் தூரத்தில் இருந்தது. அதைக் கடப்பதற்குள். போதும் போதுமென்று ஆகிவிடும்.

வேகமா சென்று கொண்டிருக்கும்போது ஹோ என்ற தெருவையும் பார்த்துக்கொண்டு சென்று கொண்டிருந்தாள்.

எதிர்பாராத விதமாக ஒரு
வாலிபன் ரோடின் குறுக்கே குறுக்கே வந்து காரை நிறுத்தும்படி வேண்டி
கேட்டுக்கொண்டான்.

அவன் மனைவிக்குப் பேறுகாலம். அதனால் அவசரமாகப் போக வேண்டும் என்று மன்றாடினான்

சியாமளா இரக்கப்பட்டு அவனை காரில் ஏற்றிக் கொண்டாள்.

அவன் நன்றி நன்றி என்று சொன்னான். சியாமளா பரவாயில்லை என்று சொன்னாள்.

கார் வேகமாக போய்க்கொண்டிருந்தது அவன் ஒரு இடத்தில் இறங்கிக்கொள்வதாக கூறினான். வேற எதுவும் பேசாமல் வேகமாக கார் ஓட்டுவதில் கவனம் செலுத்திக் கொண்டிருந்தாள் சியாமளா.

ஒரு திருப்பத்தில் எதிர்பாராதவிதமாக அவன் அவள் கழுத்தில் கத்தியைக் வைத்து அவள் போட்டிருக்கும் நகைகளை கழட்டிக் கொடுக்கும்படி சொன்னான்.
பணம் வைத்திருந்தால் பணமும் எடுத்துத் தரும்படி கேட்டான்.

சென்னையில் இப்படி நடப்பது சர்வ சாதாரண நிகழ்ச்சியாக மாறி விட்டது.
இதைத் தடுக்க முடியாமல் அரசாங்கம் தடுமாறிக் கொண்டிருக்கிறது.

திடீரென்று சியாமளா தன் கைப்பையைத் திறந்து , அதிலிருந்து துப்பாக்கியை எடுத்து அவனைச் சுட்டாள்.

டைரக்டர் கட் கட் என்றார்.