
மத்திய அமைச்சருக்கு ஆங்கிலம் தெரியாததால் எங்களால் ஒன்றும் பேசமுடியாமல் போனது என்று ஒரு தமிழக அமைச்சர் பேசியிருப்பது மிகவும் வேடிக்கையாக இருக்கிறது.
கருணாநிதி, எம்ஜியார், ஜெயலலிதா ஆகியோர் காலங்களில் நேரடியாகப் பார்த்திருக்கிறேன். ஆங்கிலமும் இந்தியும் அறியாத பல அமைச்சர்கள் டெல்லிக்கு வந்து மத்திய அமைச்சர்களையும் உயரதிகாரிகளையும் சந்தித்துத் தங்களுக்கு வேண்டியதை சாதித்துச் சென்றிருக்கிறார்கள்.
எந்த அமைச்சர் டெல்லி வந்தாலும் அவர்களை தமிழ்நாடு இல்லத்திலிருந்து தமிழ்-இந்தி-ஆங்கிலம் அறிந்த அதிகாரிகள் உடனிருப்பார்கள். அவர்கள் அமைச்சரின் பேச்சை மத்திய அமைச்சருக்கும் மத்திய அமைச்சரின் பேச்சை அமைச்சருக்கும் அழகாக மொழிபெயர்த்துச் சொல்வார்கள். ஆவணங்களும் அப்படியே அமைச்சர்களுக்கு விளக்கப்படும். எந்தப் பிரச்சினையும் இருந்தது இல்லை.
உள்துறை அமைச்சகத்தில் தமிழக அமைச்சர்கள் யாராவது உயரதிகாரிகளைப் பார்க்க வரும்போது தமிழ்நாட்டைச் சேர்ந்த அதிகாரிகளை அந்த உயரதிகாரிகள் பக்கத்தில் வைத்துக் கொள்வார்கள். இந்தி அல்லது ஆங்கிலத்தில் உள்ள ஆவணங்கள் கூட சில தமிழக அமைச்சர்களுக்கத் தமிழில் விளக்கப்பட்டுள்ளது. அவர்களுடன் வரும் தமிழ்நாடு இல்ல அதிகாரிகளும் அழகாக விளக்குவார்கள். எல்லாமே சுமுகமாகத்தான் இருக்கும். இது போன்ற புகார்கள் எப்போதும வந்ததில்லை.
மத்திய அமைச்சர்கள் பலர் வெளிநாடுகள் பலவற்றுக்கு, ஆங்கிலம் சற்றும் புழங்காத பல நாடுகளுக்குச் சென்று பல ஒப்பந்தங்களில் காலங்காலமாகக் கையெழுத்திட்டு வருகிறார்கள். அவர்களுக்கும் எந்தச் சிரமமும் கிடையாது.
விஜயகாந்த் முதன்முதலில் கட்சி தொடங்கியபோது தாஜ் மான்சிங் ஓட்டலில் முப்பதுக்கும் அதிகமான ஆங்கில, இந்தி பத்திரிகையாளர்களை One to One அடிப்படையில் சந்தித்தார். அப்போது அவர்களிடையில் நான் மொழிபெயர்ப்பாளனாக இருந்தேன். விஜயகாந்தின் சுறுசுறுப்பும் விஷயங்களை உள்வாங்கியது, தன்னை வெளிப்படுததிக் கொண்டவை ஆகியவை எனக்குப் பிரமிப்பு அளித்தது.என்னுடைய பல வட இந்திய பத்திரிகையாளர் நண்பர்களும் பிரமித்துப் போனார்கள்.
எனவே பதவி, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு இப்படி மொழியெல்லாம் எந்தப் பிரச்சினையும் இல்லை. அதை அவர்கள் அணுகும் முறையில் இருக்கிறது.
தமிழக அமைச்சர் இப்படி சொல்வது மிகவும் துரதிருஷ்டவசமானது. ஆடத்தெரியாதவள் கூடம் சரியில்லை என்பார்கள். அதற்கு நிகரான விஷயம்.
இந்த மொழி துவேஷத்தை வைத்து இன்னும் எத்தனை நாட்கள் தான் ஓட்டுவார்கள் என்று தெரியவில்லை.
.
