
திருமணமாகி மூன்று மாதங்களில் பாரிஸில் மூன்று மாத டெபுடேஷன். மனைவியை உடன் அழைத்துப்போக கம்பெனியின் சட்டங்களில் ஓட்டைகளில்லை! கைக்காசு போட்டு அழைத்துப்போக, இன்னும் இரண்டு, மூன்று ப்ரமோஷன் வர வேண்டும்.
சனி ஞாயிறுகளில் நேரம் போவதே மிகவும் சிரமம். இரண்டு முறை வீடியோ காலில் பேசலாம் – கம்பெனியின் செலவில்தான்! – பின்னர் சோகமுடன் அமர்ந்திருக்க வேண்டியதுதான்.
டி வி யிலோ பிரெஞ்சுப் படங்கள், மனதைச் சங்கடப் படுத்துபவை! எத்தனை மலையாளப் படங்கள் பார்ப்பது? தமிழ்?ம்ஹூம், வீட்டு நினைவு அதிகமாகி அழுகை வந்துவிடும்!
அந்த வார இறுதியில் ஈஃபில் டவர் சென்று, மூன்று அடுக்குகளும் ஏறி பாரீஸ் முழுவதையும் பார்த்ததில் அவன் மனது கொஞ்சம் லேசாகியது. அவளுடன் ஒரு முறை வர வேண்டும் என நினைத்துக்கொண்டான். டவருக்குக் கீழே, இரவில் விளக்கு அலங்காரம் பார்க்கலாம் எனக் காத்திருந்தான். எங்கும் இளம் ஜோடிகள், கட்டியனைத்துக்கொண்டும், வெளியுலகை மறந்த வண்ணம் முத்தமிட்டுக்கொண்டும், உடல் முழுக்க பச்சை குத்திக்கொண்ட பெண்களும் ஆண்களும் வலம் வந்து கொண்டிருந்தனர்.
பொழுது போகாமல், கையில் இருந்த செல் போனில் தூரத்தில் நின்று கொண்டிருந்த ஜோடியை கோட்டோவியமாய் வரைந்து கொண்டிருந்தான். அட, நன்றாக வந்திருக்கிறதே – நீண்ட முடியுடன் கருப்பு கோட்டு, பேண்டுடன் ஒருவன் தனது வலது கையால், நீள் கவுன் போட்டிருந்தவளை அணைத்தபடி அந்தப் பக்கம் பார்த்து நிற்கின்ற படம், தன் மன ஓட்டத்தைக் காட்டுவதாக உள்ளதே என நினைத்தான்!
உடனே அதைத் தன் புது மனைவிக்கும் வாட்ஸ் ஆப்பில் அனுப்பித் தன் காதலையும், பிரிவின் துயரத்தையும் அவளுக்குத் தெரிவிக்க விரும்பினான் – அப்படியே செய்தான்.
மறுநாள் சூடான வாட்ஸ் ஆப் செய்தி வந்தது – ‘ஓவியம் சிறப்பாக இருக்கிறது. யாரை அணைத்துக்கொண்டு நிற்கிறீர்கள்? கை நீளுகிறதே.
