
டொராண்டோவிலிருந்து காரில் ஐந்து மணிநேரப் பயணம். நயாகரா அருகில் கனடா – யூ எஸ் பார்டரைக் கடந்து சுமார் 480 கி மீ சென்றால், பெனிஸில்வேனியா மாகாணம் வருகிறது. அதன் கிழக்குப் புறநகரில் பிட்ஸ்பர்கின் அமைதியான சூழலில் அமைந்துள்ளது ‘பென்ஸ் ஹில்’. அதன் மீது அமைந்துள்ளது ‘ஶ்ரீ வெங்கடேஸ்வரா கோயில்’ – பழமையும் பாரம்பரியமும் மிக்க கோயில்!
அதிகாலை ஆறு மணிக்கே கிளம்பிவிட்டோம். வழியில் நின்று நேரம் வீணாக்க விரும்பாமல், கையில் சாண்ட்விச், பிஸ்கட், பழங்கள் என எடுத்துக்கொண்டு, சுமார் ஒன்றரை மணி நேரப் பயணத்திற்குப் பிறகு கனடா எல்லையில் யூஎஸ் இமிக்கிரேஷன்! வழியெங்கும் சாலையின் இருபுறமும் தனித் தனி வீடுகள், சுற்றிலும் அழகாக சமன் செய்யப்பட்ட புல்வெளி! சம்மர் என்பதால், மாலை என்பது சூரிய பகவான் அருளல் இரவு 8 – 9 வரை நீள்கிறது. மேஜை, நாற்காலிகள், தொங்கும் வலை ஊஞ்சல்கள் என வீட்டின் முன்னும் பின்னும் அமைத்துக் கோடையை அனுபவிக்கின்றனர் – காலை என்பதால் அவ்வளவாக டிராஃபிக் இல்லை. மலைகளும், மரங்களும் இடையில் வளைந்து வளைந்து செல்லும் சாலைகளும் மனதிற்கு இதம்.
இந்தியன் பாஸ்போர்ட் என்பதால், காரிலிருந்து இறங்கி காமரா முன் மூக்குக்கண்ணாடி கழற்றிய முகம் காட்டி, கை விரல் ரேகை பதித்து, ‘ஏன் யு.எஸ் செல்கிறோம்’ என்று சொல்லி, ஸ்டாம்பிட்ட பாஸ்போர்ட்டுடன், பயணத்தைத் தொடர்ந்தோம்! வழியில் ஓரிடத்தில் – 1974ல் பெனிஸில்வேனியா காமன்வெல்த் கட்டிவைத்துள்ள சுத்தமான ஒதுங்கும் இடங்கள் – பத்து நிமிடம் நிறுத்தி, மீண்டும் சென்றோம். இரண்டு பக்கமும் மலைகளும், பச்சை பசேலென்ற அடர்ந்த மரக்காடுகளும், வழுக்கிச் செல்லும் வளைந்த ஆறு வழிச் சாலைகளும், பாலங்களும், டன்னல்களும் பயணத்தை மிகவும் சுவாரஸ்யாமாக்கின.
எதிர்பார்த்தபடி, 12 மணி சுமாருக்கு கோயிலை அடைந்தோம். திருப்பதியைப் போலவே, மலைப் பாதை, ஹேர்பின் வளைவுகள், அமைதியான பயணம். சுற்றிலும் வீடுகள் ஒன்றும் இல்லை – S.V.Temple என்னும் நீல நிற வழிகாட்டும் போர்டுகள் வளைவுகளில் பக்தியுடன் நிற்கின்றன.
பிட்ஸ்பர்கில் கோவிலிலிருந்து 40 நிமிட பயணத் தொலைவில் நண்பர் இந்திரநீலன் சுரேஷ் தன் மகன் வீட்டிற்கு வந்துள்ளார். கோவிலுக்கு வரும்போது அவசியம் அவரைச் சந்திப்பதாகச் சொல்லியிருந்தேன். முதல் நாளே அவரது வீட்டு விலாசம், செல்லும் வழி எல்லாம் கேட்டு வைத்திருந்தேன். வாட்ஸ் ஆப்பில், இந்தக் கோயிலைப் பற்றிய அவரது கைவண்ணத்தில் உருவாகிய ஒரு வீடியோவை அனுப்பியிருந்தார். அதிலிருந்து சில தகவல்கள்:
அமெரிக்காவின் திருப்பதி, பிட்ஸ்பர்க் பெருமாள் கோயில் என அறியப்படும், பழமையான, பாரம்பரியம் மிக்க கோயில் இந்த பாலாஜி கோயில்.
பிட்ஸ்பர்க் புராதனமான குன்றுகளும், சமவெளிகளும், ஆறுகளும், கொண்ட பழமையான நகரம். வீடுகளும் பழமையானவை. மலைகளைக் குடைந்து போடப்பட்டுள்ள சாலைகளும் – டன்னல்கள் – மேம்பாலங்களும் நிறைந்த ஊர் – ‘அமெரிக்காவின் ஸ்டீல் நகரம்’, சிட்டி ஆஃப் ப்ரிட்ஜஸ் (446 மேல்பாலங்கள் உள்ள நகரம்) என அழைக்கப்படுகின்றது.
3 நதிகள் – அலகெனி, மனோக்கெஹெலா,ஒஹாயோ – திரிவேணி சங்கமம் உள்ள இடம்! 1970 வாக்கில் இந்திய விஞ்ஞானிகளும், மருத்துவர்களும் வந்து குடியேறியவர்கள் – தமக்கென ஒரு இந்துக் கோவில் கட்ட முடிவெடுத்ததுதான் இந்தக் கோயிலின் துவக்கப்புள்ளி!
ஆகஸ்ட் 7, 1975 ல் நிறுவப்பட்டது. திருமலை திருப்பதி தேவஸ்தானம், ஆந்திரப் பிரதேச அரசு, கணபதி ஸ்தபதி ஆகியோரின் பங்களிப்பில் இந்தக் கோயில் கட்டப்பட்டுள்ளது.
பிர்லா குடும்பத்தினர் ராஜஸ்தானில் ஒரு பாலாஜி கோயிலை நிமாணிக்க முடிவு செய்து, அதற்காக உருவான வெங்கடேஸ்வரா மூர்த்தம், அளவில் சிறிது சிறியதாக இருந்ததால், இந்தக் கோயிலுக்கு தருவிக்கப்பட்டதாம் – ஆண்டவன் சித்தம் யாரறிவார்? இந்த மூர்த்தம் ஆயிரம் முறை புருஷசுக்தம் ஜபிக்கப்பட்டு, நிர்மாணிக்கப்பட்டது என்பது சிறப்பு. 1976ல் நவம்பரில் ப்ரதிஷ்டை செய்யப்பட்டு, ஜூன் 1977 முதல் கும்பாபிஷேகமும் நடந்தப் பட்டது. இங்கிருக்கும் பிள்ளையார் கோவையின் அருகில் உள்ள சிறு கிராமத்திலிருந்து வந்திருக்கிறார்! பிரசித்தி பெற்றவர். பின்னர், வெளிப் பிரகாரம், அரங்கம், கேண்டீன் எனக் கோயில் விரிவுபடுத்தப்பட்டது. அமெரிக்காவில் பல பாகங்களிலிருந்தும் பக்தர்கள் இங்கு பெருமளவில் வருகிறார்கள் – வாரக் கடைசியில் 2000 -2500 பகதர்கள் வருவதாகச் சொல்கிறார்கள். கனடாவிலிருந்தும் – 4 மணி நேர பயணத்தில் இங்கு வருபவர்களும் உண்டு – எங்களைப்போல!
வசதியான கார் பார்க்- 400 பேர் கொண்ட ஆடிடோரியம் – முதல் கச்சேரி லால்குடி ஜெயராமனும், திருச்சி சங்கரனும் செய்திருக்கிறார்கள். எம் எஸ், மகாராஜபுரம் சந்தானம், சேஷகோபாலன், மாண்டலின் ஶ்ரீனிவாஸ் போன்றவர்கள் இங்கு கச்சேரிகள் செய்திருக்கின்றனர். 40 வருடங்களாக தியாகராஜ உற்சவம் இங்கு நடக்கிறது. கர்னாடக சங்கீதம், பரதநாட்டியம் போன்றவை கற்றுக்கொடுக்கப்படுகின்றன.
தேர்ச்சி பெற்ற பட்டாச்சாரியார்கள் திருப்பதி முறைப்படி இங்கு பணி புரிகின்றனர். நாதஸ்வரம், தவில் வாத்தியங்களும் உண்டு. 108 சம்ஹிதைகள் கொண்ட, பஞ்சராத்திர ஆகமம் நூலினைப் பின்பற்றி தினசரி பூஜைகள் செய்யப்படுகின்றன. காலை 6 மணி முதல் மாலை 7.30 வரை கோயில் நடை திறந்து வைக்கப்பட்டுள்ளது!
சனிக்கிழமைகளில் விசேஷ அபிஷேக ஆராதனைகள் – சுப்ரபாத தரிசனம், சஹஸ்ரநாம பூஜைகள், வெங்டேஸ்வரா, தாயார் அபிஷேகம், அர்ச்சனை, சத்தியநாராயணா பூஜை என சிறப்பாக நடைபெறுகின்றன.
ஆகஸ்ட் மாத விடுமுறை நாட்களில் Annual religious festivel கொண்டாடப்படுகிறது. நட்சத்திர சாந்தி ஹோமம், சஹஸ்ர கலச அபிஷேகம் ஆகியவை நடக்கின்றன. பிரம்மோற்சவம், தெப்போற்சவம், பவித்ரோற்சவம், நவராத்திரி, மார்கழி உற்சவங்கள் நடைபெறுகின்றன. தங்க ரத பவனியும் உண்டு.
கோயிலில் புகைப்படம் வீடியோ எடுக்க அனுமதியில்லை! கார் நிறுத்துமிடத்தில் ஆகஸ்டில் நடக்கவிருக்கும் ஶ்ரீ லக்ஷ்மி நாராயணா ஹோமம் பற்றிய போஸ்டர் நம்மை வரவேற்கிறது.
செறுப்பு, கோட்டுகள் வைக்க தனியிடம் இருக்கிறது.
மெயின் நுழைவு வாயிலின் மேல் ராஜகோபுரம் – நுழைந்தவுடன் இடது பக்கத்தில் தங்கக் கவசத்தில் பிள்ளையார். நேர் சுவற்றில், வெள்ளைப் பளிங்குக் கல்லில் பதிக்கப்பெற்ற ‘பகவத் கீதை’ சிற்பம்! படியேறிச் சென்றால் இடது பக்கம் புத்தகங்கள் விற்பனைக்கு வைக்கப்பட்டிருக்கின்றன. பெருமாள் அலமேலு தாயார் நின்றுகொண்டு அருள் பாலிக்கிறார்கள் – இந்த இடம் வரை புகைப்படம் எடுக்க அனுமதி உண்டு. வலது பக்கம் கவுன்டரில் அர்ச்சனை டிக்கட், அர்ச்சனை சாமான்கள், பிரசாத லட்டுகள் விற்பனை.
படிகள் ஏறி சென்றால், த்வஜஸ்தம்பம், கருடாழ்வார், ஆஞ்சநேயர் – அலமேலு தாயார் , வலதுபுறம் லக்ஷ்மி, பிரகாரத்தில் ஆண்டாள். பிரகாரம் மார்பிளில் பளிச்சென்று உள்ளது – சிவப்புக் கம்பள பாதை விரிப்பும் உண்டு.
நேரே முழு உருவப் பெருமாள் – சங்கு, சக்கரம், அபயஹஸ்தம், பச்சைக்கல்பூர திருநாமம், தங்கத்தில் காப்பும் ஆபரணங்களும் – திருப்பதி பெருமாளையே தரிசனம் செய்து சேவித்த திருப்தி! இடது பக்கம் உற்சவ மூர்த்திகள். முன்னால் கயிறு, ஜரகண்டி குரலுடன் தள்ளு என ஏதுமில்லை – ஏடுகுண்டலவாடா கோவிந்தா, கோவிந்தா மனதில் மட்டும் – அர்ச்சனை செய்து, தீபாராதனை காட்டி, சடாரி வைத்து, தீர்த்தமும் துளசியும் கொடுத்த பட்டாச்சாரியார், சிரித்த முகத்துடன் தெலுங்கில் மாட்லாடினார். நிறைவான தரிசனம்.
வெளிப்பிரகார அலமேலுமங்கா தாயார் அழகு. ஆண்டாளைப் பார்த்தவுடன் காதில் திருப்பாவை!
உற்சவமூர்த்திகளுக்கு சனிக்கிழமை மதியம் மேள தாளத்துடன், கல்யாண உற்சவம் நடைபெறுகிறது. வெளிப் பிரகாரம் மிகப் பெரியது. வெளியில் வந்து, பட்டரிடம் பிரசாதம் வாங்கிக்கொண்டோம். தனி மேஜை மீது வைக்கப்பட்டிருந்த அக்காரவடிசில் – ஆஹா, நெய், பால் மணக்க வித்தியாசமான சுவையில் – இரண்டு கப்புகளில் எடுத்து சாப்பிட்டோம் – முன்பசியாறியது!
கவுன்டரில் பிரசாதம் – லட்டு வாங்கிக்கொண்டோம். அளவிலும், சுவையிலும் திருப்பதி லட்டுவுக்குக் கொஞ்சமும் குறைவில்லை! இரண்டு புத்தகங்கள் வாங்கினேன் – எப்போது படிப்பேன் என்பது அந்தப் பெருமாளுக்கே வெளிச்சம்!
காண்டீனில் அன்று புளியோதரை, தயிர் சாதம், ஸ்பெஷல் மிக்சர் – வாங்கி அங்கேயே லஞ்ச் முடித்தோம். வெளியே வந்து, மெயின் சாலையிலிருந்து, இந்திரநீலன் சுரேஷ் வீட்டிற்கு 40 நிமிடங்களில் வந்தோம்.
அழகான தனித்தனி வீடுகள். சுற்றிலும் பசுமை. வீடுகளே தெருவிலிருந்து உயரமான குன்றின் மீது அமைந்திருந்தன. சுரேஷும், அவர் மனைவியும் வாசலிலேயே காத்திருந்தனர். அழகான வீடு. சுற்றிப் பார்த்தோம். மான்கள் திரிந்துகொண்டிருந்தன! பால் காய்ச்சி, ஃப்ரெஷ் ஃபில்டர் காப்பி – மணத்துடன் குடித்தோம். அரை மணி நேரம் அரட்டை. கையில் கொண்டு போயிருந்த என் புத்தகங்களைக் கொடுத்தேன். அருமையான மனிதர்கள். மனதுக்கு நிறைவான விஸிட்!
2.40 போலக் கிளம்பினோம். பெருமாளையும், சுரேஷையும் நினத்தபடி, யூ எஸ் பார்டர் தாண்டி, டொராண்டோ வந்து விட்டோம்.
திருப்பதி சென்று வந்த திருப்தியும், அதே அளவு மகிழ்ச்சியும் மனம் முழுக்க நிறைந்திருந்தது!
