விளம்பர இடைவேளை



ரேவதி பாலு


விடுமுறை நாள் சிறப்பு நிகழ்ச்சியில் தொலைக்காட்சியில் நாங்கள் தியேட்டருக்குப் போய் பார்க்க முடியாத ஏதாவது நல்ல படம் வந்தால் பார்த்துவிடுவது வழக்கம். மாலை ஆரம்பித்து இரவு வரை நீடிக்கும் அந்த படங்களில் எக்கச்சக்க விளம்பரங்கள். ‘ அந்த நாள் அது அது அது……’ இந்த கருப்பு வெள்ளையிலும் ‘ இந்த நாளும் இது இது இது இது ‘ என்று வண்ணத்திலும் வரும் விளம்பரத்தை எத்தனை முறை பார்த்திருப்போம் என்று கணக்கே இல்லை. அது முடிந்ததும் பெண்கள் ஆண்கள் குழந்தைகள் என்ற பலதரப்பட்ட வயதினரும் கலந்து ஆடிப்பாடும் துணிக்கடை விளம்பரங்கள். சலிப்போடு அவன் வேறு சேனலுக்கு மாற்ற முற்பட்ட போது அவள் தடுத்தாள். ” சுவாரசியமா போய்கிட்டு இருக்கிற சினிமாவில ஏதாவது மிஸ் பண்ணிட போறோம் ” என்று. தொலைக்காட்சி பெட்டியின் மீது ஒரு கண்ணை பதித்துக் கொண்டே விளம்பரங்கள் வரும் போது ஹாலுக்கும் உள்ளுக்கும் நடைபயின்று கொண்டிருந்தாள். ஒருவழியாக சினிமா முடிந்தது. பசி வயிற்றை பிடுங்க “டின்னர் ரெடியா” என்றான் அவன். அடுத்த நொடியே தட்டில் சுடச்சுட இட்லியும் சட்னியும் சிறு புன்னகையுடன் அவன் எதிரே நீட்டினாள். ‘ இவளும் நம்முடன் தானே சினிம பார்த்துக்கொண்டிருந்தாள் டின்னர் எப்படி ரெடி ஆச்சு ‘என்ற சிந்தனை அறவே இல்லாமல் சாப்பிட்டுக் கொண்டிருந்த அவனை பார்த்ததும் அவள் இதழ்களில் வந்து அமர்ந்த புன்னகை விரிந்து மலர்ந்தது.