
தீப ஸ்தம்பம்……………
கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்
ஆசிரியர் கலை மகள்……………….
கிராமங்களில் தெருவின் நடுவில், தெரு முக்குகளில் உயரமான கல் தூணில் மேல் பகுதியில் விளக்கு ஏற்றி வைக்கப்படும். ஒவ்வொரு நாளும் இரவு நேரத்தில் தூணில் அந்தக் காலத்தில் நல்லெண்ணெயிலோ அல்லது இலுப்பை எண்ணெயிலோ விளக்கை (மாலை 6 மணிக்கு மேல்) ஏற்றுவார்கள். இந்த விளக்கு இரவு 9 மணி வரை தொடர்ந்து எரிந்து கொண்டிருக்கும். இந்த விளக்கின் ஒளியிலிருந்து படித்துப் பட்டம் பெற்றவர்கள் ஏராளம்……..
தமிழகம் முழுவதும் உள்ள கிராமங்களில் இது போன்ற தூண்கள் இருந்ததாக ஆராய்ச்சியாளர்கள் குறிப்பிடுகிறார்கள். எனது கிராமத்தில் வடக்கு தெருவிலும் தெற்கு தெருவிலும் இதுபோன்ற தூண்கள் இருப்பதை நானே கண்டிருக்கிறேன்.

நீதிமான் முத்துசாமி அய்யர் போன்றவர்கள் தெரு விளக்கின் ஒளியில் படித்ததாகச் சொல்வார்கள்…….. மண்ணெண்ணெய் உபயோகம் வந்த பிறகு இந்த விளக்குகளில் மண்ணெண்ணெய் விடப்பட்டது. சீமை எண்ணை என்றும் இதை கிராமங்களில் அழைப்பார்கள்!………
நந்தா விளக்கு என்றால் அணையாமல் எப்போதும் எரியும் விளக்கு என்று பொருள். தூண்டா விளக்கு என்றும் தீண்டா விளக்கு என்றும் இத்தகைய விளக்குகளை அழைப்பதுண்டு. விளக்கின் திரி தூண்டாமல் அல்லது மனிதனால் தீண்டாமல் எரியும் விளக்கு என்பது இதன் உட்பொருள்………
சங்க இலக்கியங்களில் நந்தா விளக்கு பற்றிய செய்திகள் காணப்படுகின்றன. சோழர்கள் காலத்தில் பொறிக்கப்பட்ட கல்வெட்டுகளில் இவ்வகை விளக்குகள் நுந்தா விளக்கு என்றும் திருநுந்தா விளக்கு என்றும் நொந்தா விளக்கு என்றும் தூண்டாமணி விளக்கு என்றும் குறிப்பிடப்பட்டுள்ளன. பொதுமக்கள் அளித்த நன்கொடைகள் மூலமாகவும் இந்த விளக்குகள் அமைக்கப்பட்டது உண்டு…….
கொங்கு நாட்டு கோவில்களின் முற்பகுதியில் தீப ஸ்தம்பம் அமைக்கப்பட்டிருக்கும். இதன் கீழ் பகுதியில் பண்பாட்டுச் சித்திரங்களும் இடம்பெற்றிருக்கும். ஸ்தம்பம் என்றால் தூண், கம்பம் என்று பொருள்………………
பல வகையான விளக்குகளைப் பற்றி ஏற்கனவே நான் எழுதி விட்டேன். பொதுவாக விளக்கை அணைக்கிறேன் என்று யாரும் சொல்ல மாட்டார்கள். விளக்கை பார்த்தாச்சா…… என்று கேட்டால் விளக்கின் சுடரை அணைத்தாகிவிட்டதா? என்றுதான் பொருள் கொள்ள வேண்டும். திருவண்ணாமலைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் விளக்குக்கு உத்தரவு கொடுக்க வேண்டும் என்று இதை அழகாகச் சொல்கிறார்கள். பெரிய மனிதர்களை மகான்களை சந்தித்து விட்டு திரும்பும் பொழுது உத்தரவு வாங்கிக் கொள்கிறோம் என்று சொன்னால் தரிசனம் முடித்துவிட்டு திரும்புகிறோம் என்று பொருளாகும் என்பதையும் நாம் ஞாபகப்படுத்திக் கொள்ள வேண்டும்………….
சிம்னி விளக்கு வீட்டிற்குள் புழங்குகின்ற விளக்காகப் பயன்பட்டது. இரவு நேரத்தில் சிம்னி விளக்கின் வெளிச்சத்திலேயே அனைவரும் இரவு உணவை உண்டு மகிழ்வது உண்டு. விளக்கின் மேல் சிமினி பொருத்தப்பட்டு இருப்பதால் இதற்கு இந்தப் பெயர்.

அாிக்கேன் விளக்கும் பயன்பாட்டில் இருந்து வந்தது. அரிக்கேன் விளக்கு சற்று கூடுதலாக ஒளி தரும். சிமினி பெரிதாக இருக்கும்.HURRICANE என்று ஆங்கிலத்தில் அழைப்பார்கள்.அரிக்கேன் என்றால் புயல் மழை மற்றும் காற்றிலும் அணையாத விளக்கு என்பது பொருளாகும். லாந்தர் விளக்கு என்றும் இதனை அழைப்பதுண்டு!lantern என்ற ஆங்கிலச் சொல் “லாந்தர்” அல்லது “லாந்தல்” என்று வழங்கப்படுகிறது…….. இன்றைய இளைஞர்களுக்கு இப்படிப்பட்ட சொல் எல்லாம் தெரியுமா? என்பதே கேள்வி குறிதான்?!!…….
