ஜெயதேவன்/ வயலார் கண்ணீர் சிந்துகிறார்

ஒரு நாள் மரங்களில் இருந்த குருவி முட்டைகளை எடுத்துச் சென்றீர்கள்
காடுகண்டு கொள்ளவில்லை
இன்னொரு நாள்
குருவி கட்டிய கூட்டை சிதைத்தீர்கள் ஒன்றும் சொல்லவில்லை காடு .
உங்கள் அவரைக் கொடிக்கு முட்டுக் தர அந்த மரத்தின்
கிளையை வெட்டினீர்கள்
விக்கித்தது காடு
இன்னொரு நாள் அறுவை எந்திரத்தை நட்டு வைத்தான் ஒருவன்
தோளில் வடக்கயிறோடு இன்னொருவன் வந்தான்
கூடவே வந்தன பொக்லைன்களும்
கனரக லாரிகளும்
மரத்தின் கழுத்தை அறுத்தீர்கள்
இடுப்பை அறுத்தீர்கள்
கால்களை அறுத்தீர்கள்
விரலைக்கூட விட்டு வைக்கவில்லை
நல்லபடியாக முடிந்தது என்று
வணிகன் கைமாற்றினான்
கரன்சிகளை அந்த வெள்ளை சட்டைக்காரனிடம்
வாலிப்பான மரங்கள் என்று கனரக வாகனங்களில் ஏற்றினீர்கள்
காடு அதிர்ந்தது
நிலைகளாய் கதவுகளாய் ஜன்னல்களாய் மாறின காடுகள்‌
உங்கள் வீடுகள் பளபளத்தன
ஒரு துர்ப்பொழுதில் பெய்தது மாமழை
ஓராண்டின் மழை
ஒரே நாளில் பெய்ததாய்
செய்தி சொல்லின தொலைக்காட்சிகள்
காடு தன் பிடிமானத்தை இழந்தது
கூந்தல் சரிந்தது
இடுப்பு சரிந்தது
கால்கள் சரிந்தன
கடைசியில் பாதமும் சரிந்தது
தொப்புள் கொடி உறவான விரல்களும் சரிந்தன
வன தேவதைகள் வேறு காடு நோக்கி ஓடத் தொடங்கின
காட்டின் ரத்தமான மண்
சரியாகச் சரிந்தது அப்பாவி மனிதர்கள் மீது
இப்போதும் பொக்லைன் எந்திரங்கள் வந்தன
இப்போது பிணங்களை அகழ்வதற்காக
இப்போதும் வந்தன கனரக லாரிகள்
இப்போது பிணங்களை அடுக்குவதற்காக
தொலைக்காட்சிகள் சொல்லத் தொடங்கின பிணங்களின் எண்ணிக்கையை
மனிதர் இறந்ததற்காக கண்ணீர் அஞ்சலி செலுத்தப்பட்டது
காடு இறந்ததை பற்றி யாருமே கவலை கொள்ளவில்லை
இப்போது எல்லா காடுகளும் அழுவதற்கு பழகி விட்டன