எஸ். சண்முகம் கவிதை

நன்றாக உலர்ந்தவிட்ட போதும்
கொடியைவிட்டு அகற்றாமல்
ஆடைகள் ஒருநொடி பார்க்கையில்
காற்றில் படபடப்பதை நிறுத்த வேண்டுமா

கொடியிலிருந்த களைந்த ஆடைகளின்
சுருக்கங்கள்
வாழ்தலில் நேர்ந்த ஒரு அவமடிப்பாக இருக்கலாமோ
உதறாமல் விடுத்த நுண் தூசுகள்
சட்டை பையில் சேகரமாயிருந்தன
விழிசாத்தி உயரே நிமிர்ந்து திறந்தேன்

மேகமிலா கதிரொளி
வயதின் ஊற்றுக் கண்ணை ஓளிர்விக்க
கறுப்பு வெள்ளைக்குள்
சிறுவனொருவன் திரிந்தபடியே முதிர்கிறான்
சிரிப்பொலியில் அமிழ்கின்றன
யாருக்குமற்றதாய் கழிந்த நாட்கள்

முற்றிலும் உலரட்டுமென்று
ஒரிரு ஆடைகளை
கொடியிலேயே விட்டுவிட்டேன்
காற்று அவ்விரு ஆடைகளை
தலைகீழாய் பறக்க செய்து
மெல்ல தாழ்த்தியது

நண்பகல்.