டி வி ராதாகிருஷ்ணன்/இனிக்கும் தமிழ் -207

திருமந்திரம் தமிழ் ஆகமநூல். ‘திரு’ என்ற சொல்லின் பொருள் ‘இறைவன்’;
இறைவனை அடைய கைகொடுக்கும் ‘மந்திரம்’ என்பதால் ‘திருமந்திரம்’ எனப்
பெயர்பெற்றது.

வடபுலத்தில், இடையர் குலத்தில் அவதரித்த கண்ணபிரான் அருளிய
பகவத்கீதையைப்போல், தென்புலத்தில் இடையர் குலத்தில் அவதரித்த மகான்
திருமூலர் அருளிய தமிழாகமம் திருமந்திரம். சைவ சமய அறுபத்துமூன்று
நாயன்மார்களில் ஒருவர். திருமூலர் அருளிய திருமந்திரம் பத்தாம்
திருமுறையாக வைக்கப்பட்டுள்ளது.

காலத்தால் கிபி. நான்காம் நூற்றாண்டைச் சேர்ந்தவர்.
கீழே குறிப்பிட்டுள்ள செய்யுளில்

உலகில் இரு கோயில்கள் உண்டென்கிறார் திருமூலர்.

அவை, 1. படமாடுகின்ற கோயில் 2. நடமாடும் கோயில்.

நடமாடும் கோயிலாவது உயிர்கள். குறிப்பாக மனிதர்கள். கடவுளைப் படமாக எழுதி
வைத்து வழிபட்டமையால் படமாடக் கோயில் என்றார்.

தன்னையொத்த மனிதன் பசித்திருக்கையில் கடவுட்கு ஒரு பொருளை காணிக்கையாக
அளித்தால் அது நடமாடும் கோயிலான மனிதனுக்குச் சென்று பயன்தராது. ஆனால்
நடமாடக் கோயிலான பசித்த மனிதனுக்கு ஒன்று ஈந்தால் அது இறைவனுக்குச்
சென்று சேரும் என்று கூறுவார் திருமூலப் பெருந்தகை.

படமாடக் கோயில் பகவர்க்கு ஒன்று ஈயின்
நடமாகக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஆகா!
நடமாடக் கோயில் நம்பர்க்கு ஒன்று ஈயின்
படமாடக் கோயில் பகவர்க்கு அது ஆமே!