ஸ்ரீ சிவன் சார் தீர்க்க தரிசனம்/தொகுப்பு ஸ்ரீதர் சாமா



நல்லி குப்புசாமி செட்டி `ஞான ஏணி' யில் சொல்கிறார்

ஸ்ரீ சிவன் சார் 1996இல் சித்தி அடைந்தபோது `எதற்கும் துக்கப்படாதே ' என்ற அவர் அறிவுரை என்னை ஆசுவாசப்படுத்தியது . சாரின் உறவினர்கள் `நீங்களே எல்லாக் காரியமும் செய்யத் தகுதியானவர் ' என்றனர் . நான் `இல்லை . நீங்கள் செய்யுங்கள் . நான் உடனிருக்கிறேன் ' என்றேன் . சாரின் ஈமக்கிரியை முடிந்து சில நாளில் சாரின் சிஷ்யர் ஸ்ரீ கிருஷ்ணய்யர் புதல்வர் ஸ்ரீ முரளி வந்தார் . `சுவாமி உத்தரவு . தங்களுக்குச் சேர வேண்டிய பணத்தைத் தர வந்துள்ளேன் ' என்றார் .

சித்தியாவதற்குச் சில மாதங்கள் முன்பே சிவன் சார் சொல்லியிருந்தாராம் . `இதோ சில வங்கிகளில் தனித்தனி கணக்கு . எல்லாம் சிறிய தொகைதான். நான் பணம் தொடமாட்டேன். நீங்களாகப் பார்த்து இன்னாருக்கு இன்ன வாங்கித் தொகையிலிருந்து பணம் கொடுத்து விடுங்கள். இதெல்லாம் எனக்காக அவர்கள் செலவழித்தது .' என்றாராம். தனக்காக அவர்கள் செலவழித்த பணத்திற்கு வட்டியும் அவர் சரியாகக் கணக்கிட்டிருந்தார். அவரை போஷித்தவர்களுக்கு அவர் திருப்பிக் கொடுத்த கணக்கின்படி மற்ற எல்லோருக்கும் கணக்கு பார்த்து கொடுத்து விட்டோம். இதோ உங்களுக்கான தொகை . இது சுவாமி ஆணை. மறுக்காமல் வாங்கிக் கொள்ளுங்கள் ' என்றனர் .

கடை மேனேஜர் அருணாச்சல அய்யர் என் அப்பா காலம் தொட்டு எங்கள் கடையில் பணி புரிபவர் . அவர் சொன்னார் : `மஹான் தந்தா விஷயம் இருக்கும். வாங்கிக்கோங்க. நானும் சிவன் சார் ஈமைக்கிரியை செலவு எழுதி வச்சிருக்கேன் . சரி பார்த்துக்கலாம்.' என்றார். அய்யர் எழுதி வைத்த தொகை ரூ. 42, 624. சார் கணக்கிலிருந்து செக் வந்த தொகை ரூ .42,624. மகானின் தீர்க்க தரிசனம் பாருங்கள் .