
வார நாள் ஒன்றில் காலையில் கிளம்பி, ஆஃப்ரிகன் லயன் சஃபாரி (African Lion Safaari) சென்றோம். டொராண்டோவின் மேற்குப் புகுதியில், (62 கிமீ) ஆண்டாரியோவின் ஹாமில்டன் என்ற இடத்தில் அமைந்துள்ளது இந்த லயன் சஃபாரி.
கனடா ஆர்மியைச் சேர்ந்த, ‘டான்’ டெய்லெ என்பவரால் 1969 ஆம் வருடம் துவக்கப்பட்டது இந்த சஃபாரி.
சுமார் 750 ஏக்கர் பரப்பளவில், 10 கிமீ வளைந்து வளைந்து செல்லும் பாதைகளில் கார்/ வேன்/ பஸ் களில் அமர்ந்தபடி, தன்னிச்சையாக அலைந்துகொண்டிருக்கும் காட்டு மிருகங்களைக் காணலாம் – ‘நாங்கள் சுதந்திரமாக வெளியே திரிந்துகொண்டிருக்கிறோம் – நீங்கள்தான் கூண்டுக்குள்ளிருந்து (கார்,வேன்) எதையாவது கொறித்தபடி எங்களைப் பார்க்கிறீர்கள்! காலம்தான் எவ்வளவு மாறிவிட்டது!” என்று சொல்வதைப்போல இருக்கின்றன அவற்றின் பார்வைகள்! எங்கும் புல்வெளிகள், சின்ன சின்ன நீர்த்தேக்கங்கள், குன்றுகள் இவற்றில் ஏகாந்தமாய் மேய்ந்துகொண்டும், அசை போட்டுக்கொண்டும், தண்ணீரில் ஊறியபடியும், கம்பீரமாய்ச் சாய்ந்துகொண்டும், தூங்கிக்கொண்டும் மிருகங்களும், பறவைகளும் வலம் வருவதைப் பார்க்கும்போது, நாமும் குழந்தைகளாகி விடுகின்றோம்!
‘காருக்குள்ளேயே இருங்கள். கார் கதவுகளையும், ஜன்னல்களையும் மூடி, பூட்டி விடுங்கள். மிருகங்களுக்கு எதுவும் தின்னக் கொடுக்காதீர்கள் (நம்ம ஊரில் வாழைப்பழம், பக்கோடா, வெறுப் பிளாஸ்டிக் பைகள் இவற்றை குரங்களுக்குக் கொடுத்து அவற்றைச் சீண்டுவதைப் போல, இங்கு யாரும் செய்யவில்லை!) போன்ற எச்சரிக்கை போர்டுகள் வழியெங்கிலும் உள்ளன. வெள்ளை நிறத்தில்,கறுப்பு வரிகள் போட்ட செக்யூரிட்டி வேன்களில், கருநீல யூனிஃபார்ம் போட்ட ஆண், பெண் ஊழியர்கள் வலம் வந்தபடி இருக்கின்றார்கள். அவ்வப்போது, மிருகங்களுக்கு உணவு வழங்குவதையும் காணலாம்.

கார்கள் வரிசையாக மெதுவாக ஊர்வலம் போல் செல்கின்றன – முன் காரில் இருப்பவர்கள், படம் எடுக்கும் வரை பொறுமையாகக் காத்திருந்து, பின்னர் செல்வது, எச்சரிக்கைகளை சரியாகக் கடைபிடிப்பது என ஓர் ஒழுங்கைக் காண முடிந்தது. வரும் பார்வையாளர்களின் ஒத்துழைப்பின்றி, இந்த இடத்தை இவ்வளவு அழகாகவும், சுத்தமாகவும் வைத்திருக்க முடியாது!
நைரோபியில் இருந்து மாடுகள் (நீளமான கொம்புகள்!), செம்மரி ஆடுகள் கூட்டம் கூட்டமாய் மேய்ந்துகொண்டிருந்தன. ஐரோப்பாவின் வெள்ளை நாரைகள், பழுப்பு நிறக் கழுத்துடன் கொக்குகள் பறந்தபடி இருந்தன.

ஆப்பிரிக்க சிங்கங்கள் (சிம்பா லயன்) சில அரைத்தூக்கத்திலும், சில வாலை ஆட்டியபடியும் பாறைகளின் மேல் அமர்ந்திருந்தன. டிம்பாவதி வெள்ளைச் சிங்கங்கள் பாறைகளின் மேல் விளையாடிக்கொண்டிருந்தன. சிங்கத்தின் கம்பீரம் அழகுதான்!
குரங்குகள் (Baboons, bongo, zebu), சீமைப் பசுக்கள், தீக்கோழிகள் (ostrich), புறாக்கள், பெரிய கொம்புகளுடன் மாடுகள், நீர்யானைகள் (கறுப்பு, வெள்ளை நிறங்களில்), வளைந்து நீண்ட கூர்மையானா கொம்புகளுடன் ஆடுகள், ஒட்டைச்சிவிங்கிகள் (அவை நிற்பதும், நடப்பதும் அழுகு), யார் தீட்டிய பட்டைகள் என வியக்க வைக்கும் Grant’s வரிக்குதிரைகள், ஆஸ்திரேலியாவின் கங்காருகள் (ரெட் காங்கரு என்ற வகையும்), வாத்துகள், பலவிதக் கொம்புகளுடன் மான்கள், துள்ளி ஓடும் புள்ளி மான்கள், அமெரிக்கன் காட்டெருமைகள் என சுமார் மூன்று மணி நேரம் காட்டு மிருகங்களைக் காரில் அமர்ந்தவாறு பார்த்தோம். மறக்க முடியாத சஃபாரி!
கையில் எடுத்துவந்திருந்த எலுமிச்சை சாதம், உருளை ரோஸ்ட், சிப்ஸ், தயிர் சாதம், ஊறுகாய் என மதிய உணவை அங்கேயே முடித்துக்கொண்டோம். ரெஸ்டாரெண்ட்ஸ், ஐஸ்கிரீம் பார்லர் (கோன் ஐஸ்கிரீம் வாங்கினோம்!), ஒதுங்குமிடங்கள், ‘சொவ்னீர்கள்’ ஷாப் எல்லாம் இருந்தன. ஆனாலும் விலை அங்கிருந்த யானை விலை, குதிரை விலையை ஒத்திருந்ததால் வாங்கவில்லை.

அங்கிருந்த ஏரியில், அழகிய போட்டில் – ஆஃப்ரிகன் குயீன் போட் – ஒரு சிறிய டூர் சென்றோம். வெளிர் காக்கி நிற யூனிஃபார்மில் அழகாக – அவரும் அழகுதான்! – அங்கிருந்த பறவைகளைப் பற்றியும், இடங்களைப் பற்றியும் சொல்லியவாறே படகைச் செலுத்தினார். சிரித்த முகத்துடன், இடுப்பில் வாக்கி டாக்கியுடன் நடந்து, படகை இயக்கினார் – அவரது யூனிஃபார்ம் பற்றி நான் சொல்லப்போவதில்லை!
அடுத்து, நாங்கள் சென்றது ‘Nature Boy’ என்னும் ரயில் பயணம்! மேட்டுப்பாளையம் – ஊட்டி ரயிலைப் போல, ஐந்தாறு பெட்டிகள் கொண்ட சிவப்பு ரயில்! முன்னால் அந்தக்கால ஸ்டீம் என்ஜின்! 20 நிமிட டூரில் ஏரியைச் சுற்றி வந்தோம். யானைகள் கூட்டமாக நின்றுகொண்டிருந்தன – வாத்துகள் நீரில் நீந்திக்கொண்டிருந்தன. சிறிய பாலம், சிறிய டன்னல் எல்லாம் கடந்து ரயிலில் சென்றது சின்ன வயதில் செய்த ரயில் பயணங்களை நினைவுபடுத்தியது! இங்கும் வெளிர் காக்கி நிற யூனிஃபார்ம் பெண்தான் – ஸ்டேஷன் மாஸ்டர், கார்டு, என்ஜின் டிரைவர் எல்லாமே அவர்தான் – சுறு சுறுப்பாய் தன் வேலையைச் செய்தார், அழகாகத்தான் இருந்தார்!
குழந்தைகளுக்கான நீர் விளையாட்டு – Misumu wet play – பெரியவர்களும் குழந்தைகளுடன் வித விதமான ஃபவுண்டன், மேலிருந்து கொட்டும் நீர், சறுக்கு மரம் என நீரில் விளையாடுவது! குழந்தைகளை விளையாட விட்டு, வேடிக்கை பார்த்தோம். பாதுகாப்பாக, அங்கு அமைத்திருக்கும் விளையாட்டு நீர் நிலைகள் வியக்கவைக்கின்றன.
ஒரு பறவைகள் ஷோ (வித்தியாசமாக இருந்தது – பறவைகளைப் பழக்கியவர்கள் பாராட்டுக்குரியவர்கள்), சிறு பிராணிகள் ஷோ (கீரி, பாம்பு, ஆமை என…) பார்த்தோம்.
யானைகள் ஷோ பார்க்க நேரமில்லை – ரயில் பயணத்தில் பார்த்த யானைக் கூட்டம்தான்! கனடாவில் முதல் செயற்கைக் கருத்தரிப்பு யானை – ஆசிய யானை – 2010ல் இங்குதான் உருவானது. பெயர் “ஜேக்”!
நடக்கும் வழியெங்கும், வித விதமான பறவைகள் – கழுகுகள், ஆந்தைகள் போன்றவை – கூண்டுகளில் அமர்ந்திருந்தன.
பார்க்கவேண்டிய சஃபாரிதான்!
கிட்டத்தட்ட 7 மணி நேரம், சஃபாரியில் சுற்றிய அலுப்பே தெரியவில்லை – மிருகங்களைக் கூண்டில் பார்ப்பதை விட, தன்னிச்சையாக அவைகள் நடவடிக்கைகளைக் கவனிப்பது சுவாரஸ்யம்தான்!
