காளி-தாஸ்/எனக்கோர் திமிங்கலம்

எனக்கோர் திமிங்கலம்
கடற்புறத்தில் நட்பாகியது
காதலிப்பதாக சொல்லி
கண் கலங்கியது
சம்மதித்ததும் களிப்பில்
புரண்டது கரையெல்லாம்
வாலூன்றி ஆடி
புயல்மூண்டு கடல் பொங்கிய
ஒருநாள்
வேட்கையோடு வந்தது
கண்ணிமைக்காமல்
என்
துடையிடுக்கைக் கவனித்தது
பெரும் மழை உதிர்ந்ததும்
முதுகிலேற்றி என்னை
கடலுள் விரைந்தது
நீர்ப்பாதை நெடுக
பிரளய இடி
இரண்டு மூன்று நான்கென
பல கடல் கடந்தது திமிங்கலம்
நீர் உலகத்திலும்
ஓயாத என் கீழ் அது
ஓய்ந்து சோர்ந்தது
இறுதியில்
நன்றியுடன் வாலால் என்னைத் தொட்டது
கனிவுடன் முத்தமிட்டு அதன்

முதுகில்
மற்றுமொரு தடவை கிடந்து
மஞ்சள் வெயிலில் வெளிப்பட்டேன்
இப்போதும் வருகிறது
கரையேறி என் திமிங்கலம்
எப்போதாவது அதன் குட்டியுடன்…

(ழ சிற்றேட்டில் பிப்ரவரி 1981ல் பிரசுரம் ஆனது)