
எழுத்து பத்திரிக்கையில் எழுதிய முக்கியமான கவிஞர் தி.சோ.வேணுகோபாலன்.
‘கோடை வயல்’ என்ற பெயரில் இவரது கவிதைகள் எழுத்து வெளியீடாக ஆகஸ்ட் 1965 ஆம் ஆண்டு வெளிவந்துள்ளது.
என் கவிதையின்
புது குரலுக்கு
பிரசவம் பார்த்த மருத்துவர்
திரு.ந. பிச்சமூர்த்தி அவர்களின்
அடிக்கமலங்களுக்கு
என்று ந.பிச்சமூர்த்திக்கு
சமர்ப்பணம் செய்துள்ளார்.

தி. சோ. வேணுகோபாலன்
7 .11. 1929 ல் தஞ்சை ஜில்லாவில் உள்ள திருவையாறு கிராமத்தில் பிறந்தவர். உயர்நிலைப்பள்ளி படிப்பு முடித்தபின் சென்னையில் லயோலா கலாசாலையில் பி.எஸ்.ஸி படித்தார். பிறகு ராஜஸ்தானில் உள்ள பிலானியில் மெக்கானிக்கல் என்ஜினீயரிங் படித்து பி.இ பட்டம் பெற்றார்.
மைசூர் ராஜ்யத்தில் மணிபால் நகரத்தில் உள்ள என்ஜினீயரிங் கலாச்சாலையில் உதவிப் பேராசிரியராக வேலைபார்த்து வந்தார். 1959 இல் ‘எழுத்து’
வில் கவிதை எழுத ஆரம்பித்து தொடர்ந்து எழுதியவர்.
இவருடைய இரண்டாவது கவிதைத் தொகுப்பு ‘மீட்சி விண்ணப்பம் ‘ 1977 ஆம் ஆண்டு க்ரியா வெளியீடாகக வந்துள்ளது.
தற்போது விருட்சம் வெளியிட்டாக இந்த ரெண்டு தொகுதியிலும். உள்ள கவிதைகளைச் சேர்த்து ஒரே புத்தகமா சேர்த்து புத்தகமாக இரண்டு தொகுதியிலும் சேர்த்து கொண்டு வர உள்ளது.
கிழக்கு – மேற்கு என்ற கவிதையை இங்குப் பதிவு செய்துள்ளேன்.

கிழக்கு – மேற்கு
மேற்கே
மூடாத சாளரம்
மூட
முடியாத கதவுகள்
கூதல் காற்றின்
குரைப்பு
(புறத்தே நிலைகுத்தி
பிறழ்ந்த விழிகள்)
பார்த்த இடமெல்லாம்
பருவத் தளிர்மினுக்கு
போர்த்திய பசுமை
நிர்வாணப் பளபளப்பு
விழியெரிய
நெஞ்செரிய
உள்வழியும்
கனற்குழம்பு
காலத்தின் எச்சரிக்கை
பழுத்துச் சுருங்கி
புரண்டு வந்து
கருத்தைக் கவர
கரகரக்கும் குரலில்
கால் வருடி
தோல்வியுற்று
குப்பையாய்
குவியும்
கிழக்கே
(அகத்தே விழி திரும்பும்
அதிசயம் நிகழ்ந்தால்)
முனையறு கோளத்தின்
மௌன ஒளித்தேக்கம்
மஞ்சள் நிற விருந்து
மனத்தைக் குளிர்விக்கும்
மருந்து
உள்நோக்கிக் கண்பார்க்க
முன்னோர்கள் சிலபேர்
என்னென்னவோ முறைகள்
எழுதி வைத்தார்கள்
புறத்தே நிலைகுத்தி
விழிகள் விழுவதேன் ?
‘எழுத்து’ ஏப்ரல் 1966

அருமையான பதிவிற்கு நன்றிங்க ஐயா