
….
என்னுடைய ஐம்பதாண்டு கால நண்பன் ராஜாமணி. அலிடாலியா என்று அவர் வேலை பார்த்த நிறுவனத்தோடு சேர்த்து அறியப்படுபவர்.
நான் 70களின் தொடக்கத்தில் கல்வி முடித்து பணிக்காகச் சென்னை வந்ததும் அறிமுகமான முதல் இலக்கிய நண்பர் அவர் மூலம் அறிமுகமானவர்கள்தான் ராஜூ, ஜெயபாரதி, பாலா எல்லோரும். பல ஆண்டு காலமாக பல இலக்கியக் கூட்டங்களில் உங்களில் பலரும் அவரைப் பார்த்திருக்கலாம்.
சிறிது காலமாகவே உடல் நலம் குன்றி வெளியே நடமாட முடியாமல் வீட்டில் தனியே இருக்கிறார். அவரைப் பார்க்கலாம் என்று நானும் என் சகோதரர் ரமணனும் (அவருக்கும் நெருக்கமான நண்பர்) அவர் வீட்டிற்குப் போயிருந்தோம். அவருக்கு நடிப்பதில் ஆர்வம் அதிகம், அதற்கும் மேலாகப் படிப்பதில் ஆர்வம் என்று ரமணனுக்குத் தெரியும் என்பதால் ரமணன் அவருக்குக் கொடுப்பதற்காக ஒரு கட்டுப் புத்தகங்களும் கொண்டு வந்திருந்தார்.
ராஜாமணி புத்தகங்களைக் குழந்தைகளைப் பேணுவதைப் போல பராமரிப்பார். குழந்தைகளுக்கு நல்ல ஆடைகள் அணிவித்து அழகு படுத்துவதைப் போல, புத்தகங்களுக்கு பாடப் புத்தகங்களுக்கு பிரவுன் காகிதத்தால் அட்டை போட்டு அடுக்கி வைத்திருப்பார். இலக்கியப் புத்தகங்களும் பாடப்புத்தகம்தானே? அதிலிருந்து எவ்வளவு கற்றிருக்கிறோம்!
நமக்குப் பின் நம் குழந்தைகள் என்ன ஆகும் என்று கவலைப்படுகிறவர்கள் உண்டு. நமக்குப் பின் நம் புத்தகங்கள் என்ன ஆகும் என்று கவலைப்படுகிறவர்கள் நம்மில் எத்தனை பேர்?
