
============
இதன் தொடர்ச்சியாக சுஜாதா எழுதிய “பூனையைக் கொல்வது பற்றி” எனும் பதிவைப் படித்துவிட்டு, அதில் குறிப்பிடும் முதல் பதிவு எங்கே என்று கேட்டிருந்தனர். அவர்களுக்கும், படிக்காத மற்றவர்களுக்கும்….
==============
வாஹினியில் படப்பிடிப்பின்போது அந்தக் கருப்புப் பூனையைப் பார்த்தேன். இந்திப் படத்தின் பாடல் படப்பிடிப்பு நடந்து கொண்டிருந்தது. அதில் திரு வரியில கதாநாயகன் ‘ஜேம்ஸ் பாண்டாகவும் வருவேன்’ என்று ஏதோ பாடுகிறான். அதைப் படம் படிக்க பிரம்மாண்டமான செட்டுப் போட்டிருந்தார்கள். செட்டுக்குள்ளேயே முழுசாக ஒரு ‘மெர்ஸிடிஸ் ‘ கார் வைத்திருந்தனர் அதில் ஜே.பி. 007 என்று லைசென்ஸ் பிளேட்டு, சுமார் பத்து நங்கைகள் இறுக்கமாக டிராயர் போட்டுக்கொண்டு மார்பு, தொடையெல்லாம் காட்டிக்கொண்டு பளபளவென்று அந்தக காரின் நீல வழுக்கலில் இங்கேயும் அங்கேயும் படுத்திருக்க கதாநாயகள் துல்லியமாக டின்னர் ஜாக்கெட் அணிந்துகொண்டு துப்பாக்கியால் வியர்வையைத் துடைப்பது போல செய்து- கொண்டிருக்க மோட்டார் வைத்து சுற்றிய பெரிய சக்கரம் போன்ற செட்டில் இவர்கள் சகலரும் மெல்ல சுழன்றார்கள். சற்று துரத்தில் ஒரு ஜேம்ஸ் பாண்ட வகை வில்லன். (இயற்பெயர் பணிக்கர்) கருப்புக் கண்ணாடி போட்டுக்கொண்டு சோபாவில் உட்கார்ந்துகொண்டு கன்னங்கரேல் என்று திரு பூனையைத் தடவிக் கொடுத்துக்- கொண்டிருந்தான்.
முழுக்க முழுக்க கருப்பாக இருந்தது பூனை. கண்ணைத் திறக்கும்போது கோலி பல்பு போல பளபளத்தது கழத்தில் பொய் வைரப் பட்டைக் காலர் ஒன்று சுற்றியிருந்தது. ரொம்ப பயத்தில் அவ்வப்போது சின்னக்குரலில் மியா மியா என்றது. பக்கத்தில் சொந்தக்காரன் ‘பயப்படாதே ராஜி’ என்று அடிக்கடி சொல்லிக்கொண்டு அதன் கழுத்தருகில் தடவிக் கொடுத்துக்கொண்டிருந்தான்.
படப்பிடிப்பு என்பது அலுப்பான சமாச்சாரம் அதுவும் இந்த மாதிரி நாற்பதுபேர் கலந்துகொள்ளும் படப்பிடிப்பில் பேருக்குப்பேர் எதாவது சொல்லிக்கொண்டே இருப்பார்கள், குழப்பம், “பத்துப் போடுமயா என்பான் எலக்ட்ரீஷியன். கீழேயெல்லாம் கேபிளாக இருக்கும். ராட்ச்ச ஃபேன் ஓடிக்கொண்டிருக்க, டான்ஸ்மாஸ்டர் ப்ார் பார் என்று விசில் ஊதிக்கொண்டிருக்க. பெண்கள் இடைவேளையின் போது மார்பை மறைக்க கர்ச்சீப் செருகி லைத்துக் கொள்வார்கள். கதாநாயகி ஸ்தானத்துக்கு அருகில் இருக்கும் நடிகை தனி மேக்-அப் வேண்டும் என்று கேட்பார்கள். தெலுங்குக்காரன் எல்லோருக்கும் மோர் கொடுத்துக்கொண்டிருப்பான். மற்றொருவன் பார்வையாளர்களை நீ யாருய்யா நீ யாருய்யா’ என்று அதட்டிக் கொண்டிருக்க, திருக்கருகாவூரிலிருந்து கதாநாயகனைப் பார்க்க வந்திருந்த ரசிகன் திறந்தவாய் மூடாமல் பார்த்துக்கொண்டிருக்க, இந்தக் குழப்பத்தின் இடையில் பூனை பயந்து போயிருந்தது நியாயமாகப் பட்டது. அதன் ஓனரைத் தவிர வேறு யார் கையிலும் தங்காமல் ஒரு மினி புலிபோல பல்லைக் காட்டி முரண்டு பண்ணியது.
“யோவ்! தூக்கிட்டு போய்யா, பூனை சரியில்லை” என்றார் அஸிஸ்டண்ட் ஒருவர்.
பூனைக்குச் சொந்தக்காரன் “ஒரு நிமிஷம் கொடுங்க சரி பண்ணிர்றேன்” என்று ராஜி” என்று அதை என்னருகில் கொண்டுவந்து ஃபேன் காற்றில் காட்டினான். ‘மியா மியா என்று ஈனமாகத்தான் பேசியது.
“என்னய்யா பயந்துக்கிச்சா?”
“இல்லிங்க, உடம்பு சரியில்லைங்க. என்ன ராஜி? பால் வேணாமா. உச் உச் உச்…”
“மியா ஆ”
“பழக்கமில்லை போல.”
“அதெல்லாம் இல்லைங்க. பத்து படத்தில் பண்ணியாச்சுங்க. சரியாய்ரும். லேசா பயம். அவளதான். இதும் அப்பன் இருவது படத்தில பண்ணிச்சு. என்னடா ராஜி?” அதன் சின்ன முகத்தை பிதுக்கிப் பிதுக்கி துடைத்துக்கொண்டிருந்தான்.
ஷாட் ரெடி! கொண்டாய்யா பூனையை!”
பூனையை வில்லனின் கையில் கொடுத்துவிட்டு என்னருகில் வந்து நின்றான். பூனையைக் கவலையுடன் பார்த்துக்கொண்டே இங்கிருந்தே ‘உஸ் உஸ்’ என்று அதனுடன் உஸ்ஸிக்கொண்டிருந்தான்.
நான் அந்தப் பூனையின் சொந்தக்காரனை முழுவதும் பார்த்தேன். கவலை முகம். காக்கி கலரில் அரை டிராயர். காதில் செருகிய பீடி கழுத்துப்பட்டையில் அழுக்குடன், தையல் பிரித்த பையுடன் சட்டை கோரைப் புற்கள் போலத் தலைமயிர். கலங்கிய கண்கள். அடுத்த வாரம் உயிர் போய்விடும் போல இருந்தான். அவனிடம் பூனை ஒன்று தான் அன்பாக இருந்தது. செட்டில் மற்ற பேர்கள் அவனை பேருக்குப்பேர் அதட்டிக் கொண்டிருந்தார்கள்.
அடுத்த முறை படப்பிடிப்பு துவங்கி வழக்கம்போல செட் சுழல ஆரம்பிக்க, அந்தப் பெண்கள் சிரிப்பு என்கிற பெயரில் ஒருமாதிரி முகத்தை வைத்துக்கொள்ள, பணிக்கரின் கையில் பூனையைக் கொடுத்தான் சொந்தக்காரன். அது ‘காமிரா ரன்னிங் என்ற பொழுதில் தபக்கென்று குதித்து ஓடிவந்து விட்டது. போதாக் குறைக்கு பணிக்கர் மடியை ஈரம் பண்ணிவிட்டது. “ஏய் எந்தா ஈ பூச்ச ஆகெ விருத்தி கேடாக்கி களைஞ்ஞல்லோ” என்றெல்லாம் சொல்லிக்கொண்டு பணிக்கர் வேறு காஸ்ட்யூம் கேட்டார்!
டைரக்டர் “கட் இட்” என்று கத்தினார். எல்லோர் கவனமும் பூனைக்காரன் மேல் பதிய என்னய்யா நீ, உன்னால இந்த ஷாட்டும் பாழு” என்றார்கள். டைரக்டர் இந்திக்காரர் *பில்லிக்கோ பாஹர் பேக்கோ” என்றார் கோபமாக (பூனையை வெளியே எறி). “போய்யா செட்டை விட்டு வெளியே” என்று அவனை அதட்டித் தள்ளினார்கள்.
“அய்யா இன்னம் ஒருமுறை சான்சு தந்து பாருங்க… என்னடா ராஜி.”
“போய்யா டைட்டரு பூனையை வாணாம்னுட்டாரு போ போ போயிரு.”
அவன் கருப்புப் பூனையை மார்போடு அணைத்துக்கொண்டு செட்டுக்கு வெளியே உந்தித் தள்ளப்பட்டான். அதன் கழுத்திலிருந்து செயற்கை வைரப்பட்டையை காஸ்ட்யூமியர் உருவிக்கொள்ள பூனை இப்போது நிர்வாணமாக இருப்பது போலத் தோன்றியது. செட்டுக்கு வெளியே ப்ரொடக்ஷன் மேனேஜர் ஒரு நாற்காலியில் விச்ராந்தியாக உட்கார்ந்து கொண்டிருந்தார். பைஜாமா போட்டுக்கொண்டு அசப்பில் தபலா வித்வான் போலவும் ஊதுவத்தி வியாபாரி போலவும் இருந்தார். கையில் பெரிசாகப் பை வைத்திருந்தார்.
“ஏன்யா ராமமலிங்கம், பூனை என்னாச்சு?”
“அய்யா டைட்டரு வேணா முன்னட்டாருங்க!”
“சரி வூட்டுக்குப் போ.”
“அய்யா காசு?
“உம் பூனை ஆய்ட் பண்ணினாத்தானய்யா காசு!”
“அவெங்க உபயோகப்படுத்தலைன்னா நான் என்னய்யா செய்றது.”
மேனேஜர் “பாபூ” என்று உள்ளே கூப்பிட்டு. வந்தவனுடன் தெலுங்கில் கேட்டார். இரண்டு பேரும் பேசிக்கொண்டார்கள். “உம் பூனை சரிமில்லைய்யா. உன்னாலயே மூணு ஷாட்டு வேஷ்ட்டாம். டைரக்டரு சுஸ்தாயிட்டார். ரொம்ப கோவத்தில் இருக்காரு போ போ.”
“எனக்குஉண்டான பணத்தைக் கொடுத்துட்டிங்கன்ன….”
அவர் கண் சிவந்து “திருப்பி அதையே சொல்றியே ராஸ்கல் போ போ. டிபன் சாப்பிட்டல்ல? லஞ்சு அடிச்சல்ல? அதெல்லாம் எந்த கணக்கு? மறுமுறை குரங்கு தேவாங்குன்னா உன்னை கூப்பிடணுமா? அன்வர்பாயைக் கூப்பிட்டுக்கவா?””
அவன் தயக்கத்துடன் காத்திருக்க “போ ஓடு| முதலாளி முன்னால நிக்காத. வெறுப்பில் இருக்காரு….”
மியே மியே என்று இதனிடையில் பூனை பேசிக்கொண்டிருக்க அவன் அதை கவனிக்காமல் அந்த இடத்தைவிட்டு விலகினான் சண்டை போடலாமா வேண்டாமா என்று தீரமானமில்லாதவன் போலத் தோன்றினான். அப்போது ஒரு பெண் அவளருகில் வந்தாள்.
“இன்னாப்பா ஆயிருச்சா?”
*சரியில்லை! முரண்டு பண்ணுது. வோணாம்னுட்டாங்க.”
“துட்டு தந்தாங்கல்லை?”
“எங்க? சனியன் ஆகிட்டு பண்ணாத்தானே!” மார்மேல் படர்ந்திருந்த பூனையை இருவரும் வெறுப்புடன் பார்த்தார்கள்.
அந்தப் பெண் “அவ்ளவ்தானா” என்றாள். பக்கென்று சிரித்தாள். “என்னவோ இருவத்தஞ்சு முப்பது அம்பதுன்னுயே! அவ்ளவ்தானா எங்கப்பாரு சாமர்த்தியம்” என்று களுக்கென்று சிரித்தாள்.
-“நீ எப்ப வந்தே?”
-அப்பவே வந்தாச்சு. கேட்டாண்டையே நிக்கிறேன். ஒரு பூனைக்கு ஒரு ஆளுதான் உடுவானாம். அப்றம் ஸ்டண்டு வரது கூட வந்தேன்” அந்தப் பெண்ணுக்கு பத்தொன்பது இருபது வயதிருக்கலாம். லேசாக சப்பை மூஞ்சியாக இருந்தாள். கண்கள் எல்லாம் அவசரமாகப் பொருந்தினது போல. கூந்தல் முரட்டுத்தனமாகக் கட்டை கட்டையாக இருந்தது. சிவப்பாக இருந்தாள். வயசுக்கு மீறின பாவாடை தாவணி அணிந்து கொண்டு எதிரே பெஞ்சு போட்டு உட்கார்ந்திருந்த ஸ்டண்ட் இளைஞர்களுடன் போய் உற்சாகமாகப் பேசினாள். திரும்பி வந்து பூனையை வாங்கிக்கொண்டு “இன்னா பண்ணிச்சு” என்றாள் அதைக் கொஞ்சிக்கொண்டே.
“கைல நிக்கமாட்டங்குது. பிராண்டது. சரியில்லை பூனை: இதும் அப்பா என்னமா ஆகிட்டு பண்ணிச்சு, இது தெண்டம்!” என்று வெறுப்புடன் அதைப் பார்த்தான்.
“இதோட மூணு தபா ஆயிருச்சு. போறாத காலம்”
“நமக்கா பூனைக்கா” என்று சிரித்தாள்.
“சொம்பரம் வந்திருக்கானா.
“ஆமா.முருகேசனையும் கூட கூட்டியாந்திருக்கான்”
“என்ன சொன்ன?”
“அப்பா ஸ்டுடியோ போயிருக்காரு, பணம் கொண்டாந்துருவாருன்னு காக்க வெச்சுட்டு வந்தேன். இந்த சனி இப்டி செய்யும்னு யாருக்குத் தெரியும்! சாராயம் கிராயம் இதுக்கும் குடுத்தியா?
“சேச்சே”
இருவரும் செட்டைவிட்டு மெல்ல நடந்தார்கள். “இப்ப பணத்துக்கு என்ன செய்றதாம்” என்றான்.
“இன்னா செய்றது. சீலையை மாத்திட்டு கிளம்பிர்றேன். வேற என்ன?” என்று பூனையை அவன் கையில் கொடுத்து விட்டு சற்று முன்னே வேகமாக நடந்தாள்.
அவன் பூனையை தன்முன் இரண்டு கைகளாலும் பிடித்து கொண்டு சற்று நேரம் பார்த்தான்.
“கதவை தொறந்து வச்சிரு, தூங்கிராதே” என்று அவள் சென்றாள். ஒரு ஜப்பானியக் – கார் ஸ்பீட் ப்ரேக்கரில் செல்லமாகக் குதித்துச் சென்றது. ஸ்டுடியோவை விஸ்தாரம் பண்ணுவதற்கு கட்டிடத்திற்காக செங்கல் போட்டிருந்தது. கருங்கற்சுவர் ஒன்று சதுரசதுரமாக பாதி வரை உருவாகியிருந்தது.
அவன் அந்தப் பூனையின் வாலைப் பிடித்து ஒரு சுழற்று சுழற்றி அந்தக் கல் சுவற்றின்மேல் மடேர் என்று வீசி எறிந்தான்.
‘குய்க்’ என்று சின்னதாகத்தான் சப்தம் கேட்டது.
All reactions:
58Thejas Subbu and 57 others
