
முகநூலில் பதித்தது
சுந்தர் Sundar Krishnan சாரா..? ஆம் சுந்தர் சாரேதான். அவரால்தான் இப்படியொரு காரியத்தை செய்ய முடியும்.
முழு பெயர் சுந்தர் கிருஷ்ணன். சரித்திர நாவல்களின் வெறியர்; வாசகர். ஊர் ஊராக, தெருத் தெருவாக அலைந்து திரிந்து தமிழில் இதுவரை எழுதப்பட்ட அனைத்து வரலாற்று நாவல்களையும் சேகரிப்பதையே தன் பணியாகக் கொண்டவர். இதற்காக தன் வருமானத்தில் கணிசமான தொகையை செலவழிக்கத் தயங்காதவர்.
மட்டுமல்ல, புதியப் புதிய சரித்திர நாவலாசிரியர்களை அறிமுகப்படுத்தியவர். முகநூலில் ஒரு சிறுகுறிப்பாக யார் வரலாற்று செய்தியை எழுதினாலும் இன்பாக்ஸில் அவர்களை தொடர்பு கொள்வார். இணையத்தில் சரித்திர சிறுகதைகளை யார் எழுதினாலும் முழு நீள வரலாற்று நாவலை எழுத வைப்பார்.
மிகையில்லை. 2000ம் ஆண்டுக்குப் பிறகு – குறிப்பாக 2009க்கு பிறகு – தமிழில் சரித்திர நாவல்களை எழுத ஆரம்பித்த 99% எழுத்தாளர்கள், இவரால் அறிமுகப்படுத்தப்பட்டவர்கள்தான்.
எழுத வைப்பதுடன் தன் பணி முடிந்ததாக அவர் நினைப்பதில்லை. எடிட் செய்வார். ப்ரூஃப் பார்ப்பார். பதிப்பகங்களை தொடர்பு கொண்டு அவற்றை அச்சில் கொண்டு வருவார்.
ஒருவகையில் ‘வானதி பதிப்பகத்தின்’ தூணாகவே சுந்தர் சார் செயல்பட்டார்.
2025ம் ஆண்டு ஜனவரி சென்னை புத்தக கண்காட்சியில் ‘வானதி பதிப்பகம்’ சார்பாக 50 வரலாற்று நாவல்களை கொண்டு வர வேண்டும்… அதில் அறிமுக எழுத்தாளர்களின் புதினம், 35க்கு மேல் இருக்க வேண்டும்… என்ற இலக்கை தனக்குத்தானே நிர்ணயித்து கொண்டு இயங்கினார்.
எல்லாம் நல்லபடியாக சென்று வந்த நிலையில்தான் அந்த இடி இறங்கியது. சுந்தர் சார் சென்ற வாரம் காலமானார்.
முகநூல் முழுக்க வரலாற்று நாவல் வாசகர்களும் சரித்திர எழுத்தாளர்களும் அவருடனான தங்கள் உறவை கசிந்துருகி எழுதினார்கள்.
மூன்று முறை உதயணன் Kanchi Narasimhan சார், ராமநாதன் Rama Nathan சாருடன் திருத்தணியில் இருக்கும் அவர் வீட்டுக்கு சென்றிருக்கிறேன். பொது இடங்களில் சந்தித்து பேசியிருக்கிறேன். மாதத்துக்கு இருமுறையாவது கைபேசியில் அவருடன் உரையாடியிருக்கிறேன்.
என்றாலும் அவருக்கு இரங்கல் தெரிவிக்கவில்லை. மாறாக அவரால் பலனடைந்தவர்கள் எழுதிய பதிவுகளைப் படித்துப் படித்து பாரத்தை இறக்க முயற்சித்தேன்.
ஆனால், அப்பாரத்தின் கனம் அதிகரிக்கவே செய்தது. காரணம், ஒரு கேள்வி… ஒரேயொரு வினா.
அடுத்த ஆண்டு அவர் அறிமுகப்படுத்த நினைத்த புதிய எழுத்தாளர்களின் நிலை இனி என்னவாகும்?
ஒவ்வொருவரையும் முடுக்கிவிட்டு எழுத வைத்தபடி இருந்தார்… ஐந்து ஐந்து அத்தியாயங்களாக அனுப்பச் சொல்லி கதை செல்லும் போக்கை நெறிப்படுத்தினார்…
தெரியும். எல்லாவற்றையும் பகிர்ந்திருக்கிறார். அந்தப் புதியவர்கள் தங்கள் படைப்பு ‘வானதி பதிப்பகம்’ வழியாக வரப்போவதை நினைத்து நினைத்து பெருமைப்பட்டார்கள் என்பதையும் அறிவேன்.
இனி அவர்களின் நிலை?
எப்பொழுதும் எழும் அதே வினா, நேற்று மாலையும் விஸ்வரூபம் எடுத்தது.
வழக்கமாக தேநீர் அருந்தும் கடை. நண்பருடன் டீ குடித்தபடியே அக்கேள்வியை அவரிடம் பகிர்ந்து கொண்டேன்.
நண்பர் வானத்தைப் பார்த்தார். ‘‘உங்களுக்கு விஷயம் தெரியாதா..?’’
‘‘என்ன..?’’
‘‘சுந்தர் சார் இறக்கறதுக்கு முன்னாடி எனக்கும் ‘வானதி’ ராமநாதன் சாருக்கும் மெயில் அனுப்பினார்…’’
‘‘…’’
‘‘எழுதிட்டு இருக்கற ஒவ்வொரு எழுத்தாளரோட பெயர், அவங்களோட செல்போன் நம்பர், அவங்க எழுதி வருகிற நாவலின் காலகட்டம், இதுவரை அவங்க எழுதியிருக்கிற அத்தியாயங்கள், இனி எழுதி முடிக்க வேண்டிய சேப்டர்ஸ்… எல்லா விவரங்களும் அவர் அனுப்பின மெயில்ல இருந்தது…’’
‘‘…’’
‘‘எப்பவும் நாவல் ஃபைனல் ஆனதும்தான் எனக்கு தகவல் கொடுப்பார். இது புதுசா இருக்கவே அவருக்கு போன் செஞ்சேன். ‘இருக்கட்டும்… மறக்காம நீங்களும் (வானதி) ராமநாதன் சாரும் ஃபாலோ பண்ணுங்க’னு சொன்னார். அப்ப புரியலை… மின்னஞ்சல் வந்த 36 மணிநேரம் கழிச்சு தகவல் வந்ததும்தான் புரிஞ்சுது…’’
தன் செல்போனில் மெயில் பாக்ஸை திறந்து வந்திருந்த மின்னஞ்சலை காண்பித்தார். ‘வானதி’ உட்பட பல பதிப்பகங்களுக்கு இந்த நண்பர்தான் ஆஸ்தான லேஅவுட் ஆர்டிஸ்ட்.
‘‘இப்ப நானும் (வானதி) ராமநாதன் சாரும் ஃபாலோ செய்துட்டு இருக்கோம்…’’
விடைபெற்று கிளம்பினேன்.
மழை பொழிய ஆரம்பித்தது…
