அழகியசிங்கர்/சவிதாவின் திரள்கனி என்ற கதையைப் பற்றி..

ஒரு கதையைப் படிக்கும்போது நமக்கு அந்தக் கதை மூலம் என்ன கிடைக்கிறது என்பது முக்கியம். எதுவும் கிடைக்கவில்லை என்றால் வாசிக்கிற மகிழ்ச்சியைத் தரவேண்டும்.
இந்தக் கதையின் முக்கிய கதாபாத்திரம் ஒன்பதாவது படிக்கும் மாணவி. அவள் மூலமாக கதை நகர்கிறது.

ஒன்பதாவது படிக்கும் மாணவியின் மன நிலையைத் துல்லியமாகப் படம் பிடித்துக் காட்டுகிறார் கதாசிரியர்.

ஆங்கிலத்தில் பேசுவதைப் பற்றி பெருமை பேசுவதும் , தனக்கு சைக்கிள் கற்றுக்கொள்ள வரவில்லை என்பதையும் கதை சொல்லி வெளிப்படுதாதுகிறாள். முதலில் முரளி மாமாவிடம் சைக்கிள் கற்றுக் கொள்ள முயற்சிக்கிறாள். அந்த வயதில் பார்க்கிற ஆண்களெல்லாம் அவளுக்கு ஹீரோவாகத் தெரிகிறான். அவன் சைக்கிள் கற்றுக் கொடுக்க ஹை ஸ்கூலின் க்ரவுண்டுக்குக் கூட்டிச் செல்கிறான்.
கதைசொல்லி முரளியை ப் பற்றி சந்தேகப் படுகிறாள். ‘என்னென்னவோ சொல்லிக் கொண்டிருந்தான். அவையெல்லாம் என் உலகத்துக்கு வரக்கூடாதவை’ என்று ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கதைசொல்லி அவனுடன் பழகுவதை நிறுத்தி விடுகிறாள்.

அதற்குப் பிறகு இந்தக்கதையில் அறிமுகமாகிறவர் கலைவாணி டீச்சரும், மணி சாரும். ஒரே ஸ்கூலில் வகுப்பெடுக்கும் மணிசாரும் கலைவாணியும் காதலித்துத் திருமணம் செய்து கொள்கிறார்கள். பள்ளியின் டிசிப்ளினைக் கெடுத்த காரணத்தால் மணி சாரை வேற இடத்தில் மாற்றிக்கொண்டு போகச் சொல்கிறார் எச்.எம். மணிசார் வேலையை விட்டுவிட்டு மின்சாரத்துறையில் பரீட்சை எழுதி சேர்ந்து விடுகிறார்.
ஒன்பதாம் வகுப்பு படிக்கும் கதைசொல்லிக்கு மணிசார் மீது அலாதியான விருப்பம்.
அவள் தோழி தெய்வாவிடம் சொல்கிறாள்.

இப்படி மாறி மாறி அவள் பழகும் ஆண்களிடம் அவளுக்குக் காதல் ஏற்படுகிறது. நிலை கொள்ளாமல் அது போய் விடுகிறது. கணக்குச் சொல்லித்தரும் மணி சாரிடம் சொக்கிப் போகிறாள் ஒன்பதாம் வகுப்புப் படிக்கும் கதைசொல்லி. இந்தக் கதையில் அவள் பெயரைக் குறிப்பிடாமல் அவளே கதையை சொல்வதுபோல் வருகிறது.

கதைசொல்லியின் தோழி தெய்வாவின் அண்ணன் செந்தில்தான் அவளைக் காதலித்தான். ஒன்பதாவது படிக்கும்
மாணவியான கதைசொல்லி அப்படித்தான் எற்றுக்கொண்டாள். இந்தக் கதையில் காதலிப்பவர்கள் யாவரும் கடிதங்கள் எழுதுவார்கள். கடிதங்களை தெரியாதபடி மறைத்து வைப்பார்கள். கதையில் முடிவில் மணிசார் செல்விக்கு எழுதிய கடிதம் கதைசொல்லிக்குக் கிடைத்து விடுகிறது. இரண்டு பக்கங்கள் உள்ள அந்தக் கடிதத்தைப் பலமுறை படித்து விடுகிறாள்.
ஒரு இடத்தில் இப்படி எழுதுகிறார் கதாசிரியர்.
‘அந்தவுலகில் செல்வியும், மணிசாரும் ஆடையற்று வெற்று பிம்பமாக நின்று கொண்டிருந்தனர்’.
அந்தக் கடிதத்தைக் கைப்பற்றி விட கலா டீச்சர் முயற்சி செய்கிறாள். அவளுக்கு மணிசார்தான் அப்படி எழுதியிருக்கிறார் என்று தெரியாது. கலா டீச்சருக்குத் கிடைக்காமல் கடிதத்தைக் கிழித்து சாக்கடையில் வீசி விடுகிறாள் கதைசொல்லி. ‘இனிமேல் நீங்கள் இருவரும் என் வீட்டிற்கே வரக்கூடாது.’ என்று கலா டீச்சர் ஆத்திரத்துடன் கன்னத்தில் இருவருக்கும் அடி கொடுத்துவிட்டுச் சொல்கிறாள்.

அது என் லட்டரில்லைம்மா என்று அம்மாவிடம் சொன்னபோது , ‘அப்ப ஏன் கிழிச்சுப் போட்டே’ என்று கேட்கும்போது
அவள் அம்மாவிட உயர்ந்து நிற்கிறாள்.

இந்தக் கதை விடலைப் பருவத்தில் தோன்றும் ஆண்களைப் பற்றிய எண்ணங்களை ஒன்பதாவது படிக்கும் மாணவி வெளிபுபடுத்துகிறாள்.
நுணுக்கமாகவும் சிறப்பாகவும் எழுதப்பட்ட கதை.