
நேற்று நடந்தது போல் இருக்கிறது. ஆனால் நாள்கள் ஓடிவிட்டன. இன்று ஓராண்டு முடிந்துவிட்டது. இன்று அந்த கொடூரத்தின் நினைவுநாள்.
ஆம்.. மண்தான் எல்லா வேர்களுக்கும் முகவரி என்றாலும் அதுவே பல உயிர்களின் கல்லறையாகவும் மாறிவிடுகிறது சமயங்களில்.
ஒரு வக்ர மனம் படைத்தவனின் அல்லது உளவியல் சிக்கலால் மனம் பிறழ்ந்தவனின் செயல்பாடு அது மனிதர்களைக் கொன்று குவித்துவிடுகிறது.
மண்சரிவு எனும் சிறியசொல் கொன்று குவித்த மனிதர்களின்.. பெண்களின்.. குழந்தைகளின்.. பிற உயிர்களின் எண்ணிக்கை அதிகம். மனித வாழ்வில் சரிவு உண்டு. ஆனால் மனிதனையே சரித்து செரித்துக்கொண்டது வயநாட்டு மண்.
சென்ற ஆண்டு இதேநாளில் இப்படித்தான் நிகழ்ந்தது. யாரும் பார்க்கவேண்டாம். எந்த ஆறுதல் சொற்களும் தேவையில்லை.. இவர்களின் பரிதாபங்கள் ஒருபோதும் பயன்படப்போவதில்லை என்றுதான் யாருக்கும் முகத்தைக் காட்டாமல் நின்றுகொண்டிருக்கிறார்கள் மண்சரிவு ஏற்பட்ட பூமியில். காலையிலிருந்தே நிற்கிறார்கள். சென்ற ஆண்டின் இயற்கை செய்த கொடூரக் காவுகளின் எச்சம் இப்போதும் வீச்சம் அடிப்பதாக அவள் உணர்ந்தாள். அவள் தேவகி. அவளின் இடுப்பில் அவளின் குழந்தை. ஓராண்டு சொந்தம்.
சென்ற ஆண்டில் ஏற்பட்ட மண்சரிவில்.. தன்னுடைய குடும்ப உறுப்பினர்கள் பதினாறு பேர்களை இழந்தாள் தேவகி. கணவன் வழி.. தன் வழி என்று.
அவளின் இடுப்பில் இருக்கும் குழந்தையும் அவளின் சொந்தங்களை இழந்துவிட்டது மண்சரிவில். பாறையின் இடுக்கில் இவளை மட்டும் கடவுள் செருகிவிட்டு உயிர் பிழைத்துப் போ என்று விட்டுவிட்ட பெருங்கருணையை என்னவென்பது…அட நியாயமற்ற கடவுளே..
வெள்ளநீர் அடித்து ஆற்றில் தள்ளி.. பிழைப்போமா என்று தெரியாமல்.. அலைக்கழிக்கப்பட்டு.. ஒதுங்கிக்கிடந்தவர்களின் இந்த இரண்டுபேரும்..
எல்லாம் தெளிந்துவிட்டது. எல்லாம் இழந்தும் வாழவேண்டும். இத்தனை பேரை காவு வாங்கி தன்னை மட்டும் பிழைக்கவைத்தது சாவதற்கு அல்ல.. இன்னும் கொஞ்சநாள் வாழவேண்டும் என்பதற்குத்தான்.. உறவுகளை எல்லாம் இழந்தபிற்பாடு வாழவேண்டியதில்லை என்ற முடிவெடுத்தபோதுதான் அருகிலேயே இவளும் குழந்தையாய்த் துடித்துக்கொண்டிருந்தாள்.
ஆகவே இந்த குழந்தை தன்னை வாழச்சொல்கிறது என்று கையிலேந்தியவள் அழிக்க நினைத்த வாழ்வையும் கையிலேந்திக்கொண்டாள்..
நினைவுகளைக் கலைத்தாள் தேவகி..
இன்றுதான் ஓராண்டு நினைவுநாள்…
குழந்தைக்குத் தென்றல் எனப் பெயரிட்டிருக்கிறாள். அதுவும் தென்றலைப் போலவே அன்பைத் தேவகியிடம் விசிறி இழைந்து கிடக்கிறது.
இப்போது தென்றலைத் தத்துக் கேட்கிறார்கள் பிள்ளையில்லாத கோடீசுவரர்கள். ஆனால் முடியாது என்று மறுத்தால்.. இது உன் குழந்தையல்ல.. அனாதையாகக் கிடைத்தது. ஆகவே நீ முறைப்படி அரசிடம் அனுமதி வாங்கி உரிய படிவங்களை நிறைவு செய்துதானே பெற்றிருக்கவேண்டும்.. சட்டப்படி குற்றம் என்று சட்ட விதிகளைப் பேசுகிறார்கள்.
முடியாது என மறுத்து நிற்கிறாள். குழந்தையும் வரமுடியாது என்று மறுத்துவிட்டது. ஆனாலும் செல்வாக்கின் பிடிவாதத்தில் முயற்சிக்கிறார்கள்.
ஆள்பலம், அரசு பலம் ஆகியவற்றோடு வாசலில் வந்து தென்றலை அனுப்பு என்கிறார்கள். எல்லோரும் வேடிக்கைப் பார்க்கிறார்கள்..
இப்போது தென்றல் பேசுகிறாள்.. நான் அம்மாவை விட்டு வரமுடியாது..
ஏன்? வந்தவர்களின் ஒரு பெண்ணைக் காட்டி இவளும் அம்மாதான் வா என்கிறார்கள் சற்றே குரலை ஒடுக்கி.
எனக்குப் பசிக்கும் அம்மாதான் பால்கொடுப்பா.. என்றபடி தேவகியின் மார்புத்துணியை விலக்கி அங்கே முகம் பதிக்கிறது.. தேவகி உடல்சிலிர்க்கத் தென்றலை அணைக்கிறாள்..
வந்தவர்கள் வேகமாகத் திரும்புகிறார்கள்.
000
