உஷாதீபன்

சச்சந்தன் ஆளும் ஏமாங்கதம் என்னும் நாட்டின் வளமையை உரைக்குங்கால் அந்த வளமைக்குக் காரணமான இயற்கையின் செழிப்பினை எடுத்துரைக்கும் வர்ணனைகள் திருத்தக்கத்தேவரின் சீவக சிந்தாமணியில் கொட்டிக் கிடக்கின்றன. அவற்றை வர்ணனை கொள்ளாமல் வெறுமே கடந்து போகுதல் என்பது காப்பியப் பெருமைக்கு முரணாக அமைந்து விடும் என்று, எந்தவொன்றையும் காணாது நகர்ந்த பேதம் நிகழ்ந்து விடக் கூடாது என வளமிக்க ஏமாங்கத நாட்டின் செழுமையைப் பெருமைபடச் சொல்லிச் செல்கிறார் திருத்தக்கத்தேவர்.
தேன் நிரைத்துயர் மொய்வரைச் சென்னியின்
மேல் நிரைத்து விசும்புற வெள்ளிவெண்
கோல் நிரைத்தன போற்கொழுந் தாரைகள்
வான் நிரைத்து மணந்து சொரிந்தனவே
மொய்வரை என்பதை மலைத்தொடருக்கான கவிச்சொல்லாகப் பயன்படுத்துகிறார். நீர் தாரை தாரையாக விழுந்து கொண்டிருந்தது என்கிற பொருளினை போற்கொழுந்தாரைகள் என்று நீர் ஒழுங்கினைச் சுட்டிக்காட்டுகிறார்.
குழவி வெண்மதிக் கொடுழக் கீண்டுதேன்
முழவி னின்றதிர் மொய்வரைச் சென்னியின்
இழியும் வெள்ளருவித் திரள் யாவையும்
குழுவின் மாடத் துகிற்கொடி போன்றவே
குழவி என்ற சொல் குழந்தை என்று பொருள்படும் நாம் அறிவோம். குழவி வெண்மதி என்று சிறிய பிறைநிலவினைச் சுட்டி அழைக்கிறார். தமிழர் இசைக் கருவிகளில் ஒன்று முழவு என்பது. தாளக் கருவிகளையும் சுட்டும் பொதுச் சொல். சிலப்பதிகாரத்தில் தாளக் கருவிகளுள் “தண்ணுமை” தலைமைக் கருவியாய் விளங்கியதாய் அறிகிறோம். முழவு-மத்தளம்- முரசு என்றும் பொருள் கொள்ளப்படுகிறது. முழவு உறழ் தடக்கையின் இயல ஏந்தி என்று திருமுருகாற்றுப்படை சொல்கிறது. இதன் தமிழ் விளக்கம் என்று கொள்வோமேயானால் முழவு என்பது ஒரு வகை ஒலிப்பு முறை எனலாம்.
கருமுகில்கள் நீர் சுமந்து தள தளவென்று நிறைந்து நகரும் காட்சியை வர்ணிக்கும்போது பரதேஸ்வரச் சக்ரவர்த்தியின் லட்சக்கணக்கான யானைக் கூட்டத்தைப் போல் இருந்தது என்கிறார். வானுயர்ந்த மலைகளின் முகட்டில் போய் தங்கி நிற்கின்றதாம். பின் தன் நிலை கலைந்து சூலுற்று மழைமேகமாக மாறி தலைக்கொன்றை அணிந்த பிரானின் வார் சடைபோல் மின்னி, மழையைப் பொழிந்தன என்று சொல்லி மகிழ்கிறார். இடி இடித்து மின்னி பொழியும் மேகங்கள் கொம்புத் தேன் சிதறும் மலை உச்சியில் அடுக்கடுக்காகத் தங்கிப் பொழிந்து தள்ள. அவை அருவியாய்ப் பெருக்கெடுத்து வெள்ளியை உருக்கி விட்டதுபோல் ஓடி வர, மணம் சுமந்து வரும் அருவி முழவைப் போல் சத்தமிட்டு உருண்டோடிட மலைத்தேன் சிதறி ஓடுவது போலான அழகு மாட மாளிகைகளில், கூட கோபுரங்களில் உள்ள பூந்துகில் அசைந்தாடுவது போல் காட்சியளித்துச் சிறப்பித்தன என்று பெருமிதத்தோடு முன் வைக்கிறார்.
