கணேஷ்ராமன்
சுரீரென்று பின் முதுகில் அடி விழுந்தது. தூக்கி வாரிப்போட்டு எழுந்தான் கணேசன். நன்றாக அசந்து தூங்கிக் கொண்டிருந்தவனை யாரோ அடித்து எழுப்பி இருக்கிறார்கள்.
நல்ல வேளையாக கணேசன் அழவில்லை. சிறுவயதில் இப்படிக் குறைத்தூக்கத்தில் திடுக்கிட்டு எழும் போது கொஞ்ச நேரம் இனம் புரியாமல் அழுகிற வழக்கம் அவனுடையது. இப்போது அழுகை வரவில்லை. குழப்பமாக இருந்தது.
தடிமனான ஒரு மனிதர் அவன் படுத்திருந்த மேஜை முன் நின்று கொண்டு இருந்தார். உலக்கை போன்ற அவருடைய வலது கை அடுத்த அடிக்கு ஓங்கி இருந்தது. கையில் வைத்திருந்த ஒரு டைரியால் அவனை அடித்து எழுப்பி இருக்கிறார். நல்ல வேளையாகக் கையால் அடிக்கவில்லை. கணேசனின் ஆகிருதிக்கு எலும்பு முறிவு ஏற்பட்டு இருக்கும்.
அவர் முகம் ஜிவுஜிவு என்று தான் இருந்திருக்க வேண்டும். இருட்டில் சரியாகப் புலப்படவில்லை. இருட்டென்றால் சூரியன் அஸ்தமனமானவுடன் தோன்றும் இருட்டல்ல. நல்ல உஷ்ணமான பகல். மூன்று மூன்றரை மணியில், பிரிட்டிஷ்காரனின் ப்ரும்மாண்டமான கட்டடத்தின் இருட்டு.
கணேசன் முதலில் அந்தக் கட்டிடத்தைப் பார்த்து பயந்தே போனான். பழைய சினிமாக்களில் வருகிற சிதிலமடைந்த மாதாகோயில் போல இனம் புரியாத பயத்தைத் தோற்றுவித்தது அதன் தோற்றம்.
இன்று காலை பதினோரு மணியளவில் தான் அவன் இந்த இடத்தை அடைந்தது. கனவிலும் எதிர்பாராதபடி, ஒரு ரயில் நிலையம் பூட்டிக் கிடந்தது.
அவ்வளவு பெரிய கதவில் குழந்தைகளின் ஆலிலை போல ஒரு பூட்டு நோஞ்சானாக கணேசனைப் பார்த்து புன்னகைத்தது.
தெரிந்தே சும்மாவேனும் இழுத்துப் பார்த்தான். கடகடவென்ற சப்தமெழுப்பி ஓய்ந்தது அது.
“யாருப்பா அது?” என்று அதட்டியவாறு ஒரு உருவம் அவனை அணுகியது. நன்றாகக் கருத்த உடலும் சாராய வாடையும் அவனிடம் நெருங்கிய போது கணேசன் மேலும் பயந்தான்.
போறாததற்கு பஸ் ஸ்டாண்டில் இறங்கி, கேட்டுக் கேட்டு வந்து சேரவே முக்கால் மணிநேரம் ஆகி விட்டது. கொஞ்ச தூரம் கடந்து ஆளரவம் இல்லை.
யாரோ ஒருவன் கடல் மணலில் மண்டியிருந்த கருவேல மரத்தில் உபாதையை தீர்த்துக் கொண்டிருந்தான்.
கணேசன் அவனை நெருங்கி, அவன் முடிக்கிற வரை நின்றான். அவன் பல மாதங்களாக அடக்கிக் கொண்டு இருப்பவன் போல போய்க் கொண்டே இருந்தான். கணேசனுக்கும் போனால் பரவாயில்லை என்று தோன்றியது. தான் போய்க் கொண்டு இருக்கும் நேரத்தில் அவன் போய்விடப் போகிறானே என்று கணேசன் தன்னை அடக்கிக் கொண்டான்.
அந்த ஆள் முடிக்கிற மாதிரி தெரியாததால், கணேசன் தூரத்தில் இருந்தே அவரை “சார்.. சார்” என்று கூப்பிட்டான்.
அந்த மனிதன் முதலில் பதிலிருக்கவில்லை. இரண்டாவது அழைப்பை எரிச்சலுடன் கவனித்து, “என்ன?” என்று கேட்டான்.
“சார்.. ரயில்வே ஸ்டேஷன் எங்க இருக்கு?”
“அது ரொம்ப அவசரமோ? நான் இங்க அவசரமா இருந்துட்டு இருக்கேன்ல.. நீ கொஞ்ச நேரம் இருக்கப்படாதா. இரு… முடிச்சிட்டு வரேன்” என்று தமிழை வேறு மாதிரி உச்சரித்தான்.
காரியம் முடிந்தவுடன் கணேசனுக்கு வழி சொல்லிவிட்டு, கீழே இருந்த உரத்தாள் பையை சிறு முனகலுடன் எடுத்5து தோளில் மாட்டிக் கொண்டான்.
அதில், ஒரு துப்பாக்கி முனை துருத்திக் கொண்டு இருந்ததை கணேசன் கவனித்து விட்டான்.
நன்றி சொல்லி விட்டு, தன் உபத்திரவத்தைப் பொருட்படுத்தாது ஓட்டமும் நடையுமாக வந்தால் கதவு பூட்டி இருக்கிறது. அங்கு பார்த்தவனை விட பயங்கரமாக இங்கு வேறு ஒருவன் மிரட்டுகிறான்.
வந்தவன் இவனை மேலும் கீழும் பார்த்து விட்டு, “யாருடா தம்பி நீ” என்றான்.
“நான் கணேசன்” என்றான் இவன்.
“கணேசன்னா சிவாஜி கணேசனா” என்று இடிஇடியென்று சிரித்தான்.
பிறகு, ரயிலு பாக்க வந்தியா? நாங்களே அது ஓடறதைப் பாத்து பல வருசம் ஆச்சு..
பத்து நா முன்ன, குட்ஸ் வண்டி ஒண்ணு அதிசயமா வந்து, கெமிக்கல் ஏத்திக் கிட்டு போச்சு.. அவ்வளவு தான்.. நீ என்னடான்னா ரயில் பாக்க வந்துருக்க… போ.. போ… நேரா போயி பீச்சாங்கை திரும்பி ஒரு மைல் போனா பஸ் ஸ்டாண்டு வந்திரும்.. ஒழுங்கா போய் சேரு” என்றான்.
கணேசனுக்குக் கோபம் வந்தது. அதையும் அடக்கிக் கொண்டான்.
“நான் சொல்றதைக் கேக்குறீங்களா?”
“சொல்லு”
“நான் ரயில்வே ஆளு.. இந்த ஸ்டேசன் இன்சார்ஜ் இன்னக்கி லீவு.. நாளக்கி மத்தியானம் வந்துடுவாரு.. அது வரைக்கும் கவனிச்சுக்க என்னய அனுப்பி இருக்காங்க” என்றான் கணேசன்.
“அடக் கடவுளே” என்றான் அவன்.
“நாந்தான் சார் ராமு… அந்தால தெரியுதுல்ல கேட்டு.. அதுல கேட்டுகீப்பர் சார்.. தப்பா எடுத்துக்காதீங்க சார்… சின்ன புள்ளையா இருக்கீக.. தவறுதலா வந்துட்டீகன்னு தாறுமாறாப் பேசிப்புட்டேன்.. மன்னிச்சிக்கிடுங்க” என்றான்.
“அதுசரி.. கதவு பூட்டி இருக்கு?”
“சந்துரு சார் போவையில எங்கையில குடுத்துட்டுப் போனாரு சார்.. லீவு சாங்ஸன் ஆயிருச்சு.. ஆராச்சும் எப்படியும் வந்துருவாங்க.. பத்திரமா கொடுத்திருன்னு” என்று கையில் சுருட்டி வைத்திருந்த பையில் இருந்து ஒரு சாவிக்கொத்தை எடுத்து நீட்டினான்.
அதைப் பார்த்தால் சாவிக்கொத்து மாதிரி இல்லை. பாதாளக்கரண்டி மாதிரி இருந்தது. நூற்றுக் கணக்கில் சாவிகள். அதைக் கயிற்றில் கட்டி கடலில் வீசினால் கப்பலுக்கு நங்கூரமாக உபயோகப்படும்.
“என்னங்க இது”
“இது வெள்ளக் காரன் காலத்துல கட்டுனது சார்… ஏகப்பட்ட கதவு.. “
“ஓ”
“அப்படியும் போன வருசம் எவனோ திருட்டுப்பய ஓட்டப் பிரிச்சுக்கிட்டு எறங்கி, ஒண்ணும் கிடைக்காம ரெண்டு கொடியையும் சந்துரு சாரோடு அழுக்கு வேட்டியையும் தூக்கிக் கிட்டுப் போயிட்டான்”
“ஐயய்யோ..
அப்பறம்?”
“வேற கொடி வாங்கிட்டோம்..
சந்துரு சார் வேட்டியெல்லாம் வக்கிறது இல்லே..”
கணேசனும் ராமுவும் மிகுந்த பிரயாசையுடன் சாவியைக் கண்டு பிடித்து கதவைத் திறந்தனர்.
கணேசனுக்குக் கதவைத் திறந்த உடன் கழிப்பறையைக் கண்டு பிடித்து முதல் காரியமாக உபாதையை தீர்க்க வேண்டும்.
ஒரே கும்மிருட்டு… நாற்பது ஐம்பதடி கூரை… கடைசியாக மராமத்து செய்தது வாரன் ஹெஸ்டிங்ஸ் காலமாக இருந்திருக்கணும். இல்லை அதற்கும் முன்னாடியோ?
வெளிச்சம் நழுவும் சகல இடங்களிலும் ஒட்டடை படைபடையாக அப்பி இருந்தது. ஒட்டடைகளின் பலத்தில் தான் கூரை கீழே விழாமல் தொங்குகிறதோ என்ற சந்தேகம் கணேசனுக்கு வந்தது.
“ஏங்க.. இங்கே பாத்ரூம் எங்க இருக்கு” என்று கூச்சத்துடன் கேட்டான்.
“என்னது?”
“பாத்ரூம்ங்க” என்று விரலைக் கட்டினான்.
“அதெல்லாம் கிடையாது இங்கே… இங்கே வாங்க” என்று கணேசனை நெம்பி வெளியே இழுத்து வந்தான்.
எதிரே பரந்து விரிந்து இருந்தது உலகம். ப்ளாட்பாரம் என்று பழையகால சுண்ணாம்புக் கற்களால் வரைந்து இருந்த தரையை ப்ளாட்பாரம் என்று நேற்று வரை மக்கள் நம்பி இருக்கிறார்கள். அதை ஒட்டி ஒரு ரயில் தடம். ரயில் வந்தால் திரும்ப அல்லது உப்பு அல்லது நெல் ஏற்ற ஒரு சைடிங். அதன் பின் புறம் சிதிலமான ஒரு தகரக் கொட்டகை. பூர்வாசிரமத்தில் அதற்கு “குட்ஷெட்” என்று பெயரிருந்திருக்கலாம்.
அதன் பின்புறம் அடர்த்தியான கருவேலங்காடு. இடது பக்கம் தூரத்தில் அதேமாதிரி அடர்த்தியாகத் தென்னை மரங்கள். வலப்புறம் வெய்யில் கண்ணைக் கூசவைக்கும்படியாகத் திரும்ப அடிக்கும் நீர்ப்புறம் வெள்ளை வெளேர் என்று.
கணேசன் பார்ப்பதை உணர்ந்து “அதாங்க உப்பளம்… இந்த ஊரு உப்பு ரொம்ப பேமசு” என்றான் அவன்.
கணேசன் இப்போது உற்சாகமாகி, “அது இருக்கட்டும்.. பாத்ரூம் எங்கன்னு சொல்லலியே.. ஒரே காடால்ல இருக்கு?”
“இதை விடப் பெரிய பாத்துரூமு வேணுமா சார் உங்களுக்கு.. கருவ மரத்தைத் தாண்டினா கடலு.. இங்கே இருந்து யால்ப்பாணம் வரைக்கிம் பாத்துரூமு தான்.. அந்தக் காலத்துல ராமரு, லச்சுமணரு, அனுமாரு எல்லாரும் கக்கூசு கட்டிக்கிட்டா போனாங்க.. அவங்கள்லாம் இங்கிட்டு வந்தப்போ அவசரத்துக்கு எங்க போயிருப்பாங்கன்னு நினைக்கிறீங்க? நீங்க நிக்கிற எடத்துல தான்..
கோயில் கட்டுனா கும்புடுவீய… கக்கூஸ் கட்டுனா மூக்கப் பொத்திக்கிட்டு ஓடிப்போயிருவீய.. அதுனாலத்தான் கட்டாமெ விட்டாங்கே”
கணேசன் தலையில் அடித்துக் கொண்டான்.
“சின்ன விசயமா இருந்தா இங்கிட்டே அடிங்க..”
பெரிய விசயமா இருந்தா அங்கிட்டு கருவமரக்காடு பக்கம் மறைவாப் போயிடுங்க… ஊரே நம்மளோடதுதான் சார்”
கணேசன் அவனை சற்று முகச்சுளிப்போடு உற்று நோக்கினான்.
“என்ன சார்.. தண்ணிக்கு என்ன வழின்னு கேக்கறீங்களா… அங்கிட்டு ஸ்டாண்டுல தொங்கிட்டு இருக்கு பாருங்க பக்கெட்டு.. அதை எடுத்துக் கிட்டு குட்ஷெட் பக்கத்துல தொட்டில தண்ணி இருக்கும்.. அதை மொண்டுகிட்டு போவணும்”.
கணேசன் அந்த பக்கெட்டைக் குனிந்து பார்த்தான். யாரோ புகையிலை உமிழ்ந்தது காய்ந்து இருந்தது. சமீப காலங்களில் ஏதோ மனித நடமாட்டம் இருந்திருக்கிறது.
பக்கெட்டை ஆட்டிப் பார்த்தான். நல்ல வலுவான இரும்பு. கிறீச் கிறீச் என்று அதன் இரும்பு கிராதியில் உரசிய சப்தம் கணேசனின் பற்களைக் கூச வைத்தது.
அதன் வடிவத்தை வைத்துப் பார்த்தால் அதுதான் உலகின் முதல் பக்கெட்டாக இருந்திருக்க வேண்டும். அதன் மேற்புறம் மொத்தமாக கருத்துப்போய் நடுவில் சிவப்பு நிறம் மக்கி “தீ” என்று எழுதி இருந்தது.
“இதென்ன தீ ன்னு எழுதியிருக்கு?”
” பின்னே (ப வரிசையில் வேறு ஒரு வார்த்தையை விகாரமாகக் கூறி)… ன்னா எழுதியிருக்கும்? நல்ல ஆளு சார் நீ!”
“அதில்லை.. ரெண்டு பக்கெட்லயும் தீன்னு எழுதி இருக்கு.. ஒண்ணுல மண்ணு ரொப்பி இருக்கு… இன்னொன்னு காலியா இருக்கு?”
“வேறென்ன ரொப்பணும்? நெருப்பு போட்டு வைக்கலாமா? இதென்ன அங்காளம்மன் கோயில் தீச்சட்டியா? திடும்னு நெருப்பு புடிச்சிக்கிச்சுன்னா என்னத்தையாவது ஊத்தி அணைக்கறதுக்காக வச்சுருக்காங்க…”
இது கூடத் தெரியாமல் ரயில் வேலைக்கு வந்திருக்கான் பாரு என்றது அவன் பார்வை.
ஊரே தீப்பிடித்து எரிந்தாலும் இந்த பக்கெட்டில் கைவைப்பதில்லை என்று கணேசன் கண நேரத்திற்குள் சபதமேற்கொண்டான். இனிமேல் தாமதித்தால் ரசாபாசமாகி விடும் என்று உயரமே இல்லாத ப்ளாட்பாரத்தில் இருந்து அகலக்கால் வைத்து தண்டவாளத்தில் இறங்கினான் கணேசன்.
“பாத்து சார்.. பாத்து சார்” என்று அலறினான் ராமு.
ரயில் தான் வந்து விட்டது என்று நினைத்து தண்டவாளத்தைத் தாண்டி எகிறி, அதை அடுத்த மண் பிராந்தியத்தில் சறுக்கி விழுந்தான் கணேசன். லேசான சிராய்ப்பு. முணுக்கென்று ரத்தத்துளிகள் எட்டிப் பார்த்தன. வியர்த்து விட்டது அவனுக்கு. இருபுறமும் பார்த்தான். ஓரிரண்டு எருமை மாடுகளைத் தவிர ஒன்றும் புலப்படவில்லை.
“ஏங்க அப்படி கத்தினீங்க? பாருங்க… அடிபட்டுப் போச்சு” என்று புறங்கையை மடித்து ராமுவிடம் காண்பித்தான்.
“கோச்சுக்காதீங்க சார்.. ட்ராக்குல சிலசமயம் இந்த எருமை மாடெல்லாம் தெறிச்சு தபதபன்னு ஓடிவரும் சார்.. ஒரு மாதிரி இருக்காது பாருங்க”
அடச்சே என்று முனகிக் கொண்டே கருவேலப் புதர்களை அணுகினான் கணேசன்.
ரயில் வராத தடங்களில் எருமை மாடுகள் ஓடுகின்ற அதிசயம். வானளவு உயர்ந்த கட்டிடம். ஒரு சிறு உபாதைக்கு ஒதுங்க இடமில்லை. நல்ல இடத்தில் வந்து மாட்டிக் கொண்டோம்டா சாமி என்று நினைத்துக் கொண்டான்.
கருவேல மரங்கள் அவன் நினைத்ததைப் போல சுலபமாக ஒதுக்கக் கூடியவை அல்ல. நிறைய முட்கள். சில கணேசனைப் பதமும் பார்த்தன. ஆனாலும் அவற்றைக் கடந்து மேலே சென்ற கணேசன் கண்ட காட்சியில் விக்கித்து நின்றான்.
அவன் கண் முன்னே விரிந்து பரந்து கிடந்தது கடல். கட்டு மரங்களும் சிறு சிறு படகுகளும் அவ்வளவு வெயிலில் சில்லென்று இங்கும் அங்கும் அசைந்தன.
சென்னையின் கடற்கரை போல மணலாக இல்லை அது. கொஞ்சம் சேறாக நொதியுடன் இருந்தது அது.
வலது புற உப்பளங்களில் அநேகமாக பெண்கள் மிகவும் களைத்துப் போன மாதிரி தோற்றம். ஆட்கள் தென்படாத உப்பளங்களில் தேங்கியிருந்த கடல்நீரில் பெரிய பெரிய கொக்குகள் உளைந்து உளைந்து மீன்களைத் துழாவிக் கொண்டு இருந்தன. அவைகளின் நீளமான கருஞ்சிவப்புக் கால்களை வைத்து “சிகப்புக் கால் சதுப்பு நிலம்” என்று கவிதை எழுதலாமா என்று யோசித்தான் கணேசன். ஆனால் எழுதவில்லை. கவிதையை விட முக்கியமான வேலைக்காக வந்திருக்கிறான் அவன். இரண்டாவது அவனுக்குக் கவிதை எழுத வராது. எதையுமே தப்பில்லாமல் எழுத வராது என்று கூறுவதை ரயில்வேயில் வேலை கிடைத்ததில் இருந்து அப்பா கூறுவதில்லை.
சிறிது நேர உல்லாசத்திற்குப் பிறகு இருப்பிடம் திரும்ப முயன்றவன் கண்களில் அது தென்பட்டது.
கூட்டமாக ஆட்கள் தென்னந்தோப்பில் இருந்து வருகிறார்கள். காலையில் வழி சொன்ன மனிதனைப்போல இன்னும் நிறையப் பேர். எல்லோரிடமும் ஏதோ ஒரு ஆயுதம் இருந்தது. பூண் போட்ட பிரம்புகள், கத்திகள் மற்றும் துப்பாக்கிகள். அவைகள் எந்த ரக துப்பாக்கிகள் என்று கணேசனுக்குத் தெரியாது. அவன் இதற்கு முன் அவர்கள் தெருவில் வசித்து வந்த ஒரு குருவிக்காரன் கையில் தான் ஒரு அடாசான துப்பாக்கியைப் பார்த்து இருக்கிறான். அவன் அதை இயக்கி பார்த்தது இல்லை. அவன் அதை உபயோகித்து காக்கைகளையும் அருகாமையில் வருகிற பூனைகளையும் கொன்று தின்பான் என்று ஒரு வதந்தி உண்டு. அதற்கேற்றாற்போல் எங்கள் தெருக்களில் பூனைகள் தென்படவில்லை.
ஆனால், இவர்களது துப்பாக்கி வேறு மாதிரி இருந்தது. ஒருவேளை ஏகே47 ரகத் துப்பாக்கியாக இருக்கலாம்.
இருக்கலாம் என்ன. அது தான். தான் ஏகே47 துப்பாக்கியைப் பார்த்து விட்டதாக கணேசன் திடமாக நம்பினான். அவன் வார விடுமுறையில் ஊருக்குச் செல்லும் போது அவனோடு எடுத்துச் செல்லக் கதைகள் கிடைத்து விட்டன.
ப்ளாட்ஃபாரத்தில் ராமு தவிப்புடன் நின்றிருந்தான்.
“எங்க சார் போயிட்டீங்க? கடல் பக்கம் போயிட்டீங்களோன்னு பயந்தே போயிட்டேன். அறியாத வயசில்லே”
கணேசன் லேசாக முறுவலித்தான். அவனுக்கு இந்த இடம், இதன் அமைதி, அமானுஷ்யம், தலையைக் கலைத்துக் கொண்டே இருக்கும் கடல் காற்று (எவ்வளவு உற்சாகமாய் அடிக்கிறது? ஆளையேத் தூக்கி எறிந்து விடுவது போல), வரும் வழியில் பார்த்த தாமரை இலைகள் போன்ற பெரிய பெரிய இலைகள் கொண்ட புகையிலைச் செடிகள், சகட்டு மேனிக்குத் தென்படும் துப்பாக்கிகள், என்னமோ நாளைக்கே யுத்தம் வந்து தானும் துப்பாக்கி ஏந்தி வந்தியத்தேவன் மாதிரி போர்க்களம் போவது போல் ஒரு உற்சாகம் (வ’தேவன் காலத்தில் துப்பாக்கி இருந்ததில்லை என்பது எவ்வளவு பெரிய அநியாயம்), அதையும் தாண்டி அந்தக் கடல்.. அந்தக் கடல்… நீலம் பாரிக்காது ஒரு குழம்பிய மரகதப் பச்சையில் மெத்து மெத்தென்று திரண்டு வருகிற கோதுமை அல்வா மாதிரி இருந்த கடல்… அதையெல்லாம் தாண்டி சிவந்த கால்களை தார்பாய்ச்சி உப்பளங்களில் மீன் பிடிக்கும் அந்த அழகான பறவைகள்..
அழகு என்பதன் சாமுத்ரிகா லட்சணம் பொருந்திய இடம் இதுதான் என்று கணேசனுக்குத் தோன்றியது.
ராமுவிடம், “ஆமாம்.. கூட்டம் கூட்டமா துப்பாக்கி வச்சுக்கிட்டு வராறவங்கள்லாம் யாரு” என்று கேட்டான்.
அவன் தன் வாயில் விரலை வைத்து சப்தம் போட வேண்டாம் என்று கூறி, “அவங்க எல்லாம் தீவிரவாதிங்க.. சுதந்திரப் போராட்டத்துக்கு தயாராகறாங்க.. இங்கிட்டு நிறையப் பேர் சமீபமா வந்து தங்கியிருக்காங்க.. “
“ஓ.. என்றான் கணேசன் லேசான பயத்துடன். “பாத்தா சுட்ருவாங்களோ?”
அவன் சிரித்தான். நீங்க வேற.. அதோ ஒரு கொக்கு தெரியுது பாருங்க.. அது இவிங்க வர்றதுக்கு முன்னாடிலேருந்தே இங்கனத்தான் சுத்திக்கிட்டு இருக்கு… அதையே சுடலை.. நம்மளையா சுடுவாங்க?
அதத்தவிர, நாமதான் அவிங்களுக்கு நல்லது பண்றமுல்ல… நம்மளை என்னத்துக்கு அநாவசியமா சுடணும்?”
நியாயம்தான் என்று நினைத்துக் கொண்டான் கணேசன். இந்த நம்பிக்கை அடுத்த ஐந்து வருடங்களில் பொய்த்துப் போயிருக்க வேண்டாம்.
மேலே வந்தவுடன் ராமு கணேசனிடம் சாப்பிட்டாகி விட்டதா என்று கேட்டான். கணேசன் வரும் வழியில் ஒரு மரணவிலாசில் ஒரு தோசையும் ஒரு காப்பியும் குடித்து விட்டு வந்தான். ராமு கேட்டதில் வயிறு விழித்துக் கொண்டு விட்டது.
இங்கே வரப்போவது கணேசனுக்கு முந்தின நாள் சாயங்காலம் தான் தெரியும். வார ஓய்வு முடிந்து இரண்டு நாட்கள் முன்னால்தான் அவன் சென்னையில் இருந்து வந்திருந்தான். அவன் வேலையில் சேர்ந்தே இரண்டு வாரங்கள் தான் ஆகியிருக்கின்றன.
கணேசன் போன்ற பொடிசுகளைக் கண்காணிக்க ஒரு கண்காளிப்பாளர் உண்டு.
கணேசனோடு இன்னும் நான்கு பேர் அங்கு சேர்ந்திருந்தனர். பார்த்த மாத்திரத்தில் கணேசனுக்கு அவ்வளவாகப் போறாது என்று அவர் அனுமானித்து இருக்க வேண்டும்.
மற்றவர்களை நல்ல இடங்களாகப் பார்த்து பார்த்து அனுப்பிய அவர் கணேசனை உபயோகப்படுத்தாமல் ஒரு கிராமப்புற ஸ்டேஷன் ஒன்றில் விட்டு வைத்து இருந்தார்.
இந்த முறை வேறு வழியே இல்லாமல், ரயில் ஓடாத நிலையம் தானே என்று அனுப்பி இருக்கிறார்.
கணேசனுக்கு இதுவும் நல்லதாகவே பட்டது. கூடியவரையில் கூட்டத்தில் முகம் காட்டாமலே இருப்பது நல்லது என்கிற மாதிரிதான் அவனும் வளர்க்கப்பட்டு இருக்கிறான். மூன்று பெண்களைத் தொடர்ந்து நான்காவதாக ஆண் மகன் அவன் பெற்றோருக்கு. அதன் தாக்கம் கணேசனைத் தொடர்ந்தே வந்து கொண்டு இருக்கிறது.
என்ன, இந்த ஊருக்கு வரப் போகிறோம் என்று இரண்டு நாட்கள் முன்னால் தெரிந்திருந்தால் அப்பாவிடம் சொல்லி இருக்கலாம். அவரது அத்யந்த நண்பர் ஒருவர் இதே ஊரில் வசித்து வருகிறார். ஊருக்குள் சென்று விசாரித்தால் தெரிகிற அளவிற்கு அவருக்கும் பிராபல்யம் இல்லை, ஊரும் அந்த அளவிற்கு சிறியதில்லை.
இருந்தாலும் கேட்டு வைக்கலாம் என்று ராமுவிடம், அவனுக்கு சாமிநாத மாமாவைத் தெரியுமா என்று கேட்டான்.
ராமுவிற்குக் கேள்வியே புரியவில்லை. பேந்த பேந்த முழித்தான். அவனது போதையில் அவனுடைய தாய்மாமன் பேரையே அவனால் நினைவில் வைத்திருப்பது துர்லபம்.
“அது யாரோ… யாருக்குத் தெரியும்”
இதை கணேசன் எதிர் பார்த்தது தான்.
“டீ காப்பி கிடைக்குமா ராமு?”
“சரக்கு வேணும்னா கிடைக்கும்.. ஒரு கல்பு அட்ச்சுட்டு அம்சமா இந்தா இந்த பெஞ்சுல படுத்தீங்கன்னா சொர்க்கத்தைப் பார்க்கலாம்”
“சரி சரி.. அப்றம் பாக்கலாம்.. சாப்பாட்டுக்கு என்ன வழி?”
“இப்பிடி மேற்கால அரைமைல் போனா கோயில் மதில் ஓரமா அம்மாமாமி மெஸ்ஸூன்னு ஒண்ணு இருக்குது.. சூப்பரா இருக்கும் சாப்பாடு. தயிர் அதைவிட அற்புதமா இருக்கும்” என்றவன் இப்ப ஒண்ணும் கிடைக்காது. ஒரு மணி களிச்சு போ என்றான்.
கணேசன் இருள் நிறைந்த தன் பாசறைக்குள் மறுபடியும் நுழைந்தான்.
பத்து நிமிடம் இங்குமங்கும் அலைந்தான். என்ன செய்வது என்றே தெரியவில்லை.
எங்கு பார்த்தாலும் குப்பையும் காகிதங்களும் இறைந்து கிடந்தன. வவ்வாலா எலியா என்று தெரியாமல் ஒரு வீச்சம் அடித்தது. வேலையே இல்லை என்கிற பட்சத்தில் இதையெல்லாம் ஒழுங்குபடுத்தி வைத்திருக்கக் கூடாது என்று பெரிய மனிதத் தோரணையில் தனக்குள் கோபித்துக் கொண்டான்.
அவ்வளவு பெரிய ஹால் போன்ற அறையில் பளிச்சென்று ஒருநாள் தூசியில் ஒரு அகலமான மேஜையும் அல்லாத பெஞ்சும் அல்லாத ஒரு மரத்தாலான பெரிய பெஞ்சு நீண்டு கிடந்தது. அத்தனை குப்பைகளின் நடுவில் அது மட்டும் பளிச்சென்று இருப்பதில் இருந்து சந்துரு லீவு எதுவும் போடாமல் நாள் முழுக்க என்ன செய்கிறார் என்று புரிந்தது.
கணேசன் பொழுது போகாமல் வாசலில் நின்றான். ராமு கேட்டுப் பக்கம் போய்விட்டான். காற்று, ஆளையே அலாக்காகத் தூக்கி வீசும் காற்று உய் உய்யென்று எதையோ உரசி உரசி சப்தம் போட்டுக் கொண்டு இருந்தது. ரயில் தண்டவாளங்களில் மேய்ந்து கொண்டிருந்த ஓரிரண்டு எருமைகளையும் காணவில்லை. கடலலைகளின் ஓயாத சப்தம் அதைப் போய் பார்த்து விட்டு வந்ததில் துல்லியமாகக் கேட்டது. பறவைகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக சள்சள்ளென்று குரலெழுப்பின. ஒரேயொரு நாய் ப்ளாட்பாரத்தில் யாருமே துரத்தாமல் யாரையும் துரத்தாமல் விருட்டென்று தானாக ஓடியது. கணேசன் தன்னிச்சையாக அதைப் பார்த்து உஸ் என்றான். தேமேனென்று ஓடிக் கொண்டிருந்த அது, குரல் கேட்டதும் நின்று, கணேசனைப் புது மனிதனாக உணர்ந்து உர்றென்றது. கணேசன் பயந்து போய் கதவை சார்த்தி விட்டு உள்ளே வந்தான்.
மறுபடியும் நான்கைந்து முறை சுற்றி சுற்றி வந்தான். சில மரப்பெட்டிகள் காலைத் தடுக்கின. சிலவற்றைத் திறந்து பார்த்தான். தூசியின் நெடி மூக்கைத் துளைத்தது.
சிறுவயதில் இம்மாதிரி மரப்பெட்டிகளில் வைத்திருக்கிற கொலு பொம்மைகளை வெளியில் எடுக்கும் போது கணேசன் அம்மாவின் தலைப்பைப் பிடித்துக் கொண்டு நிற்பான். அம்மா அந்தண்டை போ, தூசி மூக்குல ஏறினா ஜூரம் வரும் என்று விரட்டி விடுவாள்.
இப்போது அம்மாவின் குரல் அதட்டியதாக உணர்ந்து பெட்டிகளைத் திறப்பதை நிறுத்தினான்.
சந்துரு என்கிற அந்த மனிதர் நாளை வராவிட்டால் தனக்கு என்ன கதி என்று கணேசனுக்குப் பயம் வந்தது. ஒரு நாளைக்கான உள்ளாடைகள் தான் கொண்டு வந்திருக்கிறான். இரவு எங்கு தங்குவது என்று தெரியவில்லை. அப்பாவின் சிநேகிதரைக் கண்டு பிடித்து விட்டால் தேவலாம். இரவுப்பாடு ஓடி விடும். இல்லாவிட்டால் இங்கு ஸ்டேஷனில் தங்குவதெல்லாம் சாத்தியமே இல்லை. கணேசனுக்குக் குழப்பமாக இருந்தது.
ஆனாலும், இந்த சூழல் அவனுக்கு மிகவும் பிடித்து இருந்தது. அவனை யாரும் தொந்தரவு செய்வதில்லை. அவனது இருப்பிடத்தில் அவனைத் தவிர ஆறு பேர். எல்லோரும் அவனை விட சீனியர்கள். கடந்த இருபது நாட்களாக அவனை சகலவிதமான எடுபிடி வேலைகளையும் செய்ய பணித்துக் கொண்டே இருந்தார்கள். கணேசனுக்குப் பொதுவாக வேலை செய்தே பழக்கம் இல்லை. கிரிக்கெட்டில் கூட அவன் கூடிய மட்டும் கடைசியாகத் தான் விளையாடுவான்.
இத்தனைக்கும் அவன் ஸ்ட்ரோக்குகளில் நிபுணன். விஸ்வநாத் போல ஸ்கொயர் கட்டும் காவஸ்கர் போல ஸ்கொயர் ட்ரைவும் அச்சு அசலாக அவர்களது நேர்த்தியிலேயே விளையாடுவான். ஒரே வித்தியாசம் பந்து மட்டையில் படாது. வேண்டும் என்றே பந்து மட்டையில் படாத மாதிரி போடுகிற பௌலர்களை யாரும் குற்றம் சொல்வதில்லை. கணேசன் ஓடுவதற்கு சோம்பேறித்தனப் பட்டுக் கொண்டு ஒன்று இரண்டு எல்லாம் அடிக்க மாட்டான்.
அவனும் இந்த ரயில் நிலையமும் கிட்டத்தட்ட ஒன்று. அவனும் கடைசியாக ரன் அடித்தது எப்பொழுது என்று தெரியவில்லை.
நச்சு நச்சு என்று உபத்திரவம் செய்ய ஆட்கள் இல்லாததாலேயே இந்த இடம் அவனுக்கு மிகவும் பிடித்து விட்டது. சந்துரு என்கிற நபர் வராமலே இருந்தால் நல்லது. அவருக்கு ரிட்டையர் ஆக இன்னும் எவ்வளவு நாட்களோ? அதுவரை தன் கண்காளிப்பாளரைக் கெஞ்சி இங்கேயே சந்துருவோடு இருந்து விடுகிறேன் என்று சொன்னால் தான் என்ன? யாருமே வர விருப்பப் படாத ஒரு இடத்திற்கு ஒருவன் வர விருப்பப் படுவதே ஸ்தாபனத்தின் வெற்றி தானே?
கணேசன் பல நினைவுகளுடன் திட்டங்களுடன் சுற்றி வருகையில் ஓரிடத்தில் கத்தையாக விண்ணப்பங்கள் கட்டி வைக்கப்பட்டு இருந்தன. அசுவாரஸ்யமாக அதைக் கிளற முற்பட்டவன் அதைப் பார்த்து உற்சாகம் கொண்டான்.
மூன்று வருடங்கள் முன் அங்கு ரயில் சேவை இருந்த போது சென்னை செல்லும் ரயிலுக்கான முன்பதிவு இருந்திருக்கிறது. அதன் முன்பதிவு படிவங்கள்.
ஆஹாஹா என்று பெருங்குரலில் கத்தினான் கணேசன். மூன்று வருடங்கள் முன் பொங்கல் சமயம் சாமிநாத மாமா கணேசன் வீட்டிற்கு வந்தது ஞாபகத்திற்கு வந்தது. அந்த வருடம் அவன் கல்லூரியில் சேர்ந்து முதலாமாண்டு பரீட்சைக்கு முந்தைய விடுப்பில் இருந்தான்.
அவன் கைகள் பரபரக்க அரை மணி தேடி முன்பதிவு படிவத்தைக் கண்டு பிடித்து விட்டான். அவன் முகம் சுண்டிப் போய் விட்டது. அதன் விலாசத்தில் எதுவும் நிரப்பப் படவில்லை.
இருந்தாலும் அசமஞ்சம் என்று எல்லாராலும் எப்பவும் புகழப்படுகிற கணேசன், தன் கண்டுபிடிக்கும் திறனில் அளவிலா ஆனத்தம் அடைந்தான்.
இந்த ஊரில் என்னவோ இருக்கிறது. நாம் சந்தோஷமாக இருக்கிறோம். நம் அறிவு அபாரமாக தூண்டப் படுகிறது. என்னவாவது சாகசம் செய்து இந்த ஊரிலேயே இருந்து விட வேண்டும். ரயில் நிலையத்தையே மூட வேண்டி வந்தால் கூட இந்த இடத்தை விட்டு நகர முடியாது என்று அழிச்சாட்டியம் பண்ண வேண்டியது தான்.
கணேசனுக்கு சிந்தனை வேலை செய்ததில் பசி அதிகமாகி விட்டது.
வாசலுக்கு வந்து ராமு ராமு என்று கூப்பிட்டான். சாவியைக் கொடுத்து ஞாபகமாக பூட்ட சொல்லி விட்டு கோயில் பக்கம் நடக்கத் துவங்கினான்.
கோயில் நடை சார்த்தி இருந்தது. கம்பி கேட் வழியாக எட்டிப் பார்த்தான். ஒன்றும் தெரியவில்லை. மிகவும் பிரசித்தி பெற்ற பாடல் பெற்ற ஸ்தலம் என்று கேள்விப்பட்டு இருக்கிறான்.
“அரை மணி மின்னால வந்திருந்தா பாத்துருக்கலாமே தம்பி.. இனிமே அஞ்சு மணிக்கு தான் தெறப்பாக” என்றாள் அங்கு சுவரோரமாகப் புகையிலை உருட்டிக் கொண்டு இருந்த கிழவி.
கணேசன் அவளிடம் அம்மாமாமி மெஸ் எங்கே இருக்கிறது என்று கேட்டான்.
அதோ மதிலு ஓரமா சார்ப்பு எறக்கி சனங்க கூட்டமா நிக்கறாவ இல்லே, அதுதான்.. போங்க.. போங்க.. ஊருக்குப் புதுசா… நல்லா இருக்கும்.. சாப்பிட்டு வாங்க” என்று அனுப்பினாள்.
நிறையப்பேர் வெளியே வெய்யிலைப் பொருட்படுத்தாது நின்று கொண்டு இருந்தனர்.
கணேசனின் முறை வருவதற்கு அரை மணி ஆகிவிட்டது.
அம்மாமாமி மெஸ்ஸென்றாலும் கல்லாவில் பழுத்த ஆம்பளை தான் இருந்தார். வந்த எல்லோரிடமும் ஏதோ சகஜமாக உறவாடிக் கொண்டே இவன் முறை வந்த போது “புதுசா” என்று கேட்டார்.
“ஆமாம்”
எங்கே என்று சமிக்ஞையில் வினவ கணேசன் ரயில்வே என்றான்.
“ஓ… அதான் சந்துருவைக் காணமா… எவ்வளவு நாள்?”
“நாளை வரை”
“பேஷ்”
கணேசன் அமர்ந்து சாப்பிட ஆரம்பித்தான். அற்புதமான சாப்பாடு. வெள்ளிக்கிழமை ஆனதால் ஜவ்வரிசி பாயசம். தேனாக இனித்தது.
மோர் சாதம் சாப்பிடும் போது “தயிரா” என்று கேட்க, கணேசன் தாமதமின்றி உடனே ஆமாம் என்றான்.
அன்று காலை அவனிடம் ராமு கூறியிருந்தது ஞாபகம் வந்தது.
அவர் டோக்கன் எங்கே என்று கேட்க, கணேசன் அப்பாவியாக “வாங்கலியே” என்றான்.
“டோக்கன் இல்லாம தயிர் கிடையாது” என்று நிர்தாட்சண்யமாகக் கூறிவிட்டு அவர் அப்புறம் அகன்றார். கணேசனுக்கு மானக்கேடாகப் போய் விட்டது.
.உடனே பைக்குள் கையை விட்டு பணத்தை எடுத்துக் கொண்டு கல்லாவிடம் சென்று தயிர் டோக்கன் வாங்கி வந்தால் அவன் இலை எடுக்கப்பட்டு வேறு இலை போடப்பட்டு ஒருவர் பாயசம் நக்கிக் கொண்டு இருக்கிறார்.
வேறு வழியில்லாமல் கணேசன் கல்லா சென்று ஸ்பூன் கிடைக்குமா என்று கேட்டான். அவர் மறுத்து விட, கணேசன் கைகழுவும் பக்கம் திரும்பி, யாரோ இங்கிதமின்றி குடலை வாய்வழியாகத் துப்ப ப்ரயத்தனம் பண்ணுவதை உதாசீனம் செய்து இரண்டு விரல்களால் தயிரை கிண்ணத்தில் இருந்து எடுத்து ருசித்து சாப்பிட்டான். அதற்கு முன்பும் பின்பும் கூட அவ்வளவு அருமையான தயிரை அவன் உண்டது கிடையாது. தயிருக்காகவே இந்த ஊரில் தங்கி விடலாம் என்று அவன் எண்ணம் உறுதிப்பட்டது.
திரும்பி பாதி வழியில் கல்லா நபரிடம் சாமிநாத மாமா விபரம் கேட்டு இருக்கலாம் என்று தோன்றியது.
திரும்பவும் உண்ட களைப்பில் நடந்து கல்லாவை அணுகி, “இந்த ஊர்ல சாமிநாதன்னு யாராவது இருக்கிறார்களா” என்று கேட்டான்.
“ஏன் இல்லாம? எனக்குத் தெரிஞ்சே நாப்பத்தாறு பேர் இருக்காங்க. தெரியாம எவ்வளவு பேரோ?”
கணேசனுக்கே தான் கேட்டது அபத்தமாகப் பட்டது.
“கொஞ்சம் கருப்பா இருப்பார். உயரமா வெத்தலை பாக்கு போட்டுண்டு… ஆஃபீஸ் போகும் போது மட்டும் பேன்ட் போட்டுண்டு போவார்”
“மத்தபடிக்கு”
கணேசன் பதறி, “வேஷ்டி கட்டிப்பார்”
“அதான பாத்தேன்” கல்லா கல்மிஷமாக சிரித்தது.
“டேய் தம்பி.. இவ்ளோ பெரிய ஊர்ல வந்து மொட்டத் தாத்தன் குட்டேல விழுந்தான்னு கேட்டா என்ன பதில் சொல்றது?”
“அவர் ரெண்டு வருஷத்துக்கு ஒருக்கா மெட்ராஸ் வருவார்”
“பத்தியா… ஜோலியக் கெடுக்கறே பார்த்தியா”
அப்போது ஒருமுறை அப்பாவிடம் சாமிநாத மாமா வேலை செய்யும் கம்பெனி காலண்டரைக் கொடுத்தது ஞாபகம் இருந்தது. அது ஒரு வெங்கடாசலபதி படம். அப்பா அதை அடுத்த வருடம் ஃப்ரேம் போட்டு கூடத்தில் மாட்டி இருந்தோம்.
கணேசனுக்கு அந்தக் கம்பெனி பெயர் குத்து மதிப்பாக ஞாபகம் வந்து அதை அவரிடம் சொல்ல, அவர் துள்ளிக் குதித்தார்.
“அட.. நம்ம பரவாக்கோட்டை சாமிநாதன்.. இத ஆரம்பத்திலேயே சொல்லி இருக்கப் படாதோ… பக்கத்துல தான் அவன் வீடு… வடக்கே போய் இடதுகைப் பக்கம் திரும்பினா தெற்கு பாத்த நாலாவது வீடு… வீட்டு வாசல்ல பச்சகலர் பெயிண்ட் அடிச்சிருப்பான்..” என்று சொன்னவர் “இரு…இரு… அவன் நேத்திக்கு கார்த்தால குடும்பத்தோட பழனி போனானே.. இன்னிக்கு சாயங்காலமா வந்துடறேன்னு சொன்னான்”
கணேசன் ஞாபகமாக அந்த வீட்டை விசாரித்து நேரிலேயே போய் பார்த்து வைத்துக் கொண்டான்.
நிலையம் திரும்பும் போது இரண்டு மணி ஆகிவிட்டிருந்தது.
மனம் கொள்ளா நிம்மதியில் சற்று நேரம் வாசல் கதவைப் பிடித்துக் கொண்டு நின்றான். பின்னர் பழையபடி உள்ளே போய் அந்தப் பெரிய பெஞ்சில் ஏறி அமர்ந்து தனக்குத் தானே தாளம் போட்டு பாடிக்கொண்டு இருந்தான். மூன்று மணி வாக்கில் கடல் காற்று வெக்கை இல்லாமல் வீச ஆரம்பித்தது. தான் கொண்டு வந்திருந்த பையை தலைக்கு வைத்துக் கொண்டு அப்பவும் விடாமல் பாடிக் கொண்டே இருந்தவன் தன்னையறியாமல் தூங்கி விட்டான்.
அரைமணி ஆகியிருக்கலாம். அப்போதுதான் உலக்கை போன்ற கைகள் கொண்ட அம்மனிதர் டைரியால் அடித்தது.
இப்போது இரண்டாவது முறை அடி விழுந்தது.
மலங்க மலங்க முழித்த கணேசன் கண்ணுக்கு இருட்டு பழகி அந்த தாட்டியான மனிதர் தெரிந்தார்.
அவரையும் வழி தெரியாமல் வந்துவிட்டவர் என்று நினைத்தவாறே,
“யார் சார் நீங்க?”
“வாட்?”
அவரது அதட்டலில் சர்வநாடியும் அடங்கி விட்டது அவனுக்கு. அவர் ஏதோ மேலதிகாரியாக இருக்க வேண்டும் என்று அவன் உள் மனசு கூறியது.
தான் தூங்கிக் கொண்டு இருப்பதைப் பார்த்து என்ன செய்வாரோ? வேலைக்கு உலை வைத்து விடுவாரோ என்றெல்லாம் தோன்ற ஆரம்பித்து விட்டது அவனுக்கு. அவன் உடம்பு நடுங்கியது. உதடுகள் நிலை கொள்ளாமல் துடித்தன. தடுமாற்றத்துடன் நீங்க யாரு சார் என்றான் மறுபடியும்.
“Get down first gentleman”
இப்போது தான் கணேசனுக்கு தான் இன்னமும் சயன நிலையில் இருந்து மீளவில்லை தோன்றியது. சரேலென்று வழுக்கியவாறு கீழே இறங்கினான். ஆழ் உறக்கத்தினால் கொடுவாய் வழிந்து இருந்தது. சட்டையின் மேல்கை ஸ்லீவினால் அதைத் துடைத்துக் கொண்டான். சற்றே நிமிர்ந்து நின்று, ஆடுகிற தொடைகளை இடுக்கிக் கொண்டு “சொல்லுங்க சார்” என்றான்.
“ஐ’ம் கிருஷ்ணமூர்த்தி ஃப்ரம் விஜிலென்ஸ்” என்றார் வந்தவர்.
அப்பாடா என்று இருந்தது கணேசனுக்கு. நல்ல வேளை. வந்தவர் ரயில்வே அதிகாரி இல்லை. வேறெதோ விஜிலன்ஸ் என்கிறார். விசாரிப்போம்.
பெயரைப் பார்த்தால் தமிழ் மாதிரி தான் தெரிகிறது. தஸ்ஸூ புஸ்ஸூ என்று ஆங்கிலத்திலேயே டபாய்க்கிறாரே என்று வேறு கவலையாக இருந்தது அவனுக்கு.
சற்றே துணிச்சலை வரவழைத்துக் கொண்டு அவரிடம் “சார்.. நீங்க எடம் தெரியாம வந்துருக்கீங்கன்னு நினைக்கிறேன்… இது ரயில்வே ஸ்டேஷன்… உங்க டிபார்ட்மெண்ட் இல்லை.. அது எங்கியாவது ஊருக்குள்ள இருக்கும்.. இப்படியே பொடி நடையாப் போனா அரைமணில வந்துரும்” என்றான்.
அவர் இவனை என்ன செய்வது என்று புரியாமல் பார்த்தார். தெரிந்தே பேசுகிறானா, இல்லை தூக்கத்தில் உளறுகிறானா?
“பையா… நானும் ரயில்வேதான்… குற்றங்களைக் கண்டுபிடித்து தண்டிக்கும் டிபார்ட்மெண்ட் அதிகாரி”
கணேசனுக்கு மறுபடியும் தலை சுற்றியது. நடுங்க ஆரம்பித்தது.
என்ன அநியாயம். இன்று காலை தான் கிளம்பி வந்தேன். ஒருமைல் நடந்து சாப்பிட்டேன். வெயிலில் நடந்து வந்தேன். அசதி. தூங்கி விட்டேன். இந்த ஆள் என்னைக் குறி வைத்து இங்கு ஒளிந்து இருக்கிறான். நான் தூங்கும் வரைக் காத்திருந்து என்னைப் பிடித்து இருக்கிறான். ட்யூட்டியில் கண் அசர்வது தேசத் துரோகமா? அதற்காக என்னை வேலையை விட்டு எடுத்து விடுவார்களோ? கல்லூரியில் எவ்வளவு நாட்கள் தூங்கி இருக்கிறேன். அவ்வளவு படித்தவர்கள். பேராசிரியர்கள். எவ்வளவு கண்ணியமாக மன்னித்து ஏற்றுக் கொண்டார்கள்.
ஒரு அரைமணி தூங்கியது அவ்வளவு பெரிய குற்றம் மாதிரி ஆலாபனை பண்ணுகிறானே இந்த தடியன்? இவர்கள் கூடத்தான் தண்டவாளம் போட்டு துருப்பிடிக்க விட்டு, ரயில் விடாமல் அழிச்சாட்டியம் செய்கிறார்கள். இதைவிடத் தூங்கியது அவ்வளவு பெரிய பாவமா?
கணேசனுக்குக் கண்ணில் நீர் முட்டியது. துக்கம் தொண்டையை அடைத்தது.
பேசாமல் வந்தவர் மேல் பாய்ந்து அவரை நாலு இறுக்கு இறுக்கினால் என்ன தோன்றியதை மாற்றிக் கொண்டான். தனக்கு ஒரு எலும்பு மிஞ்சாது என்று அவனுக்கு யோசிக்கும் முன்பே புரிந்து விட்டது.
வாயை மெதுவாகத் திறந்து “தெரியாமல் நடந்து விட்டது.. அம்மாமாமி மெஸ்ஸால்தான் சார் எல்லா ப்ராப்ளமும்… ஜவ்வரிசி பாயசம் சாப்பிட்டு இருக்கக் கூடாது சார்… அதுவும் தயிரும் கலந்து சாப்பிட்டு இருக்கீங்களா சார்… நான் சாப்பிட்டதே இல்லை சார்.. அது என்னவோ கோளாறு பண்ணிடிச்சு சார்” என்று பிதற்றிக்கொண்டு இருக்கும் போது டெலிபோன் மணி இடிபோல் இடித்தது.
கணேசன் மட்டும் அல்லாமல் வந்தவருக்கும் தூக்கி வாரிப்போட்டது.
கணேசனுக்கு டெலிபோன் எங்கு இருக்கிறது என்றே முதலில் புரியவில்லை. அவன் படுத்திருந்த பெஞ்சில் ஒரு ஓரமாக இருந்திருக்கிறது. இருட்டில் சரியாகப் புலப்படவில்லை.
தட்டுத்தடுமாறி ரிசீவரை எடுத்தான். மறுமுனையில் அந்த ஸ்டேஷன் பெயரைத் துல்லியமாக யாரோ விசாரிக்க இவன் ஆமாம் என்றான்.
மறுமுனையில் தெளிவான ஆங்கிலத்தில் யாரோ.
ஆங்கிலம் தான் தெளிவே தவிர கணேசனுக்கு ஆங்கிலம் தெளிவு என்று அர்த்தம் இல்லை.
இன்றைக்கு என்னமோ எல்லாமே ஜேம்ஸ் பாண்ட் படமாக இருக்கிறதே என்று நொந்து கொண்டான்.
மறுமுனையில், பத்து நாட்கள் முன்பு கெமிக்கல்ஸ் நான்கு வேகன் இங்கு ஏற்றியதாகவும் அது எங்கே இருக்கிறது என்று விசாரிக்க இயலுமா என்றும் கேட்கப்பட்டது.
“எஸ் ஸார்?”
“வாட் எஸ் ஸார்?”
“அப்ப நோ சார்”
“வாட் நான்சன்ஸ்?”
“எஸ் ஸார்?”
“ஆர் யூ கிட்டிங்? வேர் ஈஸ் மை ஸ்டாக்? வொய் ஹாஸ் இட் நாட் ரீச்டு தாடபள்ளிக்கூடம்?”
“நோ சார்”
“தென் வேர் ஈஸ் இட்?”
“ஐ’ம் ஃப்ரம் கணபதி விலாஸ் பள்ளிக்கூடம் சார்”
“வாவாட்? பீ சீரியஸ் மேன்”
“எஸ் ஸார்”
“டூ யூ நோ நாராயணன்?”
“எஸ் ஸார். மை டென்த் க்ளாஸ் ஃப்ரெண்ட் சார்”
இப்போது க்ருஷ்ணமூர்த்தி இடைபுகுந்து, “தம்பி… அவரு நம்ம ஜெனரல் மானேஜர் நாராயணன் பத்தி கேக்கறாரு”
அவர் இத்தனை நேரம் சம்பாஷணையைக் கேட்டுக் கொண்டே இருந்திருக்கிறார்.
அதிலொன்றும் அதிசயமில்லை என்று தோன்றியது. ரிசீவர் கட்டுப்பாடு இல்லாமல் மாரியம்மன் கோயில் ஸ்பீக்கர் மாதிரி பேசுகிற எல்லாவற்றையும் ஒலிபெருக்கிக் கொண்டு தான் இருக்கிறது.
இப்போது ரிசீவர் பெரிய அளவில் எதையோ அலற, கணேசன் போனை வாயருகில் கொண்டு சென்று “சார்.. ஒன் மினிட் சார்.. மை பிக் ஆஃபீசர் சார்.. ஹியர் ஒன்லி சார்.. ” என்று டெலிபோனை கிருஷ்ணமூர்த்தியிடம் நீட்ட அவர் துள்ளிக் குதித்து “ஐயையோ” என்று அலறியவாறு ஓட முற்பட கணேசன் விடாது அவரிடம் நீட்ட, அவர் மறுத்து விலக்க, ஒரு சிறு துவந்த யுத்தத்தில் டெலிபோன் பொதேல் என்று கீழே விழுந்து ரிசீவர் பாகம் கழன்று எங்கோ போய் பதுங்கி விட்டது.
இருவரும் அனிச்சையாக அதைத் தேட முயன்று, இதுதான் சாக்கு என்று கணேசன் அந்த நீண்ட பெஞ்சுக்கடியில் வாகாக அமர்ந்து கொண்டான்.
கிருஷ்ணமூர்த்தி ஒருவழியாக ரிசீவரைக் கண்டு பிடித்து கணேசனையும் பலவந்தமாக வெளியில் இழுத்து டெலிஃபோனை மறுபடியும் மிகுந்த ப்ரயாசையில் இணைக்க அது மறுபடியும் அலறியது.
இருவரும் ஒருவரை ஒருவர் பார்த்தவாறு அதை எடுக்கத் துணியவில்லை. மற்றும் சில முறை தொடர்ச்சியாக ஒலித்தது அப்புறம் ஒலிக்கவில்லை.
க்ருஷ்ணமூர்த்தி இரு கைகளையும் இடுப்பில் வைத்து, தன்னை ஆசுவாசப்படுத்திக் கொண்டார்.
கடுங்கோபத்துடன் கணேசனை சகிக்காமல் பார்த்தார்.
“எங்கேருந்துடா உன்னை எல்லாம் கண்டு பிடிச்சு வேலைக்கு சேத்தானுங்க.. “
“…..”
“ஆமாம்… உங்க ஸ்கூல் பேரு கணபதி விலாஸ் பள்ளிக்கூடமா”
“ஆமாம்”
“அவரு என்ன கேட்டாரு தெரியுமா?”
“அவரு ஏதோ பள்ளிக்கூடம் பேரைச் சொல்லி அதுல படிச்சியான்னு கேட்டாரு… நான் இல்லன்னு சொல்லி எங்க ஸ்கூல் பேரைச் சொன்னேன்”
“அடக் கஷ்ட காலமே”
என்று தலையில் கை வைத்துக் கொண்டார்.
“இங்கே காப்பி கிடைக்குமா?”
“ஒருமைல் நடந்து கோயில் கிட்டப் போனா அம்மாமாமி மெஸ் இருக்கு” என்று சொல்லிக் கொண்டு இருந்தவனை கைகூப்பி வணங்கி
“ஐயையோ… போறுண்டாப்பா.. மறுபடியும் மெஸ்ஸெல்லாம் தாங்காது”
“பள்ளிக்கூடம் படிச்சு முடிச்சியா.. இல்லை அங்கேருந்தே டைரக்டா வேலைக்கு வந்துட்டியா”
“இல்லை.. மெட்ராஸ் காலேஜ்ல டிகிரி படிச்சேன்”
“மெட்ராஸ்ல வேற படிச்சு இருக்கியா… சந்தோஷம்”
கணேசன் தைரியத்தை வரவழைத்துக் கொண்டு அவரிடம் “அவர் எதுக்கு சார் என் ஸ்கூல பத்திக் கேட்டாரு?”
“மட்டி.. மட்டி… தாடப்பள்ளிக்கூடங்கறது ஆந்திரால ஒரு இம்பார்டன்ட் ஜங்ஷன். இங்கே குட்ஸ் ஏத்தி இருந்தா ஃபோர் டேஸ்ல அங்க போயிருக்கணும்.. பத்து நாளா போய்ச் சேரலை… போன தடவை அனுப்பினதும் இப்படி நாள்கணக்குல அன்னேச்சுரல் டிலே.. அதை இன்வஸ்டிகேட் பண்றதுக்கு தான் நான் வந்தது..உன் கிட்ட வந்து மாட்டினது தான் மிச்சம்”
தாடப்பள்ளிக்கூட விவகாரம் பூதாகாரமாக வெடித்து சிதறக்கூடியது என்று கணேசனுக்கு ஒருவாறு புரிந்தது. என்ன காரணமோ அந்தப் பெயர் உச்சரிப்பே அவனுள் பெரிய அலமலப்பை உண்டு பண்ணியது.
இப்போது கிருஷ்ணமூர்த்தி “சரிசரி.. எனக்கு இந்த ரெண்டு ட்ரான்ஸாக்ஷன் சம்பந்தமான இன்வாய்ஸ் எல்லாத்தையும் எடுத்துக் கொடு” என்றார்.
கணேசன் அவரைப் பார்த்து கேனத்தனமாக சிரித்தான், தன்னால் இது ஆகுமா என்று பொருள் படும்படி.
அவர் தலையில் கைவைத்துக் கொண்டார்.
“தம்பி.. தெரிஞ்சோ தெரியாமலோ.. வேலைக்கு வந்துட்டே.. கை நீட்டி சம்பளம் வாங்கற”
“இன்னும் வாங்கல சார்”
“என்னது”
“ஆமா சார்.. ஜாயின் பண்ணி இருபத்து இரண்டு நாள்தான் சார் ஆகுது”
“அதெல்லாம் எனக்குத் தெரியாது.. நாளைக்குக் காலையிலே டான்னு பத்து மணிக்கு வருவேன்.. எல்லா மேட்டரும் டேபிள் மேல இருக்கணும்.. இல்லேன்னா மேலிடத்துல ரிப்போர்ட் பண்ணிடுவேன்.. உனக்கு வேலை காலி” என்று புறப்பட்டார்.
உள்ளே வந்த கணேசன் உஸ்ஸென்று பெருமூச்சு விட்டு ஓயவில்லை, அவர் திரும்பவும் வந்து விட்டார்.
“என்ன சார்”
“உன்னை நம்ப முடியாது.. உன் முழியே சரியில்லை.. நீ என்ன பண்றே.. எனக்கு ஒரு லெட்டர் தர்றே”
“என்னன்னு”
“இந்த மாதிரி கிருஷ்ணமூர்த்தி வந்தாரு.. நான் புதுசு.. எனக்கு ஒரு வேலையும் தெரியாது.. அதுனால அவர் கேட்டதைக் கொடுக்க முடியலை… நான் என்ன பண்றேன்னா, கார்த்தாலைக்குள்ள அவர் கேட்டதையெல்லாம் தேடி எடுத்து வைக்கறேன்… அப்படி கொடுக்க முடியலைன்னா நான்தான் எல்லாத்துக்கும் காரணம்.. நீங்க என்மேல என்ன வேணும்னாலும் ஆக்ஷன் எடுத்துக்கலாம்”
“என்னைப் பாத்தா பாவமா தெரியலையா சார் உங்களுக்கு?”
“வேலைன்னு வந்துட்டா பாவபுண்ணியம் பாக்க முடியாது… சரி சரி பேசறதை நிறுத்து… பேப்பர்ல எழுது”
“இங்கே பேப்பர்லாம் மக்கிப்போயி மோசமா இருக்கு சார்.. நீங்க ஒரு பத்து நிமிஷம் இங்கே உக்காந்து இருங்க சார்… நான் குடுகுடுன்னு ஓடிப்போய் பேப்பர் வாங்கிட்டு வந்துடறேன் சார்”
“அந்தக் கதையே வேணாம்.. பேப்பர்லாம் எங்கிட்டயே இருக்கு… இந்தா நா சொன்ன மாதிரி எழுது”
கணேசன் அவரையே பரிதாபமாகப் பார்த்தான்.
“என்ன ராஜா? பாத்துண்டே இருக்கே? சொன்னதை எழுதச் சொன்னேனே”
“நீங்க இன்னும் சொல்லவே இல்லையே”
“அடப்பாவி.. இவ்வளவு நேரம் கிளிப்பிள்ளைக்கு சொன்ன மாதிரி சொன்னேனே”
“அப்படியெல்லாம் எழுத வராது சார் எனக்கு”
“பின்னே”
“நீங்களே எழுதிக் கொடுத்துட்டா நான் கையெழுத்துப் போட்டுக் கொடுத்துடறேன்”
“என் பையன் இதுமாதிரி சொல்லி இருந்தா தவடைலயே ரெண்டு போட்டு இருப்பேன்”
“என்ன சார்… ஒருவழிக்கும் ஒத்து வரமாட்டேங்கறீங்க.. இல்லேன்னா டிக்டேட் பண்ணுங்க சார்.. நான் எழுதிக்கிறேன்”
“மெட்ராஸ்ல டிகிரி முடிச்சேன்கற… க்ளாஸ்லல்லாம் என்ன பண்ணின?”
“சார்… க்ளாஸ்ல எங்க ப்ரொபஸர்ஸ்லாம் போர்டுல எழுதிப் போடுவாங்க… நாங்க பாத்து எழுதிப்போம்.. நீங்களும் அதே மாதிரி எழுதிப் போட்டா நான் தப்பு இல்லாம பாத்து எழுதித் தந்துடறேன் சார்”
அவர் கண்களை மூடிக் கைகளை உயர்த்தி “கடவுள்தான் ரயில் பஞ்சராகாமக் காப்பாத்தணும்”
அவர் சொல்ல சொல்ல கணேசன் எழுதிக் கையெழுத்து போட்டுக் கொடுத்தான்.
கடிதத்தின் ஊடாக நான்கைந்து இடங்களில் தாடப்பள்ளிக்கூடம் வந்தது. ஏன் கடித ஆரம்பத்திலேயே கொட்டை எழுத்தில் ரெஃபரன்ஸ் : தாடப்பள்ளிக்கூடம் என்று இருந்தது.
ஆறுமணி அளவில் மிகவும் இருட்டாகி விட்டது. ராமு வந்து கதவைப் பூட்டினான். ஒரு லாட்ஜ் பெயரைச் சொல்லி அங்கே தங்கச் சொன்னான்.
கணேசன் நேராக சாமிநாத மாமா வீட்டிற்குச் சென்றான். அவர் வரவில்லை. வேறு வழியில்லாமல் லாட்ஜில் தங்கிவிட்டுக் காலை குளித்து விட்டு அந்த ப்ரசித்தி பெற்ற கோயிலுக்குச் சென்றான். கிருஷ்ணமூர்த்தி வரக்கூடாது என்று மனமுருக வேண்டிக் கொண்டான். குறைந்த பட்சம் சந்துரு வருகிற வரை.
அவர் மதியம் தான் வருவார். அதற்குள் காரியம் கை மிஞ்சி விடும்.
மனதில் மிதமிஞ்சிய கவலையில் மெஸ்ஸை அடைந்து அங்கு இட்டலியும் காப்பியும் சாப்பிட்டு விட்டு லாட்ஜைக் காலி செய்து விட்டுத் தளர்வாக ஸ்டேஷனை நோக்கி நடந்தான்.
அரைமைல் தாண்டியதும் ‘டப்’பென்று சப்தமிடாமலே அறுந்து விட்டது செருப்பு. கால் விரல்களால் முடிந்தவரை இருக்கிக் கொண்டு தத்தி தத்தி நடந்தே வந்தான். வழியில் செருப்பு தைப்பவர்கள் இருப்பதற்கான சாத்தியக்கூறே தென்படவில்லை.
ஸ்டேஷனை அடைந்த உடன் அவனுக்கு தூக்கி வாரிப் போட்டது. வெளியில் ஒரு பெஞ்சில் வேறு ஒரு நபர் தென்பட்டார்.
யார் கண்டது கிருஷ்ணமூர்த்தி போல இவர் இன்னொரு விஜிலென்ஸ் ஆளாக இருக்கும். இருந்தாலும் விஜிலென்ஸ் டிபார்ட்மெண்ட்டில் ஆட்கள் நிறைய இருக்கிறார்கள். போதாததற்கு தான் வேறு என்னத்தையோ எழுதிக் கொடுத்துத் தொலைத்து இருக்கிறோம். பதட்டத்தில் தன் கையெழுத்தை வேறு போட்டுத் தொலைத்து இருக்கிறான். சந்துரு என்று புரியாதமாதிரி போட்டு இருந்திருக்கலாம். ஆனால் ஹாண்ட்ரைட்டிங்கில் எளிதாகக் கண்டு பிடித்து விடுவார்கள். மேசையில் கையை இறுக்கமாகக் கட்டி படேர் படேர் என்று சுத்தியலால் அடி போட்டால் கணேசன் எப்படித் தாங்குவான். தானாக உளறப் போகிறான். கணேசனுக்கு இந்த மாதிரி நினைப்பே கண்களை கலங்க வைத்தது.
அந்த ஆளை தூரத்தில் இருந்து பார்த்தான். அவர்
குளிர் கண்ணாடி அணிந்து இருந்தார். ஐம்பது வயது இருக்கலாம். வெள்ளை வேட்டி வெள்ளைக் கதர் சட்டை. கால்மேல் கால் போட்டு அமர்ந்து குட்ஷெட் பக்கம் பார்த்துக் கொண்டு இருந்தார். ராமு அவரிடம் உத்தரவு பெற்று எங்கோ செல்ல முயல்கிறான். அவர் உட்கார்ந்து இருந்த ஸ்டைலே அவர் அந்த இடத்தில் நிறையப் பழகியவர் என்று காட்டியது. அதனால் விஜிலென்ஸ் ஆசாமியாக இருக்க முடியாது.
நேற்று டெலிபோனில் மிரட்டிய ஆசாமியாக இருக்கலாம். நாராயணன் பேரெல்லாம் சொல்லி மிரட்டினான்.
கணேசனுக்கு ஜிஎம்மெல்லாம் எப்படி இருப்பார்கள் என்றே அனுமானிக்க முடியவில்லை. அவன் இந்த மூன்று வாரங்களில் பார்த்த மேலதிகாரி அவனது கண்காளிப்பாளர் தான். அவரைக் கண்டால் அவனுக்கு என்னமோ பயமாக இருக்கும். அவன் ஸ்டேஷனில் அவரை யாரும் மதிப்பதில்லை. ஜிஎம் என்பவர் கண்காளிப்பாளர் மாதிரி எவ்வளவு மடங்கு பெரியவர் என்றெல்லாம் தெரியவில்லை.
பஸ் ஏறிச் சாவதிலும் ட்ரெயின் ஏறிச் சாவதிலும் என்ன பெரிய வித்தியாசம் இருக்கப் போகிறது?
கிருஷ்ணமூர்த்தி கடைசியில் தமிழிலாவது பேசினார். இவன் தாடப்பள்ளிக்கூடம் என்பதையே டிக்கி ரத்னாகர் கமென்ட்ரி போல் பேசுகிறான். நேரே என்னவெல்லாம் பேசிக் கொல்வானோ?
அந்த மனிதர் கணேசன் விந்தி விந்தி வருவதைப் பார்த்து விட்டார்.
கையை ஆட்டி “கம்..கம்..” என்றார்.
“போச்சுடா… இந்த ஊர்ல அம்மாமாமி தாத்தாவைத் தவிர எல்லோரும் ஆங்கிலம் தான் பேசிக் கொல்றானுங்க” என்று நினைத்துக் கொண்டான்.
இந்தாளைப் பார்த்த மாத்திரத்தில் எங்காவது ஒளிந்து கொண்டு இருக்கலாம்.
“க்விக்.. க்விக்”
“என்னத்த க்விக்கு.. ஏற்கெனவே செருப்பு அறுந்து போய் விரலால் இடுக்கி இடுக்கி நடந்து நடந்து ரண வேதனை. மனசைவிடக் கனக்கும் சாவிக்கொத்து… ஒரு ஊருக்கே காக்காவலிப்பு வந்தால் சமாளிக்க முடியும்.. அஞ்சு கிலோவாவது இருக்கும்… குடை ரிப்பேர் பண்றவன் கூட இவ்வளவு சாவி வெச்சிருக்க மாட்டான்.. என்ன கண்றாவிடா இது” என்று யோசித்தவாறே வாசல் கதவை அடைந்தான்.
“வெல்கம் மிஸ்டர் கணேசன்”
“என் பேரு எப்படி சார் தெரியும்?”
“இதென்ன கம்பசூத்ரமா” என்றார் அவர் தமிழில்.
“தமிழா சார் நீங்க”
“என்னப்பா என்னமோ பஞ்சாப்ல இருக்கற மாதிரி பேசறே.. எனிதிங் ராங்?”
“அதெல்லாம் அப்றம் சொல்றேன்… நீங்க யாரு”
“நாந்தாம்பா சந்துரு… நேத்திக்கு போகும்போது நம்ம கண்காணிப்பாளரை பாத்துட்டு தான் போனேன்… அவர் தான் உன்னோட சாமுத்ரிகா லட்சணம் எல்லாத்தையும் சொன்னார்… பெர்ஃபக்ட்லி மேச்சிங்” என்று கண் சிமிட்டினார்.
“நீங்க மத்யானம்தான வரதா இருந்தது?”
“ஆமாம்.. ஆனா அவரு என்கிட்ட சொல்லும்போது ஒரு ரெண்டும் கெட்டான் பையனை அனுப்பி இருக்கேன்.. கொஞ்சம் போறாது அவனுக்கு.. சீக்கிரம் அவனை ரிலீவ் பண்ணிடு.. ஏதாவது ப்ராப்ளம் பண்ணிடப் போறான் அப்படின்னார்” என்று சிரித்து கணேசனின் தோளைத்தட்டி “டேக் இட் ஈஸி பாய்.. ஜஸ்ட் ஃபார் ஃபன்” என்று சிரித்தார்.
அவர் நகைச்சுவையாக அதை சொல்லவில்லை என்பதை கணேசன் உணர்ந்தே இருந்தான். அவர் திரும்ப வந்த அமைதியைக் கொண்டாடும் மனநிலைக்கு வந்து விட்டான் அவன்.
அவர் அவனிடம் இருந்து சாவிக்கொத்தை வாங்கி சுலபமாகக் கதவைத் திறந்து விட்டார். உள்ளே போனவுடன் ராமு ஃப்ளாஸ்கில் காப்பி கொணர்ந்ததை கணேசனிடம் நீட்ட, அவன் வேண்டாம் என்று கூறிவிட்டான்.
அந்த இடத்தை விட்டு சீக்கிரம் அகன்றால் போதும் என்று தோன்றி விட்டது அவனுக்கு.
நேற்றைய பொழுதில் அவனைப் பெரிதும் கவர்ந்த கடலும் காற்றும் பறவையும் மரங்களும் அவனை விட்டு வெகுதூரம் அகன்று விட்டன.
கணேசன் அவரிடம் கிருஷ்ணமூர்த்தி மற்றும் தாடப்பள்ளிக்கூடம் தகறாருகளை சுருக்கமாக விவரித்தான்.
சந்துரு பயந்தே விட்டார்.
“தம்பி.. நான் இன்னிக்கு ஜாயின் பண்ணலை.. உடனடியா சிக்குல போயிடறேன்.. நீயே கன்டின்யூ பண்ணு.. நீ அசடு மாதிரி இருக்கறதுனால உன்மேல கேஸ் ஒண்ணும் வராது… விட்ருவாங்க” என்று எழுந்தார்.
அவருக்கு முன்பாகவே கணேசன் எழுந்து விட்டான்.
“ஆளை விடுங்க சார்.. நான் ஆல்ரெடி சார்ஜ் ஹேன்ட் ஓவர் பண்ணியாச்சு… பஞ்சபூதமும் சாட்சி… போறாததுக்கு இந்த ஆறாவது பூதம் ராமுவும் சாட்சி… இன்னமே இந்தப் பக்கம் வந்தா ஏன்னு கேட்டு எதால வேணாலும் அடிங்க” என்று கூறிக்கொண்டே மறுபடியும் செருப்பை இழுத்து இழுத்து வெளியே விரைந்தான்.
பஸ் ஸ்டாண்டு போய்விட்டால் எப்படியும் தைத்துக் கொண்டு விடலாம்.
ஸ்டேஷனை விட்டு வெளியே வந்தான். திரும்பிப் பார்க்க விருப்பப்படவில்லை. தன் பையை மார்போடு அணைத்துக் கொண்டு பஸ் ஸ்டாண்டு நோக்கித் தளர்வாக நடந்தான்.
நேற்று எழுதிக் கொடுத்த கடிதம் அவன் மனதை இன்னமும் பாரமாக அழுத்தி மிகுந்த மனவேதனையைக் கொடுத்தது. முதல் சம்பளம் வாங்குவதற்குள் வேலை போய் விட்டால் எல்லோர் முகத்திலும் எப்படி முழிப்பது. அப்பாவும் அம்மாவும் அக்காக்களும் எவ்வளவு வேதனைப் படுவார்கள்? மாடு மாதிரி வளர்ந்து இருக்கிறோம். முன் யோசனையே இல்லாமல் இருக்கிறோமே. சீச்சீ.. நானெல்லாம் வாழவே தகுதியானவன் இல்லை”. மெதுவாக ஊர்ந்து கொண்டு இருந்தான் கணேசன்.
அப்போது கடுமையான காற்று சுழன்று அடித்தது. ஒரே குப்பையும் சத்தையுமாக அவனைச் சூழ்ந்து உடையெல்லாம் ஒரே தூசி. அவற்றைத் தட்டி விடும்போது அவன் கால்களில் சுருண்டு அடைக்கலமாகி இருந்த கசக்கப்பட்ட ஒரு காகிதம் அவன் கவனத்தை ஈர்த்தது. பழக்கப்பட்ட கையெழுத்து போல இருந்தது. எடுத்து கசங்கல் நீக்கி பார்த்தான்.
“ரெஃபரன்ஸ்: தாடப்பள்ளிக்கூடம்” என்று இருந்தது.
கிருஷ்ணமூர்த்தி அவனை பயமுறுத்த எழுதி வாங்கியவர் அதைக் கசக்கி வாசலிலேயே எறிந்து விட்டுப் போயிருக்கிறார். நல்ல மனிதர்.
கணேசனுக்கு உற்சாகம் பிடிபடவில்லை. ஓஓஓவென்று கத்தினான். அந்தக் கடிதத்தை சுக்கு நூறாகக் கிழித்து நான்கு பக்கங்களிலும் எறிந்தான். பையை மறுபடியும் இடுக்கிக் கொண்டு நடக்கவாரம்பித்தான். அதே ராஜநடை. எரிச்சலுடன் அறுந்த செருப்பை விளையாட்டாக உதற, அது தெறித்து நேற்று வரும் வழியில் பார்த்த, தீவிரவாதிகள் கூட்டமாக அந்தரங்க சுத்தி செய்யும் இடத்தில் விழுந்தது.
அதை மீட்பது சாத்தியம் இல்லை என்ற நிலையில் இன்னொரு செருப்பையும் அங்கேயே உதறி விட்டு, பஸ் ஸ்டாண்டு நோக்கி பந்தயத்தில் ஓடுபவன் போல வெறுங்காலில் தலைதெறிக்க ஓடினான் கணேசன்.

கொஞ்சம் படித்தேன். இந்த வருணனையைப் பாராட்டாமல் நகர்வது நியாயமல்ல என்று தோன்றியது:
“அந்தக் கடல்… நீலம் பாரிக்காது ஒரு குழம்பிய மரகதப் பச்சையில் மெத்து மெத்தென்று திரண்டு வருகிற கோதுமை அல்வா மாதிரி இருந்த கடல்… அதையெல்லாம் தாண்டி சிவந்த கால்களை தார்பாய்ச்சி உப்பளங்களில் மீன் பிடிக்கும் அந்த அழகான பறவைகள்..”
முழுதும் படித்து விட்டேன். அசப்பில் ஜெயகாந்தன் எழுதியது போலவே இருக்கிறது. அற்புதமான சிறுகதை! வாழ்த்துக்கள்!!
வர்ணனை சிறப்பு
வாழ்த்துக்கள் தன்னம்பிக்கையை ஏற்படுத்தும் தன்மை கொண்டவை. பெரிய எழுத்தாளர்கள் புதிய சிறியவர்களுக்குக் கைலாகு கொடுப்பது பெருந்தன்மையைக் காட்டுகிறது.
நன்றி 🙏🙏
மிகவும் ரசித்தேன். நகைச்சுவையும், விவரணைகளும் மிகவும் நன்று. 👏👏
அருமையான யதார்த்தமான நடை.
அனுபவத்தை ரசனையுடன் விவரித்த விதம் சிறப்பு.
அப்பாவின் விமர்சனம் யதார்த்தம்.
அலமலப்பு அழகு.
அருமை கணேஷ்ராம்
எழுத்து பண தொடர வாழ்த்துக்கள்
சுகந்தி ஶ்ரீனிவாசன்
நல்ல ஓட்டம் தெறிக்கும் humour well done