வெர்னர் ஆஸ்பென்ஸ்ட்ரோம் / நீயும் நானும் இந்த உலகமும்

தமிழில் : க.மோகனரங்கன்

நீ யார் அல்லது
நான் யார் என்று வினவாதே.
அது ஏன், அவ்வாறிருக்கிறது
அதை பேராசிரியர்கள்
ஆராய்ந்து ஒழுங்குபடுத்தட்டும்,
அது அவர்களின் வேலை.
சமையலறை மேசையில்
தராசை எடுத்து வை,
யதார்த்தம் தன்னைத்தானே எடைபோட்டுக் கொள்ளட்டும்.
உனது மேலங்கியை அணிந்துகொள்.
நடைவழியில் எரியும் விளக்கை அணைத்துவிடு.
கதவை இழுத்து மூடு.
இறந்துபோனவர்கள்
இறந்தவர்களை பதனம் செய்யட்டும்.
இதோ இங்கே
இப்போது நடக்கிறோம்.
நீ வெள்ளை ரப்பர் காலணி அணிந்திருக்கிறாய் .
கருப்பு ரப்பர் காலணி அணிந்திருப்பது நான்.
நம் இருவர் மீதும்
பொழிகிற மழை
மழை ஆகிறது.