
சுடுகாடொன்று
சுற்றித்திரிந்தது.
அதி அற்புத
சடலந்தாங்கி
ஆண்டுக் கணக்காய்
சுடுகாடொன்று
சுற்றித் திரிந்தது.
சுடுகாடென்றால்
அது மெய்ச் சுடுகாடு
அதில் கொள்ளிவைப்பு
குத்தகையல்ல.
இதுவரைக்கும்
கொள்ளி வைத்தார்
எண்ணிலாதார்
என்றிருந்தும்
சடலமட்டும்
வெந்து வெண்ணீறு
ஆகவில்லை.
நீறி நீறி
இருந்ததல்லால்
வெந்து வெண்ணீறு
ஆகவில்லை.
அதனால் தானோ
என ஐயுறுமாறு
மெய்ச்சுடுகாடதுவும்
நெட்டுயிர்த்து
நெட்டுயிர்த்து
சுற்றித் திரிந்தது.
யாரோ இறுதியில்
கருணை கூர்ந்து
வைத்த கொள்ளி
பற்றிப் பிடித்திட
நீறி நீறி
இருந்த சடலமும்
மாயமாய் மறைந்தது.
மெய்ச்சுடுகாடதுவும்
பொய்ச் சுடுகாடு
போய்ச் சேர்ந்தது.
