ரகசியம் அறிதல்

அதங்கோடு அனிஷ்குமார்   


என்னைப் பற்றிய
ஒரு பரம ரகசியம்
சொல்கிறேன் கேளுங்கள்.

யாரிடமும்
பகிரப்படாதது என்பதால்
நீங்கள்
காதும் காதும்
வைத்தது போல்
கேட்க வேண்டும்.

உங்கள் காதுகள்
என்னை நோக்கி
நீள்கின்றன.
ஆர்வத்தின்
மினுமினுப்புகள்
உங்களின் கண்களில்
தெரிகின்றன.

என் கனவுகளில் மட்டும்
உலாவிவிட்டு
கண்கள் திறக்கும்
கடைசி நொடியில்
மீண்டும் மீண்டும்
மனதுக்குள் கிடந்து
சலசலக்கும்
அந்தரங்க ரகசியம்
என்பதால்
வேறு எவரோடும்
பகிரமாட்டேன் என
சத்தியம் செய்ய
சற்றே நெருங்கி
வாருங்கள்.

உங்களின் அசாதாரண நெருக்கம்
என்னை
நடுங்க வைக்கிறது.
நம்பிக்கை இழக்க
வைக்கிறது.

என்னைப் பற்றிய
ரகசியத்தை
எனக்குள்ளே புதைக்க
முடிவெடுக்கும் கணத்தில்
உங்கள் காதுகளை
உள்ளிழுத்துக் கொண்டு
உங்கள்
எதிர்பார்பின்
திடீர் மரணத்தைச்
சகிக்க முடியாமல்
வாடி வதங்கியபடி
கடந்து போகிறீர்கள்.

அடுத்தவர் ரகசியம்
அறிவதில்
யாருக்குத் தான்
ஆசையில்லை?

One Comment on “ரகசியம் அறிதல்”

Comments are closed.