
வெள்ளிக்கிழமை
நள்ளிரவில்
இயற்கையின் அழுத்தமான
முதல் அழைப்புக்கு பதில் சொல்ல
கழிவறை சென்றவனுக்கு
பலமாக கேட்டது எதிர் மாடித் தளத்து
இளைஞர்களின் மது விருந்து கொண்டாட்ட சத்தம்
சாளரத்தை திறந்து பார்த்த போது
எந்த சத்தமும் இல்லை….
தெருமுழுக்க நிசப்தம் .
மீண்டும் சத்தம்
தெருவில் யாரோ ஒரு பெண்
கைபேசியில் யாரோடோ சண்டை போடும்
சத்தம்
மறுமுறை சாளரம் திறந்தபொழுது
மீண்டும் நிசப்தம் தெருவெங்கும்
இம்முறை மரத்தின்
சலசலப்பு சத்தம்
யாரோ மரத்தில் ஏறுவது போல
சாரளத்தை திறந்த பொழுது
மரம் அசையவே இல்லை
இலைகள் கூட
ஒரு காகம் மட்டும் விடாது கரைந்தது
அந்த நடு சாமத்தில்
அந்த மரத்திலிருந்து
அந்த அவனை பார்த்து
கா… கா … வென்று
