
ஆசிரியர் கலைமகள்…………….
சைவர்கள் ருத்ராட்ச மாலை அணிந்து கொள்வது போல் வைணவர்கள் துளசி மாலை அணிவதில் பிரியம் காட்டுவார்கள். துளசி பெருமாளுக்கு மிகவும் உகந்த ஒன்றாகும்.
துளசி செடியின் வேரில் உள்ள சிறிய மரப்பட்டையைக் கொண்டு தயாரிக்கப்படுவது துளசி மாலையாகும். துளசி மாலையானது உடலுக்குக் குளிர்ச்சியைத் தருவதுடன் உடலின் உஷ்ணத்தையும் சம நிலையில் வைத்திருக்கும் தன்மை கொண்டதாகும்.
துளசி மாலையைப் பற்றிய குறிப்பு கந்தபுராணத்திலும் வருகிறது! ஒருவர் அணிந்த துளசி மாலையை இன்னொருவர் அணியக்கூடாது. தரமான துளசி மாலை தண்ணீர் பட்டாலும் நிறம் மாறுபடாது. ஸ்ரீ ஐயப்ப பக்தர்களும் ஸ்ரீ அனுமார் பக்தர்களும் துளசி மாலையை விரும்பி அணிவார்கள்.
கழுத்தில் அணியும் துளசி மாலையை கண்ட (சமஸ்கிருதத்தில்) துளசி மாலை என்று அழைப்பார்கள். கண்டம் என்கிற சமஸ்கிருத பதத்திற்குத் தொண்டை (கழுத்து பகுதி )என்று பொருள்.
சங்க இலக்கியப் பரிபாடலில் துளசி மாலை பற்றிய குறிப்பு வருகிறது! ஶ்ரீகள்ளழகர் எப்படி இருப்பார் என்பதை விளக்கும் பரிபாடல்………
“கள்ளணி பசுந்துள்ளவை, கருங்குன் றனையே;
ஒளளொளியவை ; ஒருகுழையவே;
புள்ளனி பொலங் கொடியவை;
வள்ளணி வளைநாஞ்சிலவை;
சலம்புரி தண்டேந்தினவை;
வலம்புரி வய நேமியவை;
வரிசிலை வய அம்பினவை;
புகரிணர்சூழ் வட்டத்தவை ; புகர்வாளவை;
எனவாங்கு;
நலம்புரீஇ அஞ்சீர் நாம வாய்மொழி;
இதுவென உரைத்தலினெம் உள்ளமந்து இசைத்திறை
இருங்குன்றத்து அடியுறை இயைகெனப்
பெரும்பெயர் இருவரைப் பரவுதுந்த் தொழுதே;
இதற்கான விளக்கம்:-
ஸ்ரீ கள்ளழகர் துளசி மாலை அணிந்தவன்;
கருங்குன்றம் போன்றவன்;
ஒளிக்கு ஒளியானவன்;
காதில் குழை(கடுக்கண்) அணிந்தவன்;
கருடக்கொடி உடையவன்;
மேலும்,கீழும் வளைந்திருக்கும் வளரியை கொண்டவன்;
சிலம்பாறு என்னும் நீர் வளைந்தோடும் வில்லை(வேல் கம்பு)உடையவன்;
சங்கும்,சக்கரமும் கொண்டவன்;
விரிந்த வில்லில் வலிமை மிக்க அம்பு உடையவன்;
புள்ளி புள்ளியாக அமைந்த பூங்கொத்து விசிறி உடையவன்;
புள்ளியிட்ட வாள் ஏந்தியவன்.
கள்ளழகர் கோயில் என்பது தமிழ்நாட்டில் உள்ள மதுரை மாவட்டத்தில் உள்ள அழகர் கோவில் என்னும் கிராமத்தில் உள்ள பெருமாள் கோயில் என்பது குறிப்பிடத்தக்கது. இவர் வைகை ஆற்றில் இறங்குவது பெரிய விழாவாக கொண்டாடப்படுகிறது!
