கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/நினைவில் நிற்கும் ஹோட்டல்கள்……


ஆசிரியர் கலைமகள்……………………

சென்னை வாரம் கொண்டாடுகிறார்களே? நீங்கள் தான் சாப்பாட்டுப் பிரியர் ஆச்சே? பழைய காலத்து ஹோட்டல்களில் சாப்பிட்ட அனுபவத்தைக் கொஞ்சம் சொல்ல முடியுமா? என்று ஒரு கேள்வியை வைத்தார் கலைமகள் பதிப்பாளர்
பி. டி. டி.ராஜன் அவர்கள்.

சென்னையில் 1979 ஆம் ஆண்டுக்குப் பிறகுதான்(1973 ஆம் ஆண்டிலிருந்து சென்னைக்கு வந்து போய்க் கொண்டிருந்தேன்) என்னுடைய ஜாகை நிரந்தரம் ஆனது! பத்து ஹோட்டல்களை இங்கே அடையாளம் காட்டுகிறேன். திருவல்லிக்கேணி பகுதியில் நான் வாழ்ந்த காரணத்தினால் அங்கே உள்ள ரத்னாகேப் ஹோட்டல் எனக்குப் பிடித்தமானது! சாம்பார் இட்லி, சாம்பார் போண்டா இதற்காகவே ஒரு கூட்டம் அங்கே வரும்!! இன்றும் அப்படித்தான்.

அமுதசுரபி ஆசிரியராக இருந்த விக்கிரமன் அவர்களைப் பார்ப்பதற்காக பிராட்வே செல்லும் பொழுதெல்லாம் ராமகிருஷ்ணா லஞ்ச் ஹோமில் பாதாம் கீர் சாப்பிட்ட அனுபவம் உண்டு! சில நேரங்களில் விக்கிரமன் சார் அவர்களும் ஓவியர் சிவகுமார் என்பவரும் கலந்து கொள்வார்கள்.

இதயம் பேசுகிறது ஆசிரியர் மணியன் அவர்கள் புகழ்ந்து பேசும் ராயர் கேப் மயிலாப்பூரில் உள்ள பழமையான ஹோட்டல். இங்குள்ள ரவா தோசைக்காக நிறைய முறை கை நனைத்திருக்கிறேன்.

எத்திராஜ் கல்லூரி பக்கம் காஞ்சி ஹோட்டல் சிறப்பாக ஸ்ரீமான் ஜெயராமன் அவர்களால் அந்தக் காலத்தில் நடத்தப்பட்டு வந்தது. இங்கு சாப்பாடு நன்றாக இருக்கும். தீபம் பார்த்தசாரதி அவர்கள் துணுக்கு எழுத்தாளர்கள் மாநாட்டை நடத்திய போது இந்த ஹோட்டலில் தான் எழுத்தாளர்களுக்கு விருந்து கொடுத்தார்,அந்த ஹோட்டலில்(1982 என்று ஞாபகம்) அன்று சாப்பிட்டது முதல் பல நாட்கள் அந்த ஹோட்டலில் மதிய நேரம் சாப்பிட்டு இருக்கிறேன்.

அமெரிக்கத் தூதரகத்தில் உள்ள நூல் நிலையத்தில் நான் உறுப்பினர். இந்த நூல் நிலையத்தை அதிகமாக பயன்படுத்தி இருக்கிறேன் ஒரு காலத்தில்!! ஜெமினியில் அப்பொழுதெல்லாம் பாலிமர் என்றொரு ஹோட்டல் இருந்தது! நானும் எனது உறவினர் பேராசிரியர் ஆர். சுப்பிரமணியன் அவர்களும் இந்த ஹோட்டலுக்குச் செல்வது உண்டு!

தினமணி அலுவலகம் மவுண்ட் ரோடு ஒட்டி இருந்த காலம். இந்த அலுவலகத்திற்குச் சென்று விட்டு பின்னர் ஜெனரல் பீட்டர்ஸ் ரோடில் அமைந்துள்ள சர்மாணி ஹோட்டலிலும் அவ்வப்போது டிபன் காபி சாப்பிட்டது உண்டு. இன்றும் இந்த ஹோட்டல் இருக்கிறது என்று நினைக்கிறேன். என்னுடன் தினமணி தலைமை நிருபர் திரு கல்யாணம், திரு சாமி ஆகியோரும் வந்தது உண்டு!! இவர்களெல்லாம் எனக்கு தினசரி பத்திரிகைக்கு எப்படி செய்திகளைச் சேகரிக்க வேண்டும் என்பதைச் சொல்லிக் கொடுத்த குருநாதர்கள்!!

மணிக்கொடி எழுத்தாளர் சி. சு. செல்லப்பா மாமாவைப் பார்ப்பதற்கு பிள்ளையார் கோவில் தெருவில் உள்ள அவருடைய வீட்டிற்கு நான் அடிக்கடி செல்வேன். எனக்கும் பிள்ளையார் கோவில் தெருவில் தான் ஜாகை. அந்தத் தெருவில் ஜெமினி கேன்டீன் ஏ என் எஸ் மணியன் அவர்கள் வைத்திருந்த ஹோட்டலில் டிபனை ருசித்து சாப்பிட்டது உண்டு. பின்னர் எனக்கு அவர் நண்பரானார். பல இலக்கிய விஷயங்களை அவருடன் உரையாடியது உண்டு!

தி நகரில் சாந்த பவன் என்ற ஒரு ஹோட்டல் இருந்தது. இங்கேயும் நான் டிபன் சாப்பிட்டு இருக்கிறேன்.என்னுடைய இனிய நண்பர்களான சுகிர் டிராவல்ஸ் திரு கிருஷ்ணன் திரு சுந்தரம் ஆகியோரின் தகப்பனாரும் மணிக்கொடி எழுத்தாளருமான சிதம்பரம் சுப்பிரமணியம் அவர்கள் சாந்த பவன் வடையை அவசியம் மதியம் (வீட்டில் வைத்து சாப்பிடும் பொழுதும் கூட) சாப்பிடும் பொழுது தினசரி சேர்த்துக் கொள்வாராம்.

என்னுடைய நண்பர் எழுத்தாளர் கவிஞர் மீ.விஸ்வநாதன் பல ஹோட்டல்களுக்கு என்னை அழைத்துச் சென்ற புண்ணியவான் ஆவார்.இராயப்பேட்டையில் உள்ள ஸ்வாகத் ஹோட்டலில் குலோப்ஜாம் இட்லி இவைகளைப் பதம் பார்த்தது உண்டு! ஸ்வாகத் ஹோட்டல் பக்கம் தான் காட்பரிஸ் அலுவலகம் இருந்தது. அங்கு தான் கேட்பரிஸ் விஸ்வநாதன் அவர்கள் உயர் பதவியில் இருந்தார்கள். இந்த ஸ்வாகத் ஹோட்டலுக்கு தினசரி மாலை நேரம் மபொசி அவர்கள் வருவதை நான் கண்டிருக்கிறேன். அவரோடு நிறைய நாள் உரையாடி இருக்கிறேன்!

நானும் என்னுடைய இனிய நண்பர்களில் ஒருவரான சுபாஷ் சந்திரன் அவர்களும்(Exnora ஸ்தாபகர்களில் ஒருவர்)பல நாட்கள் மாலை வேலையில் நாரதகண சபா உட்லண்ட்ஸ் ஹோட்டலில் பேசிக்கொண்டே டிபன் சாப்பிட்டது உண்டு. நடிகர் ஸ்ரீகாந்த் மற்றும் போலீஸ் துறையில் இருந்த (மதுரை வைத்தியநாத ஐயர் பேரன்) அன்பரும் அடிக்கடி இங்கு சந்தித்து எங்களுடன் உலக அரசியல் முதல் உள்ளூர் அரசியல் வரை எல்லாவற்றையும் பேசி அலசுவார்கள்.

இன்று நானும் ராஜன் அவர்களும் அடிக்கடி செல்லக்கூடிய ஹோட்டல் செயின்ட் மேரிஸ் ரோட்டிலுள்ள புட் நிர்வாணா. இன்னொரு செய்தி 1906 ஆம் ஆண்டு திருமங்கலத்தில் எனது தாத்தா திருமங்கலம் சுப்பையா ஐயர் ஹோட்டல் வைத்திருந்த பொழுது ஸ்பெஷலாக அடை ஒன்றை தயார் செய்து விற்பனை செய்து வந்தார். இந்த அடைக்குப் பெயரே திருமங்கலம் ஸ்பெஷல் அடை!! இன்று பல ஹோட்டல்களில் திருமங்கலம் ஸ்பெஷல் அடை என்று விற்பதற்கு மூலக்கர்த்தாவாக விளங்கியவர் எனது தாத்தா தான்!! இதைப் பற்றி ஏற்கனவே நான் முகநூலில் பதிவு செய்திருக்கிறேன்!! இதனை அறிந்த பின்பு தான் திருமங்கலத்தைச் சேர்ந்த அன்பர்களில் ஒருவரான கன்னிமாரா நூலக இயக்குனராக இருந்த ஆவுடையப்பன் அவர்கள் என்னிடம் மிகுந்த பிரியம் காட்ட ஆரம்பித்தார். மேலவை உறுப்பினராக இருந்த புலவர் அறிவுடை நம்பி அவர்களால் மேலும் எங்களது நட்பு இறுக்கமானது!!

One Comment on “கீழாம்பூர் சங்கர சுப்பிரமணியன்/நினைவில் நிற்கும் ஹோட்டல்கள்……”

  1. ஆகா சென்னையில் வெவ்வேறு இடங்களில் உள்ள உணவகங்கள் முழுவதும் ஒரே இடத்தில் கொணர்ந்து விட்டார் கீழாம்பூர் திரு சங்கர சுப்ரமணியம் அவர்கள்!

    அருமை! வெவ்வேறு பிரசித்தி பெற்ற நண்பர்களையும் பிரமுகர்களையும் எளிமையான சரளமான தமிழில் ஆர்வமுடன் அறிமுகப் படுத்தி விட்டார். மிகவும் அருமை! இனிய வாழ்த்துகள்!

Comments are closed.