
வானத்தில் கரு மேகங்கள் இருப்புக் கொள்ளத்துவங்கியிருந்ததில் வெளிச்சம் மங்கியிருந்தது. மெல்ல நகர்ந்த மேகங்கள் மேற்கில் நிலைகொண்டிருந்தன .அநேகமாக அடர் மழையாகப் பொழியலாம்.மழை வருவதைக் கவனித்தல் மனம் குதூகலிக்கிறது.மழையைப் போல் வாழ்வில் மகிழ்ச்சியைச் சேர்க்கும் மற்றொரு தருணமும் இன்றுதான் .கயல்விழிக்கக்கக்காத்திருந்தான் விமல்.சரியாக மணி 10:10 ற்கு கயல்விழி வந்துவிட்டாள். மாலையோடு காத்திருந்த விமலும் அவன் நண்பர்களும் சார்பதிவாளர் அலுவலத்திற்குள் நுழைந்தார்கள். மாலைகள் மாற்றப்பட்டன. சாட்சிக்கையெழுத்துக்கள் இடப்பட்டன.எளியமுறையில் நடந்தேறியது அவர்கள் திருமணம்.
விமலின் நினைவுகள் பின்னோக்கிச் சென்றன. இளங்கலை முதலாமாண்டு பொருளியல் முதல் பருவத்தேர்வின் முடிவுகள் வெளியாகியிருந்தது . விமலும் கயல்விழியும்தான் எல்லாப்பாடங்களிலும் முதல் மதிப்பெண்கள் பெற்றிருந்தார்கள்.அதுவே அவர்களை ஒருவர்க்கொருவர் அறிமுகம் செய்துவைத்தது.விமலும் கயல்விழியும் நூலகத்தில் குறிப்பபு எடுத்தார்கள் .படித்தார்கள் .பகிர்ந்தார்கள் .கயல்விழிக்குப் பேசும் மொழி தெரியும் என்று அப்போதுதான் விமல் நம்பினான்.கல்லூரியின் மண்பாதைகளில் நடந்து செல்லும்பொழுது கூட அறிவை விதைத்தார்கள். கயல்விழி சொன்னாள்.பொருளியல் என்பது ஒரு விரிவான புரிதல் .மரபு வழி வந்து மற்றம் பெற்ற சமூகத்தின் மறுவடிவம். அதனை அறிந்து கொள்ள வரலாற்றை அறிந்து கொள்ளவேண்டும் .வரலாறு மானுடம் நடந்துவந்த வழித்தடம் .வரலாறு மனிதத்தைக் கற்றுத்தரும். விமலுக்கு உண்மையாகவே சந்தேகம் தோன்றியது.அப்படியென்றால் வரலாறு தெரிந்தவர்கள் மட்டுமே மனிதம் போற்றமுடியும்என்கிறாயா?என்றுகேட்டான் விமல்.கயல்விழி சொன்னாள் தொன்மத்தின் தொய்வு , நவீனத்தின் மீதான பயம் , இரண்டின் உள்ளும் பொதிந்துள்ள உள்ளுறைகளில் உண்மை எதுவென்று உணராத தெளிவு .நமக்குத் தெரிந்த ஏதோவொன்றை எந்தச் சூழலிலும் சோத்தித்துப்பார்க்காமல் சாசுவதமான உண்மை என்று நம்பி மற்றவரையும் நம்பவைக்கும் திணிப்பு இப்படி சராசரியாய் இயங்குவதை வாழ்க்கை என்று கொண்டால் ,சக மனிதனின் வலியும் , புறக்கணிப்புகளும் எப்படித் தெரியும்?. உன் சக மனிதர்கள் எல்லோரும் உன் சமூகம் தான் என்றறிவிக்க உனக்கு வரலாறு தெரியவேண்டும் இயல்களைக் கடந்த இருப்பில் மட்டுமே மனிதம் வளரும் .விளிம்பும் மையமும் என்று வேறுபாடற்ற வேறுவடிவச் சிந்தனை .இதை உணர ஒருவன் வரலாறை வாசித்தறிய வேண்டும். எனக்கு எல்லாமே கிடைத்திருக்கிறது .அதனால் என்னைச்சுற்றி எல்லாமுமே நன்றாயிருக்கிறது என்று சொல்வது வரலாறு தெரியாதவர்களின் வாதம். எனக்குக் கிடைத்ததெல்லாம் என் பக்கத்தில் இருப்பவனுக்கும் கிடைக்கவேண்டும் அதற்கு என்ன செய்யப்படவேண்டும் என்று சிந்திப்பது வரலாறு தெரிந்தவனுக்கு எளிதாகிறது..இதுவே கல்வி, இதுவே வாழ்வு அதுவே அறம் இதில் ஏதும் தனித்தவைகள் கிடையாது என்றால் கயல்விழி..ஏறத்தாழ இதையேதான் விமலும் இப்படியே தான் சிந்தித்தான் . அப்படித்தான் அவர்கள் தேடலால் இணைந்தார்கள்
சந்தர்ப்பங்களைத்தாண்டி சரியான புரிதலே காதலை நிலைகொள்ளச்செய்கிறது. தட்டி அதிர்வூட்டப்பட்ட இசைக்கவையின் அதிர்வின் ஒத்திசைவில் அருகிலிருக்கும் கம்பியின் மீதமர்ந்த காகிதம் தானே கீழே விழுவதுபோல் அங்கு காதல் தானே நிகழ்ந்தது. அவர்கள்.காதலிப்பதற்காகக் கவிதை சொல்லவில்லை காதலித்த பிறகு கவிதை பற்றிப் பேசினார்கள். என்னைச் சுடர்மிகும் அறிவுடன் படைத்துவிட்டாய் என்ற பாரதியின் வரிகள் தன்னம்பிக்கையா அல்லது தலைக்கனம் என்று விவாதித்தார்கள். இலக்கியம் பகிர்ந்த்தார்கள்.தஸ்தாவெஸ்கியும் , மரியா வர்க்கோசும் அவர்களில் கலந்தார்கள். இப்படித்தான் அவர்கள் இணைந்தார்கள். இருவரின் காதலும் வீட்டிற்குத் தெரியவர இரு தரப்பிலும் பெரியவர்கள் எதிர்த்தார்கள். விமலும் , கயல்விழியும் எந்த மிகைப்டுத்தலும் இல்லமால் பெரியவர்களிடம் இயல்பாகவே பேசினாரக்ள்.இருப்பினும் இருவீட்டாரும் சம்மதிக்கவில்லை. வேறு வழியின்றி பதிவுத் திருமணம் செய்தனர்.
நினைவுகளிலிருந்து மீண்டவனாய் சார்பதிவாளர் அலுவலகத்தில் நண்பர்கள் மற்றும் மனைவியோடு வெளியே வந்தான். ஏற்கனவே பார்த்து வைத்துவைத்திருந்த புதுவீட்டுக்குச் சென்றான்.நண்பர்கள் எல்லோருக்கும் கயல் விழி சமைக்கக்த் துவங்கினாள். புதுவீட்டின் வரவேற்பறைக்கு அலங்கரிக்க நண்பர்களை அழைத்துக் கொண்டு புதியதாய் ஒருபொருளை வங்கச் சென்றான் விமல்.சென்றவர்கள் சற்று நேரத்தில் திரும்பிவந்தனர்.எல்லோரும் மத்திய உணவு முடித்தபிறகு தங்கள் வீட்டுக்குக் கிளம்ப ஆயத்தமானார்கள். அப்பொழுது தான்வாங்கி வந்த அலங்காரப் பொருளை கயல்விழியிடம் கொடுத்தான் விமல். அவள் அதைக் கையால் வாங்கும் பொழுது தவறிக் கீழே விழுந்து அந்தக் கண்ணாடி விளக்கு நொறுங்கியது. உடனே கயல்விழி நான்ஒரு அடி நகர்ந்து வந்து வாங்கியிருக்க வேண்டும் என்றால். விமலோ இல்லை, இல்லை, நான் ஒரு அடி முன் நகர்ந்துவந்து வாங்கியிருக்க வேண்டும் என்றான் .
நண்பர்கள் எல்லோரும் என்னடா இது புதிதாய் வாழ்வைத்துவங்கிய பொழுதில் இப்படி அபசகுனமாகத் தோன்றுகிறதே / என்று பயந்தார்கள். அவர்களுக்குத் தெரியாது , உலகின் ஒவ்வொரு மனிதனும் தன்னைப்போன்ற உணர்வினால் ஆன ஒரு உயிரைத்தான் தேடிவருகிறான் .அது கிடைத்தால் உலகின் எந்த சக்தியும் அவனை எதுவும் செய்ய இயலாது. நெருக்கடியிலும் யார் ஒரே மாதிரியாகச் சிந்திக்கிறார்களோ அவர்களை எந்தஉலகின் இந்தப் பிரச்சனையும் என்றும் ஒன்றும் செய்ய இயலாது.
