பரந்தாமன் காலமாகி இன்றோடு பதினைந்து நாள் ஆயிற்று. நாளை மீண்டும் பயணம் அவரில்லாமல் புக்கக மனிதர்களுடன் இருப்பதே வேம்பாக இருந்தது அம்பிகாவுக்கு. திருமணமாகி ஆறே வருடங்களில் மூன்று வயதிலும் ஒன்றரை வயதிலுமாக இரண்டு பெண் குழந்தைகள்.
மாமியார் மீனாட்சியிடம் மெதுவாக, தன் எண்ணத்தை சொல்ல ஆரம்பிக்க; அவர், திடுக்கிட்டுவிட்டார். " இங்கே இருந்து என்ன செய்வாய், நீ? தகப்பன் இல்லாத குடும்பம். எல்லோருக்கும் திருமணமாகிவிட்டது. உன் அம்மா தனியாக இருக்கிறாள். . இது சரிவராது. நீ யோசிக்காமல் பேசுகிறாய். என்னுடன் கிளம்பும் வழியைப்பார். இனிமேல் இதைப்பற்றி ஒன்றும் பேசக் கூடாது" என்று அம்பிகாவை மேலே பேச விடாமல் தடுத்து விட்டாள்.
பீஹாரில் ஒரு சிறிய ஊர். ஒரு வாரம் துக்கத்திற்கு வருவோரும் போவோருமாக வீடு அமர்க்களப் பட்டது. சென்னையில் இருந்த தைரியம் கூட இங்கே இல்லை, எவருக்கும். தகப்பன் இல்லாத வீட்டின் மூத்த பையனின் இழப்பு என்னவென்று அனுபவித்த பேருக்கு தான் தெரியும். ஒரு நேரம் மாமியார் மீனாட்சி தன்னை நொந்து கொள்வாள். மற்றும் ஒரு நேரம்,"அம்பிகாவின் ராசிதான் பிள்ளை காலமாகி போனதிற்கு காரணம் என்று கண்ணீர் சிந்துவாள். "மாங்கல்ய பாக்கியம் இல்லாதவள்" என்று அம்பிகாவை ஏசுவாள். சில சமயம் " அப்பாவை முழுங்கிய ராட்சசிகள்" என்று பேத்திகளிடம் சீறுவாள். அம்பிகாவுக்கும் குழந்தைகளுக்கும் ஒரே ஆறுதல், ஓரகத்தி யோகா தான்.
அம்பிகாவுக்குத் தான் சென்னையிலேயே இருந்திருக்கலாம் ; எனத் தோன்றியது. இருதலைக்கொள்ளி எறும்பு போல் துடித்துக் கொண்டிருந்தாள். தக்க தருணத்தில் சென்னைக்கே போய்விட நிச்சயத்திருந்தாள்.
ஒரு நாள் காலை மணி பத்து இருக்கும். சமையல் கட்டில் வேலையாய் இருந்த அம்பிகாவை தன்னுடன் வெளியே செல்வதற்கு ஆயத்தமாகும்படி கூறினாள்.
"எங்கே போகப் போகிறோம்" என்பதற்கு ஒரு பதிலும் சொல்லவில்லை. அழ மட்டும்தான் முடிந்தது,; அவள் மாமியாரால். " என்னை, இப்படி உன்னைப் பார்க்கும்படி வைத்துவிட்டானே, அந்த கண்ணில்லாத கடவுள்" என்று பெருத்த குரலில் அழ ஆரம்பிக்க, அம்பிகாவுக்கே அவளைப் பார்க்க பாவமாய் தான் இருந்தது
"அம்மா! நான் பெரியண்ணா வீட்டிற்குப் போய் விடுகிறேன். கடிதம் எழுதிப்போட்டு போய் விடுகிறேன். முன்னே பின்னே இருந்தாலும்,என் மன்னி படிச்சவள். நியாயமானவள். உங்களுக்கு பாரமாக இருக்க விரும்பவில்லை" என்று அம்பிகா கூறினாள்.
"என் நாட்டுப்பெண்ணும், பேத்திகளும் எனக்கு ஒரு பாரமா? இதை எல்லாம் பேசணும், கேட்கணும்; னு என் தலையில் எழுதி வைச்சுருக்கு. நீ என்ன பண்ணுவே; நான் பண்ணின பாபம்! "என்று விசித்து அழத் தொடங்கினவள்,; கண்ணைத் துடைத்துக் கொண்டு எழுந்தாள்.
" வா! முக்கியமான வேலை ஒன்று இருக்கிறது. பரந்தாமனின் அப்பாவின் நணபரைப் போய் பார்க்க வேண்டும். அவர்தான் வரச்சொன்னார்" என்றாள்
அரபிந்து சட்டர்ஜி அலுவலகத்தில் அவர் தனியாகத்தான் இருந்தார். ஒரிரு வார்த்தைகள் இங்லிஷில் அம்பிகாவுடன் முறைமை சொற்கள். அடுத்து பெங்காலியில் அவர் மீனாட்சியிடம் பேசினார்.
மீனாட்சி," அம்பிகா இன்னும் இரண்டு மாதத்தில் கம்பேஷனட் அடிப்படையில் "டைப்பிஸ்ட் கம் ஸ்டேனோ " வேலைக்கு ஆள் எடுக்கப் போகிறார்கள். உனக்கு இங்லிஷ் ஹிந்தி டைப்பிங் தெரியுமா? என்று கேட்டாள்.
" இங்லிஷ் மட்டும் தெரியும். பரிட்சை எழுதவில்லை" என்றாள்," சரி! பரவாயில்லை. இப்போது ஹிந்தி டைப்ரைட்டங் ஷார்ட்ஹேண்ட் க்ளாசில் சேர்த்து விடுகிறேன்.இரண்டு மாதம் உன்னால் எவ்வளவு முடியுமோ அத்தனை முயற்சி செய். சட்டர்ஜி, தன்னுடைய டைப்ரைட்டர் மெஷினை தந்து உதவுவார்.வீட்டிலும் டைப் அடித்துப் பழகு. தேர்வில் பாஸ் மார்க் வாங்கிவிட்டால்; உனக்கு இந்த வேலையை எப்பாடு பட்டாவது வாங்கித் தர உத்தரவாதம் கொடுக்கிறார். நீ உன் சொந்தக்காலில் நிற்கலாம். எவர் தயவும் வேண்டாம்; உனக்கு.நீ கஷ்டப்பட்டு டைப்பிங் ஷார்ட்ஹேண்ட் , டபுள் டைம் போய் கற்றுக் கொள். இந்த சந்தர்ப்பத்தை கோட்டை விடக்கூடாது" என்று சொல்லி,அவருக்கு நன்றி சொல்லி விட்டு கிளம்பினார்கள்; இருவரும்.
அடுத்த இரண்டு மாதமும் யோகா தான் குழந்தைகளைப் பார்த்துக் கொண்டும், வீட்டு வேலைகளை தனியே செய்து கொண்டும், ஒழிந்த நேரங்களில், அம்பிகாவுக்கு ஷார்ட் ஹேண்ட் டிக்டேஷன் போட்டுக் கொண்டும், ஓயாது பம்பரமாக உழைத்தாள்.
அம்பிகாவின் உழைப்பு வீண் போகவில்லை. மூன்றே மாதத்தில் அவளுக்கு அதே ஊரிலேயே பணிக்கு உத்தரவு ஆயிற்று.
இது நடந்து ஆயிற்று; முப்பத்தைந்து வருடம். அம்பிகா சரியான சமயத்தில் சென்னைக்கு விருப்ப மாறுதல் கேட்டு வந்தவள், இரண்டு பெண்களையும் படிக்க வைத்து , திருமணம் செய்வித்து இப்போது பணி அயர்வில். மனம் நிறைந்த வாழ்வில்.
ஆம்! கணவர் இல்லாமல் வாழ்வது கொடுமைதான்.ஆனால் வைதவ்யத்தின் மற்ற கொடுமைகள் அவளை வந்து அடையவில்லை. அவள் மாமியாரின் முனைப்பும்,தன் மகன் மேல் இருந்த அன்பை அம்பிகா பக்கமாக மடை திருப்பி விட்டதும், அம்பிகாவை சுதந்திரமாக வாழ வைத்தது.