கந்தர்வன் /யாரோ ஒருவர்

மகளும் மாப்பிள்ளையும் இரட்டை இருக்கை சோபாவில் உட்கார்ந்திருந்தனர். சம்பந்தியும் இவரும் ஒற்றை சோபாக்களில் இருந்தனர். பெரியவர்களாயிருந்த ஆண்கள் நாற்காலிகளிலும், பெண்களும் குழந்தைகளும் ஜமக்காளத்தில் நெருக்கமாகவும் உட்கார்ந்திருந்தார்கள். இரண்டு மின் விசிறிகளிலிருந்தும் காற்று ஹால் முழுவதும் வீசிக்கொண்டிருந்தது. சென்னையில் வேலையாயிருக்கும் மகன் டிவியின் முன்னால் குனிந்திருந்தான்.
எல்லோரும் அவன் முதுகுப் பக்கத்தையே பார்த்துக் கொண்டிருந்தார்கள். புது சபாரி போட்டிருந்தான். அவன் மனைவி சரசரவெனும் பட்டுப் புடவையோடு ஓரத்தில் நின்று கொண்டிருந்தாள். இந்த வீட்டிலும் சம்பந்தி வீட்டிலும் அனேகமான பேர்கள் கல்யாணத்திற்காக ஒன்றுக்கும் மேற்பட்ட புது உடை செட்கள் எடுத்திருப்பார்கள் போல. வீடியோ பார்க்க என்று பழைய உடைகளை மாற்றிப் புது உடைகளோடு உட்கார்ந்திருந்தார்கள்.
மகளும் மாப்பிள்ளையும் மணமேடையில் அணிந்திருந்ததற்குச் சற்றும் குறைவில்லாத அழகிய புது உடைகளில் இருந்தனர். மாப்பிள்ளையின் இடது கை கடிகாரத்திலும், வலது கை பிரேஸ்லெட்டிலும் ஒளியடித்தது. நெக்லஸ், சங்கிலி, வளையல்கள், மோதிரங்கள் என்று நகைகளுக்குள் பளீரென்று முத்துப்பல் காட்டிக் கொண்டிருந்தாள் மகள்.
கல்யாணம் முடிந்து இரண்டு முழு நாட்கள் போய்விட்ட போதும் பூவாசமும், சந்தன மணமும் வீடெங்கும் அலைந்தது. சிறு பிள்ளைகள் லூட்டியடிப்பதை நிறுத்த யாரும் முயற்சிக்கவில்லை பிள்ளைகள், பேரர்கள் சாம்ராஜ்யத்தில் இரண்டு சம்பந்திகளுக்கும் உட்கார சோபாக்கள் கிடைத்ததே பெரிய விஷயம்.
இந்தச் சம்பந்தத்தைப் பேசி முடித்த உடனேயே இவர் முதல் ஓடியது மண்டபம் பிடிக்க, அடுத்துப் போனது வீடியோ கடைக்கு, இரண்டு இடங்களிலும் தேதியைச் சொல்லி முன்பணம் கொடுத்தபின்தான் மற்ற வேலைகளில் இறங்கினார். எவ்வளவு சுறாராய்ப் பேசி வாக்குறுதிகள் வாங்கிக்கொண்ட போதும் ஒருநாள் தாமதமாகத்தான் வீடியோக்காரர் கேசட் தந்திருக்கிறார்.
மகன் கேசட்டைப் போட்டுவிட்டு வந்தான். இரண்டு வளையல்கரங்களின் ‘வணக்கம்’ என்ற கும்பிடோடு ஆரம்பித்தன வீடியோ காட்சிகள். போன தலைமுறைப் பெண்கள் பத்து நாட்களுக்கு உட்கார்ந்து பேசும் கல்யாண நிகழ்ச்சிகளைக் கூட்டிக் குறை கூற முடியாமல் அப்படியே இப்போது பார்த்துவிடலாம்.
புதிதாக வண்ணமடித்த இவரது வீட்டின் சுற்றுச்சுவர், உள்ளே பாதி வளர்ந்து கொழுத்த பச்சையில் தென்னங்கன்றுகள், செம்பருத்திச் செடிகளின் நூற்றுக்கு மேற்பட்ட ரேடியோப் பூக்கள், பதியன்களில் செவேலென்று பந்து பந்தாய்ப் பூத்திருந்த ரோஜாப் பூக்கள், சலவைக் கல்லில் திண்ணை போலிருந்த சிட் அவுட், பளபளவென்று இரண்டாள் உயரத்துத் தேக்கங் கதவு இவைகளைத் தாண்டி ஆண்கள், பெண்கள், குழந்தைகளுக்குள் நிற்கும் மணமகளிடத்தில் சிறிது நேரம் நின்று திரும்பியது கேமிரா.
அப்புறம் பெட்டிகளோடும், தட்டுகளோடும் ஒவ்வொருவராய்க் கல்யாண மண்டபத்திற்குப் போகும் வேனில் ஏறுவதைக் காட்டியது. அடுத்த காட்சியில் எல்லோரும் கல்யாண மண்டப வாசலில் இறங்குகிறார்கள். குழந்தைகள், “அதோ நான், இதோ நீ” என்று கத்துகிறார்கள். இவர் ஒரு கைப்பை நிறையப் பணத்தோடும் மலை ஏற வேண்டிய கவலையோடும் தளர்வாய் இறங்கினார். வீடியோக்காரர் மாப்பிள்ளை வீட்டுக்காரர்கள் நின்றது, உட்கார்ந்தது, சிரித்தது என்று அவர்களைக் கௌரவமாக்கிப் படம் பிடித்திருந்தார். மாப்பிள்ளை அழைப்புக் காட்சிகள் வருமுன் அவருக்குத் தலை சுற்றும்படியான நினைவுகள் வந்தன.
“யானை வரப் போகிறதா. இல்லையா?” என்று கேட்டார் சம்பந்தி அழைப்பு கிளம்பு முன். “இந்த ஊர்க் கோவில்கள் எதிலும் யானை இல்லை” என்றார் இவர். இல்லையென்றால் என்ன, வேறு ஊரிலிருந்து கொண்டு வந்திருக்கலாமே என்பது போல் பேச்சு வளர்ந்தது. “எங்க வீட்டுக் கல்யாணங்கள் மூணுலெயும் யானை வந்துதான் மாப்பிள்ளை அழைப்பு நடந்திச்சு. என்னவோ போங்க, ஒண்ணும் சரியாவே இல்லை” என்றார் சம்பந்தி.
திறந்த காரில் ஏழெட்டுக் குழந்தைகள் சகிதம் மாப்பிள்ளை டையும் கோட்டுமாய் உட்கார்ந்து வந்தார். முன்னால் கேஸ் லைட்டுகள் சுமந்து நாலைந்து பேர் சென்றார்கள். ஒரு விவரமும் இல்லாமல் பக்கத்தில் வந்து கொண்டிருந்த பங்காளி ஒருவரிடம் கேட்டார். “எப்படிபா யானை மேலே ஏறி மாப்பிள்ளை வருவார்? அந்த அசைப்புக்கெல்லாம் ஆடி ஆடி உட்கார்ந்து வந்தா நல்லா இருக்காதே.” பங்காளி சொன்னார், “இவ்வளவு பெரிய மனுசன் நீங்க, என்னென்ன சந்தேகமெல்லாம் வருது பாருங்க. யானை சும்மா முன்னெ போகும். அது கழுத்தில் மணி தொங்கி டன் டன்னுனு தெருப்பூராவும் ஓசை கேக்கும். பின்னால் மாப்பிள்ளை இது மாதிரி காரிலெ வருவாரு. பெரிய வீட்டுக் கல்யாணங்களிலெ இப்ப இதுதானே பழக்கம்.” யானைக்குத் தீனி போடுகிற நிலைக்குப் போய்க்கொண்டிருக்கிறோம் என்று நினைத்து வயிறு கலங்கியது ஞாபகத்தில் வந்தது. அது இது என்று ஓடிவிட்டு அன்றிரவு விருந்துப் பக்கமாய்க் காமிரா போனது.
சம்பந்தம் பேசும்போது மாப்பிள்ளை அழைப்பன்று இரவுச் சிற்றுண்டியை ‘டின்னர்” என்று பெயர் வைத்துச் சொன்னார் சம்பந்தி. சரி என்று சொல்லிவிட்டு வந்த சமையற்காரரிடம் ‘டின்னர்’ என்றால் என்னென்ன போட வேண்டும் என்று கேட்டார். இவர் எப்போதோ சாப்பிடும் உணவு வகைகளையும், அதுவரை சாப்பிட்டே இராத உணவு வகைகளையும், சொல்லிக்கொண்டே வந்து ஐஸ்கிரீம்’ என்ற வார்த்தையையும் சேர்த்தார். “ஐஸ் கிரீமா? இந்த ஊரில் அவ்வளவு ஐஸ்கிரீமுக்கு எங்கெ போறது?” என்றார். இவர் சம்சாரம் பக்கத்தில் உட்கார்ந்துகொண்டு வெகு சாதாரணமாகச் சொன்னார். “என் புள்ளை மெட்ராஸிலிருந்து கொண்டு வருவான். இல்லைனா ஏற்பாடு செய்வான்.”
“பணம்”
‘நீங்கதான் கொடுக்கணும். அவ்வளவுக்கு அவன் எங்கெ போவான்?”
கேசட்டில் காட்சிகள் ஓடின. நூறு நூறு கோப்பைகளில் ரொட்டித் துண்டு குத்தி ஐஸ்கிரீம் எல்லா மேசைகளிலும் இருந்தன. குழந்தைகள் தட்டிக்கொட்டி மிதித்து ஐஸ்கிரீமில் குளித்தன. யார் கன்னத்திலாவது பளாரென்று அறையத் தோன்றியது இவருக்கு.
டின்னர் முடிந்து மாப்பிள்ளை பூட்ஸ் டை, கோட், கோட்டில் ரோஜாப்பூ அணிந்து லண்டன் மாநகரில் நடந்து வருவதுபோல் நடந்து வந்தார். இந்த உடைகளைத் தைக்கப் போகும் சென்னைக் கடையின் பெயரைச் சொல்லித் தையற்கூலியை மட்டும் கூறியபோது இவருக்கு மயக்கம் வந்திருந்தது. துணிகளுக்காகப் போடும் பணம் மிகப்பெரிய தொகையாக இருந்தது. இதே போலத்தான் இவர் மகனும் அவன் திருமணத்தின்போது கோட்டையெல்லாம் அணிந்திருந்தான். மகனும், மாப்பிள்ளையும் பார்க்கும் உத்தியோகங்களையும், அலுவலகங்களையும் நினைத்துப் பார்த்தால் ஆயுசுக்கும் மறுபடி ஒருமுறை இவைகளை அணிய வாய்ப்பு இல்லை. ஆனால், இந்த உடைகளின் தரம், நிறம், எடுக்கப் போகும் ஜவுளிக் கடை பற்றி மாப்பிள்ளை வீட்டாரை விடவும் இவர் வீட்டு ஆட்களே அதிகமாய்ப் பேசிக்கொண்டு ஆடினார்கள். பல மணி நேரங்கள் வீட்டு ஹாலில் இதற்காக நடந்த வாதப் பிரதிவாதங்கள் இவர் ஞாபகத்தில் வந்த அன்றிரவு நிகழ்ச்சிகளை முடிக்கு முன் வீடியோக்காரர் மண்டப வாசல் பக்கம் உள்ள ஒவ்வொரு பகுதியையும் நிறுத்தி நிதானமாய்க் காண்பித்துக்கொண்டிருந்தார். மண்டப வெளிப்பகுதி முழுவதும் வண்ணமயமான மின் விளக்குகள், பந்தலிலும் வண்ண விளக்குகள் வெளியே மஞ்சள் பூ பூக்கும் ராட்சச மரங்கள்.
இரண்டிலும் குறுக வெட்டிய குரோட்டன்ஸ் வரிசை பூராவிலும் வண்ண விளக்குகள் நாலு வாழை மரங்கள் பெருத்த குலைகளோடும், பூக்களோடும் கட்டிக்கிடந்தன. வண்ண விளக்குகளுக்குள் சீரியல் லைட்காரனோடு நான்கு நாட்களில் மொத்தம் மூன்று மணி நேரத்திற்கு மேல் வாடகைப் பணம் குறித்துப் பேரம் பேசியிருப்பார். சீரியல் செட் இல்லை என்றால் என்ன கல்யாணம் என்பதுபோல் வீட்டில் எல்லோரும் பேசவும்தான் ஒத்துக்கொண்டு முன் பணம் கொடுத்தார்.
இனிமேல் கல்யாணக் காட்சிகள் வரப்போவதால் சிறிது இடைவெளி விட்டுப் பார்க்கலாம் என்பதாக சம்பந்தி அம்மாள் சொல்லிவிட்டு அடுக்களைப் பக்கம் திரும்பிப் பார்த்தார். அர்த்தம் புரிந்த இவர் வீட்டுப் பெண்கள் முந்தானைகளை இடுப்பில் செருகிக்கொண்டு வேலைகளில் இறங்கினார்கள். இனிப்பும் சுடச்சுட வடையும் டம்ளர்களில் காப்பியும் ஹாலுக்கு வந்தன. “உன்னை ரெண்டு இடத்திலெதாண்டா பார்த்தேன் இதுவரை. மாப்பிள்ளை அழைப்பப்ப எங்கே போனே?” என்று சம்பந்தி அவருடைய தம்பியைக் கேட்டார். தொடர்ந்து அதுவரை பார்த்த காட்சிகளில் ‘நீ எப்படிக் குனிந்தாய், நான் எப்படி நிமிர்ந்தேன்’ என்பதற்கான பேச்சுகளோடும் பளீர் பளீரென்ற சிரிப்புச் சத்தங்களோடும் சாப்பிட்டார்கள், காபி அருந்தினார்கள். இடைவேனை முடிந்து மறுபடி மகன் வந்து கேசட்டை ஓடவிட்டான்.
மண்டப வாசலில் அழகிய விரிப்போடு மேசை. அதன்மீது குவியலாய் ரோஜாப்பூக்கள், சந்தன பேலா, பன்னீர் செம்பு, கற்கண்டுத் தட்டு என்று வந்து கொண்டிருந்தன. பட்டு வேட்டி சட்டையில் இவரும் அகலமான சரிகை பார்டரில் பட்டுப் புடவையோடு சம்சாரமும் அந்த மேசையருகே நின்று வருகிறவர்களை இரண்டு கைகளையும் கூப்பி வரவேற்றுக் கொண்டிருக்கிறார்கள். ஆள்கள் வரவர இவருக்கு அவர்களைப் பற்றிய ஞாபகங்கள் வரத் துவங்கின.
பத்திரிகை அச்சடித்து வந்ததும், யார் யாருக்குப் பத்திரிகை கொடுக்க வேண்டும் என்று பேச வீட்டு ஹாலில் எல்லோரும் உட்கார்ந்தார்கள். இவர் அந்தக் காலத்தில் அவரோடு படித்தவர்கள், அவர் மேலே வர உதவியவர்கள் என்று பல பெயர்களைச் சொல்லிக் கொண்டு போனார். யார் முகத்திலும் உணர்ச்சியில்லை. எல்லா முகங்களும் வறளத் துவங்கின. நிறுத்திக்கொண்டார்.
மகன் சொன்னான், “இப்படிப் போனா எதாவது ஒரு மைதானத்திலெதான் கல்யாணத்தை நடத்தணும். இன்னைக்கு யார் நமக்கு முக்கியம், நாளைக்கு யார் நமக்கு வேணும்னு பாத்துப் பத்திரிகை கொடுத்தா நாம படிச்சவங்க.” அவனை அதட்டுவது போன்ற குரலில் சம்சாரம் சொன்னார், “அப்படியெல்லாம் அப்பாட்ட முகத்திலடிச்சாப்ல சொல்லாதே. அவங்க பாவம்டா, ரொம்பக் கீழேயிருந்து வந்தவங்க. இங்கெ பாருங்க, ஆயிரம் பேர் தயவினால நீங்க மேலெ வந்திருப்பீங்க, இல்லைனு சொல்லலை, அவ்வளவு பேருக்கும் பத்திரிகை குடுத்துக்கிட்டுத் திரிஞ்சா உங்களைப் பைத்தியக்காரன்னு சொல்வாங்க. நான் சொல்றேன் வரிசையா பேர்களை எழுதுங்க.”
பத்து நிமிடங்களில் இவருக்கு மூச்சுத் திணறியது. ஆள் ஆளுக்கு இவரை மரியாதையோடு மிதித்தெடுத்தார்கள். வீடுகளுக்குள் ஜனநாயகம் வந்து கொண்டிருப்பதாக நினைத்தார். அவர்கள் சொன்ன பெயர்களை மட்டும் எழுதிக்கொண்டு நிமிர்ந்தபோது பொருமல் இருந்தது மனசில். நகரத்தை ஆறு பிரிவுகளுக்குள் இந்தப் பெயர்களைக் கொண்டு பேரெழுதிக்கொண்டிருந்தான் மகன். அவர் ஆரம்பத்தில் சொல்லி எழுதிக் கொள்ளாத பெயர்களைத் தாண்டி யாரோ ஒரு முக்கியமான ஆளுக்குப் பத்திரிகை கொடுக்க விடுபட்டிருப்பதாக நினைத்தார். பெயர்தான் வரவில்லை. மிகவும் அழுத்தமாக மனசிலிருந்து என்ன முயன்றும் பெயர் ஞாபகத்திற்கு வரவில்லை.
தினமும் காலை ஏழு மணிக்கெல்லாம் ஆட்டோ வந்துவிடும். இவரும் சம்சாரமும் பத்திரிகைக் கட்டோடு ஏறி உட்கார்வார்கள். இவர்கள் போன வீடுகளெல்லாம் பெரிது பெரிதாக இருந்தன. சில வீடுகளில் கார்கள் நின்றன. அநேகமான வீடுகளில் முரடு முரடான இரு சக்கர வண்டிகள் நின்றன. உட்கார்ந்த சோபா செட்கள் மெத்மெத் என்றிருந்தன. சில வீடுகளில் குறைவாகவும் இனிமையாகவும் பேசினார்கள். உட்கார்ந்து எழும்பும் சில நிமிடங்களில் அழகிய தட்டுகளில் பிஸ்கட்களும், பழரசமும் அல்லது காபியும் வழங்கினார்கள். சிலர் இந்தக் கல்யாணத் தேதியைக் குறிப்பிட்டு அதுவரை அன்றைய முகூர்த்தத்திற்குத் தங்கள் வீட்டில் பதினான்கு பத்திரிகைகள் வந்து கிடப்பதாகவும், யார் வீட்டுத் திருமணத்திற்குப் போவதென்று எப்படி முடிவெடுக்கப் போகிறோமோ என்று சிரித்தார்கள்.
ஒரு வீட்டில் தங்களுக்கு மிகவும் நெருங்கிய சொந்தக்காரரைச் சொல்லி அவர் வீட்டுத் திருமணம் கும்பகோணத்தில் அன்றைய தினத்தில் நடக்கவிருப்பதாகவும், “நீங்களும் கொடுத்திருக்கிறீர்கள், பார்க்கலாம்” என்பதாகவும், ஏதோ கடன் கேட்டுப்போய் நிற்பவனுக்குப் பதில் சொல்வதுபோல் சொன்னார்கள். சில வீடுகளில் இடுப்பு உயரத்திற்கு நாய்கள் குரைத்துப் பயங்கரப்படுத்தின. யாரோ ஒருவருக்கு விடுபட்டிருக்கிறதே என்று அவர் பெயரை ஞாபகப்படுத்திப் பார்த்துக்கொண்டே இவர் சம்சாரத்தோடு போய்க்கொண்டிருந்தார். இரண்டொரு வீடுகளில் மகளின் பெயரைச் சொல்லி, “நல்ல பொண்ணு, நல்லா இருப்பா” என்று பத்திரிகையை வாங்கிக்கொண்டார்கள். “எங்கள் வீட்டுக் கல்யாணத்திற்கு நீங்கள் வர வேண்டும்” என்று சில வீடுகளில் சொன்னார்கள். மார்ச் மாதத்தில் அவர்கள் மகளுக்குக் திருமணமென்றும், “தேதியை நல்லா ஞாபகம் வைச்சுக்குங்க. பதினாலு, புதன்கிழமை, லீவு இல்லைன்னு சொல்லிடாதீங்க. ஞாயிற்றுக்கிழமை முகூர்த்தத்திற்கு அந்த மாசத்திலெ மண்டபம் கிடைக்கலெ” என்று ஒருவாரத்தில் நடக்கப்போகும் இவர் வீட்டுக் கல்யாணத்தைப் புறங்கையால் தள்ளி அப்பால் வைத்துவிட்டு மூணு மாதம் கழித்து நடக்கப்போகும் தங்கள் வீட்டுக் கல்யாணத்தையும் மாப்பிள்ளையையும் அவர் வேலை பார்க்கும் பெங்களூரின் மகத்துவத்தையும் வாய் நிறையச் சொல்லிக்கொண்டே இருந்தார்கள்.
வாசலில் வந்து ஆட்டோவில் ஏறும்வரை மாப்பிள்ளையின் அம்மா அங்கு வந்தபோது பெருந்தன்மையாய்ப் பேசியது, நாகரிகமாய் நின்றதையெல்லாம் சிரத்தையோடு சொல்லிக் கொண்டிருந்தார்கள். இவர் சம்சாரம் சிரமப்பட்டுத் தங்கள் வீட்டுக் கல்யாணங் குறித்து இரண்டு வார்த்தை சொல்லுமுன் அதைத் தட்டிவிட்டுத் தங்கள் வீட்டுத் திருமணங் குறித்துப் பெருமை சொன்னார்கள். இவருக்கு மறுபடி மறுபடி அந்த யாரோ ஒரு விடுபட்ட ஆளை ஞாபகத்தில் தேடிக்கொண்டிருந்தார்.
பல வீடுகளில் பிள்ளைகள் புத்தகத்தில் கவிழ்ந்து படித்துக்கொண்டிருந்தார்கள். இல்லையென்றால் டிவி பார்த்துக் கொண்டிருந்தார்கள். ‘வாங்க’ என்றுகூடப் பிள்ளைகள் பேசவில்லை. இவர்கள் வந்ததால் வீட்டின் இயல்பு சிறிது நேரத்திற்கு மாறிப்போகப் போகிறதென்ற வருத்தம் வந்துவிட்ட பிள்ளைகளின் முகங்கள் அழகற்றிருந்தன. சிறு புன்னகையை மட்டும் சிந்திவிட்டு மொட்டைமாடிகளுக்குப் போய் விடுகிற பிள்ளைகள் பரவாயில்லை என்கிற மாதிரி இருந்தது.
“வாங்க மாமா, வாங்க அத்தை” என்று பிள்ளைகள் கூப்பிட்ட வீடுகளில் இவருக்கு விழுந்து கிடக்கவேண்டும் போலவும், கன்னம் தடவி முதுகில் தட்டி, “நல்லாயிரு, நல்லாயிரு” என்று நாலைந்து தடவை சொல்லிவிட்டு வரவேண்டும் போல இருக்கும். ஆனால், அப்படியெல்லாம் உணர்ச்சிவசப்படும் உரிமையை அவர் இழந்திருந்தார். குடும்ப முடிவுகளின்படி அல்லாமல் நடக்கும் எதுவும் குடும்பத்திற்கு நன்மையாய் முடிந்ததில்லை என்று பல தடவைகள் நிரூபணமாகிவிட்டது. அவர் அடக்கமாகவே சென்றார்.
கேசட் ஓடிக்கொண்டிருந்தது. ஆட்கள் மண்டபத்தின் படிகளில் ஏறும்போதே காமிராவுக்காகப் புன்னகைத்து மிடுக்கானார்கள். நிறைய ஆண்கள் சபாரிகளிலும், பெண்கள் யோசித்து, யோசித்துத் தேர்ந்த வண்ணப் பட்டுகளும் உடுத்தி வந்தார்கள். விதம் விதமான நெக்லஸ்கள், சங்கிலிகள், ஆரங்கள், முழங்கை வரை வளையல்கள் என்று தங்கக் குளுமைகளாகப் பலரும் வந்து இறங்கினார்கள். இரண்டொருவர் இடுப்பில் ஒட்டியாணமும் அணிந்து வந்தபோது இவர் சற்று மிரண்டு அவர்களை வணங்கினார்.
நாற்காலிகளில் உட்கார்ந்திருந்தவர்களைப் பார்த்து விசாரிக்க இவர் ஒவ்வொரு வரிசையாய்ப் போகும்போது கவனித்தார். குழுக்கள் பிரிந்து அடுத்த குழுவினரின் நகைகள், உடைகள் பற்றிய விவாதங்களை மெதுவான குரல்களில் நடத்திக்கொண்டிருந்தனர்; சென்ற கல்யாணங்களில் நகையும் பட்டுமாகத் திமிரோடு வந்த சிலர் இப்போது நொடித்துப் பெருமூச்சுகளோடு உட்கார்ந்திருந்ததைப் பற்றி இளக்காரமான வார்த்தைகளைக் கேட்க முடிந்தது.
முனிஸிபல் சேர்மன், கமிஷனர், தாசில்தார், ஜவுளிக்கடை முதலாளிகள், சர்க்கார் சிப்பந்திகள், சொந்தக்காரர்கள் என்று ஆட்கள் வந்தமணியமாயிருந்த போதும், யாரோ ஒருவருக்குப் பத்திரிகை கொடுக்க விட்டுப்போன தவிப்புத் தொடர்ந்து கொண்டேயிருந்தது.
வீடியோ கேசட் தொடர்ந்து ஓடிக்கொண்டிருந்தது. அகலமான மண்டப வாசலில் இவருக்கு மிக நெருங்கிய நண்பர் ஒருவர் ஆகிருதியான உடம்போடு வந்து கொண்டிருக்கிறார். இவர் கை கூப்பி வரவேற்கிறார். அவர் உடம்பு மறைவில் இன்னொரு வயதானவர் வருகிறார். இந்தக் கல்யாணக் கூட்டத்தில் அவர் முற்றிலும் வேற்றாளாகத் தெரிகிறார். ஒரு பழைய அரைக்கைச் சட்டை, நாலு முழ வேட்டி ‘சட்டென்று’ காமிரா முன்னால் வரும்போது ‘சட்டென்று’ மேல் துண்டை எடுத்து முகத்தை மறைத்துக்கொண்டு விறுவிறுவென்று மண்டபத்திற்குள் போகிறார்.
‘அது யார், முகத்தை மூடிக்கிட்டுப் போறது?” என்றார் சம்பந்தி டிவியைப் பார்த்துக்கொண்டே. அவர் யாரென்று இவருக்குத் தெரிந்துவிட்டது. பதில் எதுவும் சொல்லாமல் அடுத்தடுத்துத் தோன்றுபவர்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருந்தார். ஆனால், அந்த முகங்கள் எதுவும் இவர் மனத்தில் ஒட்டவில்லை. துண்டால் முகம் மூடிய வயதான உருவமே மனத்தில் நின்றது. மண்டப வாசலிலிருந்து காட்சிகள் கல்யாண மேடைக்குப் போயின. சற்று நேரம் மணங்குளிர அவைகளைப் பார்த்தவரின் மனதில் மறுபடி அந்தத் துண்டு மூடிய வயதான உருவம் வந்தது.
அவரை மறுபடி பார்க்க வேண்டும்போல் தவிப்பு வந்தது. வேறு வேறு காட்சிகள் வீடியோவில் வர, கண்கள் கூட்டங்களுக்குள் அவரைத் தேடிக்கொண்டே இருந்தன. திருமண நிகழ்ச்சிகள் முடிந்து சாப்பாட்டுப் பந்தி தெரிந்தது. ஒவ்வொருவர் அப்பளம் உடைப்பதுவும், விரல் நுனியில் நாலைந்து சாதத்தை உதடுகளில் வைப்பதுவும் காட்சிகளாய் வந்தன. பின் வரிசையில் திடீரென்று அந்த ஆள் தெரிந்தார். பெருங்கவளங்களாய் உருட்டினார், ஆவேசமாய்ச் சாப்பிட்டுக்கொண்டிருந்தார். முற்றிலும் பாசாங்கற்றுச் சாப்பிட்டார். கண்கள் மட்டும் திரண்டு தெரிந்தன. அவரைத் தீர்க்கமாய்ப் பார்த்துவிட முயன்றபோது தோள் துண்டை எடுத்து முகத்தை மறைத்துக்கொண்டார்.
இவர் பதற்றமடைந்து கொண்டிருந்தார். சாப்பிடுவதைக் காட்டி முடிக்கும்வரை பொறுமை காட்ட முடியவில்லை. சோபா நுனிக்கு வந்துவிட்டார். மறுபடி காட்சிகள் மண்டப வாசலுக்கு வந்தன. இவரும் சம்சாரமும் நின்று கைகூப்பிப் பிரமுகர்களுக்கும், உறவினர்களுக்கும் விடை கொடுக்கிறார்கள். ரொம்பப் பெரியவர்களுக்கு விடைகொடுக்க வீட்டு ஆள்கள் எல்லோருமே நின்று தளுதளுக்கிறார்கள். சட்டென்று ஒருவரை ஒட்டிக்கொண்டு அந்த வயதான ஆள் வருகிறார். தாம்பூலப்பை வாங்கிக் கொள்ளவில்லை. யாரிடத்தும் கும்பிட்டு விடை கேட்கவில்லை. காமிராவுக்கு நேராக வரும்போது சூரிய ஒளிக்காகத் துண்டை மறைப்பதுபோல் முகத்தை மறைத்துக் கொண்டு விடுவிடுவென்று வெளியே போய்விட்டார்.
இவர் எழுந்துபோய் ஒரு தம்ளர் நிறையக் குளிர்ந்த நீரை எடுத்துக் குடித்துவிட்டு வந்தமர்ந்தார். “நல்ல வேளை, அவரை யாரும் பிடிச்சு அடிக்கலை” என்று மனத்திற்குள் சொல்லிச் கொண்டார். இவருடைய தகப்பனார் இப்படிக் கல்யாண வீடுகளில் போய்ச் சாப்பிட்டு அடி உதை வாங்கியதாக அடிக்கடி சொல்லக் கேட்டிருக்கிறார். இந்த நிகழ்ச்சிக்குப் பின் யாரோ ஒருவருக்குக் கல்யாணப் பத்திரிகை கொடுக்க விட்டுப்போன அரிச்சி இவருக்குப் போய்விட்டது.

(சுபமங்களா, 1997)

கந்தர்வன் /தன்னோடு – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “கந்தர்வன் /யாரோ ஒருவர்”

Comments are closed.