
ரூபி கெளர் என்ற பெண் கவிஞர் மற்றும் எழுத்தாளர் 1991 ஆம் ஆண்டு அக்டோபர் 4 ஆம் தேதி இந்தியாவில் பஞ்சாப் மாநிலத்தில் பிறந்து கனடாவிற்கு குடிபெயர்ந்தவர் ஆவார்.
ஆங்கிலத்தில் கவிதைகள் உரைநடைகள் எழுதிக் கொண்டிருக்கும் இவர் உலகின் தலைசிறந்த கவிஞர்களின் ஒருவராக மதிக்கப்படுகிறார்.
இவருடைய மில்க் அண்ட் ஹனி என்ற கவிதை புத்தகம்புத்தகம் 2014 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது .
இது 2.5 மில்லியன் பிரதிகள் விற்பனை புரிந்து சாதனை படைத்தது.
மேலும்ஒரு வருடத்திற்கும் மேலாக நியூ யார்க் டைம்ஸ் பத்திரிகையில் இந்த புத்தகம் முதல் இடம் பிடித்திருந்தது குறிப்பிடத் தக்கது.
இவருடைய இரண்டாவது புத்தகம் த சன் ஆண்டு ஹர் ஃப்ளவர்ஸ் 2017 ஆம் ஆண்டு வெளிவந்திருக்கிறது.
புரிந்து கொள்வதற்கு மிகவும் எளிமையாகவும் உயிரோட்டத்தோடும் இயற்றப்பட்டிருக்கும் இவரது கவிதைகள் நேரடியாக இதயத்திற்கும் ஊடுருவும் வல்லமை கொண்டது. பெண்களின் பேரன்பும் நெகிழ்வுத் தன்மையும் வியப்புணர்ச்சியும் தன்னம்பிக்கையும் நிறைந்ததாக இவரது கவிதைகள் உள்ளன.
பெண் உரிமை பேசுவதாகவும் அவர்களுக்கு தன்னம்பிக்கை ஊட்டுவதாகவும் இவரது கவிதைகளும்
எழுத்துக்களும் திகழ்கின்றன.
இவரது கவிதைகளிலிருந்து சில குறுங் கவிதைகளை இங்கே மொழி பெயர்த்து இருக்கிறேன்.
கவிதை 1
கலை
நாம் புகைப்படங்கள் எடுக்கலாம்
கதைகள் கூட எழுதலாம்
ஆனால் உலகத்தையே
ஒட்டுமொத்தமாக
வாரிக்கொள்ள
முடியுமா ?
ஆனால்
ஒருத்தியால் மட்டும்
அது எப்படி சாத்தியமாகிறதென்று
தெரியவில்லை
அவளது
பெயரைக் கேட்டால்
அவள் கலை என்று
சொல்லுவாள்
கவிதை 2
மீண்டும் மீண்டும்
சிதைக்கப்படும் போதும்
மரிக்காமல் உயிர்த்தெழும்
மனித இதயத்தைப் போல
பலமான ஒரு வஸ்துவும்
உண்டோ
இந்த உலகினில் ?
கவிதை 3
உன்னுடைய சகி
உன்னை வளப்படுத்த வேண்டுமேயன்றி
வறட்சியாக்கி விடக் கூடாது
காயப்படுத்தும் ஒன்றிற்காக
சகித்துக் கொண்டிருப்பதன்
எப்போதும் காதலில்லை
என்று புரிந்து கொள்
கவிதை 4
வீழ்ந்து விடும்
பலவீனங்களோடு தான்
நீ இந்தப் புவியில்
பிறந்திருக்கிறாயென்றால்
எழுந்து நிற்கும்
பலத்தோடும் தான்
பிறந்திருப்பாய் என்பதை
அறிந்து கொள்
கவிதை 5
உன்னைப் போலவே
அன்பான இதயம்
கொண்டவர்களென்று
நினைத்து தான்
நீ அவர்களோடு பழகினாய்
ஆனால் அனைவருமே
உன்னைப் போல் மென்மையும்
மிருதுத்துவமும் கொண்டவர்களில்லையே
மனித தோற்றம்
கொண்டவர்களெல்லாம்
மனிதர்கள் அல்ல என்பதும்
நேசம் கொண்டவர்களே
மனிதர்களென்றும்
நீ அறிந்திருப்பாய்
நீ அன்பின் நிமித்தம்
கொடுக்கிறாய்
கொடுத்துக் கொண்டே இருக்கிறாய்
அவர்கள் எடுக்கிறார்கள்
எடுத்துச் சென்று கொண்டே இருக்கிறார்கள்
இனிப்பை சேகரித்து வைத்த
ஒரு கண்ணாடிக் குடுவை
காலியாவது போல
நீ காலியாகும் வரை
அவர்கள் எடுத்துக் கொண்டே இருக்கிறார்கள்
கவிதை 6
நீ உடைந்து போய்விட்டால்
அவர்கள் உன்னை
கீழே போட்டு விட்டுப்
போய் விடுகிறார்கள்
உனக்கு சக்தி இல்லையென்று
நினைத்துக் கொள்ளாதே
உண்மையிலேயே
உன்னுடைய அளவற்ற சக்தியை
தாங்க முடியாமல் தான்
அவர்கள் உன்னை
தரையில் போட்டு விட்டு
ஓடிப் போய் விட்டார்கள்
என்று நினைத்துக் கொள்
