
கூட்டம், விளையாட்டு, குடில்
எனப் பொருள்
பலவாம் பண்ணைக்கு.
கோழிப் பண்ணை, ஈமுப் பண்ணை
எதுவானாலும்
முதலை வைக்க வேண்டும்.
முதலையாய்
வாரிச் சுருட்டி ஏமாற்ற,
கையில்
காப்பு நிச்சயம் ஏறும்.
பெரிய பண்ணை, சிறிய பண்ணை
என்று
கொடி கட்டி சிற்றூர் ஆண்டவர்
உண்டு.
ஏழை,எளியவர் உழைப்பை
உறிஞ்சி
உல்லாசம் கண்டவருண்டு.
விடுதலை வேள்வியில் மக்களாட்சி
வரம் பெற
ஏகபோக உரிமை காலாவதிக்
கணக்காக
இடுப்பில் கட்டிய துண்டு
தலையில்
கண்டது மகுடம்.
கதிர் சிரிக்கும் கழனியும், தென்னை,
வாழை
தோப்பும் தென்றலோடு உரசும்
மா,பலா
நடுவில்,மனிதர் மனம் போல்
ஆழம்
காணும் கேணியோடு, காணி
நிலமதில்
வீடொன்று இருந்தால் சுகம்தானே.
ஒதுக்கப்பட்ட
காட்சிகள் அரங்கேறாதவரை.
