அவர் வாசலில் வந்து நின்று வீட்டைப் பார்த்து, “ஆத்தோவ்’ என்றார். ஆளடியிலும் பட்டக சாலையிலும் ஆள் நடமாட்டங்கள் தெரிந்தன. கூப்பிட்டதற்குப் பதில் வரவில்லை. இது வெகுகாலப் பழக்கம் அவருக்கு. குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ஒரு வைக்கோல் துரும்பைத் தூக்கி அந்தப்பக்கம் போட்டார். அப்புறம் இந்தப் பக்கம் போட்டார். பத்து நிமிடங்களுக்குத் துரும்போடு விளையாடிக்கொண்டே இருந்தவர், எழுந்து வீட்டைப் பார்த்து மறுபடி, “ஆத்தோவ்” என்றார்.
எட்டு வயதுச் சிறுவன் ஒருவன் பந்தோடு வெளியே ஓடி வந்தவன், “அப்பத்தா, வேலு வந்திருக்கான்” என்று வீட்டைப் பார்த்துக் கத்திவிட்டு விளையாட ஓடிப்போனான். “சின்னய்யா எப்பொ வந்தீக?” என்றார் அவர். “நேத்தே வந்துட்டோமே” என்று சொல்லிக்கொண்டே ஓடிவிட்டான் பையன். வீட்டிற்குள் சிரிப்பும் கனைப்புமாய்ப் பேச்சுச் சத்தங்கள் கேட்டன. வெளியில் யாரும் வரவில்லை. இவர் மறுபடி குத்துக்கால் வைத்து உட்கார்ந்து ஆள்காட்டி விரலால் மண்ணைக் கோதி ஒரு சின்னக்கல், பொட்டு வைக்கிற மாதிரி அளவில் எடுத்தார். குத்துக்காலை இன்னும் அழுந்த உட்கார்ந்து அதே ஆள்காட்டி விரலால் இந்தப் பக்கம் அந்தப் பக்கம் என்று பந்து விளையாடுவது போல் ஒரு அடிக்குள் விளையாண்டார். பத்து நிமிடங்கழித்து மறுபடி எழுந்து, ‘ஆத்தோவ்” என்றார்.
‘இவன் ஏன் இந்தக் கத்து கத்துறான். என்னண்ணு வந்து கேளுங்க” என்று உள்வீட்டைப் பார்த்துச் சொல்லிக்கொண்டே அந்த அம்மாள், “நேத்து சொல்லி விட்டதுக்காடா பய மகனே இன்னைக்கு வாரெ” என்றும் கேட்டுக்கொண்டே அடுத்த வீட்டைப் பார்த்து நடந்தாள். இவர் மேல்துண்டை எடுத்து முழங்கையில் போட்டுக்கொண்டு நின்றார்.
பிடித்தபடி சங்கிலிகளோடும், பல்லாயிரம் ஆண்டு சிவப்புக் கால்களோடும் அந்த அம்மாள் நடந்து மறைந்ததும் இவர் முழங்கைத் துண்டை எடுத்து மேலே போட்டுக்கொண்டு வீட்டைப் பார்த்து நின்றார். சிறிது நேரத்தில் பட்டும் பவுடருமாய் சின்னப் பேத்தியின் கையை பிடித்துக்கொண்டு அம்பலக்காரர் வந்தார். வழுவழுவென்ற திண்ணையில் அமர்ந்து சாய்தளத்தில் முதுகைச் சாய்த்தார். வேலு, மேல் துண்டை இறக்கி முழங்கையில் போட்டுக்கொண்டு கையிரண்டையும் தலைக்குமேல் வைத்துக் கும்பிட்டார்.
“இதப்பாருடா, இவங்கள்ளாம் நேத்து வந்து எறங்கிட்டாங்க” என்று சிவப்பும் அழகுமான பேத்தியைக் காண்பித்தார் அம்பலக்காரர். ‘ஆத்தா போன தடவைக்கு இப்ப வளந்துட்டாக.”
‘என்ன வளத்தி போ. வந்ததிலெருந்தே இதுக மொகங்க நல்லாயில்லை.”
‘ஆத்தா சிரிச்ச மொகமாவுலெ இருக்காக.’
“வேலு, எங்க வீட்டுப் பண்ணைக்காரன் வயித்திலெ குளுமையைக் கட்டிக்கிட்டாண்டா. ஒருபடி அரிசிச் சோறையும் தின்னப் பொறகுதான் எதிரெ யார் வந்து சோறு போடுறாகன்னு பார்க்கிறான். போட்டா திங்க, ஏத்தினா சொமக்கன்னு எனக்கு ஒரு ஆளு கெடச்சான் பாரு. உழுக, மாடு மேய்க்க, பருத்திக் கொட்டை அரைக்கன்னு மொரட்டு வேலைகளுக்குத்தான்டா அவன் லாயக்கு. அவன்ட்ட நாசூக்குக் கெடையாதுடா வேலு.”
“சாமி”
“யானையைத் தூக்கி, தலையிலெ வை. சொமந்திருவான். தொறட்டியை எடுத்துக் கொப்பை முறிச்சிராம ஒரு முருங்கைக்காய் பறிக்க ஏலாதுடா எங்க பண்ணைக்காரனுக்கு.’
“சாமி”
‘கூறு கெட்டவன்னு நான் மத்தவங்களைத்தான் திட்டுவேன். எனக்கு வந்த பயலுக்குக் கூறே இல்லெடா முனியன் மகனே.”
“சாமி”
“நேத்து சாயங்காலம் மகன் குடும்பத்தோட வந்து எறங்கிட்டான். இதுகளைப் பாத்தா நமக்கு வயத்திலே பால் விழுந்தது மாதிரி இருக்கு. ஆனா இதுக மொகங்களைப் பாத்தா ஏதோ கஷ்டப்படுறதுக்குனு வந்திருக்கிற மாதிரி இருக்கு. நீ இன்னைக்குப் பூரா நின்னு காமி இது எப்பேர்க்கொண்ட வீடு ஊருன்னு. இதுக்கெல்லாம் அந்தக் கூறில்லாதவன் சரிப்பட மாட்டான்.”
பச்சை நார்களில் முடிச்சுத் தெரியாமல் கட்டி முடித்துக் கீழே குழிகளில் விழுந்த சிறு துரும்பையும் சுத்தப்படுத்தி வெளியே வரும்போது அப்படி ஒரு நறுவிசாக இருக்கும். அப்போதுதான் இளங்கொடிகள் விட்டி ஆடிக்கொண்டிருக்கும். செடிகள் உடனே பந்தல் மேலேறிப் படரப்படாதா? என்று நினைக்க வைக்கும்.
காவணம் போட, நிறைச்சல் மேய, படப்புப் போட என்று வேலு எதைச் செய்தாலும், செய்கிறபோது பார்த்துக்கொண்டே இருக்கத் தோன்றும். செய்த பிறகு செய்ததைத் தொட்டுக்கொண்டே இருக்கத் தோன்றும். வேலுவை மட்டும் மேலத்தெரு, கீழத்தெரு இரண்டு தெரு ஜனங்களும் தொடமாட்டார்கள்.
வேலு வாசல் வெளியைக் கண்ணாடியாக்கி முடித்தபோது, வெயில் எல்லாவற்றையும் பொருபொருவென்றாக்கிக் கொண்டிருந்தது. மண்வெட்டியைப் படிமேல் வைத்தார். தெப்பமாய் நனைந்து கிடந்த உடம்பைத் தலையில் கட்டியிருந்த துண்டை அவிழ்த்துத் துடைத்தார். அம்பலக்காரர் உள்ளேயிருந்து வந்து செருப்பை மாட்டிக்கொண்டு, பைங்கால் பண்ணிக்கிடக்கும் வாசல் வெளியில் லாந்தினார். வேலு துடைத்துக் கொண்டிருந்த துண்டை இடுப்பில் கட்டிக்கொண்டு வெயிலைச் சற்றும் மதிக்காமல் நின்றார்.
உள்ளே பார்த்து, “வேலுக்குக் கஞ்சி ஊத்து’ என்றார் அம்பலக்காரர். வேலு தொழுவத்துக் கூரையில் சொருகியிருந்த பண்ணைக்காரன் தட்டை எடுத்துக்கொண்டு வந்தார். உள்ளே கறியலும் பொறியலுமான வாசனை வந்தது. அந்த அம்மாள் முதல் நாள் பழையதைக் கொண்டுவந்து தட்டில் ஊற்றினாள். அம்பலக்காரர் திண்ணையில் உட்கார்ந்து, பார்த்துக் கொண்டிருக்க, வேலு இடுப்புத் துண்டை அவிழ்த்துச் சாணமும் மூத்திரமுமாய்க் கிடந்த தொழுவத்தின் ஒரு மூலையில் போட்டு அதன்மேல் உட்கார்ந்து சாப்பிட்டார்.
முடிந்ததும், துண்டை எடுத்து முழங்கையில் போட்டுக்கொண்டு திண்ணையருகில் வந்தார். அம்பலக்காரர் திண்ணையில் ஒருக்களித்து உட்கார்ந்துகொண்டு, “வேலு, வீட்டுக்குப் பின்னாலெ நீர்த்தாரை தேங்கிக் கெடக்கு. அதை வகுந்து கொண்டு போய் வாரியிலெ விடு” என்றார்.
வெயில் உச்சந்தலைக்கு வந்துவிட்டது. பச்சைச் செடியைப் பார்த்தால்கூடக் கண் கூசும் போல வன்மையாய் அடித்தது. வெளேரென்று கிடந்தது பூமி. மண்வெட்டியை வாசற்படியிலிருந்து எடுத்துக்கொண்டு முழங்கைத் துண்டோடு வீட்டைச் சுற்றிக் கொண்டு பின்னால் நடந்தார் வேலு.
கன்னங்கரேலென்று துர்நாற்றத்தோடு சின்னக் குளமாய்க் கிடந்தது அது. வேலு மண்வெட்டியைக் கீழே வைத்துவிட்டு, முழங்கையில் கிடந்த துண்டை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு, வாரிப் பக்கமிருந்து வேலையைத் துவக்கினார். கட்டுக்கட்டென்று பொட்டல் நிலம் மண்வெட்டிக்குச் சாமான்யமாய் மசியவில்லை.
சாண் அகலத்தில் ஒரு கால்வாயை வெட்டிக்கொண்டே நீர்த் தாரையை நெருங்கும்போது, ஐயா மகன் மதுரையிலிருந்து வந்தவன் அந்தப் பக்கமாய்ச் சென்றான்.
கண் நிறைய வேர்வையோடு அவனைப் பார்த்த மாத்திரத்தில் வேலு, வெட்டை நிறுத்திவிட்டுத் தலைத்துண்டை அவிழ்த்து முழங்கையில் போட்டுத் தலைக்கு உயர்த்திக் கும்பிட்டார். “என்ன வேலு, நல்லா இருக்கியா?” என்று கேட்டுக்கொண்டே துபாய்க்காரன் வீட்டிற்குள் நுழைந்து விட்டான் அவன். வேலு முழங்கையில் கிடந்த துண்டை எடுத்து ஊறுகாயாய்க் கண்ணை உப்பில் ஊற வைத்துக்கொண்டிருந்த வேர்வையைத் துடைத்த பின் தலையில் கட்டிக்கொண்டு கால்வாய் வெட்டைத் தொடர்ந்தார்.
கறுப்புக் குளத்திற்கும் வாய்க்காலுக்குமிடையே ஒரு வெட்டுக்கு பாக்கி வைத்துவிட்டு வாய்க்காலைத் தடவிக் கொடுத்துப் பிடித்து விடுவதுபோல் மண்வெட்டியால் நீவினார். ஒரு தடவை அங்கிருந்து அங்காக வாய்க்காலைக் கூர்ந்து பார்த்தார். முகத்தில் திருப்தி தெரிந்தது. பாக்கியிருந்த ஒரு வெட்டைப் பார்த்து ஒரு வெட்டு விழுந்ததோ பூ விழுந்ததோ எனும்படி மண்வெட்டியால் போட்டார். அம்பலக்காரர் வீட்டுப் பெண்கள், ஆண்கள், குழந்தைகளின் அழுக்கு நீர் கரும்பாம்பு போல் வாய்க்காலில் ஓடி வாரியில் போய் விழுந்தது.
சிறுசிறு துர் ஜீவன்களோடு அந்தக் கறுப்புநீர் வாய்க்காலில் மனசில்லாமல் போய்க்கொண்டிருப்பதை, வேலு சலனமில்லாமல் பார்த்துக்கொண்டே நின்றார். அம்பலக்காரர் சம்சாரம், “என்ன வேலு, வெட்டி முடிச்சாச்சா?” என்று கேட்டுக்கொண்டே வந்தது. வேலு தலைத் துண்டை அவிழ்த்து முழங்கையில் போட்டுக்கொண்டு நின்றார்.
“இங்கெ வா, திண்ணையிலெ ஐயா உன்னைக் கூப்பிடுறாக” என்றாள். வேலு துண்டை எடுத்து மேலெ போட்டுக்கொண்டு மண்வெட்டியோடு சுற்றி வந்தார். அம்பலக்காரர் திண்ணையில் இருந்தார். அவரைப் பார்த்ததும் மேலே போட்டிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டார்.
ஒரு வழியா அழுக்குத் தண்ணிய வெட்டி விட்டுட்டெ, நாய் அதுக்குள்ள போய் பொரண்டு எந்திரிச்சி கறுப்பா வீட்டுக்குள்ளெ வந்து பட்டாசாலையிலெ வேற படுக்குது” என்றவர் கொஞ்சம் யோசித்துவிட்டு, “வா, எப்டி வெட்டியிருக்கெனு பாப்பம்” சொல்லிக்கொண்டே படியிறங்கினார். பின்னால் கூடி நடக்கவும் வேலு முழங்கைத் துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு, எதற்கும் இருக்கட்டுமென்று மண்வெட்டியையும் தூக்கிக்கொண்டு நடந்தார்.
அம்பலக்காரர் வாய்க்கால் வெட்டைப் பார்த்து “அதோ அந்த வளைவிலெ ஒரு போடு போட்டு மண்ணைப் பேரு, சிக்குது பாரு என்றார். வேலு இடுப்பிலிருந்த துண்டை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டு அம்பலக்காரர் வம்புக்காகச் சொன்ன இடத்தில் மண்வெட்டியால் ரெண்டுபோடு போட்டுவிட்டு வந்து தலைத் துண்டை அவிழ்த்து முழங்கையில் போட்டுக்கொண்டு நின்றார்.
இங்கெ வா” என்று கூப்பிட்டுவிட்டு வீட்டிற்குள் போய், ஒரு அரிவாளோடு வெளியே வந்தார். விறுவிறுவென்று படப்புக் கொல்லைப் பக்கம் நடந்தார். இடுப்புக்கிருந்த குட்டிச்சுவர் மேல் ஒரு கை வைத்துத் தாண்டும்போது கை பொசுங்கியது சூட்டில் வேலு பின் நின்று தாண்டி கொல்லைக்குள் போனார்.
கொல்லையில், கலக்கம் கலக்கமாய் நிற்கும் நாலு பனை மரங்களையும் அம்பலக்காரர் அண்ணாந்து பார்த்தார். ஏறிட்டுக் கண்ணை உயரத் தூக்கியதும் சூரியன் தகதகவென்று தெரியக் கூசிக் குனிந்தார். மறுபடி மறுபடி நிமிர்ந்து பார்த்து ஒரு பனையைக் குறி வைத்தார். அந்த மரத்தில் பச் பச்சென்று மூன்று குலை நுங்கு கிடந்தன. “இதையெல்லாம் டவுன்லெ எங்கனெ வாங்கிச் சாப்பிடப்போறாங்க, அந்த மூணு குலைகளையும் வெட்டுடா” என்றார்.
வேலு முழங்கையில் கிடந்த துண்டை எடுத்துத் தலையில் கட்டிக்கொண்டார். அரிவாளை வாங்கி இடுப்பில் செருகினார். சூட்டில் கொதித்து அவரைப் போலவே கறுப்பாய் நிற்கும் பனைமரத்தில் கிருகிருவென்று ஏறினார். வெகு தூரத்தில் போய் சின்னச் செடியருகில் போதாத நிழலுக்குள் நின்றார் அம்பலக்காரர். அப்படியும் குலைகள் கீழே விழுந்து ஒரு காய் தெரித்து அவர் கால்வரை வந்துவிட்டது.
வேலு மரத்திலிருந்து இறங்கத் துவங்கும்போது, அம்பலக்காரரும் நடந்து அருகில் வந்தார். கீழே இறங்கியதும், அம்பலக்காரர் முன்னால் வேலு தலையில் கட்டியிருந்த துண்டை எடுத்து இடுப்பில் கட்டிக்கொண்டு நுங்குக் குலைகளைச் சேர்த்தார்.
எல்லா நுங்குகளையும் அள்ள வேண்டி வந்தபோது இடுப்புத் துண்டை அவிழ்த்துத் தலையில் கட்டிக் கொண்டார். வீட்டிற்குப் போய்ச் சாக்கு வாங்கி வந்து அவ்வளவையும் அள்ளித் திண்ணையில் போட்டபோது, கோழிக்குழம்பு வாசம் தெருவரைச் சென்றது. அம்பலக்காரர் வந்து திண்ணையில் குளுகுளுவென்று ஓடிய காற்றில் உட்கார்ந்து சாய்மானத்தில் முதுகைச் சரித்தார். வேலு தலைத் துண்டை அவிழ்த்து முழங்கையில் போட்டுக் கொண்டார்.
“இந்தாடா வேலு” என்று ரூபாய் நோட்டை நீட்டினார். திண்ணைக்குக் கீழே நின்று இரண்டு கைகளையும் முறம்போல் விரித்து வாங்கிக் கொண்டார். “வேலு, நாளைக்கு விடியக் காலமெ வந்திரு. இங்கெயெ கஞ்சி குடிச்சிக்கிரலாம். நாலைஞ்சு வேலைக கெடக்கு. எல்லாம் வந்திருக்கிற புள்ளைகளுக்குத்தான். நம்ம பண்ணைக்காரனுக்கு அந்த வேலையெல்லாம் படியாது. வடகாட்டுக்குப் புழுதி உழவுக்குப் போனவன் இன்னும் வரலைனா பாத்துக்க. மறக்காம வந்திரு” என்றார்.
வேலு முழங்கைத் துண்டோடு நடந்து தெருத் தாண்டிப்போய்த் துண்டை விரித்து மேலே போட்டுக்கொண்டார்.
மறுநாள் காலையில் அம்பலக்காரர் வீட்டு வேலைக்காகக் கிளம்பி வெளியே வந்தபோது அவர் சம்சாரம், “என்ன துண்டை மறந்துட்டுப் போரவு. இந்தா மணத்துக்கிட்டுக் கெடக்கு. எடுத்துக்கிட்டுப் போ” என்றாள். வேலு தலையில் கிடந்த பத்துப் பதினைந்து செம்பட்டை முடியைத் தடவிக்கொண்டே சொன்னார், “இந்தத் துண்டுக்கு ஆளைக் கண்டா அவுத்து எழவு கட்டத்தான் நேரஞ் சரியாயிருக்கு. தலையிலெ கட்டுறது, மொழங்கையிலெ போடுறது, இடுப்பிலே கட்டுறதுனு இதுக்கே பொழுது சரியாயிருக்கு. துண்டே வேணாம். நான் போறேன்.
அம்பலக்காரர் திண்ணையில் வந்து உட்கார்ந்து முதுகைச் சரித்துக்கொண்டு பார்த்தார். வேலு எதிரில் இளம் வெயிலில் நின்றார். அவர் வெகு நேரம் உற்றுப் பார்த்துவிட்டு உள்ளேபோய் ஒரு புதுத் துண்டைப் பெட்டியிலிருந்து எடுத்துக்கொண்டு வந்தார்.
இந்தாடா வேலு. துண்டில்லாம நல்லா இல்லெடா ஒனக்கு. இதை வைச்சுக்கோ. அப்பத்தான் அம்சமா இருக்கும்.’
99
(செம்மலர், 1998; ‘இலக்கியச் சிந்தனை’ பரிசு பெற்றது)
கந்தர்வன்/ஒரு பொழுதாயினும் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)
