வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)

2-வது அதிகாரம்

எத்தன் கையில் சிக்கிய உத்தமி

மரத்தடியில், களைப்பு மேலீட்டினால் கிடந்த கோமதியைக் கண்ட பாலாவென்ற 7 வயதுச்சிறுமி தன்னை யறியாது புலம்பிக்கொண்டே தாயாரின் பக்கலில் உட்கார்ந்திருந்தாள். கேசவன் சென்று வெகு நேரமாகியும் வராமையினால் பாலாவின் கலக்கம் அதிகரித்தது. “அவன் எங்கு சென்றானோ! இன்னும் வரவில்லையே! “அம்மா! அம்மா! மயக்கம் தெளிந்ததா! கண்ணைத்திறந்து பாரேன். லீலா கத்துகிறாளே! அண்ணா கேசவனை இன்னும் காணவில்லையே!” என்று பரிதாபமாகக் கத்தினாள்.
சற்றுநேரங் கழித்து கோமதி சற்று களை தெளிந்து கண் விழித்தாள். “இன்னும் கேசவன் வரவில்லையே!” என்று மன வருத்தத்துடன் உட்கார்ந்திருக்கையில், அவ்வழியே சென்ற சிலர் “ஐயோ! சிறிய பையன் அநியாயமாய் மோட்டாரில் அகப்பட்டுக் கொண்டான்….என்ன அநியாய உலகம்! இதில் எத்தனை விபத்துக்கள் இந்தப் பாழும் மோட்டார் யமனால் நடக்கின்றன!” என்று சொல்லிக்கொண்டே செல்வதைக் கேட்ட கோமதி திடுக்கிட்டாள். “ஐயோ! என்னவோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொல்கிறார்களே! ஒருவேளை நமது கேசவனாக விருப்பானோ! பாலா! அவர்களருகில் சென்று விசாரித்தால் தெரியும்” என்று கூறியவாறு அவர்களருகில் சென்று “ஐயா! எங்கேயோ பையன் மோட்டாரில் அகப்பட்டதாகச் சொன்னீர்களே! எங்கே? எந்தப் பையன்? என் மகன் வெளியில் சென்றான், இன்னும் வரவில்லை. அதனால் கேட்கிறேன்” என்று வெகு பரிதாபகரமாகக் கேட்டாள்.
இது கேட்ட வழிப் போக்கர்கள் “அம்மா! இந்த சென்னைப் பட்டினத்தில் தினம் இத்தகைய விபத்துக்கள் கணக்கின்றி நடக்கின்றன. இதற்கொரு கேள்வி முறையும் கிடையாது. வண்டி யோட்டிகளில்;சிலர் நன்றாகக் குடித்து விட்டுத் தலைகால் தெரியாமல் வண்டியை விட்டுக் கொண்டு செல்வதால் இத்தகைய கோர சம்பவங்கள் தினம் நடைபெறுகின்றன. உங்கள் மகனோ,யாரோ! நாங்கள் எதைக் கண்டோம். 10 வயதிருக்கலாம்; சிறு பையன் வண்டியில் அகப்பட்டுக் கொண்டான். பையன் அழகாக இருக்கிறான். சைனா பஜார் தெருவில் இந்த விபத்து நடந்தது. உடனே பையனை ஜெனரல் ஆஸ்பத்திரிக்கு தூக்கிக்கொண்டு போனார்கள். அங்கு போய் விசாரித்துப் பாருங்கள்” என்று சொல்லிக்கொண்டே போய் விட்டார்கள்.
இது கேட்ட கோமதி, காலையில் ஒரு புதல்வனை சிறைக் கோட்டத்திற்கு அனுப்பியாயிற்று, இப்போது ஒருவனை யமனுலகத்திற்கு அனுப்பி விட்டோமா!” என்று மிக்க வருத்த மடைந்தவாறு, பாலா, லீலா இருவரையும் அழைத்துக் கொண்டு அந்த சாமான்களைத் தூக்க மாட்டாது தூக்கிக் கொண்டு பதைத்த மனத்துடன் ஜெனால் ஆஸ்பத்திரியை நோக்கி நடக்கலானாள். அதற்கும், இவள் இருக்குமிடத்திற்கும் ஒரு மைல் தூரமிருக்கும், இந்த மைல் தூரத்தையும் பொருட்படுத்தாது வெகு ஆவேசத்துடன் நடந்து ஆஸ்பத்திரியை அடைந்து விசாரிக்கையில் அன்று மோட்டாரில் அகப்பட்ட பையன் ஒரு பிராம்மணப் பையனென்றும் அவனை அவனுடைய பெற்றோர் வந்து ஒப்புக் கொண்டார்கள் என்றும் தெரிந்த உடனே கோமதியம்மாள் அந்த பெருந்திகிலிலிருந்து விடுதலையாகி மீண்டும் முன்பிருந்த இடத்திற்குப் போகலானாள். வழியில் இவளுடைய பலஹீனத்தினால் சற்று உட்காருவதும், படுப்பதும், நடப்பதுமாகச் சிறிது தூரம் சென்றாள்.
அங்கு வழியில் ஒருவன் சின்ன மாட்டு வண்டியில் போய்க் கொண்டிருந்தான். அவன் வண்டியை நிறுத்தி “அம்மணி! உங்களைப் பார்த்தால் பிராணன் இப்போதே போய்விடும்போலிருக்கிறதே! என்ன உடம்பு! நீங்கள் எங்கே செல்லவேண்டும், சொல்லுங்கள். இந்த வண்டியில் கொண்டு விட்டுவிடுகிறேன்!” என்று வெகு உருக்கத்தோடு கேட்டான்.
இதுகேட்ட கோமதி “ஐயா! எனக்கு வண்டியும் வேண்டாம்; நொண்டியும் வேண்டாம். என்னுடைய பையனைக் காணாமல் நான் தேடி யலைகிறேன். எனக்கு எங்கும் போக்கிடம் இல்லை. உலகத்தில் சகல இடமும் என்னுடைய சொந்த இடந்தான்” என்றாள். இதுகேட்ட அம்மனிதன் “தாயே! நான் உங்களுடைய பரிதாபத்தைக் கண்டு கேட்டேன். நீங்கள் பையனை எங்கே யனுப்பினீர்கள்? அல்லது அவனாக எங்கேனும் சென்றுவிட்டானா?” என்றான்.
கோமதி:- எனக்கு சற்று முன் மயக்கம் அதிகரித்ததனால் சிறிது ஆகாரம் வாங்கி வருவதாகச் சென்றான். இன்னும் வாராமை யினால் தேடுகிறேன்.
வந்தவன்:- ஓகோ! அந்தப் பையனா! என் வீட்டிலிருக்கிறான். அங்கு வந்து சாப்பாடு கேட்டான். தாயாருக்கு மயக்கம் என்றும் சொன்னான். சாதம் அவனுக்குப் போடச் செய்து கையிலும் கொடுக்கச் சொன்னேன், அவன் சாப்பிட்ட உடனே தன்னால் தடுக்க வியலாத மயக்க மேலீட்டால் தன்னை யறியாது அப்படியே படுத்து விட்டான், பாவம் பையன் களைத்துவிட்டான் என்று நானும் பேசாதிருந்து விட்டேன். என்னுடைய வீடு சமீபத்திலேயே இருக்கிறது. வாருங்கள்; அழைத்துச் செல்கிறேன். அதற்குள் வழியில் பையனைப் பார்த்தால் அங்கேயே இறங்கி விடுங்கள் – என்றான்.
இதுகேட்ட கோமதி அதற்கிசைந்து வண்டியில் தன்னிரு பெண்களோடு அமர்ந்தாள். வண்டி செல்லலாயிற்று. சுமார் ஒரு மைல் தூரம் சென்றதும் வண்டியை ஒரு வீட்டின் வாசலில் நிறுத்தி அவன் “பையன் எழுந்து போய்விட்டானா!” என்று வீதியிவிருந்த கிழவியைக் கேட்டான். அதற்குக் கிழவி “பையன் நம்முடைய பங்களாவுக்குப் போயிருக்கிறான்” என்றாள். இது கேட்ட மனிதன் கோமதியை நோக்கி “அம்மா! உங்கள் மகன் என்னுடைய பங்களாவுக்குச் சென்றிருக்கிறானாம். வாருங்கள்; அங்கேயே போகலாம்” என்று கூறினான்.
கோமதிக்கோ, “நம் மகன் விரைவில் ஆகாரம் கொண்டு வருவதாகக் சென்றவன் இவ்விதம் வேடிக்கை பார்த்துக் கொண்டிருக்கிறானே!” என்ற கோபமும் சற்று உண்டாயது, அதை அடக்கிக் கொண்டு அவனோடு பங்களாவிற்குச் செல்ல இசைந்தாள். வண்டி பின்னும் பலத் தெருக்களில் சென்று ஓர் பெரிய சவுக்குத் தோப்புக்குள் சென்றது. இருபுறமும் சவுக்கு மரங்கள் அடர்ந்திருந்தன. அந்த சவுக்கு மரங்கள் நல்ல செழிப்பாயும் உயரமாயும் வளர்ந்திருந்தமையினால் அவ்விடத்தில் சூரியனுடைய ரஸ்மி பூமியில் படாதவாறு நிழலாக இருந்தது. அந்த அடர்ந்த இடத்தில் வண்டி செல்கையில் கோமதியின் முகத்தில் உண்டான மாறுதலைக் கண்டு அந்த மனிதன், “அம்மா! அதோ தெரியும் பங்களாதான் என்னுடையது. இந்த சவுக்குத் தோட்டமும் அந்த பங்களாவும் அதைச் சுற்றியுள்ள அனேக தோட்டங்களும் என் சொந்தமானவை. கடவுள் எனக்கு ஏராளமான செல்வம் கொடுத்திருக்கிறார்” என்று பேசிக்கொண்டே யிருக்கையில் பங்களாவின் முன்பு வண்டி நின்றது.
வண்டியினின்றும் அம்மனிதன் இறங்கி, கோமதியையும் இறங்கச் செய்து உள்ளே அழைத்துச் சென்றான். அப் பங்களா வாசலில் நின்றிருந்த வேலைக்காரன் இவர்களை வெகு மரியாதை யோடு அழைத்துச் சென்றான். வந்த மனிதன் அவனை நோக்கி “பையன் உள்ளே இருக்கிறானா?” என்றான். “இருக்கிறான்” என்கிற பதிலைப் பெற்றதும் கோமதி மனம் மகிழ்ந்து “கேசவா! என் கண்மணீ! கேசவா! கேசவா!” என்று வெகு பக்ஷத்துடன் அழைத்துக்கொண்டே உள்ளே சென்றாள். பதில் ஒன்று மில்லாமையினால் தன்னை அழைத்துக்கொண்டு வந்த மனிதனை நோக்கி “ஐயா! என் குழந்தை எங்கே! இங்கிருப்பதாகத் தெரிவித்தீரே! என் குழந்தையைக் கூப்பிடும். நான் செல்லவேண்டும்” என்றாள்.
இதுகேட்ட அம் மனிதன் “அம்மா! நீங்கள் முதலில் சாப்பிடுங்கள்; பிறகு பேசிக் கொள்வோம்.” என்று கூறி கோமதிக்கும் பாலா, நீலா இருவருக்கும் சாப்பாடு செய்து வைத்தான். அரை மனதோடு உண்ட கோமதி “ஐயா! என் மகனெங்கே! என் குழந்தையைக் கூப்பிடுங்கள்.” என்றாள்.
வந்த மனிதன்:-பெண்ணே! உன் மகனாவது அவனாவது? அதெல்லாம் இனி நினைக்காதே! உனக்கு இப்போது பேஷான நல்ல காலம் பிறந்துவிட்டதென்று கூறவேண்டும். நீயும் உன் மக்களிருவரும் கஞ்சிக்கின்றிப் பஞ்சாகப் பறக்கிறீர்களே! இந்த பஞ்சம் அறவே ஒழியும் காலம் வந்துவிட்டது. உனது மகன் எவ்விதமேனும் பிழைத்துக் கொள்வான். நீ உன் மக்களுடன் அதோ அவ்வறை-யிலிருக்கும் ஜனங்களுடன் கப்பலேறி வெளி நாட்டிற்குச் செல்லவேண்டும். அங்கு உனக்குச் சரியான கூலி கிடைக்கும். எத்தனையோ சௌகரியமாக வாழலாம்; கொஞ்ச காலம் சென்றபிறகு இந்த நாட்டிற்குத் திரும்பிவிடலாம்- என்று கூறினான்.
இந்த சுடு சரம் போன்ற கடுமையான மொழியைக் கேட்ட கோமதி இடியோசையைக் கேட்ட நாகம் போல நடுநடுக்கலுற்று, “ஆ! அடே பாதகா! உன் வஞ்சகத்தைக் காட்டி விட்டாயா! என்னை அயல் நாட்டிற்கு அனுப்புவதற்கோ நீ இத்தனை மோசமாக அழைத்து வந்தாய்! சண்டாளா! உன் மோச வலையில் சிக்கவோ என் விதி அமைந்தது. நான் அதற்கு ஒருபோதும் சம்மதிக்க மாட்டேன். என்னுடைய குழந்தைகளுடன் பிச்சை எடுத்தேனும் இங்கு தான் ஜீவிப்பேன். நீ என்னைக் காப்பாற்றவேண்டாம். நாசகாலா!” எனத் திட்டியவாறு “பாலா! லீலா! வாருங்கள்” என்று இருவரையும் கையில் பிடித்துக்கொண்டு நடக்க வாரம்பிக்கையில், படீரென்று அவளிருந்த அறையின் கதவு பூட்டப்பட்டது. வேடன் கையிலகப்பட்ட மாடப் புறாவைப் போல இரு குழந்தைகளுடன் பரிதபித்த வண்ணம் அவள் நின்றுவிட்டாள். தன் விதியை எண்ணிப் புலம்பினாள்; கதறினாள். தான் எவ்விதம் தப்புவது என்பதறியாது தத்தளித்தவாறு மூர்ச்சையாகி விட்டாள்.

பிறகு கோமதி கண் திறந்து பார்க்கையில் தானும் தன் மக்களும் பல ஜனங்களுக்கு மத்தியிலிருப்பதாகத் தோன்றியது. நன்றாகக் கண் விழித்துப் பார்க்கையில் ஏதோ வண்டியில் நகருவது போலத் தோன்றியது கண்டு திடுக்கிட்டு அருகிலிருந்தவர்களை விசாரிக்கையில் “நாம் இப்போது கப்பவில் நடுக் கடலில் போய்க் கொண்டிருக்கிறோம்” என்றார்கள். அந்தோ! கோமதியின் மனக் கொதிப்பையும், அளவிட வியலாத துக்கத்தையும் கூறவேண்டுமா! நெருப்பிடை மெழுகென உருகினாள்; தத்தளித்தாள். “ஐயோ! சண்டாளா! எத்தனை பேர்களை இவ்விதம் ஏமாற்றியும், மோசம் செய்தும் அழைத்துச் செல்கிறீர்களோ! நேட்டாலில் கஷ்டப்பட்டேன். ரப்பர் தோட்டத்தில் இம்சைப்பட்டேன். தேயிலைத் தோட்டத்தில் வதைப்பட்டேன்.” என்று ஜனங்கள் சொல்லக் சொல்லக் கேட்டிருக்கிறோமே! ஹா! அந்த கஷ்டம் நமக்கே வந்துவிட்டது. ஏ பரம் பொருளே! ஒரு குழந்தையைக் கண்முன்பு கண்டவாறு பிரிந்தேன்; இன்னொரு குழந்தையைக் காணாது பிரிந்துவிட்டேனே! என் வயிறு செய்த பாவமா இது! ஐயோ! என்ன செய்வேன்? புருஷன் குடிகாரனாகவும்: வேசிக் கள்வனாகவும் இருப்பதனாலன்றோ என் கதியும் என் மக்களின் கதியும் இவ்விதமாயிற்று, ஏ பாழுங் குடியே! வேசிப் பேயே! என் கண்ணீர், உன்னை விடுமா! என் சாபம் உன்னைத் தாக்காது போகுமா?” என்று கண்ணீர் விட்டாள்.
அருகிலுள்ளோர் “ஏன் கத்துகின்றாய்! நாம் அங்கு சென்றால் வெகு சுகமாக வாழலாம். இரு பிள்ளைகளும் செத்துப் போய்விட்ட தென்று எண்ணிவிடு” என்று வெகுவாய்த் தேறுதல் கூறினார்கள். என்ன சொல்லியும் சமாதான மடையாத கோமதி அந்த கடலிலேயே குதித்துவிட எண்ணினாள், தன்னிரு பெண் மக்களையும் நோக்கிப் பேசாது அந்த எண்ணத்தை மாற்றிக்கொண்டாள்.
கப்பல் துறைமுகத்தை அடைந்தது, கூலிகள் எல்லாம் இறக்கப்பட்டு அந்த முதலாளி வசம் ஒப்புவிக்கப் பட்டார்கள். அந்த தீவில் தனியே யகப்பட்டுக்கொண்ட கோமதியின் நிலைமை முன்னிலும் அதிகரித்து பலஹீனமாகிவிட்டது. அங்கு நடக்கும் கொடுமைகளும், இம்சைகளும் கூறத் திறமன்று, “கூலி நிரம்ப கிடைக்கும்” என்று ஏமார்ந்து வந்துவிட்ட கைதிகளெல்லாம் மிக்க விசனத்தை யடைந்து பரிதபிக்கலானார்கள் என்றால் கோமதியின் கதியைக் கூறவேண்டுமா! தன் விதி இது என்றும், மீள வழி இல்லாமையினாலும் தன் மக்களுடன் அங்கு உழைத்து ஒரு வருடத்தைக் கடத்தினாள். இத்தகைய விசனத்தின் பலனாக அவளது கருப்பம் குறை மாதத்தில் சேதமாகிவிட்டது.
கோமதி யாருடனும் பேசுவதில்லை. எந்த நேரமும் தன் கண்ணீரையும் இரு பெண்களையுமே தனக்குத் துணை கொண்டு வேலை பார்த்துவந்தாள். அங்கு வந்தவர்களில் சிலருக்குத் துன்பம். சிலருக்கு இன்பம்; இன்பப்படும் கோஷ்டியில் சேர்ந்தவர் அந்த இடத்து எஜமானுக்கும் மற்றோருக்கும் அடங்கித் தமது உயிரினும் இனிய கற்பைக் கொள்ளை கொடுத்த பெண்டீர்களே யாவர். அவர் ஆணைக்கும் ஏவலுக்கும் உட்பட்ட ஆள்களும் சிலர் துன்பமற்றிருந்தார்கள். அந்த வகையில் சேராத எத்தனையோ பெண்மணிகள் அவர்களால் கொடுமைபட்டுத் துன்பத்திற் கிலக்காகி இருந்தார்கள்.
இந்தக் கொடிய தொத்து நோயாகிய நரசோரத்திற்குள் பெருஞ் சோரமாகிய கற்பைப் பங்கம் செய்ய எண்ணும் புண்ணிய வான்களின் கண்ணில் நமது கோமதி இங்கு வேலைக்கு வந்து சுமார் ஒரு வருடத்திற்கு மேல் படாமலிருந்தாள்; எனினும் அதற்குமேல் அந்த பாதகர்கள் தங்கள் எண்ணத்தை வெளியிட்டுக் கூறியதை அறிந்த கோமதி அவர்களைத் துரும்பிலும் துரும்பாக மதித்து வெகு அலக்ஷ்யமாகப் பேசி உதாசீனம் செய்து “ஏ பாதகர்களே! உங்கள் அநியாயத்தைக் கண்டிக்க எந்த தெய்வமும் முன்வரவில்லை; உங்களுடைய பேய்க் குணத்தை அடக்க எந்த கவர்ன்மெண்டும் கவனிக்கவில்லை என்னும் மமதை உங்களை இத்தகைய அடாத செய்கையில் புகுத்துகின்றது. இதையழிக்கக் கடவுள் பார்த்துக் கொண்டு தானிருப்பார். என்னுயிரை இழந்தாலும் இழப்பேன். என் கற்பை உங்களுக்கு அர்ப்பணம் செய்யமாட்டேன்” என்று முறைப்பாகக் கூறிவிட்டாள். இதுகேட்ட அவர்களுக்கு ஆத்திரம் மூண்டுவிட்டது…. இந்த ஆத்திரத்தினால் அவளை இன்னும் கொடுமையாக நடத்தினார்கள். அந்தத் தீவை விட்டு வருவதற்கு ஒருவித வழியும் தெரியாமல் விழித்தவாறு கடவுளை வேண்டிக்கொண்டு தன் காலத்தைக் கடத்தலானாள். இக் குழந்தைகளுடன் அங்கு கோமதி யடைந்த துன்பத்தை நேரில் கண்டவர்கள் தானறிவார்கள்.

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன் – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)

One Comment on “வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1)”

Comments are closed.