வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல்)

3-வது அதிகாரம்
பற்றுடையோரன்பு – சிற்றின்பத் துன்பம்

மரத்தடியில் தாயைக் காணாது தத்தளித்த கேசவன் அக்கம் பக்கத்தில் விசாரித்தான். ஒரு தகவலும் தெரியவில்லை; கண் கலங்கினான், “ஐயோ! என் தாயே! என்னை விட்டு நீ எங்கு சென்றாய்? உன்பொருட்டு நான் எத்தனை வேகமாய் வந்தும் உன் முகதரிசனம் கிடைக்காது உன்னையே பறிகொடுத்தவன் போலத் திண்டாடுகின்றேனே! ஹா! அம்மா! அம்மா! பாலா! லீலா!” என்று கதறினான். கேசவன் தந்தையை என்றும் அதிகமாக பக்ஷத்துடன் நேசித்தறியமாட் டான். தாயிடத்திலேயே பெரும் பாசம் வைத்திருந்தான். ஆதலால் தாயின் பிரிவும், தங்கைகளின் பிரிவும் அவன் சிறிய பாலகனாயினும் அபாரமான துக்கத்தை பளித்தன. இனிமேல் தான் தங்கைகளையும், தாயாரையும் எங்குத் தேடுவது? தான் யாரிடம் அண்டி விசாரிப்பது, என்ற கட்டுமீறிய கலக்கத்தினால் விம்மி விம்மிப் புலம்பிக்கொண்டே வழியோடு செல்லலானான்.
வழியில் பார்ப்பவர்களெல்லாம் “ஏனப்பா அழுகிறாய்? ” என்று கேட்டால் “என் தாயாரைக் காணவில்லை” என்று தன் கதையைக் கூறுவான். இவன் தாயாரைக் கண்டவர்கள் யார்? இக் கலியின் முதிர்ச்சியில் செல்வவந்தர்களைச் சிறப்பித்து ஆதரிப்பதும், தனத்தின்மேல் தனத்தைத் தேடிப் புதைப்பதும், தன்னுடைய சுய நலத்தை மட்டும் கவனித்துப் பிறரின் விஷயத்தில் எது எவ்விதமாயினும் அக்கரை, இன்றி அதிலும் ஏழை என்றால் சற்றும் இரக்கமின்றி அவர்களை அலக்ஷ்யம் செய்துத் திட்டி வேலை வாங்குவதுமாக இருக்கும் நிலைமையில் இந்த அனாதைச் சிறுவனைக் கவனிப்பார் உண்டா! விசாரிப்பதும் விலகுவதுமாகவே வெகுபேர்கள் சென்று விட்டார்கள்.
இவனுக்குத் தான் படித்த இலவச பாடசாலையின் உபாத்தியாயரையும் சில பையன்களையும் தவிர வேறு யாரையும் தெரியா தாகையினால் தனது பாடசாலையை நோக்கி நடந்து உபாத்தியாயரைக் கண்டு அவரிடத்தில், நடந்த சகலமான விஷயங்களையும் தெரிவித்தான். உபாத்தியாயர் கேசவனின் புத்தி சூக்ஷ்மத்தைக்கண்டு என்றும் அவனிடம் பக்ஷமாயிருப்பவராதலால் கேசவனின் கதையைக் கேட்டதும் மிக்க துயரமடைந்து “அப்பா! நான் இவ்விஷயத்தைப் போலீசாரிடத்தில் தெரிவிக்கிறேன். உன்னுடைய தாயார் வரும்வரையில் நீ என் வீட்டிலேயே சாப்பிட்டுக்கொண்டு பாடசாலையில் படித்துவா; பிறகு பார்க்கலாம்” என்றார்.
இது கேட்ட கேசவன் அதற்கு ஒப்புக்கொண்டு, அவர் வீட்டிலேயே இருந்தான். அவனுடைய உபாத்தியாயரும் இவன் தாயார் விஷயமாகப் போலீசாரிடம் தகவல் கொடுத்தார். கேசவன் வீட்டில் இருப்பதால் வாத்தியாருக்கு வேட்டி துவைப்பது, வென்னீர் விளாவுவது, கடைக்குச் செல்வது முதலிய வேலைகள் குறைந்தன. அவற்றைக் கேசவன் வெகு பக்ஷத்துடன் செய்துவந்தான். குருவின் பத்தினிக்கு கேசவனுக்கு உணவிடுவது, பெருத்த வெள்ளத்தில் செல்வம் அடித்துக்கொண்டு போய்விடுவது போலாய்விட் டது. அதை வெளியில் பலவிதத்தில் சொல்லியும் பார்த்தாள். உபாத்தியாயர் கேளாமையினால் அந்த அம்மாள் மிக்க கோபமடைந்து தினம் கேசவன்மீது ஒவ்வொரு குற்றத்தைச் சொல்வதும் அவனை வீட்டிலுள்ள பத்து பாத்திரங்கள் தேய்க்கவும், தண்ணீர் மொள்ளவுமான வேலைகளைச் செய்யச் சொல்லவும் ஆரம்பித்தாள்.
உத்தமனான கேசவன் இந்த கஷ்டங்களையும் பொருட்படுத்தாமல் வெகு பொறுமையோடு செய்துகொண்டே தன் பாடங்களை இராக்காலத்தில் படித்து வந்தான். இவ்விதமே சில வருடங்கள் சென்றன. கேசவனின் துரதிருஷ்ட-வசத்தினால் அவனுடைய குரு காலகதி யடைந்துவிட்டார். அவராலேயே நடத்திவந்த அச்சிறு பாடசாலையின் வேலை நிர்வாகத்தைப் பிறகு கைப்பற்றும் கர்த்தாக்கள் இல்லாமையிஞல் பாடசாலையும் எடுபட்டுவிட்டது. புருஷன் இருக்கையிலேயே வயிறெரிந்த உத்தமி பிறகு ஒரு அனாதையை ஆதரிப்பாளா!
வீட்டை விட்டு வெளியேறி விட உத்தரவு பெற்ற கேசவன் -பன்னிரண்டு வயதுடைய பாலகன் – அழுதுகொண்டே வெளியில் வந்தான். தன் தாயாரின் விஷயம் ஒன்றுமே தெரியாமையினாலும் தான் தனித்த பரதேசியானதாலும் அளவற்ற துக்கத்துடன் “இனிமேல் நான் எவ்விதம் பிழைப்பது? யாரிடம் செல்வது? இவ்விதம் அவஸ்தைப் படுவதைவிட உயிரை விட்டுவிடுதல் மேல்” என்று தீர்மானித்தான். சென்னை ஹைகோர்ட்டுக்கு எதிரிலுள்ள கடற்கரையில் ஒரு நாள் விசனமே வடிவமாக உட்கார்ந்திருந்த கேசவன் தன்னைமீறிப் புலம்பியவாறு “இன்று இருள் சூழும் வரையில் இங்கு இருந்து கடலில் விழுந்து உயிரை விடுவது” என்று தீர்மானித்தான்.
அன்று அந்த கடற்கரையில் பொதுக்கூட்டம் ஒன்று நிகழப் போவதால் அதற்காக ஆயிரக்கணக்கான ஜனங்கள், ஆண்களும் பெண்களும் குழுமிவிட்டார்கள். கூட்டத்தின் ஆரம்பத்தில் தேசீய கீதம் பாடப்பட்டது. அந்த கானத்தின் ஒலியைக் கேட்ட கேசவன் சங்கீதத்தினால் கட்டுப்பட்டு அவ்விடம்விட்டு கூட்டத்தினருகில் வந்தான். தேசீய கீதம் வெகு இனிமையாகப் பாடினவனும் தன்னைப்போன்ற சிறுவனேயாகையினால் “நானும் அவனைப்போல பாடிக்களிக்கும் காலம் வருமா?” என்று ஏங்கினான். அத்தருணம் அங்கு கூட்டத்தில் உட்கார்ந்திருந்த ஓர் மாது “கேசவா!” என்று அழைத்தாள்.
இக்குரல் கேட்ட கேசவன் திரும்பிப்பார்த்து அங்கு ஓடினான். அந்த அம்மாளைப் பார்த்ததும் “அம்மா! நமஸ்காரம். என்னை தங்களுக்கு நினைவு இருந்ததா!” என்றான். அம்மாது அவனை நோக்கி “கேசவா! நீ அனாதையாக நின்றுவிட்ட செய்தியறிந்தேன். உன்னுடைய கதையைக் கேட்டு மிக்க விசனப்பட்டேன். என்னுடைய பெண்ணுக்கு ஓர் வேலைக்காரன் தேவை; அவ்வீட்டில் நீ வேலை செய்து கொண்டிருக்கிறாயா?” என்று கேட்டாள். கடவுளே தனக்குப் பிழைக்கும் வழி காட்டியதைத் தட்டக்கூடாதென்று நினைத்து அவன் அதற்கு ஒப்புக் கொண்டான். பிறகு கூட்டம் நடந்தேறியதும் அம்மாதுடன் அவள் வீட்டிற்குச் சென்று அன்று முதல் அந்த வேலையை வெகு ஒழுங்காகவும், பக்தியோடும் செய்து வந்தான்.
தினந்தோறும் வேலை ஓய்ந்த நேரத்தில் மாலைப்பொழுதில் கடற்கரையில் உட்கார்ந்து வெகு ஆநந்தமாகப் பாடிக்கொண்டிருப்பதும், பிறகு வீடு செல்வதுமாக இருந்தான். இவ்விதமே சில மாதங்களாய் விட்டன. இவன் தினம் பாடிக்கொண்டே வருவதை அங்கு வரும் அனேகர் கேட்டு ஆனந்திப்பது வழக்கம். அவ்விதம் கேட்போரில் பலர் அவனைத் தம்தம் வீட்டிற்கு அழைத்துச்சென்று பாடச்சொல்லிக் கேட்பார்கள்.
கௌரவமான சிலரை ஒன்றுகூட்டி ஒரு சபையை ஏற்படுத்தி அதில் நாடகம் ஆடுவதும், பாட்டுக்கச்சேரி நடத்துவதுமாகச் சில வருஷங்களாக பொன்னுசாமி என்னும் (ஒருவர் நடத்தி வருகிறார். அவர் ஒரு தினம் கடற்கரையில் கேசவன் பாடுவதைக் கேட்டு ஆனந்தித்துக் கேசவனைத் தமது நாடகத்திற்குச் சேர்த்துக்கொள்ள ஆசைப்பட்டு அவனை அழைத்து “எங்கள் சபைக்கு வருகிறாயா! நாங்களே உனக்குச் சாப்பாடு போட்டு வைத்துக்கொள்கிறோம்” என்று கூறினார்.
தான் அன்று கூட்டத்தில் பாட்டு கேட்டபோதே தனக்கும் அம்மாதிரியாக பாடக்கூடிய சமயம் வருமா என்று ஏங்கிக்கொண்டிருந்தானாகையினால் அவன் உடனே முழுமனத்தோடு சம்மதித்தான். வேலை செய்துகொண்டிருந்த வீட்டில் உத்தரவு பெற்றுக் கொண்டு அவரோடு சென்றுவிட்டான். கேசவனுக்கு வயது 12 தான் ஆகிறதென்றாலும் பார்வைக்கு நன்றாகவும், வசீகரமாகவும் இருப்பான். ஆகையினால் அவனுக்கு கிருஷ்ணன் வேஷங்கொடுத்து நடிக்கச்செய்தால் மிக்க பொருத்தமாயும், அழகாயுமிருக்கும் என்று நினைத்து கிருஷ்ணலீலையே முதலில் நடத்தத் தீர்மானித்து அன்று முதல் கேசவனுக்கு வீட்டிலேயே இருக்க இடங் கொடுத்து விட்டார்.
கேசவன் இந்த இடத்தில் வந்துசேர்ந்த பிறகு விளையாட்டுப் புத்தியுடைய சிறு பையனாதலால் தன் விசனத்தையே மறந்து வெகு சந்தோஷத்தையடைந்தான்; எனினும் தன் தாயார், தங்கைகளைப்பற்றி நினைக்காத நாள் இல்லை. அவர் தான் சொல்லிக்கொடுக்கும் பாடல்களையும், நடிக்கும் விதங்களையும் நன்றாகக் கற்றுக்கொள்ளச் செய்வதோடு அவனை நன்றாக முன்னுக்குக் கொண்டுவர எண்ணி பள்ளிக்கூடத்திலும் இலவசமாகவே படிக்கச் சிபார்சு செய்தார்.
கேசவன் வெகு ஆநந்தத்துடனும், முழுமனத்துடனும் கிருஷ்ணலீலா நாடகத்தைக் கற்றுக்கொண்டதால் இரண்டுமாத காலத்திற்குள் வெகு நன்றாகப் பாடம்செய்து ஒத்திகையில் முதல் தரமாக நடித்து சபையோரைக் களிப்பித்ததனால் உடனே நாடகத்தைப் பகிரங்கமாக நடிக்க ஏற்பாடு செய்து மாஸ்டர் கேசவன் கிருஷ்ணனாக நடிப்பான் என்று விளம்பரங்கள் செய்துவிட்டார்கள்.
கிருஷ்ணன் குழலூதுவதுபோல புகைப்படம் பிடித்து அதை நோட்டீஸில்; பிரசுரம் செய்தார்கள். படத்தில் வெகு அழகாக அமைந்துள்ள கிருஷ்ணனைப் பார்த்து எல்லோரும் நாடகத்திற்குத் திரள் திரளாக வந்தார்கள். கொட்டகை நிரம்பி இடமில்லாதபடி ஆய்விட் டது. ஜனத்திரளின் பயனாக ஆயிரமாயிரமாகப் பணம் வசூலாகிவிட் டது. அன்று நடந்த கிருஷ்ணலீலையில், கேசவன் ஆயிரக்-கணக்கான ஜனங்களின் மனத்தை ஒருங்கே கொள்ளையடித்துவிட்டான். அவனைப் பற்றிப் போற்றாதோர் இல்லை. “அடாடா! என்ன அழகாய் நடித்தான்! என்ன இனிமையான சாரீரம்!” என்று புகழ்ந்தவாறு எல்லோரும் வீடு திரும்பினார்கள்.
கேசவனின் கஷ்டகாலம் விமோசனமே ஆய்விட்டது எனலாம். அதே கிருஷ்ண-லீலையை அடுத்தடுத்துப் பத்து முறை நடித்தார்கள். கேசவனுக்கு அந்த நாடகத்திலேயே எண்ணற்ற மெடல்கள் கிடைத்ததுடன் நல்ல கீர்த்தியும் உண்டாகிவிட்டது இத்தனை பெரும் புகழ் தனக்கு வந்துவிட்டதனால் சந்தோஷம் ஒரு புறம் கொண்டான்; எனினும் இவைகளைப் பார்த்துச் சந்தோஷப்பட தன் தாயார் இல்லையே என்ற ஏக்கம் மட்டும் அவனது மனத்தை வாட்டியது. கடவுளைக் குறித்து இது விஷயமாகச் சதா பஜனை செய்து கொண்டே இன்னும் பல நாடகங்களையும் கற்றுக்கொண்டு படிப்பையும் கவனித்து வந்தான். இவ்விதமே பின்னும் சில வருடங்களாயின. கேசவன் மெட்ரிக்குலேஷனையும் பாஸ் செய்தான். அதற்குமேல் காலேஜிலும் சேர்ந்தான். வயது 16 ஆயிற்று. சென்னையில் கேசவனின் பெயரை யறியாத குழந்தைகள் கூட இல்லை.
சென்னைக்குத் தெற்கேயுள்ள கடலூரில் ஓர் பெரிய தனவந்தர் இருந்தார். அவருக்கு செல்வத்திற் கேற்ற சந்தானமும் நிரம்பி இருந்தது. வாய் வாழைப் பழம்; கை கரணைக் கிழங்கு என்பது அவருக்கே தகும். தன்னுடைய மக்களுக்கே வயிறு நிரம்பச் சாப்பாடு போட மாட்டார். அவருக்கு இத்தனை செல்வம் எந்த வகையில் சேர்ந்ததெனில் அவர் ஓர் நாடகக் கம்பெனி வைத்து அதற்குத் தலைவராக விருந்து ஏராளமான பொருள் திரட்டிவிட்டார். அவர் வீட்டில் வேலை செய்துகொண்டிருந்த ஓர் பெண் பார்ப்பதற்கு நல்ல வசீகரமும், அழகுக் கேற்ற கூந்தலுடன் மா நிறமுமாக விருந்தாள். அவளுக்கு சுமார் பத்து வயதிருக்கும். அந்த வீட்டில் அப்பெண் இரண்டு வருடங்களுக்கு முன்னால் அந்த நாடகக்காரருக்குத் தெரிந்த வேறொருவரின் சிபார்சின் பேரில் வேலைக்கு வந்தாள். வீட்டு வேலைகளை எல்லாம் செய்வதோடு நாடகக் கொட்டகையில் நாடகத் தன்று கூடவே சென்று அங்கு பெருக்குவதும், ஜமக்காளம் போடுவதும், நாடகத்தில் நடித்தபிறகு துணி மணிகளை வாரி மூட்டை கட்டுவதுமான வேலையையும் அப் பெண்ணே செய்யவேண்டும். இத்தனை வேலை செய்யும் பெண்ணுக்கு அவர் மாதம் 5 ரூபாய் சம்பளமும், இரண்டு வேளைச் சாப்பாடும் வெகு தாராளமாகப் போட்டு வந்தார்.
பிரதி நாடகத்திற்கும் அந்தப் பெண் சென்று பெருக்கிவிட்டு அங்கு ஓர் மூலையில் சாமி ஆடிக்கொண்டே உட்கார்ந்திருப்பாள். அந்தப் பெண் தூங்குவதைக் கண்ட முதலாளி வெள்ளென்று நாய் போலக் குலைத்துச் சீறி விழுந்து “எ தடிப் பெண்ணே! இதென்ன மூதேவித் தூக்கம். இங்கு தூங்குவதற்காகவா வந்தாய்? தினம் இரண்டு வேளை சோற்றைக் கொட்டிக்கொள்ளவில்லையா? தின்ற மயக்கத்தில் தூக்கம் வந்துவிட்டதோ! மாதம் 5 ரூபாயை வாங்கி முடிந்துகொண்டு மூதேவி போலத் தூங்குகிறாயா?” என்று அதட்டுவார்.
இந்த லோபியின் மிரட்டலுக்குப் பயந்த அந்த சிறுமி தூங்கி வழிந்துகொண்டே உட்கார்ந்திருக்கையிலும் இங்கு நாடகத்தில் பாடும் பாடல்கள் அனேகம் அவளுக்குப் பாடமாக வந்துவிட்டன. சங்கீதத்தில் மிக்க பிரேமையுள்ள அப் பெண் பிறகு நாடக தினத்தில் தூங்காமலேயே விழித்திருந்து நாடகத்தைக் கவனிக்க வாரம் பித்தாள். சங்கீதத்தினிடம் வசியமாகாதவர்கள் உலகிலுண்டா! அந்தப் பெண் வீட்டில் வேலை செய்யும்போதும், இன்னும் மற்ற நேரத்திலும் இந்த நாடகத்தில் கேட்ட பாடல்களைப் பாடிக் கொண்டே இருப்பாள்.
நாம் முன்னர் தெரிவித்த சொந்தக்காரர் ஒரு காரியமாக் கடலூருக்கு வந்தார். அவர் எப்போது வந்தாலும் இந்த தனலோபி வீட்டிலேயே இறங்குவது வழக்கம். அப்படி வந்தவர் இவர் வீட்டிலிருக்கையில் அந்தப் பெண் வீடு பெருக்கும்போதும், பாத்திரம் தேய்க்கும்போதும் ஓயாது பாடுவதைக் கண்டும் அந்தப் பெண்ணின் இனிமையான சாரீரத்தைக் கேட்டும் ஆச்சரியமடைந்து அந்தப் பெண்ணை அருகிலழைத்து “அம்மா! நீ யார்? எங்கிருப்பது? உனக்கு வயதென்ன ஆகிறது? உன் பெற்றோர்கள் எங்கே இருக்கிறார்கள்? எத்தனை நாளாக இங்கு வேலை செய்கிறாய்?” என்ற கேள்விகளை அடுக்கடுக்காகக் கேட்டார்.
அதுகேட்ட அந்தப் பெண்மணி வெகு மரியாதையுடன் “ஐயா! நான் இந்த வீட்டில் இரண்டு வருடங்களாக வேலை செய்கிறேன்; நாங்கள் தற்போது இந்த கடலூரில் தான் இருக்கிறோம். இதற்கு முன்னர் பெரியவர்கள் வேறு ஊரில் இருந்தார்களாம். என் தாயாரும், எனக்கொரு தங்கையும் தானிருக்கிறார்கள். என் தங்கை கேவலம் சிறியவள். என் தாயார் காச நோயினால் மிக்க பலஹீன மடைந்துவிட்டார்கள். என் தந்தையின் விஷயமே தெரியாது. என் தாயும் அது பற்றி எதுவும் தெரிவிப்பதில்லை. என்னுடைய இந்த சம்பளத்தினால் எங்கள் தாயாரும் தங்கையும் ஏதோ கஞ்சி குடித்துக்கொண்டும் பட்டினி கிடந்தும் ஜீவிக்கின்றார்கள்” என்று தன் முழு விருத்தாந்தத்தையும் மிக்க வருத்தத்தோடு கூறினாள்.
வந்தவர்:- அம்மா! உன் விஷயம் கேட்க மனம் மிகவும் வருந்துகின்றது. உன் பெயரென்ன?
பெண்மணி:- பெரியவரே! குடிக்கத் தண்ணீர் கொடாத மகராஜிக்கு கங்கா பவானி என்று பெயராம் என்கிற பழமொழிப் படிக்கு ஒருவிதத்திலும் பரிமள மற்ற அனாதையாகிய எனக்கு என் தாயார் பரிமளா என்று பெயர் வைத்து அழைக்கிறாள். என்னுடைய இந்த நிலைமையில் பரிமளா என்று என் பெயரைச் சொல்லி கொள்ள வெட்கமடைந்து என்னைக் கேட்போருக்கும், இந்த வீட்டுக்காரர்களுக்குங் கூட என் பெயரை நான் கூறாது கன்னி என்று கூறி வருகிறேன். தாங்கள் ஏதோ என் பேரில் அனுதாபத்துடன் அழைத்து விசாரித்ததால் நான் எனது நிலைமையைப் பூர்ணமாக உங்களிடம் கூறினேன்” என்று மிகக் கண் கலங்கியவாறு கூறினாள்.
இதைக்கேட்ட பொன்னுசாமி உண்மையிலேயே மனமுருகிப் போய் “பரிமளா! நான் உன் தாயாரைப் பார்க்கவேண்டும். அங்கு அழைத்துச் செல்கிறாயா!” என்று கண்ணீர் உதிரக் கேட்டார். அதற்குப் பரிமளா சம்மதித்து அவரை யழைத்துக் கொண்டு வீடு சென்றாள். காச நோயினால் மிக்க மெலிந்து கிடக்கும் பார்வதியம்மாள் வெகு சிரமத்தோடு எழுந்து உட்கார்ந்து மரியாதை செய்து “வாருங்கள்; உட்காருங்கள்” என்றாள். பொன்னுசாமியும் உட்கார்ந்து அவளை நோக்கி “அம்மா! உங்கள் வரலாற்றைக் குழந்தையின் மூலமறிந்தேன். உங்கள் மகள் வெகு இனிமையாகப் பாடுவதைக் கேட்டு நான் மிக்க சந்தோஷமடைந்தேன். நான் உங்களுடைய மகளின் சங்கீதத்தைக் கேட்டது முதல் என் மனம் உங்கள் குழந்தையை என் கூடவே வைத்துக் கொள்ளப் பிரியப்படுகின்றது. உங்களுடைய சகலமான செலவையும் நான் பார்த்துக் கொள்கிறேன். நான் ஓர் நாடகக் கம்பெனி வைத்திருக்கிறேன். அதில் உங்கள் குழந்தையைக் கொண்டு சேர்க்க என் மனம் இச்சிக்கின்றது. உங்கள் சம்மதத்தை அறிந்து உங்களை அழைத்துச் செல்வதற்கே வந்தேன். உங்கள் சம்மதத்தைத் தெரிவித்தால் அதன்படியே செய்கிறேன்” என்றார்.
ஏற்கெனவே தன் குழந்தை அங்கு கஷ்டப்படுவதை பறிந்து “அந்த கஷ்டத்தினின்றும் விடுதலை பெற்றால் போதும். சிறிய குழந்தையாகிய அவள் கஷ்டப்படாது எவ்விதமாவது பிழைக் கட்டும்” என்று நினைத்து அவள் அதற்கு இசைந்தாள். உடனே தான் அவர்களை அழைத்துச் செல்வதாக ஏற்பாடு செய்து அந்த நாடகக்காரனிடமும் சொல்லிவிட்டு அவர்களைத் தன்னுடன் அழைத்துச் சென்று அவர்களைப் பிரத்யேகமான இடத்தில் வைத்து, அவர்களுக்கு வேண்டிய சௌகரியங்களைச் செய்து வைத்து, அன்றே தனது கம்பெனியில் உள்ளோருக்கு இவர்களைப் பற்றி அறிமுகம் செய்துவைத்தான்.
முதலில் ஸ்ரீ வள்ளி நாடகத்தை நடிக்கச் செய்ய ஏற்பாடு செய்து, வள்ளியின் நடிப்பை பரிமளாவுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். பரிமளா தன்னுடைய நடிப்பையும், பாடல்களையும் வெகு விரைவில் பாடம் செய்யத் துவக்கினாள். கேசவன் சுப்பிரமணியனாகவும், பரிமளா வள்ளியாகவும் நடிக்க ஏற்பாடாகிவிட்டது. பரிமளவல்லி தன் திறமையினால் முதல் முதலிலேயே உயர்ந்த பாத்திரமாகிய வள்ளியம்மையாக நடிக்க இசைந்து சுமார் இரண்டு மாதத்திற்குள்ளாகவே வள்ளி நாடகம் நடிக்கத் தயாராகி விட்டாள். ஒத்திகையில் மிகவும் திருப்திகரமாக பரிமளா நடித்ததால் அபரிமிதமான விளம்பரங்களைக் கம்பெணிக்காரன் செய்து “தேதியை எதிர் பாருங்கள்; எதிர் பாருங்கள் “. என்று பிரசுரித்து விட்டான்! சுவர்கள், விளக்குத் தூண்கள், டிராம் வண்டிகள் முதலிய இடங்களில் பெரிய எழுத்துக்களில் “நீங்கள் இதுவரையில் கேட்டிராத, பார்த்திராத அற்புத நாடக ரத்தினத்தின் இனிமையான கானத்தைக் கேட்கத் தவறாதீர்கள். பரிமளம் மிகுந்த பரிமளா ஸ்ரீ வள்ளியாயும், நாடக உலகத்தில் நற்கீர்த்தி வாய்ந்த மாஸ்டர் கேசவன் சுப்பிரமணிய வேடனாயும் நடிக்கப் போகும் தேதியை எதிர் பாருங்கள்.எதிர்பாருங்கள் ” என்று தடபுடலாய் முதலில் போட்டுப் பிறகு நாடகத் தேதியைக் குறித்து விளம்பரம் செய்தான்.
நாடகத்தன்று ஏராளமான கூட்டம் கூடி விட்டதால் கொட்டகையில் நிற்கவும் இடமின்றி, டிக்கட்டுக்களை வாபீஸ் செய்யும்படி யாகவும் ஆய்விட்டது. நாடகம் ஆரம்பித்தாயிற்று. பரிமளா வள்ளியாகத் தோன்றும் பொழுது தேவகானமோ, கந்தர்வகானமோ’ என்று ஐயுறும் படியாகப் பாடிக்கொண்டே பிரஸன்னமானாள்.
கேவலம் பத்து வயதுப் பெண் குழந்தை என்பதை அப்போதே பார்த்த சபையோர்கள் அவளுடைய அற்புதமான சாரீரத் தின் இனிப்பையும், அழகின் மேம்பாட்டையும், பாடும் திறமையையும் கண்டு வியப்புற்று ஆநந்த சாகரத்தில் மூழ்கி அடிக்கடி கர கோஷம் செய்து ஒன்ஸ் மோர் (once more) என்று கத்தினார்கள். வள்ளி ஆலோலம் என்று பாடுகையில் உண்மையில் கொட்டகையில் நிசப்தம் குடிகொண்டு விட்டது. பிறகு வள்ளிக்கும் சுப்பிரமணியனுக்கும் நடந்த தர்க்கம் சபையோர்களை பிரமிக்கச் செய்து விட்டது. நாடகம் வெகு ருசிகரமாக நடந்தேறியது. அந்த முதல் நாடகத்திலேயே பரிமளாவின் பெயர் உலகில் பறக்க வாரம்பித்து விட்டது.
சிறிய பெண் இத்தனை சாமார்த்தியமாகப் பாடி நடிப்பதைக் கண்டு மிக்க பூரித்த கனதனவான்கள் அவளுக்கு மெடல்களும், பரிசுகளும் கொடுத்தார்கள். பிறகு சாவித்திரி, சீதாகல்யாணம், கண்ணகி, அல்லி, பவளக் கொடி, பாமா விஜியம், பாரிஜாதம் முதலிய பல நாடகங்களில் பரிமளா பிரக்யாதி அடைந்ததோடு நந்தனார் சரித்திரத்தில் முதல் பரிசு பெற்றாள்.
நாம் இப்பொழுது அந்த நாடகக் கம்பெனியின் நோக்கத்தை முக்கியமாகக் கூறவேண்டியது அவசியமாதலால் அதைப் பற்றிச் சிறிது கூறுவோம். பொன்னுசாமி என்பவன் மிக்க செல்வம் படைத்த வம்சத்தில் பிறந்தவன். அவனுடைய பெற்றோர்கள் தங்கள் வம்ச வழக்கத்தை முன்னிட்டுப் பொன்னுசாமிக்கு யுக்த வயதில் ஓர் அழகிய பெண்ணைப் பார்த்து விவாகம் செய்து வைத்தார்கள். பொன்னுசாமிக்குக் கூடிய வரையில் கல்வி கற்று வைத்தார்கள். பொன்னுசாமி பாலியத்தில் செல்வத் திமிரினால் மைனர் ஜமீந்தார் தோரணையில் ஆடம்பரமாக உண்டு களிப்பதும், தினுசு தினுசாக உடை தரிப்பதும், சதா பத்து சினேகிதர்களுடன் குசாலாக உலாவித் திரிவதும் தவறாது சினிமா, ட்ராமா முதலியவற்றிற்குப் போவதும், ஆடம்பரத்துடன் உயர்தர மது வகைகள் குடிப்பதும், வேசி வீட்டுறவு கொள்வனுமான முதலிய லீலைகளைச் சலிக்காது செய்து வந்தான்.
அவனுடைய பெற்றோர்கள் இந்த ஆடம்பா தடபுடலைத் தடுப்பதற்கு எத்தனை சொல்லியும் கேளாது அவன் தத்தாரியாகத் திரியலானான். அவனுடைய பாலிய லீலைகளின் பயனாக பெற்றோரின் செல்வம் சிறுகச் சிறுகக் கரைய வாரம்பித்தது. விவாகமாகிய மனைவி பக்குவமாகி வீட்டிற்கு சம்சாரத்திற்கு வந்து விட்டாள். பெரியோர்களின் நிர்ப்பந்தத்தினால் சோபனக் கல்யாணத்திற்கு ஏற்பாடாயிற்று. பொன்னுசாமி அன்றைய தினமும் வேண்டியபடி குடித்துவிட்டு ஆடிப்பாடிக் கூத்தடித்த பின்னரே சயன அறைக்குச் சென்றான்.
பொன்னுசாமியின் மனைவியான குணவதி என்பவள் இயற்கையான லஜ்ஜையுடன் தலை குனிந்து நிற்பதைக் கண்டு அவன் கோபித்து “சீ நாட்டுப்புறக் கழுதை! கட்டிலின் கீழே புகுந்து கொள்” என்று கூறிவிட்டு அப்போதே கதவைத் திறந்துகொண்டு தன் ஆசை நாயகியாகிய மோகனாவின் வீட்டை யடைந்தான். இச் செய்கையினால் எல்லோரும் மனம் வருந்தி பொன்னுசாமியைத் திட்டினார்கள். மனைவி என்கிற பாசத்தை அவன் சிறிதும் கொள்ள வில்லை.
எந்த நாடகத்திற்குத் தான் சென்ற போதிலும், தாசி மோகனாவுக்கும் முதல் வரிசை சோபாவில் தனிக் கட்டணத்துடன் ரிஸர்வ் செய்து விட்டு, நாடகம் சரியாக ஆரம்பிக்கும் தருணம் இருவரும் வந்து சேருவார்கள். வந்த இடத்தில் உயர்தர சுருட்டுவகைகள், குடிவகைகள் முதலிய செலவிற்கு மட்டும் 5 ரூபாய் செலவிடுவான். இந்த விதத்திலேயே இத்தகைய அநாவசிய செலவு செய்யும் பொன்னுசாமி தன் வைப்பாட்டியின் மற்ற விஷயங்களில் எத்தனை விரயம் செய்திருப்பான் என்பதைக் கவனித்துப் பாருங்கள். நாடகத்தில் யாரேனும் சற்று நன்றாகப் பாடிவிட்டால்—நடித்து விட்டால்- பொன்னுசாமியினுடைய மெடல்தான் அவர்களுக்கு முதலில் கிடைக்கும். அதுவன்றியில் நாடகத்தில் நடிக்கும்போ தெல்லாம் தனக்கு இஷ்டமான நடிகர்களுக்கு 10 ரூபாய் நோட் டுக்கள் தினம் 4-5-க்குக் குறையாமல் விழும். நாடகத்தில் எத்தகைய ஆடம்பரமான உடை தரித்துக் கொள்கிறார்களோ அதைப் பார்த்த மோகனா அதே போலத் தனக்கு உடை வேண்டுமென்று வாங்கிக் கொள்வாள். இதைத் தவிர பெரிய கொள்ளையாகிய குதிரைப் பந்தயத்திற்குத் தன் வைப்பாட்டியுடன் செல்வதும் தாராளமாகப் பணத்தைத் தோற்பதும் குறைவில்லை. இதுவும் தவிர மோகனாவின் ஜாதியில் சற்று தேர்ச்சி பெற்ற நாட்டியக்காரிக்கோ, பாட்டுக் கச்சேரி செய்பவளுக்கோ, கதை செய்பவளுக்கோ முதல் தாம்பூலம் மோகனாவே கொடுத்து தன் வீட்டில் மேற்படியாரை வர வழைத்து மெடல்,சேலை, ரூபா முதலியன இஷ்டமானபடி பரிசு கொடுத்தனுப்புவாள்.
பொன்னுசாமியின் ஆடம்பரம் முற்ற முற்ற அவன் பெற்றோரின் மன நிலைமை கேவலம் முறிந்து விட்டது. எத்தனையோ பாடு பட்டுத் தங்கள் முன்னோர்கள் தேடிய பொருளுடன் தாங்களும் சம்பாதித்துச் சேர்த்து அதை வெகுவாய்க் காப்பாற்றி வந்தார்கள்.
மகனின் துராக்குதமான நடத்தைக்குப் பயந்து அவனைப் பல விதத்திலும் திருத்திப் பார்த்தார்கள். ஒன்றிலும் பயன் படவில்லை. வீட்டில் வந்த மருமகளின் பொறுமையையும் அவளுடைய நற்குணத்தின் மாதிரியையும் கண்டு மாமியாரும் மாமனாரும் அவளைத் தம் சொந்த மகளாகவே பாவித்து, அன்பு காட்டி, வேண்டிய நகைகளைச் செய்து போட்டார்கள். பொன்னுசாமி தன் மனைவியை மிரட்டி, அடித்து, இம்சித்து நகைகளைக் கழற்றிக் கொண்டு போவதோடு தாயாருடைய உடம்பிலிருப்பதையும் லண்டத்தனம் செய்து வாங்கிக் கொண்டு போய்விடுவான். இந்த உபத்திரவத்திற்காகவே பொன்னுசாமியினுடைய மனைவி தனக்கு எதும் நகையே வேண்டாமென்று கூறிவிட்டாள். தினந்தோறும் தன் வேலைகளைச் சரிவரச் செய்வதும், மாமி மாமனை வணங்குவதும், தன் வருத்தத்தை எண்ணிப் புலம்புவதுமாகவே அவள் காலம் நடக்கின்றது.
அந்தப் பெண்ணின் துயரத்தைக் கண்டு அவள் மாமியார் “அம்மா! குணவதீ! என் வயிறு செய்த பாபத்தினால் நீயும் இவ்விதம் கஷ்டப்படுகின்றாயே! உன்னுடைய இவ் வயதில் எத்தனை மேன்மை பாயும் இன்பமாயும் இருக்க வேண்டும், இக்காலத்தில் நீ தனித்த சன்யாசினி போல விருப்பதைக் காண என் மனம் துடிக்கின்றதே? நான் ஆதியில் என் மாமியிடத்திலும் நாத்தியிடத்திலும் பட்ட சிறுமையும் இம்சையும் அளவிட வியலாது. அத்தகைய இம்சையை அடைந்து தவித்தேன். ஆனால் என் பர்த்தா மட்டும் என்மீது பிரியமாக விருந்ததனால் நான் உயிர் தரித்து வாழ்ந்தேன். என் புருஷன் என்னுடன் பேசுகின்றார்; அன்பாயிருக்கிறார் என்கிற வயிற்றெரிச்சலால் எங்களிருவரையும் சாபமிட்டுக் கொட்டுவார்கள். நான் இம்சைப் படும் காலத்தில் “ஐயோ! நமக்கு இந்த இம்சை போதும். நமக்கொரு மருமகள் வந்தால் கண்மணியைப் போல வைத்துக் கொண்டு மகிழ வேண்டும்” என்று நினைப்பேன்.
அப்படியே மகன் பிறந்தான். மகன் பிறந்த பிறகே என் மாமி, மாமன் மாண்டார்கள். அவர்கள் காலத்திற்குப் பிறகு எனக்கு நல்ல காலமும் செல்வாக்கும் உண்டாயது, என்னுடைய அதிகாரத்தில் குடும்பம் நடக்கத்தலைப்பட்டது, என்ன சுகமுண்டாகி என்ன! பையன் ஆரம்பத்திலேயே பெரும் துயரத்தை விளைவிக்கும் கோடரிக்காம்பாகி விட்டான். எத்தனை சொல்லியும் கேட்க வில்லை. விவாகத்தைச் செய்தால் சற்று குணவானாக விருப்பானோ வென்று அதையும் செய்தோம். பலனில்லாது போயிற்று, நாளாக ஆக வரவா வெகுதூரம் விஞ்சிவிட்டது. இந்த உபத்திரவம் சகிக்கக் கூடவில்லை. ஆகையினால் நாங்கள் காசி முதலிய புண்ணிய க்ஷேத்திரத்திற்கு யாத்திரை போகலாம் என்று நினைக்கின்றோம். நீ இங்கிருந்து சுகப்படுவது கடவுளுக்குத்தான் பிரீதி! ஆகையினால் நீ உன் தாயாரகத்திற்குச் சென்றுவிடு. உனக்கான செலவிற்குப் பணமனுப்புகிறேன். நான் திரும்பிவந்தவுடன் உன்னை அழைத்துக்கொள்கிறேன். நீ இங்கு ஏன் தனியாக வாடவேண்டும்?” என்று வெகு அனுதாபத்துடன் கூறினாள்.
இது கேட்ட குணவதி கண்ணீர் வழிந்தவண்ணம் “அம்மா! நீங்களறியாத விஷயம் நான் ஒன்றும் சொல்லப் போவதில்லை. என்னுடைய தலைவிதி இவ்விதமிருக்கிற-தென்பதை உலகமே அறியும். எனினும் எதற்கும் ஒரு மதிப்பென்பது பொது உடைமையாக இருக்க வேண்டும். அந்த உடைமை எப்படி இருந்தால் இருக்கு மென்பதும் நீங்களறிவீர்கள். எனக்கு ஆயிரம் சிறுமையும் மனக்கிலேசமும் இருப்பினும் என்னுடைய உரிமையுள்ள வீடாகிய தங்கள் வீட்டில், தங்கள் பாதுகாப்பில் இருந்தால் தான் எனக்கு மதிப்பேயன்றி பெற்ற அன்னையாயினும் நான் அங்கு சென்றால் என் வருத்தம் பதின்மடங்கு அதிகரித்து இன்னும் சிறுமை யுண்டாகுமேயன்றிப் பெருமை இல்லை. இதைக் கண்முன்பாக எத்தனையோ பேர்களிடத்தில் பார்த்திருக்கிறேன். கணவன் வீட்டி விருந்து தாய்வீடு செல்கிறவர்களுக்குக்கூட, உடனே திரும்பிவிடக் கூடியவர்களுக்கு அதிகமான மதிப்பும் தடபுடலான உபசாரமும் நடக்கின்றன. பின்னும் நான்கு நாள் தங்குகின்றவர்களுக்கு சற்று ஏற்றம் குறைந்து சிடுசிடுப்புப் பாணத்தை அவர்கள்மீது ப்ரயோகிக்க வாரம்பித்து விடுகிறார்கள். தாய் வீடே கதி என்று கணவன் விலைக்கிவிட்ட பெண்ணின் பரிதாபத்தைக் கூறவேண்டுமா! அந்தோ! அவ்வாறு சிறுமைபட்டு வாடுவதைவிடத் தற்கொலை செய்துகொண்டு இறந்து விடலாம். எந்தெந்த காலத்தில் யார் யார் ஆதீனத்திலிருக்க வேண்டுமோ, அவ்வாறு இருந்தால்தான் பெற்ற தாயாயினும் தந்தையாயினும் மதிப்புடன் பெயரைச் சொல்லியழைப்பார்கள். இல்லையேல் மதிப்பெல்லாம் கால் மிதிப்பாய் விடும். நான் கண் கண்ட அனுபவத்தின் வரையில் எல்லா விஷயங்களையும் பார்த்தாய் விட்டது. என்னுயிர் போவதாயினும் இந்த இடத்தில் இப்படியே போய்விடட்டும். நான் உங்களை விட்டுப் போகமாட்டேன். என் கணவன் இவ்விதமிருந்தபோதிலும் அவருடைய நிழலில் இருந்து அவர் இடும் கூழோ கஞ்சியோ குடித்து என் காலத்தைக் கடத்தி விடுகிறேன். அம்மா! என்னை கைவிட்டு விடாதீர்கள். என் கதி உங்கள் பாதத்தில் முடியட்டும்.” என்று வெகு உருக்கமாகக் கூறினாள்.
இதைக் கேட்ட லக்ஷ்மியம்மாளுக்கு மனம் மிகவும் உருகிப் போய்விட்டது. “ஐயோ! குணவதி! உன்னரிய மொழிக்கு நான் என்ன பதில் சொல்வேன்? என் கண்ணே! நான் உயிருடன் இருக்கும் வரையில் உன்னைக் கைவிடமாட்டேன். இது சத்தியம். உன்னுடைய கஷ்டம் என்று தான் விடியுமோ எனக்குத் தெரியவில்லை. உன் பொறுமை உன்னைக் காக்காது போகாது. உன்னை நான் தனித்துவிட்டுச்செல்ல மனமிசையமாட்டேன். உன்னையும் கூடவே காசி யாத்திரைக்கு அழைத்துச் செல்கிறேன்”. என்று தீர்மானித்தாள்.
பின்னர் 10 தினங்களில் கணவன், மனைவி, மருமகள் மூவரும் யாத்திரைக்குப் புறப்பட்டுச் சென்றார்கள். வீட்டில் யாருமே இல்லாமையினால் பொன்னுசாமிக்கு இன்னும் குசால் பிறந்துவிட்டது. வீட்டை அடியோடு மறந்தான். காசியாத்திரை போனவர்கள் வீட்டில் வேலையாட்கள் இருவரைக் காவல் வைத்துவிட்டுச் சென்றார்கள். இவர்கள் சென்று ஒரு வாரத்திற்குப் பின் ஒரு தினம் இரவு நாலைந்து கள்வர்கள் அவ்வீட்டில் புகுந்து பூட்டுக்களை உடைத்தும், வேலையாட்களைக் கட்டிப்போட்டும் கிடைத்த சகலமானதையும் மூட்டைக் கட்டிக்கொண்டு போய்விட்டார்கள். மறுதினம் காலையில் வேலைக்காரி வீடுகூட்ட வந்தபிறகு இந்த அலங்கோலத்தைக் கண்டு ஓலமிட்டு வேலைக்காரர்களின் கட்டையவிழ்த்து மூர்ச்சைதெளியச் செய்தாள். அச்செய்தியை பொன்னுசாமிக்குத் தெரிவித்தாள்.
அது கேட்ட பொன்னுசாமி அவ் விஷயத்தில் சிரத்தையே எடுத்துக்கொள்ளாது “போனால் பீடை போகட்டும்” என்று கூறித் தாசி மோகத்தில் ஐக்யமாகிவிட்டான். பிறகு வேலைக்காரர்களே இத் திருட்டு விஷயத்தைப் போலீஸாரிடம் தகவல் கொடுத்தார்கள். காசிக்குச் சென்றவர்கள் ஒரு மாதத்தில் திரும்பி வந்ததும் இக் கொள்ளையைக் கேட்டுத் திடுக்கிட்டார்கள். வீட்டிலிருந்த பாத்திரங்கள், பண்டங்கள், சில நகைகள் எல்லாம் களவாடப்பட்டிருப் பதைக் கண்டு கண்ணீர் வடித்ததுடன் அன்றைய சமையலுக்குப் பாத்திரமின்றி கடையில் வாங்கும்படியாக நேர்ந்தது. இத்திருட்டு விஷயத்தில் சற்றும் கவனியாத மகனை நொந்து அழுதார்கள்.
இதே ஏக்கத்தினால் பின்னும் சில வருடத்திற்குள்ளாக பொன்னுசாமியின் தந்தை நோயினால் பீடிக்கப்பட்டுப் படுத்துவிட் டார். “ஒரே ஒரு மகனாகவிருந்தும் தமக்கு அனுகூலமில்லாது போய்விட்டதே” என்ற மனநோயே லக்ஷ்மியம்மாளையும் தாக்கிவிட் டதால் ‘இருவரில் யார் முன்னால், யார் பின்னால்’ என்ற நிலைமைக்கு வந்துவிட்டார்கள். தன் விஷயத்தில் அனுகூலமாய் ஆதரவுகாட்டி. வந்த மாமி, மாமனின் கதி இவ்விதம் படுக்கையாகிவிட்டதைக் கண்ட குணவதிக்குப் பெருந்துக்கம் பொங்கிவிட்டது.
அன்று பொன்னுசாமி வீட்டிற்கு வந்தான். அவனை வழி மறித்துக்கொண்ட குணவதி, அன்றே முதல்முதல் அவனெதிரில் தைரியமாகப் பேசத்துணிந்து “நாதா! உங்களை ஈன்றெடுத்த தாய் தந்தையர்கள் பாயும் படுக்கையுமாகி விட்டார்களே! இன்னுமா நீங்கள் கவனியாதிருப்பது. இது அடுக்குமா! நான் தான் வேண்டுமானால் தங்களுக்குச் சத்ருவாகத் தோன்றலாம். உங்களைப் பத்து மாதம் குட்சியில் வைத்துச் சுமந்து ஈன்ற அன்னையல்லவா! அவர்கள்மீது உங்களுக்குத் தானாக உண்டாகக்கூடிய அன்னை என்கிற பாசம் எங்கே மறைந்துவிட்டது? தாயன்பின் மகிமையைப்பற்றி பெரிய, பெரிய துறவிகள் எல்லாம் எப்படிக் கூறி இருக்கின்றார்கள். பட்டினத்துப் பிள்ளையின் செய்கையிலிருந்து தாயின் மாசிலாத அன்பு கூறத் திறமுள்ளதா! அவர்களை நீங்கள் பார்க்காமலேயே போகின்றீர்களே.” என்று ஏதேதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அளவுகடந்த ஆத்திரத்தையடைந்து “சீச்சி! விலகு. பெரிய புராணிகர்போலப் பேசவந்துவிட்டாய்! கழுதை!” என்று உதைத்துத் தள்ளினான்.
அப்போதும் குணவதி அவனை விடாது காலை கெட்டியாகப் பிடித்துக்கொண்டு “என்னைத் தாங்கள் என்ன செய்தபோதிலும் சரியே! நான் இனி துணிந்துவிட்டேன். என்னைத் தாங்கள் இவ் விதமான இம்சை – சித்திரவதை – செய்வதை விட என்னுயிரைத் தங்கள் கரத்தினாலேயே தாராளமாக வாங்கி விடுவது வெகு நலம். அச் செய்கையினால் மிக்க மகிழ்ச்சியை அடைவேன். நான் எடுத்த ஜன்மத்திற்கு இந்தப் பலனையேனும் அடையும்படியான வரனை யளிப்பீர்கள் என்று நான் எதிர்பார்க்கிறேன். தங்களுடைய இக்காலத்து பால்ய லீலைகளின் பலனைத் தாங்கள் இப்போதில்லா விடினும் மற்றொரு காலத்தில் அதுபணித்து ஏங்காமலிருக்க மாட்டீர்கள். நாதா! உயிர் நீங்கிவிடின் அவர்களைத் தவம் செய்தாலும் கண்ணால் காண்பதற்கு முடியாதென்பதை மறக்கவேண்டாம்” என்று கூறிக்கொண்டே இருக்கையில் பொன்னுசாமி ஆவேசத்துடன் பேசத் தொடங்கி “போதும் உன் வார்த்தைகளை நிறுத்து. தாயின் அன்பு எனக்குத் தெரியும். அவளுடைய கடின சித்தத்தினால் என்னை வருத்திக் காசு கொடாது உபத்திரவிப்பது வீண் போகுமா?” என்று கூறிக்கொண்டே போய்விட்டான்.
பொன்னுசாமியின் இரும்பு போன்ற சித்தத்தின் போக்கைக் கண்டு குணவதி மிக்க விசன மடைந்தாள். மோகனா ஒரு கச்சேரியின் நிமித்தம் வெளியூருக்குச் சென்றிருக்கையில் குணவதிக்கு திடீரென்று ஜூரங் கண்டுவிட்டது. சில நாளையில் இந்த ஜூரம் டைபாயிடு என்று டாக்டர் கூறிவிட்டார்.
குணவதியினுடைய நிலைமையைக் கண்ட அவள் மாமி, மாமனுக்கு மிக்க பயம் பிடித்து விட்டதால் அவர்கள் தங்கள் நோய் குணமாகிவிட்டதாக நினைத்து மருமகளைக் கவனிக்க வேண்டிய வேலைகளையே செய்துவந்து வெகு அக்கரையாகப் பாடு பட்டார்கள். குணவதியோ தான் பாயில் விழுந்த நாள் முதலாக அவளுடைய மனம் ஒருபுறம் மிக்க சந்தோஷத்தையும், மற்றொரு புறம் கரை காணா விசனத்தையும் அடைந்தது.
ஏனெனில் தான் இந்த நோய் குணமாகாமல் இப்படியே இறந்துவிடவேண்டும் என்று சந்தோஷித்தாள். ஆனால் தன்மீது உயிரையே வைத்திருக்கும் மாமி, மாமனின் கதி அதோகதியாகி அவர்கள் பின்னும் துக்கத்தி லாழ்ந்து விடுவார்களே; என்கிற விசனம். இவ்விரண்டு விதமான உணர்ச்சிகளினால் மிக்க தத்தளித்து வருந்துகின்றாள். அவளுடைய விசனத்தை வெளியிடவும் அஞ்சுகிறாள்.
வாய் பிதற்றல் முற்றும் “என் புருஷன் வந்தாரா, வந்தாரா!” என்று கத்துவது. இவளுடய நிலைமையைக் கண்டு மனமுருகும் மாமி “அம்மா! குணவதீ! உன் பெயருக்கேற்ற குணத்தை உன்னிடமே கண்டோம். என் செல்வமே! நாங்கள் உன்னையே நம்பி இருக்கின்றோமே! எங்களை மோசம் செய்துவிடுவாயோ! மகா பாபத்தைச் செய்துள்ள எங்கள் கதி என்னவாகுமோ! ஹா! சர்வேசா! குணவதியை எங்களுடைய ஆயுள் உள்ள பரியந்தமாவது அளிப்பாய் அப்பனே!” என்று வேண்டுகிறாள்.
அவர்களுடைய கஷ்டத்தைக் கண்டு சகியாத குணவதிக்கோ தான் இனி பிழைப்பது துர்லபம் என்று தெரிந்துவிட்டது. ஆனால் அவர்களுக்கதை அறிவிக்கவும் மனம் கூசினாள் ; எனினும் தன் மனத்திற்குள்ளேயே வைத்துக்கொண்டு வாடுவதற்கு மாட்டாது தன் மாமியை நோக்கி “மாமி! மகா கொடிய பாவி ஒருத்தி உலகிலிருந்து சில தினத்தில் மறைந்துவிடப் போகிறாள். அவளுக்காக விசனப்படுபவர்களை கேவலம் மூடர்களேன்றே கடவுள் மதிப்பார். அவளுடைய ஆன்மா நீங்கிய அன்னாளை நன்னாளாகக் கொண்டாட வேண்டுவதே கடவுளின் மனோல்லாசமான காரியமாகும். கேவலம் ஓர் பேதையாகிய என்மீது நீங்கள் உயிரையே வைத்திருப்பது மிக்க மதியீனமாகும். உலகில் ஒருவருக்கொருவர் சத மன்று; அநித்தியம். என்பதை எத்தனையோ உதாரணங்களோடு பெரியார் வெளியிட்டுள்ளார்கள். ஆகையினால் என்றைக்கிருப்பினும் அழிந்து போகக்கூடிய இவ் வுயிரை நீங்கள் இனி விரும்ப வேண்டாம்.
என் தாயே! என்னுயிர் நீங்கிவிடும் என்று என் மனச் சாக்ஷி சொல்லுகின்றது; ஆதலால் நீங்கள் கவலையை இப்பொழுதே ஒழித்து என் முடிவைத் தைரியமாயும், சந்தோஷமாயும் எதிர் பாருங்கள். கவலை வேண்டாம். இந்த பிரியத்தை எம்பெருமான் மீது செலுத்துங்கள். பரமபதவி கிடைக்கும். மறுமைக்கு எல்லை யில்லா பாக்கியம் கிட்டும். என்னுடைய கர்மா என்னோடு தொலைந்து போகட்டும். என்னுயிர் நீங்குவதற்குள் நான் உங்கள் மகனைப் பார்க்க விரும்புகிறேன். என் கடைசி விருப்பம் இதுதான். அவர் முகத்தைப் பார்த்த உடன் நான் நிம்மதியாகி விடுவேன்” என்றாள்.
இந்த துக்ககரமான வார்த்தைகளைக் கேட்ட அந்த அம்மாள் மிக்க இடிந்துபோய் “ஆ! என்ன இது குணவதி! உன் வாயிலிருந்து இத்தகைய மொழிகளையா வெளியிட்டாய்! ஐயோ! உன்னை இழப்பதையா நன்னாளாகக் கருதுவது ……….. அதைவிட எங்களை இழப்பதைக் கூறினும் ஒப்புமே! என் செல்வமே! உன்னை வேண்டி நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களைக் கைவிட்டு விடுவதையா நீ விரும்புகின்றாய்….அந்தச் சண்டாளப் பாவி ஊரிலேயே இல்லை யாமே! ஐயோ என்ன செய்வேன்?”….என்று வருந்தினார்கள்.
பொன்னுசாமியை அழைத்துவரும்படியாக வேலைக்காரனை அனுப்பினார்கள். அன்றே பொன்னுசாமி ஊரிலிருந்து வந்தான். வேலைக்காரனைக் கண்டதும் சீறி விழுந்து “வெளியே போ; வருகிறேன்” என்று கூறியனுப்பிவிட்டுப் பின்னர் வீட்டிற்கு அன்று பூராவும் வராது மறுநாள் வந்தான்; குணவதி படுக்கை-யிலிருப்பதைக் கண்டான்.
அவனைக் கண்ட குணவதி இரு கண்களிலும் நீர் பெருகியவாறு, “நாதா! என்னுடைய அந்திய காலம் சமீபித்துவிட்டது. இந்த தருணத்திலாவது என் கண்முன் சந்தோஷமாக உங்கள் முக தரிசனங் கொடுக்க மாட்டீர்களா! இனியுமா என்மீது வர்மம்? என்னை இனி நீங்கள் வெறுத்து விலக்கினாலும் இன்னும் சில தினங்கள் வரையில் தான் வெறுக்கலாம், அதற்குமேல் என்னாவி இவ்வுலகை விட்டு மறையும், நாதா! உங்கள் அழகிய கரத்தைக் கொடுங்களேன். என் கடைசி ஆவலையாவது தட்டாது பூர்த்திசெய்ய மன மிரங்க வேண்டும்.” என்று பின்னும் ஏதோ சொல்வதற்குள் பொன்னுசாமி அதிக ஆவேசத்துடன், “அடீ! எனக்குத் தெரியும் உன் கதைகளெல்லாம். சில தினங்கள் முன் என் பெற்றோருக்கு எதோ ஆபத்து வந்துவிட்டதென்று கூறி என்னை மடக்க எண்ணினாய்; இப்போது உனக்கே வந்துவிட்டதாக நாடகம் நடிக்கின்றாய்! இந்தக் கட்டுப்பாடான முன்னேற்பாடுகளை நானறியாத மூடனன்று, சீச்சி! பாசாங்குக் கள்ளீ! என் பெற்றோர்கள் இறந்தது போலத் தான் நீயும் இறப்பாய். வீணாக என் நேரத்தைக் கெடுக்கின்றாய் மூதேவி!” என்று வைதவாறு, சற்றும் இரக்கமற்று அவளுடைய பலஹீனமான நிலைமையில் அவனைக் காலால் எட்டி உதைத்துவிட்டு, அவ்விடம் விட்டு வேசி மனையில் புகுந்தான்.
அந்தோ! இவ் விபரீதமான :செய்கையைக் கண்ட அவன் பெற்றோர்கள் அவனைத் தாறுமாறாக வாயில் வந்தவாறெல்லாம் திட்டினார்கள். அன்று அவளுடைய கேவலமான நிலைமையில் அந்தச் சண்டாளன் முரட்டுத்தனமாக உதைத்ததால் உடனே அவள் மூர்ச்சையானாள். அன்று முற்றும் அம் மூர்ச்சை தெளியாது வெகு பயங்கரமாகிவிட்டது. இதே நிலைமையில் அடுத்த நாள் செல்ல, சற்று மயக்கம் தெளிந்ததும் “அம்மா! இந்த செய்கையை யாரிடமும் சொல்லவேண்டாம். வெட்கக் கேடு; வெளியாகா திருப்பதே நலம்……நான் இறப்பினும் இவ்விஷயத்தை வெளியிடா தீர்கள்.” என்று உறுதியாகக் கூறினாள்…. அன்று இரவே மகா குணவதியாகிய அவ் வுத்தமியின் உயிர் மாயமாய் மறைந்தது.
குணவதியின் ஆவி பறந்து போய்விட்டபின் மிச்சமான சவத்தின் மீது அவள் மாமியும் மாமனும் விழுந்து புரண்டு கதறுகின்றார்கள். “ஐயோ! குணவதி! எங்கு சென்றாயடீ! என் கண்ணே! எங்களைப் பரதேசியாக விட்டு விட்டாயே என் கண்மணீ! குணவதி! உன் முகத்திற்காக நாங்கள் உயிர் வாழ்ந்தோமே! எங்களை நட்டாற் றில் விட்டு விட்டாயே! ஐயோ! நாங்கள் என்ன செய்வோம்? இனி எவ்விதம் உயிர் வாழ்வோம்? மதியை இழந்த வானம் போலவும் நீரற்றப் பயிர் போலவும் ஆய் விட்டோமே! ஹா! குண மணியே! குணக்குன்றே! கோதிலா மாணிக்கமே!” என்று தன்னிறையழிந்து புலம்பி முட்டிக் கொள்கிறார்கள்.
அண்டை அயலில் உள்ளவர்கள் அவர்களுக்கு ஆறுதல் கூறவும் மாட்டாது குணவதியின் அபாரமான குணத்திற்கும், பொறுமைக்கும் கண்ணீர் விட்டார்கள். இந்த உத்தமி இறந்த செய்தியை அச்சண்டாளனுக்குச் சொல்லி யனுப்பினார்கள். அவன் ஊரிலில்லை என்றும், எங்கு சென்றான் எப்போது வருவான் என்பது ஒன்றுமே தெரியவில்லை என்றும் பதில் கிடைத்தது.
சவத்தை வைத்துக்கொண்டு புலம்பும் இருவருக்கும் “அவனை எங்குத் தேடுவது, எந்த விடத்திற்குத் தந்தி யடிப்பது? ஐயோ! வேசிக் கள்வனின் இருப்பிடத்தை எங்கு கண்டு பிடிப்பது?” என்கிற பெரும் விசனமும் கூடப் பாதித்தது. குணவதியினுடைய மரணத்தினால் அவ்வூரே அல்ல கல்லோலப்படுகின்றது. “அவளை இழந்த பின் இனி உயிருடனும் உலவ வேண்டுமா!” என்று கிழவர்கள் துடித்தவாறு சவத்தைக் காத்தார்கள்.
பொழுது விடிந்ததும், வேசி வீட்டிற்குப் பலதரம் ஆளனுப்பிப் பார்த்தும் தகவலே கிடைக்கவில்லை; கதவு பூட்டப்பட்டிருந்தது. அந்தப் படுபாவியின் தகவலை யறியக் கூடாது தத்தளித்தவாறு அன்று இரவு வரையில் பிணத்தை வைத்துக் கொண்டிருந்தார்கள். அக்கம் பக்கத்திலுள்ளோர் பிணத்தை சீக்கிரம் எடுத்துவிட வேண்டும் என்று கூறியதோடு சவத்தின் நிலைமையும் கேவலமாகி, அசங்கியமாகி விட்டதால் “அவன் வந்தாலும் வராவிடினும் சவத்தை எடுத்து விடுவது” என்று தீர்மானித்துச் சகல காரியமும் செய்து எடுத்து விட்டார்கள்.
அந்தோ! குணவதியின் உடலில் உயிரிருந்த காலையில் அவளுக்கு ஒரு வினாடியும் நிம்மதி என்பதே இல்லாது தவித்தாள். அத்தகைய உத்தமி இந்த உலகைவிட்டு மறைந்த பிறகே — சவமாகிய பிறகே – நிம்மதியான நிலைமையை அடைந்து விட்டாள். அவளுடைய சவ ஊர்வலத்திற்கு கொட்டு முழக்கும், காந்த விளக்குகளும் நிரம்பி விட்டன. கதறித் துடிக்கும் ஜனங்கள் வெகு பேர் திரள் திரளாகப் பின்னே செல்லலாயினர்.
அப்போது இராக் காலமாகையினால் குளிர்ச்சியான காற்று வீசுகின்றது. அன்று பூர்ணமான சந்திரன் பிரகாசிக்கக் கூடிய பௌர்ணமியாக விருந்தும் குணவதியின் மரணத்திற்கு வருந்தி துக்கங் கார்ப்பவன் போலவும், அவளுடைய சவக் கோலத்தைக் கண்டு சகிக்க மாட்டாதவன் போலவும் மேகத்திடை மறைந்து விட்டான். மேகங்களோ இந்த அபாரமான துக்கத்தை—கணவனால் மனம் நொந்து உயிர் விட்ட உத்தமியின் சரிதையை – உலகினருக்கு எடுத்துக் கூறுவது போல வெகு வேகமாய் இங்குமங்கும் ஓடியாடி விசனிக்கின்றன.
அந்த நிலைமையில் சவம் ஒரு வீதியில் போய்க் கொண்டிருக்கையில் ஒரு பெரிய மாடி வீட்டின் மாடியில் உல்லாசமாய்க் காற்று வாங்கிக் கொண்டிருந்த பொன்னுசாமி அங்கு ஏதோ ஊர்வலம் வருகிறதென்று கொட்டு முழக்கினாலும், விளக்கின் ஒளியினாலும் எண்ணி அதைப் பார்க்கலானான். வெளியூருக்குச் சென்றிருந்த அவனும் மோகனாவும் அன்று நேராக அந்த வீட்டில் நடக்கும் தேக் கச்சேரியில் சங்கீதக் கச்சேரி செய்வதற்காக வந்து விட்டார்கள்.
மோகனா உள்ளே ஆநந்தமாகப் பாடிக் கொண்டிருக்கையில் பொன்னுசாமி மாடியில் காற்று வாங்கிக் கொண்டிருந்தான். அச் சமயத்தில் குணவதியின் சவம் அவ்வீட்டின் சமீபத்தில் வரவே அதை அப்போதே சவமென்று அறிந்து உற்றுப் பார்த்தான். அந்தச் சவம் குணவதியினுடையது என்பதை யறிந்ததும் உண்மை யிலேயே அவனால் தாங்க முடியாமலும் தடுக்க முடியாமலும் திடீ ரென்று ஒருவித (Shock)மன அதிர்ச்சி உண்டாகி விட்டது. அவ்வளவுதான் அவன் தன்னை மீறி, “ஆ! இந்தச் சவம் என் மனைவியான குணவதியல்லவா! ஐயோ! குணவதி இறந்து விட்டாளா! குணவதியின் சவம்தானா இது!…ஆ! அதோ! என் பெற்றோர்…….. ஐயோ!…. மோசம் போய் விட்டோமே!….” என்று கதறிக்கொண்டே ஒட்டமாகக் கீழே இறங்கி வீதியில் வந்து நடு ரோட்டில் தடா ரென்று விழுந்தான்.
பெற்றோரை நோக்கி, “என்னரிய குணவதியைச் சண்டாளன் நேற்று முன் தினமே காலால் உதைத்துத் தள்ளி வந்தேனே! என் பெற்றோர்களே! மகா கொடிய பாதகனாகிய நான் இனி என் குற்றத்தை யுணர்ந்து யாது பயன்.? ஐயோ! என் மதியில் சிற்றின்ப மென்கிற இருள் சூழ்ந்து என்னைக் கேவலம் படுகுழியில்-அன்பற்ற நரகத்தில்-தள்ளி விட்டதே! ஐயோ! குணவதியின் வார்த்தைகளை அலக்ஷியம் செய்தேனே! பெற்றோரைப் புறக்கணித்தேனே! அவள் உத்தமி-யாகையினால் அவள் வாக்கு பலித்துவிட்டதே! என்ன செய்வேன்?” என்று கதறினான்; முட்டிக் கொண்டான்.
இவனுடைய மாறுதலைக் கண்டு சகலமானவர்களும் பிரமித்து விட்டார்கள். அவர்களுடைய வெறுத்த மனமும் உருகும்படியான நிலைமையில் பொன்னுசாமி மாறிவிட்டான். பிறகு எத்தனையழுது என்ன உபயோகம் ? தான் செய்த அக்கிரமத்தை எல்லாம் தானே கூறிக் கதறினான். குணவதியின் சவத்தை தகனத்திற்கும் கொடாது கட்டிப் புலம்பினான். பிறகு சவச் சடங்குகள் முடிந்தன.
அந்த நிமிடத்தில் மாறுதலடைந்த பொன்னுசாமியின் மனம் பரிபூர்ணமான வைராக்கியத்தில் திரும்பிவிட்டது. தாசியை அடியோடு வெறுத்தான். “ஹா! ஏ சிற்றின்பப் பேயே!….மோகனாஸ்திரப்பிரம்ம ராக்ஷஸே! உன்னாலன்றோ, நான் சகல விதத்திலும் கழி பட்டேன். கண்ணான பெற்றோரையும், குணக் குன்றாகிய மனைவியையும் உயிருடனிருக்கையிலேயே இழந்திருந்தேன்; இப்போது அடியோடு இழந்து விட்டேன். ஹா! குணவதி! உன்னை சகல உரிமையுடன் நான் அடைந்தும், உன் குணத்தின் மணமறியாப் பாதகனானேன்.” என்று பலவாறு வருந்தினான்.
இந்த விசனத்தைத் தாங்காது அவன் பெற்றோர்கள் அப்போதும் பொன்னுசாமியை முற்றும் நம்பாது வெறுத்தார்கள். இவ் விடத்திலிருக்க மனம் சகியாது மீண்டும் யாத்திரை கிளம்பி விட்டார்கள். அவர்களோடு பொன்னுசாமியும் உலகையே வெறுத்து யாத்திரை கிளம்பினான்.

வை. மு. கோதைநாயகி அம்மாள்/பரிமள கேசவன்(துப்பறியும் நாவல், பாகம் 1) – விருட்சம் நாளிதழ் (navinavirutcham.in)