கணபதியே வருவாய்/மோகன் ஜி

வந்தே விட்டது இந்த வருடத்தின் விநாயக சதுர்த்தி. மராட்டிய மண்ணின் மிகப் பெரிய கொண்டாட்டமே விநாயக விழா தான்.

மூலைக்கு மூலை பந்தல்களில் பெரிய கணபதி மூர்த்தங்கள். வண்ண விளக்கு, மலர் அலங்காரங்கள். சாரிசாரியாக தரிசிக்கும் ஜனங்களுக்காக நடைப்பந்தல்கள்… சிலவற்றில் மின்விசிறி வசதிகளோடு…

இங்கு பத்து நாட்கள் கணபதியின் விசுவரூபம்… மாநகர் முழுதும் முழுமுதற்கடவுளின் மூண்டெழும் பிரபாவம். காணக் கண்கோடி வேண்டும்!

சிறு பிராயத்தில், அப்பாவுடன் மணைப்பலகை சகிதமாக களிமண் பிள்ளையார் வாங்க சென்றதும்,
நானே தொடுத்த எருக்கம் மாலையும்,
வடித்த சோற்றைப் பசையாக ஒட்டி உருவாக்கிய பிள்ளையார் குடையும்,
பூஜை முடிந்த இரவே பிள்ளையார் தொந்தியில் இருந்த நாலணாவை லவட்டிக் கொண்டதும் இனிய நினைவுகள்.

ஒரு சதுர்த்தி தினத்தின் காலையில் குடிக்கத் தரப்பட்ட காபியை கைதவறி கொட்டிவிட்டேன். மீண்டும் தந்ததை மீண்டும் கொட்டி திட்டு வாங்கினேன்.
மூன்றாவது காபியை எடுத்துவந்த அம்மாவே கைதவறிக் கொட்டினாள்.

பிள்ளையார் என் மேல் கோபமாக இருப்பதால்தான் காபி கிடைக்காமல் செய்கிறார் என்று அம்மா சொன்னாள்.
அதை நம்பினேன். பிள்ளையாரைக் கண்ணோடுகண் பார்ப்பதைத் தவிர்த்தேன். அவர் என்னை கோபிக்கக் காரணங்கள் இருந்தன. அன்று கொழக்கட்டை பூரணத்துக்கு துருவிய தேங்காய்ப்பூவை அள்ளியதை அம்மா கவனித்திருக்க வாய்ப்பில்லை. தும்பிக்கையை அசைத்துக் கொண்டு சின்னக் கண்களோடு இந்தாளு பார்த்திருக்கலாம் . சின்னப்பையனுக்கு எவ்வளவு தான் பிரச்னைகள்?

கணபதி தான் கடவுளர்களில் மிக சுவாரஸ்யமான தெய்வம். விநாயக புராணத்தின் அழகு, கணபதி பூஜையின் எளிமை, ஈர்க்கும் உருவம்… அவர்தான் எத்தனை பெரிய வரப்பரஸாதி?!

கணபதி மூலஜபம் கொண்டவர்க்கு அவரின் அண்மை புரிந்திருக்கும். ஞான முதல்வனுக்கு நாளும் திருநாளே!

ஏனோ தானோ என்றில்லாமல், ஆசைஆசையாக விநாயக பூஜை செய்ய வேண்டும்.
அட்சதையோடு ஒப்பேற்றாமல் குறைவின்றி மலர்கள், இலை வர்க்கம், பழவகைகள் வாங்கி பூஜை செய்யுங்கள்.
குழந்தைகளை ஈடுபடுத்துங்கள்.
‘விடுமுறை நாள்’ முதன்முறையாக படம்காட்டும் டிவியைத் தவிருங்கள் .

விஸ்தாரமாக பூஜை செய்து, மனதில் கவியும் அமைதியில் லயித்துக் கிடந்திருங்கள்.

கணபதி வேற மாதிரி… கொஞ்சிகிட்டே இருந்தா குதுகுலமாயிடுவாரு.
போதும் போதும்கிற அளவு அள்ளிக் கொடுத்திடுவாருன்னேன். புரிஞ்சுதா?!