28 பிப்ரவரி, 1983
தமிழில் : ப்ரேமா ஸ்ரீநிவாஸன்

நாற்பத்தி ஓராயிரம் அடிக்கு மேல் நாம் உலகின் ஒரு பெருநிலப் பகுதியிலிருந்து மற்றொரு பகுதிக்குப் பறந்து கொண்டிருந்தபொழுது, மைல்கணக்காகப் பரந்திருக்கும் பனியைத் தவிர வேறொன்றையும் பார்க்க முடியவில்லை ; எல்லா மலைப்பகுதிகளும், சிறு குன்றுகளுமே பனியால் மூடியிருந்தன. ஆறு களிலும் பனி உறைந்திருந்தது. நிலம் முழுதும் அந்த ஆறுகள் நெளிந்தும், திரிந்தும் சென்றன. மிகக் கீழே, வெகு தூரத்திலிருந்த வயல்கள் பனியால் மூடப்பட் டிருந்தன. பதினோரு மணிநேர நீண்ட அப்பயணம் களைப்பையூட்டியது. பயணிகள் சளசளத்துக் கொண் டிருந்தனர். பின்புறத்தில் ஒரு கணவன் – மனைவி ஜோடிகளின் ஓயாப் பேச்சு – அவர்கள், வியக்க வைக்கும் அக்குன்றுகளையும், அம்மலைகளையும் பார்க்கவே இல்லை, மற்ற பயணிகளையும் நோக்க வில்லை. தம்முடைய எண்ணங்களிலும், அவர்களுடைய சிக்கல்களிலும், வீண் பேச்சுக்களிலும் மூழ்கியிருந்திருக்கலாம். சலிப்பூட்டிய அவ்விமானப் பயணம் ஒருவாறாக அமைதியாக முடிந்தது. கடுங்குளிர் காலத்தில், பசிபிக் கடலோரப் பட்டினத்தில் விமானம் இறங்கியது.
பரபரப்பு, இரைச்சல், இவற்றிற்குப் பிறகு, ஒழுங்கற்றுப் பரவியும், நாகரீகமற்றும், ஏறக்குறைய ஒரேவிதமான பொருட்களை விற்பனை செய்யும் முடிவில்லாக் கடைவீதியையும் உள்ள அந்நகரை விட்டு விலகி வந்தது – நீல பசிபிக் கடற்கரையை ஒட்டிச் செல்லும் பெரிய பாட்டையில் நீர் சென்றீர். குன்றுகளூடும் மற்றும் கடலை அடிக்கடி சந்தித்தும் சென்றது அந்த அழகிய பாட்டை . பசிபிக் கடலோரத்தி லிந்து விலகினீர், அதன் குன்றுகளைச் சுற்றி வளைந்தும் அமைதியாகவும், மௌனமாகவும் அந்நாட்டிற்கே உரிய கண்ணியத்தோடும் இருந்த பள்ளத்தாக்கை அடைந்தீர். நீர் அறுபது ஆண்டுகளாக அங்கிருந்த போதிலும், அங்கு திரும்பி வரும் ஒவ்வொரு முறையும், அப்பள்ளத்தாக்கு உமக்கு வியப்பை அளித்தது. அமைதியாகவும் மனிதச் சந்தடியற்றும் இருந்தது. அமைதியுடைய அப்பள்ளத்தாக்கு மிகப் பெரிய கிண்ணம் போன்றும், பறவையின் கூடு போன்றும் இருந்தது. அவ்வூரைவிட்ட பிறகு, ஆயிரத்து நானூறு அடி உயரத்தை அடைந்த பொழுது, வரிசை, வரிசையான கிச்சிலித் தோட்டங்களையும் சோலை களையும் கடந்து சென்றீர். கிச்சிலிப் பூக்களின் மணம் கொண்ட காற்று. அப்பள்ளத்தாக்கு முழுவதும் அதன் மணம் பரவியிருந்தது. அதன் மணம் உம்முடைய மனத்திலும் இருக்கிறது. நெஞ்சத்திலும் இருக்கிறது. உம்முடைய உடல் முழுவதிலுமே உறைந்திருக்கிறது. மூன்று வாரங்கள் வரையில் நீடித்திருக்கும் சிறப்பான மணத்தை நுகர்வது என்பது வாழ்க்கையின் வியக்கத்தக்க ஓர் உணர்வு. அமைதி கொண்ட அந்த மலைகள் கண்ணியம் பொருந்தியவை. ஆறாயிரம் அடி உயரத்திலிருந்த அந்த மலைகளையும், குன்றுகளையும் பார்க்கும் ஒவ்வொரு முறையும், அத்தகைய நாடொன்று உள்ளதா என்ற வியப்பை அளித்தது. இந்த அமைதியும், நிம்மதியும் உள்ள பள்ளத்தாக்கிற்கு வரும் ஒவ்வொரு முறையும் செறிந்த மௌனமும், ஒருவிதமான விலகியிருக்கும் தன்மையையும், மெதுவாகச் செல்லும் காலத்தின் விரிவையும் நீர் உணர்கிறீர்.
மனிதன் அம்மலைச் சரிவை கெடுக்க முயன்ற போதிலும் அது காப்பாற்றப்படுகிறது. அன்று காலை யில் அம்மலைகள் சிறப்பான அழகுடையதாக இருந் தன. நீர் அதைத் தொடவும் கூடும். மாட்சிமையும், நிலைத்து நிற்கும் நிலையின் உணர்வும் அம்மலை களுக்கு இருக்கின்றன. அறுபது ஆண்டுகளுக்கு மேல் நீர் முன்பே வசித்திருந்த அவ்வீட்டிற்குள் நுழையும் பொழுது அச்சூழ்நிலையையும், காற்றையும், தூய்மை என்ற சொல்லை நீர் கையாளக்கூடும் என்றால், அத்தூய்மையையும் நீர் உணரக்கூடும். இதை தொடவும் கூடும். மழைப்பருவம். ஆகையால் மழை பெய்திருந் தது. எல்லாக் குன்றுகளும் மலையின் சிறுமடிப்புகளும் பசுமையாகவும் செழிப்பாகவும் நிறைவுடனும் இருக்கி
ன்றன. நன்னிருப்பை ஆழ்ந்து புரிந்து கொண்டதாக மண் பேருவகையுடன் இருக்கிறது.
‘நமது மனம் அல்லது மூளை அமைதியாக இருக்க வேண்டும், மனம் ‘சேமித்த அறிவைக்காலி செய்ய வேண்டும் என்று நீர் அடிக்கடி கூறியிருக்கிறீர்
. அவ்வாறு காலி செய்வது சேமித்த அறிவினின்று விடுதலையடைவதற்காக மட்டும் இல்லாமல், காலம், எண்ணம், செயல் இவற்றைக் கடந்து இருக்கும் ஒன்றை நன்கு புரிந்து கொள்வதற்காகவும் இந்த அறிவை காலி செய்ய வேண்டும் என்று நீர் அடிக்கடி கூறியிருக்கிறீர். இதை நீர் பல்வேறு விதமாகவும் உம்முடைய உரை களில் கூறியிருக்கிறீர், இருந்தபோதிலும், அந்தக் கருத்தையும், அதன் ஆழத்தையும், அமைதி கொண்ட *ஒன்றுமில்லா நிலையையும் புரிந்துகொள்வது எனக்கு கடினமாகவே இருக்கிறது. அதற்குள் எவ்வாறு செல்வது என்ற உணர்வும் எனக்கு இல்லை. நான் பலவிதமாக மனத்தின் சளசளப்பை அடக்குவதற்கும், பலவகையான செயல்களில் ஈடுபடும் மனத்தைக் கட்டுப்படுத்தவும் முயலும் பொழுது, அந்த ஈடுபாடே சிக்கல்களை உண்டாக்குகிறது. வாழ்க்கையை வாழும் விதத்தினாலேயே இத்தகைய சிக்கல்களில் அகப் பட்டுக் கொள்கிறோம். குடும்பத்தினரின் பேச்சு, இல்லாவிட்டால் தொலைக்காட்சி அல்லது புத்தகங் கள் இதுவே அன்றாட வாழ்க்கை. ஏதாவதொரு செயலில் ஈடுபட்டே ஆகவேண்டும் என்றும், ஒரு பொருளில் இருந்து மற்றொரு பொருளை அடைய வேண்டும், ஒரு அறிவிலிருந்து மற்றோர் அறிவைப் பெற வேண்டும், ஒரு செயலில் இருந்து மற்றொன்றுக்குத் தாவ வேண்டும் என்ற, முடிவற்று செயல்படும் எண்ணத்தினால் உந்தப்பட்ட மனம் இவ்வாறு கோருகிறது.”
உறுதியான தீர்மானத்தினாலும், ஒன்றை அடைந்தே தீரவேண்டும் என்ற முடிவினாலும் அல்லது அந்த தூய அமைதி, அசைவில்லா வெளியை அடைய வேண்டும் என்ற வேட்கையின் நெருக்கத்தாலும் எண்ணத்தை தடுத்து நிறுத்த இயலாது என்பதை நாம் சுட்டிக்காட்டி இருக்கிறோம்.
‘என் வரையில் உண்மை என்று நான் உணரும் பொருளன்று என்னிடத்திலிருந்து எப்பொழுதும் நழுவி விலகுகிறது, நான் மிகவும் விழையும் அப் பொருள்,என்றுமே என் பிடிக்குள் அகப்படாததாகவும் இருப்பதைக் கண்டு நான் பொறாமை கொள்கிறேன். நாம் அடிக்கடி உம்மைக்காண வருவதால், இன்றும் அவ்வாறு வந்திருக்கிறேன். ஏன், என் வாழ்க்கையிலும், என் அலுவல்களிலும் உறுதி நிலை இல்லை, மற்றும் அந்த அமைதி நீடித்து நிலைநிறுத்திக் கொள்ளவும் இயலவில்லை? ஏன், என் வாழ்க்கை இவ்வாறு இருக்கிறது? நான் செய்ய வேண்டியது என்ன? என்னால் அதிகமாக ஒன்றும் செய்ய முடியாது என்பது எனக்குத் தெரியும். அதைப் பற்றி ஒன்றுமே செய்யவும் முடியாது என்பதையும் உணர்கிறேன். ஆனால் அந்த அவா என்னை அரித்துக் கொண்டே இருக்கிறது. அதை விட்டுவிடவும் முடியவில்லை . ஒரே ஒரு முறை அந்த அமைதியை உணர்ந்தாலே போதும், அந்நினைவே எனக்கு உணவூட்டுவதாகும், மற்றும் அந்த நினைவொன்றே இந்தப் பொருளற்ற அற்பமான வாழ்விற்கு ஒரு குறிப்பிடத்தக்க நிலையையும் கொடுக்கும். ஆகவே இந்த மனம் அல்லது மூளை தன்னிடத்தை ஏதாவது ஒன்றால் நிரப்பிக் கொள்ள வேண்டும் என்று விரும்புகிறது. ஆகவே அதை விசாரணை செய்யவும், உட்புகுந்து ஆராயவும் நான் இங்கு வந்துள்ளேன்.’

அருமை
எதிர்கருத்தோ சார்பு கருத்தோ….எதுவுமே எதிர்வினை தான். அப்படியே படித்துவிட்டு புரிதலும் உணர்தலும் என்ற முயற்சிகளுமற்று அமைதியாக கடந்து போதல் சரியா…..
நல்ல உள் நோக்குதல் தூண்டுதல்.