அங்கயற்கண்ணி

நாறும்பூநாதன்

எல்லோரையும் எழுதி விட்டு, அங்கயற்கண்ணி பற்றி எழுதாமல் விடுவது சரியல்ல. இவரைப்பற்றி பல இடங்களில் குறிப்பிட்டுள்ளேன்.

வங்கியில் வேலை பார்ப்பது வரம் என்று நினைத்த காலம் ஒன்றுண்டு.அதைக் கேள்விக்குறியாக்கிய சம்பவம் இது.

எனது மேஜையின் எதிரே அமர்ந்திருந்த அந்தப்பெண்ணின் கண்களில் இருந்து நீர்த்திவலைகள் எந்த நேரத்திலும் தெறித்து விழத்தயாராய் இருந்தன.

” வேற வழியே இல்லையா சார்..”

வந்ததில் இருந்து இதையே தான் சொல்லிக்கொண்டிருந்தார் அங்கயற்கண்ணி.

அவரை எப்படி சமாதானப்படுத்துவது என்று தெரியாமல் நானும் பொறுமையாய் சொல்லிக்கொண்டிருந்தேன்.

விஷயம் இது தான்.

அங்கயற்கண்ணி இரண்டரை ஆண்டுகளுக்கு முன்பு தனது நான்கு வளையல்களை வைத்து நகைக்கடன் வாங்கியிருந்தார். கணவன் திருமேனி சொந்த ஆட்டோ வாங்குவதற்கு முன்பணம் கட்டுவதற்கு என்று ஒருமுறை பேச்சுவாக்கில் சொன்னது நினைவில் இருக்கிறது.

ஓரிரு முறை மட்டும் வந்து நகைக்கடனிற்கான வட்டித்தொகையை கட்டி விட்டு சென்றிருக்கிறார். சென்ற ஆண்டு, அவரது கணவன் திருமேனி இறந்து போனார் என்ற செய்தியும் வந்தது. வங்கிக்கு இரண்டு குழந்தைகளோடு அங்கயற்கண்ணி ஒருமுறை வந்து போனார்.

ரொம்பவும் வாடிப்போயிருந்தார். போவார் தானே ?

வீட்டுவேலை செய்து பிழைப்பு ஓடுகிறது என்று வருத்தத்துடன் சொன்னார். பிறிதொரு முறை, ஒரு பாட்டில் கம்பெனியில் வேலை பார்ப்பதாக தெரிவித்தார். இவ்வளவு தான் அவரைப்பற்றி நான் அறிந்து கொண்டது.

இரண்டரை ஆண்டுகள் கழிந்த நகைக்கடன்கள் எல்லாம் ஏலத்திற்கு வந்தபோது, அதில் அங்கயற்கண்ணியின் வளையல்களும் அடக்கம். ஏல நோட்டீஸ் அவருக்கும் சென்றது. இன்று மாலை வங்கி வளாகத்தில் ஏலம் விடப்பட இருக்கின்ற சூழலில், என் முன்னே கண்ணீருடன் அமர்ந்திருக்கிறார் அங்கயற்கண்ணி.

”நான் நேத்து தான் ஏல நோட்டிசைப்பார்த்தேன் சார்..பழைய வீட்டிற்குப் போயிருக்கு. நான் இப்ப வீடு மாறி இங்க வந்து மூணு மாசமாச்சு. எனக்கு கையும் ஓடல..காலும் ஓடல..ஒரு ரெண்டு மாசம் தவணை கொடுங்க சார் ..எப்படியும் திருப்பிடுவேன்..மனசு வையுங்க சார்..”

மீண்டும் மீண்டும் குரல் தழுதழுக்க கூறினார் அங்கயற்கண்ணி.

”நான் என்ன செய்ய முடியும் சொல்லும்மா..ஏல நோட்டீஸ் விட்டாச்சுன்னா நிப்பாட்ட முடியாது. இன்று சாயந்திரம் அஞ்சு மணி வரைக்குக்கூட டயம் இருக்கு.யாரிடமாவது கைமாத்து வாங்கி திருப்ப முடியுமா ன்னு யோசிங்களேன் ..”

எனக்கு தெரிந்த ஆலோசனைகளை சொன்னேன்.

எனது அறை வாசலில் வாடிக்கையாளர்கள் அலைமோதிக் கொண்டிருந்தபோதிலும், அவரை தேற்றுவதில் கொஞ்சம் பொறுமை காத்தேன்.

”அறுபதினாயிரம் ரூபாய்க்கு நான் திடீர்னு எங்கே போக? ஒரு சீட்டு போட்டிருக்கேன்..எட்டாவது மாசம்தான் எடுக்க முடியும். இருந்தாலும், அந்த அம்மா கையில காலுல விழுந்தாச்சும் அடுத்த மாசம் கொடுங்கன்னு சொல்லி வாங்க முயற்சி பண்ணுறேன் அய்யா..வேணும்னா என்னோட ரேஷன் கார்டை உங்க கிட்டே அடமானமா கொடுத்துட்டுப்போறேன்…என்னை நம்புங்க சார்..”

அவள் குரல் கம்மியது.

ஏழை மனிதர்களின் பிணையமாய் இருக்கும் ரேஷன் கார்டை என்னிடம் தரப்போகிறாராம் ..இவரிடம் எப்படி சொல்லிப்புரிய வைக்க என்று எனக்கு தெரியவில்லை.

”அங்கயற்கண்ணி அம்மா..பேங்குல இப்படி எல்லாம்  வச்சு அவகாசம் கேக்க முடியாது. நீங்க என்ன முன்ன பின்ன தெரியாதவரா? நம்பிக்கை சம்பந்தப்பட்ட விஷயம் அல்ல இது. இன்று சாயந்திரம் உங்க நகையையும் சேர்த்து 15  பேரோட நகைகள் ஏலத்திற்கு வருது. ஒரே ஒரு ஆளுக்கு மாத்திரம் நிறுத்தி வைக்க எனக்கு அதிகாரம் இல்லையேம்மா.“

சொல்லும் எனக்கும், கேட்கும் அவருக்கும் எல்லாமும் புரியவே செய்கிறது. இருந்தாலும் ஏதாவது ஒரு மாயாஜாலம் நடந்து விடாதா என்ற எதிர்பார்ப்பு அவரது கண்களில் தெரிந்தது.

வங்கியில், இது போன்ற ஏலங்கள் எனக்கு புதியதல்ல. கடந்த நான்கு வருடங்களில் நான் படும் நாலாவது அவஸ்தை இது. மனதை நொறுங்க வைக்கும் சொல்லொணாத்துயரம்.  சமயங்களில், தாலி செயினை எடுத்து ஏலம் விடும்போது எனது கைகள் நடுங்கும். என்ன கஷடத்திற்காக தாலியை அடகு வைத்தார்களோ தெரியவில்லை. அடகு வைத்த ஆளையே காணோம். மூன்று முறை வீட்டிற்கு சென்று பார்த்து விட்டேன். வீடு பூட்டியிருந்தது. பிழைப்பு தேடி வெளியூர் போய்விட்டார்களோ  என்னமோ..நாலு காசு சம்பாத்தியம் பண்ணி, திருப்பிக்கொள்ளலாம் என்று நினைத்துக்கொண்டிருக்கிறார்கள் போல.

ஏலத்தை எடுக்கும் வியாபாரிகள் கூட, தாலி செயின் என்றால் சற்றே தயங்குவார்கள்.

”கடைசியா ஒரு மட்டம் போன் போட்டுக் கேளுங்களேன்” என்று என்னிடம் சொல்வது வழக்கம்.

அதுபோன்ற சமயங்களில், இதை யாருமே ஏலத்தில் எடுக்காமல் இருந்தால் நன்றாக இருக்குமே என்று நினைப்பேன்.

நாம் நினைப்பது போலவா எல்லாம் நடக்கிறது.

ஏலம் முடிந்த பத்தாவது நிமிடத்தில், நகைகள் உருக்குலைந்து தங்க கட்டியாய் உருமாறி, ரோஸ் நிற பேப்பரில் பொதிந்து வியாபாரியின் அண்டர்வேர் பைக்குள் சென்றிருக்கும்.

”என்னால திருப்ப முடியும்னு தோணல சார்..எனக்கு ஒரு உதவி மட்டும் செய்வீங்களா”  அங்கயற்கண்ணி எனது முகத்தைப்பார்த்தபடி சொன்னார்.

”சொல்லும்மா..என்னால முடிஞ்சத உனக்காக கண்டிப்பா செய்யுறேன்..”

அவருக்கு எதோ ஒருவகையில் உதவ மனம் அலைபாய்ந்தது.

”எனக்கு வளையல்கள் ஏலத்துக்குப் போறதுல பெருசா வருத்தம் எல்லாம் இல்ல..அவரே போயிட்டாரு. வளையல்கள் போடும் ஆசையும் விட்டுப்போச்சு…” என்றவள், ஒரு கணம் தயங்கி விட்டு தொடர்ந்தாள்.

“எங்க ஊட்டுக்காரரு உங்களுக்குத்தெரியும்ல..மொதல்ல நல்லாத்தான் இருந்தாரு. பொறகுதான் வந்துச்சு இந்த குடிப்பழக்கம் எல்லாம். குடிச்சு குடிச்சே குடல் வெந்து செத்துப்போனாரு..ரெண்டு பொட்டப்பிள்ளைகளை என்கிட்டே கொடுத்துட்டு அவரு மாத்திரம் போய் சேர்ந்துட்டாரு..”

கண்களை துடைத்துக்கொண்டு பேச ஆரம்பித்தார். ”கலியாணம் ஆன புதுசுல குடிப்பழக்கம் இல்லாம இருந்த நேரத்துல, ராப்பகலா சவாரி பார்த்து, எனக்கு செஞ்சு போட்ட வளையல்கள் இதெல்லாம்..நாலு பவுனு சார்..இப்ப ஒரு கிராம்  வாங்க முடியுமா சொல்லுங்க..

நாலு வளையல்கள்..டவுண் சோமசுந்தரம் செட்டியார் கடையில மழையோடு போயி வாங்குனது.. என் வாழ்நாள்ல  ஒரே நேரத்துல இப்படி நாலு வளையல்கள் வாங்குனதே இல்ல..எனக்கு அதைப்பார்க்கும் போதெல்லாம் அவரு ஆசையா வாங்கிப்போட்ட வளையல்னு தோணும்.

எவ்வளவு சந்தோசமா இருந்த மனுஷன்..குடிக்காத என்னோட புருஷன் முகம் அதுல தெரியும் சார்..அவரோட வெள்ளையான மனசு தெரியும்.

என்னோட சந்தோஷமான காலங்கள் எல்லாம் நெனவுக்கு வரும் சார்.

அந்த வளையல்களை ஒரே ஒரு தடவை என் கண்ணுல மாத்திரம் காட்டுங்க சார்..உங்க கையில வச்சு காட்டுனாகூட போதும். அதை ஒரே ஒரு மட்டம் தொட்டுப்பார்த்துக்கறேன்..செய்வீங்களா சார்..”

உடைந்துபோய் அழுதார் அங்கயற்கண்ணி.

சபிக்கப்பட்ட வாழ்க்கை எனக்கா, இல்லை அவருக்கா ?

போதும். வங்கியின் எல்லா விதிகளையும் காற்றில் பறக்க விட்டு விட்டு, அவளது ஆசையை நிறைவேற்றினேன்.

”கையில போட்டுப்பார்த்துக்கங்க..” இப்போது என் குரல் கம்மியது.

”அது ரொம்ப தப்பு சார்..எனக்கு சொந்தமில்லாத நகையை நான் கையில போடுறது தப்பு..”

எளிய மனிதர்களின் அறவுணர்வு நம்மைக்  கூனிக்குறுக வைக்கிறது.

அடுத்த நொடி, எனது அறையை விட்டு எழுந்து நடக்கத்தொடங்கினார் அங்கயற்கண்ணி.

அதன்பிறகு, பல சமயங்களில், நெருக்கடி மிகுந்த சாலைகளில், பேருந்துகளில் அங்கயற்கண்ணியை பார்க்க நேர்ந்திருக்கிறது.

அவர் இயல்பாகவே  இருக்கிறார்.

நான்தான் பெரும் குற்றவுணர்வோடு இருக்கிறேன்.

அதே வங்கியில், ஆயிரம் கோடிக்கு மேல் கடனை வாங்கி, ஆறு வருடங்களாய் ஒரு பைசா கூட கட்டாத மல்லையாக்களின் கதைகளை கேட்கும்போது, அங்கயற்கண்ணியின் வளையல்களை அன்று சும்மாவே  எடுத்துக்கொடுத்திருக்கணும் என்றும் தோன்றியது.

****

4 Comments on “அங்கயற்கண்ணி”

  1. கண்ணில் நீர் மல்கி படிக்க முடியவில்லை.நியாயமும் கோபமும் கலந்த கேள்விகளுக்கு சுலபமான பதில்கள் இல்லை. ஒரு நடைச் சித் திரம் போல நீங்கள் அறிமுகம் செய்கிற மனிதர்களின் கடைகள் நெஞ்சில் பதிந்து நிற்கின்றன.

  2. என் வங்கி வாழ்க்கையிலும் இதுபோல் என்னைக் கையறு நிலைக்கு ஆளாக்கிய நிகழ்ச்சிகள் நிறைய உண்டு.

    இன்றும்
    அங்கயற்கண்ணிகள் இருந்து கொண்டு தான் இருக்கிறார்கள். இது வங்கி அதிகாரியின் பிரச்சினை இல்லை. சமுதாயம் சார்ந்த பிரச்சினை.

    நாறும்பூநாதரை முகநூலில் படித்து வருகிறேன். விருட்சத்திலும் அவர் நிறைய எழுதவேண்டும்.

Comments are closed.