ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…

காலையில் எழுந்து, குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் ஒரு கிளாஸ் ‘டீ’ குடித்தால்தான் அன்றைய நாள் நன்கு விடிந்தது என்று நினைப்பாள் ராமாயி! ஏதேனும் ஒன்று குறைந்தாலும் மனது ஏற்காது, அதுவும் முக்கியமாக அந்த ‘டீ’.
சிறு வயதில் அம்மா கொடுத்த ‘டீ’ தண்ணி நினைவிலிருக்கிறது. சூடாக, அலுமினிய டம்ப்ளரில் ஒட்டாத ‘டீ’.
‘டீ இல்லாட்டா வண்டி ஓடாதாக்கும்’ காலையில் எழுந்திருக்கும் போதே அம்மா கூவுவாள். ராமாயியும் டீ வாசம் வந்த பிறகுதான் எழுந்திருப்பாள். படிப்புக்கு வழி ஏது? நெருப்புப் பெட்டிக்கு ஸ்டிக்கர் ஒட்டுவதுதான் வேலை.
வேலை செய்யும் இடத்தில் காலை பதினோரு மணி டீயை விட, மூன்று மணி டீ சுமாராய் இருக்கும். ஒருநாள் டீ குடிக்கும்போது சூபர்வைசர் பார்த்த பார்வையும், மறுநாள் அவன் கை வைத்த இடமும் உடம்பை உறுத்த, சூடான டீயை அவன் முகத்தில் வீசிவிட்டு, வேலையையும், டீயையும் விட்டு வந்துவிட்டாள்.
வீட்டு வேலைக்குப் போன அம்மா, திரும்பி வந்து உடம்புக்கு முடியாமல் படுக்கையில் விழ, ராமாயி டீ வைத்துக் கொடுத்தாள். மூச்சு முட்ட, கண்கள் சொருக அம்மா இறக்கும் தறுவாயில், வாயில்விட்ட டீத்தண்ணி வழிய, தன் அப்பா யாரெனச் சொன்னபோது, திடுக்கிட்டாள் ராமாயி. அன்று குடித்த டீயில் கசப்பு கூட இருந்தது.
அம்மாவைப் போலவே வீட்டு வேலை. அந்த வீட்டில் டீ கிடையாது. அவர்கள் கொடுக்கும் தண்ணிக் காப்பி ராமாயிக்குப் பிடிக்காது.
வேலைக்குப் போகும் வழியில் ராதாவின் கடையில் ‘டீ’. இவளுக்காக ஸ்பெஷலாய் டீ போட்டுத் தருவான் ராதா. ஒரு சமயம் இவளே அவனுக்கு ஸ்பெஷலாய்ப் ஆக, ராதாவுடனேயே தனியே தங்கி விட்டாள்!
ஏதோ ‘பொடி’ விற்றான் என்று ராதா ஜெயிலுக்குப் போக, அவன் மனைவி அஞ்சலை, கடையில் புகுந்து, ராமாயியைத் துரத்தி விட்டாள். ராதாவும், அவன் கடை டீ யும் பழங்கதையாகப் போயின. வடிகட்டியில் தங்கிப்போன சக்கையான, மணமற்ற ‘டீ’த்தூள் போலானது வாழ்க்கை.
ஒற்றையாளாய்க் குடிசையில் வாழ்ந்தாலும், ராமாயிக்கு, டீயின் துணையிருந்தால் மட்டும் போதுமானதாக இருந்தது.
காலையில் ஐயர் வீட்டு வேலை, நாயர் கடையில் நீர்த்த ‘டீ’. மாலையில் கோயில் வாசலில் பூக்கடை. சைக்கிளில் கேனில் வரும் ‘டீ’. காசு கொஞ்சம் கூட ஆனாலும், டீ விற்கும் ராசுவின் அன்பிற்கும், நேசத்திற்கும் அது ஈடாகாது. ‘கல்யாணம் கட்டி ஒழுங்கா ஒரு புள்ளயப் பெத்திருந்தா, ராசு மாதிரிதான் இருந்திருக்கும்’ நினைத்தவள் கையில் ‘டீ’ சுட்டது.
‘டீ’யுடன் ரொம்ப தூரம் வந்துவிட்டாள் ராமாயி. காலையில் குளித்து, புடவை மாற்றி, நெற்றியில் ஒரு கீற்று விபூதியுடன் வந்தவளுக்கு சிறிது மயக்கமாக இருந்தது. பக்கத்துக் குடிசை சூசையை ஒரு ‘டீ’ வாங்கி வரச் சொன்னாள்.
டீ வந்தபோது, ராமாயி மல்லாந்து கிடந்தாள். திறந்த வாய் மட்டும் டீக்குக் காத்திருப்பது போல இருந்தது!

2 Comments on “ஜெ.பாஸ்கரன்./‘டீ’ யின்றி…”

Comments are closed.