ஆர் வத்ஸலா/வருவான்

விடியுமுன் நீராடி
செய்து முடித்தேன் பலகாரம் பல

அவன் மேனி வண்ண பட்டு உடுத்தி
கடலலை ஒத்த நீள் முடியை சீவி முடிந்து
செஞ்சாந்துத் திலகமிட்டு
எரிதிரி சூட்டில் படர்ந்த கரு மை தீட்டி
மாலை வான வண்ண வளையல் அடுக்கி

காத்திருந்தேன் மாலை வரை
வருவானென

சோர்வு மயக்கத்தில்
கண் இமைக்கும் நேர தூக்கம் கண்களை மூட
விழிக்கையில்
என் தலையில் அமர்ந்திருந்த மல்லிகையும்
அவன் கடித்து வைத்த பலகாரமும்
சாட்சி கூறின
அவன் வந்து போனதற்கு

காத்திருக்கிறேன் மறுபடியும்
அவனை திட்டித் தீர்த்த பின்

வருவான் மறுபடியும்
அந்த மாயக் கண்ணன்

சொல்கிறது உள் மனம்