சாய்ரேணு சங்கர்/கண்ணன் என்றொரு கவிதை பிறந்தது

பல்லவி

கண்ணன் என்றொரு கவிதை பிறந்தது
காசினியெங்கும் கொண்டாட்டம்
வண்ணமெடுத்து அழகாய்க் கருணை
வழங்கும் நீல வரியோட்டம்

சரணங்கள்

கஷ்டமும் கலியும் தீர்ந்திடப் பிறந்தது
கண்ணன் என்ற கவிதை
அஷ்டமி ரோகிணி சேர்ந்திடத் தோன்றிய
அச்சுதனெனும் கவிதை

தேவகியும்வசு தேவரும் படித்த
தெய்வமிந்தக் கவிதை
ஆவினம் காவினம் ஆயர்கள்தாமும்
ஆழ்ந்து மகிழ்ந்த கவிதை

திருடிய வெண்ணெய் தெள்ளிய மேனியில்
திகழநின்ற கவிதை
பெருகிய பால்மழை பேரரசாமெனப்
புகழக் கண்ட கவிதை

பொன்னார் அறமெனும் இசையைப் புனையும்
புல்லாங்குழற் கவிதை
இன்னது என்று எவரும் அறியா
இன்னமுதாம் கவிதை

மதுரகீதை மண்ணுக்களித்த
மாதவப் பெயர் கவிதை
மதுரைப் பிறந்த மணிவாசகமாம்
மறைக ளொலிக்கும் கவிதை

நானிலமுள்ள நாவுகளெல்லாம்
நாடிப் பாடும் கவிதை
வான்புகழ் வியாசர் வாக்கில் விளங்கும்
வாசுதேவனாங் கவிதை

தன்னைத் தானே எழுதிக் கொள்ளும்
தத்வமிந்தக் கவிதை !
தன்னில் தானே விளங்கி ஒளிரும்
சத்யமிந்த கவிதை !
கண்ணன் ஏந்தும் குழல்
கண்ணன் விரலின் நிழல்
கண்ணன் படைக்கும் இசை
கண்ணன் விழிகாண் திசை

கண்ணன் நீந்தும் நதி
கண்ணன் எழுதும் விதி
கண்ணன் வெண்ணெய்க் குடம்
கண்ணன் ஆடும் நடம்

கண்ணன் பிறக்கின்ற நாள்
கண்ணன் அணைக்கின்ற தோள்
கண்ணன் கவின்மிகு தாள்
கண்ணன் எடுக்கின்ற வாள்

கண்ணன் பதம்வைத்த கல்
கண்ணன் நடமாடும் இல்
கண்ணன் இதந்தரு சொல்
கண்ணன் எடுஎன்ற வில்

கண்ணன் அருள்மிகு ஸ்ரீ
கண்ணன் வெகுளியின் தீ
கண்ணன் விளங்கிடும் பா
கண்ணன் தனைப்பாடு நா

கண்ணன் களித்திடு கான்
கண்ணன் பதமென்னும் தேன்
கண்ணன் நிறைகின்ற வான்
கண்ணன் உறைகின்ற‌ நான்!