
காரிருளில் நான் வீழ்ந்து கிடந்தபோது..
காவலுக்கு ஒருவனாகக் கண்ணன் வந்தான்!
பாருளகில் ஔிவெள்ளம் மாக வந்தான்!
பார்த்தனுக்கு சாரதிபோல் கண்ணன் வந்தான்!
வேறுவேறு பாதையில் நான் நடந்தபோது..
வேணுகானம் இசைத்தப்படி கண்ணன் வந்தான்!
மாறுபாடு பாராது மனவாசல் நின்றே..
மனிதனாக்க காவலுக்காய் கண்ணன் வந்தான்!
ஐம்புலத்தின் சிறையிருந்த அறியாதவனை..
ஓர் ஆபத்தாண்டவனாய் நின்று காவல் செய்தான்!
பைம்புனல் நீர் பாய்ந்துவரும் யமுனைநதி யோரம்..
ஆதிமூலமாக எனக்கு காவல் செய்தான்!
செய்கின்ற செயல்களுக்கு ஜீவன் தந்தான்!
செயல் மறந்த வேளையிலே காவல் செய்தான்!
தயவுடனே மாயவனே முன்னால் தோன்றி..
மனவீட்டின் வாசலிலே எனக்காக
அன்புடனே காவல் செய்தான்!
