
(16-ஆம் நூற்றாண்டில் வாழ்ந்த ஜான் டான் என்ற ஆங்கிலக் கவிஞரின் “For Whom The Bell Tolls” என்ற கவிதை விளைவித்த உள்ளூக்கத்தில் இன்று காலை உதித்தது இந்தக் கவிதை)
யார்சிரித்தாலும் அது என்சிரிப்பு
யாரழுதாலும் அது என் அழுகை
யாரிறந்தாலும் என்னொரு பகுதியை
நான் இழக்கின்றேன்
இது புரியாமல் கலவரம் எதற்கு
போர் கொலை பூசல் வீண்வழக்கெதற்கு
ஒவ்வொரு நொடியும் நான் வளர்கின்றேன்
பேரண்டங்களின் பெருவெளியாக
ஒவ்வொரு துளியிலும் நான் விழுகின்றேன்
காலைப் பனியின் சிதறல்களாக
பூக்களுக்குள் மகரந்தமாக
புல்லில் வைரப் படையாக
எந்த மலரை யார் மிதித்தாலும்
கசங்குவதென் உள்ளம்
ஏதோ கவிதை யார் படித்தாலும்
என்னுள் இன்ப வெள்ளம்
(யார்சிரித்தாலும் அது என்சிரிப்பு)
உனக்கும் எனக்கும் வானம் ஒன்றே
பூமி ஒன்றே பொழுதும் ஒன்றே
நமக்குள் எதற்குப் பிணக்கு
மதம் மொழி இனம் என
நம்மைப் பிரிக்கும் நச்சுக் கணக்கு
சேர்ந்து வசிப்போம் சேர்ந்து புசிப்போம்
படைப்பின் ஒவ்வோர் அணுவையும் ரசிப்போம்
ஆயுதங்களைத் தூக்கி எறிவோம்
ஆரம்பிக்கட்டும் புதிய யுகம்
அதற்கே இந்தக் கவிதைத் தவம்
—

அருமை வாழ்த்துக்கள்